பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 13, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 16

                        வரலாறு பேசும் பயணம் பகுதி 16
ராமேஸ்வரம்.           
       பாரதி இயக்கத்தார் தேர்ந்தெடுத்த அடுத்த சுற்றுலாத் தலம் ராமேஸ்வரம். காசி ராமேச்வரம் செல்வது என்பது இந்துக்கள் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வு. அதனை பாரதி இயக்கத்தார் புனித யாத்திரையாக அன்றி ஆராய்ச்சி, அறிவுசார்ந்த பயணத்துக்காகத் தேர்ந்தெடுத்தது பாராட்டுக்குரியது.

      ராமபிரான் இலங்கையிலிருந்து திரும்பி இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் சிவபெருமானை வணங்குவதற்காக மணலில் லிங்கம் வடித்து பூஜித்தத் தலம் ராமேச்வரம். தற்சமயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தத் தீவு. மீன்பிடித் தீவாக இருந்திருக்க வேண்டிய இந்த இடம் இப்போது ஒரு அற்புதமான இந்து புனிதத் தலமாகத் திகழ்கிறது. இந்தத் தீவை பாம்பன் தீவு என்றும் சொல்வர். ராமநாதபுர மாவட்டத்தை இந்தத் தீவையும் பிரிக்கும் இடம் மன்னார் வளைகுடா. இவ்விரு இடங்களையும் இணைக்க ஒரு ரயில்வே பாலம் முன்பு பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் இவ்விரு இடங்களையும் இணைக்க ஒரு தரைப்பாலம் அமைக்கப்பட்டு ரயில் பாலத்துக்கு இணையாகவே மிக அருகில் நல்ல உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் மீது நின்று கடலையும், ரயில் பாதையையும், பார்ப்பதே ஒரு அருமையான காட்சி. பாம்பன் பாலம் என்பது அனைவரும் அறிந்தவொன்று.

      சென்னையிலிருந்து ரயிலில் பயணம் செய்து ராமேச்வரம் வரலாம். இது ஒரு டெர்மினஸ். மதுரைக்கும், காசிக்கும்கூட இங்கிருந்து செல்ல முடியும். இந்துக்கள் வாழ்க்கையில் காசிக்கும் ராமேச்வரத்துக்கும் செல்லுவது என்பது ஒரு கடமையாகவே இன்றும்கூட இருந்து வருகிறது. முன்பெல்லாம் ராமேஸ்வரம் சென்றால் ராமநாத சுவாமி தரிசனம், பல தீர்த்தங்களில் புனித நீராடல் அருகிலுள்ள ராமர்பாதம், தனுஷ்கோடி சென்று வழிபடுதல் என்று இருந்தது. அப்போதெல்லாம் பயணிகள் வந்து தங்குவதற்கு அதிக வசதிகள் இல்லை. இன்றோ தேவஸ்தானம் பல கொட்டடிகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். நவீன வசதிகள் கொண்ட உணவகங்களும் இருக்கின்றன.

      சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள கடல்பாதையில் கப்பல்கள் போக்குவரத்துக்காக கடலை ஆழப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்குதான் ராமபிரான் கடல் கடந்து இலங்கை சென்று சீதையை மீட்பதற்காக ராமசேது எனும் அணையைக் கட்டினார் என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக இருந்ததால் அந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட நேர்ந்தது. இன்றும் ராமசேது குறித்த வாதப் பிரதிவாதங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

      இரவு வெகுநேரம் கழித்து பாரதி இயக்கத்தினர் பட்டுக்கோட்டை, தெவிப்பட்டினம் வழியாக ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். அங்கு ராமேஸ்வரம் தேவஸ்தான அறைகளில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாள் காலையில் எழுந்து தயாராகி சுவாமி தரிசனம் செய்யச் சென்றனர். சுவாமி சந்நிதியருகில் அமர்ந்து அபிஷேகம் தரிசனம் செய்து விட்டு கிளம்பி ராமர்பாதம் பார்த்துவிட்டு தனுஷ்கோடி கடற்கரைக்குச் சென்றனர். தனுஷ்கோடி ஒரு காலத்தில் மக்கள் குடியிருக்கும் நகரமாக விளங்கியது. அங்கு ரயில்நிலையம் உட்பட பல கட்டடங்கள் கடல் கொந்தளிப்பில் முழுவதுமாக கடலில் மூழ்கிக் கிடக்கும் காட்சியைக் கண்டு திரும்பினர்.

      ராமேஸ்வரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வட இந்திய யாத்திரீகர்களைக் காண முடிந்தது. இந்த இடத்தை மிகுந்த புனித இடமாகக் கருதி அவர்கள் வந்து வழிபடுகிறார்கள். அத்தனை கூட்டத்தையும் அந்தத்ட் தீவு தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வூரில் கடலில் மிதக்கும் பாறைகள் உண்டு என்பதைக் காட்ட ஒரு கண்காட்சி இருக்கிறது. அங்கு கடல் பாறைகள் நீரில் மிதப்பதைக் காண முடிந்தது. இதுபோன்ற மிதக்கும் பாறைகளைக் கொண்டுதான் ராமசேது உருவாக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

      முன்பெல்லாம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே ரயில் போக்குவரத்து இருந்ததும் போட் மெயில் என்ற பெயரில் ஒரு ரயில்வண்டு சென்று கொண்டிருந்ததும் வயது மூத்தவர்களுக்கு நினைவிருக்கும். இங்குள்ள ராமநாதஸ்வாமி குறித்து தேவார மூவர் பாடியிருக்கின்றனர். ராஜேந்திர சோழனின் ஆளுகைக்கும் உட்பட்டு இவ்விடம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. டெல்லி அரசன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனாக இருந்த மாலிக்காபூர் என்பவன் தெற்கே படையெடுத்து வந்து பல ஆலயங்களை கொள்ளை அடித்தும், இடித்துத் தள்ளியதை வரலாற்றில் அறிந்திருப்பீர்கள். அவன் படையெடுப்புக்கு பாண்டிய நாடு கடும் எதிர்ப்பு காட்டியது என்பதும் தெரிகிறது. விஜயநகர சாம்ராஜ்யம் தலையெடுத்த சமயம் இந்த இடங்கள் அவர்களது ஆளுகைக்கு உட்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் ராமேஸ்வரம் ஆலயத்துக்கு ஏராளமான பணிகளைச் செய்து வந்திருக்கிறார்கள். சேதுபதி என்ற பெயரே ராமர் கட்டிய சேதுவைக் காக்கும் பணியைச் செய்பவர் என்று தெரிகிறதல்லவா? அந்த மன்னர்களில் முதுக்குமர ரகுநாத சேதுபதி என்பவரும் முத்துராமலிங்க சேதுபதி என்பாரும் இந்த ஆலயத்துக்கு ஏராளமான தொண்டு புரிந்திருக்கிறார்கள்.

      இந்தப் பகுதிகள் மீது பலரும் பலமுறை படையெடுத்து வந்து ஆக்கிரமித்திருக் கிறார்கள். சந்தா சாஹேபு, ஆற்காட்டு நவாபு முகமது யூசுப் கான் ஆகியோர் தவிர கிழக்கிந்திய கம்பெனியாரும் இந்த இடத்தின் மீது கண்வைத்திருந்தனர். அப்படிப்பட்ட ராமேச்வரம் ஆலயத்தையும், சுற்றுலாப் பயணிகளையும், வடநாட்டு பக்தர்களையும் நம்பித்தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

      இப்போது கடந்த சில வருஷங்களாக ராமேஸ்வரம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் பெருமை அடைந்திருக்கிறது. திடீரென்று காலமாகிவிட்ட அந்த பெருந்தகையின் சமாதி இங்கு பேய்க்கரும்பு எனுமிடத்தில் தான் இருக்கிறது. அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டபின் அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு பாரதி இயக்கத்தினர் தனுஷ்கோடிக்குச் சென்றனர்.

தனுஷ்கோடி.         

தனுஷ்கோடி முன்பு பரபரப்பான ஒரு ஊராக இருந்தது. அங்கு அடித்த புயல் காரணமாக தனுஷ்கோடியைக் கடல் கொண்டு எஞ்சிய நிலப்பரப்பும் மக்கள் வாழ வகையில்லாமல் காணப்படுகிறது. ராமேஸ்வரத்தை விட்டுக் காரில் புறப்பட்டு தனுஷ்கோடி நோக்கி செல்லும் வழியெல்லாம் மணல் பரப்பாகவும், கடல் கொண்டு எஞ்சிய நிலப்பரப்புகளில் கள்ளியும், புல்லும், கோரையும் பரந்து காணப்பட்டாலும், வழிநெடுக தார் சாலை அமைத்து ஆங்காங்கே பல புதிய கட்டடங்களும் எழுப்பப்பட்டு வந்தன. இரு பக்கங்களிலும் கடல், நடுவில் பாதை, எங்கும் மீன்பிடிக்கும் படகுகள், அப்படி இந்தப் பகுதி முழுவதும் சுற்றுலாப் பயணிகளால் சூழப்பட்டிருந்தது.

தனுஷ்கோடியில் கடற்கரைதான் பார்க்கக்கூடிய இடமாக இருந்தது. வெண்மணல் நிறைந்த இந்தக் கடற்கரை நீண்ட நெடிய கடற்கரை. இங்கு சுற்றுலா வந்தவர்கள் கால் பதியும் மணல்பரப்பில் நடந்து கடற்காற்றின் குளுமையை ரசித்தாலும், அங்கு ஏற்பட்டிருந்த அழிவுகளையும் மனக்கண்ணால் பார்த்து திகைத்துப் போனார்கள். முன்பொரு காலத்தில் இந்தியாவையும், இலங்கையையும் இணைத்த ஆடம்ஸ் பிரிட்ஜ் என வழங்கப்பட்ட இடம் கடலுக்குள் மூழ்கிவிட்டது. எனினும் மீனவர்கள் படகில் செல்லும்போது நீருக்கடியில் மணற்வெளியின் மேல்பரப்பு தெரிவதாகச் சொல்கிறார்கள். அங்குதான் சேது சமுத்திர பணி தொடங்குவதாக இருந்தது.

1064இல் இங்கு வீசிய புயற்காற்று இவ்வூரை அழித்துத் தரைமட்டமாக்கி விட்டது. அதற்கு முன்பு அங்கிருந்த ரயில் நிலையம், அருகில் ஒரு தேவாலயம் ஆகியவைகளின் எச்சம் இப்போதும் நாங்களும் இருந்தோம் என்பதுபோல இடிபாடுகளுடன் காணக் கிடைக்கின்றன. தனுஷ்கோடி கடற்கரையில் ஒரு பெரிய கட்டடம் அரசாங்கம் கட்டி வருகிறது, அது முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

திரும்ப ராமேஸ்வரம் வந்தால் அங்கு ராமர் பாதம் என்றொரு இடம். சிறிது உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த ராமர் பாதம் ஆலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கு பாறையில் பதிந்த பாதங்களின் சுவடுகளைக் காணலாம். அங்குதான் அனுமன் இலங்கைக்குச் சென்று திரும்பி வந்து ராமரிடம் “கண்டேன் சீதையை” என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். வழியில் பாம்பன் தீவு. இந்தத் தீவைச் சுற்றி நீலத்திரைக்கடலின் அழகு, எங்கு நோக்கினும் மீன்பிடிப் படகுகள், அந்தத் தீவையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் ரயில் பாலம், தரைப்பாலம் இரண்டுமே அழகுக் காட்சிகள். அருகில் மன்னார்குடா பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சி காணலாம்.


ராமேஸ்வரம் ஊரிலிருந்து திரும்பும் வழியில் பேய்க்கரும்பு எனும் ஓரிடம். அங்குதான் நமது குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நினைவிடம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மணல் பரப்பில் உருவாகும் அந்த நினைவிடத்தைப் பார்த்துவிட்டு ராமநாதபுரம் நோக்கிச் செல்லத் தொடங்கினர் பாரதி இயக்கத்தினர்.
                             To be continued............

No comments: