பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 13, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 15

                          வரலாறு பேசும் பயணம் பகுதி 15
சிதம்பரம்.         
    
      சைவர்களுக்குக் கோயில் என்றால் அது சிதம்பரம். பண்டைய காலம் முதல் இன்று வரை சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத இடம் இந்த சிதம்பரம். ஆதி காலத்தில் சிவபெருமான் ஆடவல்லானுக்கும், தில்லைக்காளிக்கும் நடனத்தில் போட்டியாம். இருவரும் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் தொடர்ந்து வெற்றி தோல்வியின்று இருவரும் ஆடிக்கொண்டே இருந்தார்கள். இதற்கு ஒரு முடிவு காண முடியுமா என்கிற ஐயம் இருவருக்குமே இருந்திருக்க வேண்டும். என்னதான் பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்கிற சொற்களெல்லாம் இன்றும்கூட நாம் காதருகில் கேட்டுக்கொண்டிருந்தாலும், சிவனின் அந்த ஆதிக்கம் அங்கே வெளிப்பட்டது. என்ன இது? இந்தக் காளி, நமக்கு இணையாக, நம் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஆடுகிறாள், என்ன செய்யலாம்? சிந்தித்தார், உடனே தன் ஒரு காலை செங்குத்தாக தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு மற்றோரு காலாம் ஆடினார். “யார் ஆடுவார், இனி யார் ஆடுவார்” என்பது போல அவரது ஆட்டத்தைப் பார்த்து அதுபோல தன்னால் ஆடமுடியாது என்பதை உணர்ந்து, என்ன இருந்தாலும் பெண் அல்லவா? ஆங்.... ஆங்... இதுதான் ஆணாதிக்கம் என்பது. பெண்ணால் முடியாதாம், ஆண் ஆடிவிட்டாரம். போகட்டும் எதற்கு வம்பு. சிவபெருமான் வென்றுவிட்டார், காலை தலைக்குமேல் தூக்கமுடியாமல் தோற்ற தில்லைக் காளி ஊரிலிருந்து வெளியேறி காட்டினுள் குடி புகுந்தாள்.

      சிதம்பரம் நகருக்குள் நுழையும்போது இந்த சிந்தனைதான். ஆலயத்தின் கீழவாசலை நெருங்கும்போதே இரவு நேரம் ஓடிக்கொண்டிருந்தது. கோயில் நடை சாத்தும் நேரம். ஓடிப்போய் தரிசனம் செய்தபின் அங்கிருந்த வைணவ இளைஞரிடம் விசாரிக்கப்பட்டது. “அது சரி, சிவாலயமான இங்கு, கோவிந்தராஜ பெருமாளுக்கு ஏன் ஒரு சந்நிதி?” என்று அந்த இளைஞன் சொன்னார், “அதுவா, சிவன், காளி நாட்டியம் போட்டி நடந்ததல்லவா, அதற்கு நடுவராக வந்தார், பெருமாள், அதனால் இங்கு அவருக்கொரு சந்நிதி” என்றார். ஊகூம், உதைக்கிறதே, இங்கு வேறு ஏதோவொரு காரணம் இருந்திருக்க வேண்டும் அது என்ன?

      அப்போது நினைவுக்கு வந்தது ஒரு புராணச் செய்தி. பாற்கடலில் நாராயணன் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். ஆதிசேஷன் மெல்ல நாராயணனிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். “ஐயனே, தங்கள் கிருஷ்ணாவதாரம் முடிந்து இப்போது ஓய்வில்தானே இருக்கிறீர்கள். துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கியிருக்கிறது. தங்களுக்கு தற்சமயம் ஒன்றும் அவசர வேலையில்லை. தாயார் தங்களுக்கு சிசுருஷைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அங்கு தில்லையில் சிவபெருமான் உலகம் உருவாவதைக் கண்டு ஆனந்த தாண்டவம் சென்து கொண்டிருக்கிறார். நான் போய் அதைச் சற்று பார்த்துவிட்டு வர உத்தரவு தரவேண்டும்” என்கிறார்.

      உடனே நாராயணன் அவர் வேண்டுகோளை ஏற்று அவரை தில்லைக்குச் சென்று ஐயனின் நடனத்தைக் கண்டுவர அனுமதி அளிக்கிறார். அப்போது அன்னை லட்சுமி சொல்கிறார், “சேடா! நீ இந்த உன்னுடைய உடலோடு அங்கு போனால், பார்ப்பவர்கள் பயந்து ஓடிவிடுவார்கள். அதனால், நீ பதஞ்சலி முனிவராக உருமாறிச் செல். உன்னுடன் வியாக்கிரபாத முனிவரையும் அழைத்துச் செல்” என்கிறாள். உடனே ஆதிசேடன் தன்னுடன் வியாக்கிரபாதரையும் அழைத்துக் கொண்டு தில்லை விரைகிறார்.

      அவர்கள் போனபின்பு லட்சுமி சொல்கிறார் பெருமாளிடம், ஐயனே சேடன் சென்றுவிட்டான். நாமும் போய் அங்கு நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்த்துவிட்டு வரலாமே என்கிறார். எந்த மனைவி இப்படிச் சொல்லி கணவர் மறுத்துச் சொல்லியிருக்கிறார். பெருமாளும் தாயாருடன் அங்கிருந்து கிளம்பி தில்லைக்கு வந்து கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்று சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்த்து ரசித்துவிட்டு, போனது தெரியாமல் திரும்பியும் வந்து விடுகிறார். பின்னர் இது ஆதிசேடனுக்கும் தெரியவர மெல்ல சிவபெருமானுக்கும் செய்து தெரியவந்தது. இந்த வரலாற்றையொட்டியே சிதம்பரத்தில் தில்லை நடராஜருக்கு அருகில் அவர் நடனத்டைக் கண்டு ரசிக்கும் பாங்கில் நாராயணன் கோவிந்தராஜப் பெருமாள் எனும் நாமதேயத்தோடு அங்கு தரிசனம் தருகிறார் என்கிறார்கள்.

      பாரதி இயக்கத்தார் இப்படிச் சொன்னதை அந்த இளைஞனும் பேசாமல் ஒப்புக்கொண்டு இருக்கலாம், ஆனால் எனக்கு விவரம் தெரியவில்லை என்று நழுவிவிட்டான்.

      சிதம்பரம் தீக்ஷதர் ஒருவரிடம் தாங்கள் திருவையாற்றிலிருந்து வந்திருப்பதாகவும், தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானத்துக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள் என்பதையும் சொல்ல அவர் இவர்களை அழைத்துக் கொண்டு சென்று சந்நிதியில் நல்ல தரிசனம் செய்து வைத்தார்.


      சிதம்பரம் விட்டுப் புறப்பட்ட பாரதி இயக்கத்தார் இரவு வெகுநேரம் பயணம் செய்து மாயூரம், கும்பகோணம் வழியாக தஞ்சை வந்து அங்கிருந்து திருவையாறு பயணமாகினர்.
                                To be continued.........

No comments: