வரலாறு பேசும் பயணம் 19
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.
தமிழ்நாட்டின் வரைபடத்தில் பார்த்தால் வடமேற்கில் ஆந்திர கர்நாடக எல்லைகளையொட்டி அமைந்த
மாவட்டம். 2004இல் இது தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிரிந்தது. கிருஷ்ணகிரி எனும்
பெயரில் கிருஷ்ண என்பது கிருஷ்ண பகவானைக் குறிப்பதல்ல, அவனுடைய வண்ணத்தைக் குறிக்கும்
கருப்பு என்பதன் குறியீடு. கிருஷ்ணகிரி என்றால் கருப்புமலை என்பதாகும். கருப்பு என்பதால்
இது கிரானைட் எனப்படும் விலைமதிப்பற்ற கற்கள் அமைந்த மலை. அதிகமான தொழிற்சாலைகளைக்
கொண்ட ஓசூர் இந்த மாவட்டத்தில்தான் இருக்கிறது.
கிருஷ்ணகிரியில் ஒரு வானுயர்ந்த கோட்டை இருக்கிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோட்டை மீது ஏற்வதென்பது அசாத்தியம். விஜயநகர சாம்ராஜ்ய
சக்கரவர்த்தி கிருஷ்ணதேவ ராயர் கட்டிய கோட்டையாம் இது. அவர் பெயராலேயும் இது கிருஷ்ண
கிரி என அழைப்பதும் பொருத்தம் தானே. அந்தக் காலத்தில் இந்த மலைக்கோட்டையை பாராமகால்
என அழைத்தனர். இந்த இடத்தைப் பின்னர் பீஜப்பூர் சுல்தான்கள் பிடித்துக் கொண்டனர். அவர்கள்
இவ்விடத்தைத் தங்கள் படைத்தளபதியாக இருந்த ஷாஜி என்பவருக்குக் கொடுத்தனர். இந்த ஷாஜி
யார் தெரியுமா? சத்ரபதி சிவாஜியின் தந்தை. தஞ்சைக்கு வந்த முதல் மராட்டிய அரசன் ஏகோஜி
எனும் வெங்கோஜிக்கும் தந்தை. ஷாஜி இறந்தபின் தஞ்சாவூர் ஷாஜிக்குத்தான் இந்த கோட்டை
கிடைத்தது. ஆனால் அவருடைய சகோதரர் சத்ரபதி சிவாஜி இதை போரிட்டுப் பிடித்துக் கொண்டார்
தம்பியிடமிருந்து. 18ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசர் சிக்கதேவராய உடையாரின் உத்தரவின்
பேரில் ஹைதர் அலி இந்த கோட்டையைப் பிடித்தார். பிறகு ஹைதர் மைசூரை தானே சொந்தமாக ஆண்டு
வந்த போது இதனைத் தனதாக ஆக்கிக் கொண்டார். அதிக அளவிலான போரைச் சந்தித்த பகுதி இது;
1768இல் முதல் ஆங்கிலோ மைசூர் யுத்த காலத்தில் இந்த கோட்டைக்காக பிரிட்டிஷார் கடுமையாக
மைசூர் படைகளுடன் போராடினார்கள். ஆனால் பலத்த சேதமடைந்த பிரிட்டிஷார் திப்பு சுல்தானிடம்
தோற்று கிருஷ்ணகிரியையும் இழந்தனர். பிறகு பிரிட்டிஷ் திப்பு உடன்படிக்கை 1792இல் நடந்தபோது
இதை பிரிட்டிஷாருக்குக் கொடுத்துவிட்டார் திப்பு. இந்த மலைக்கு மேலே செல்லும் படிகள்
அருகில் ஏராளமான இஸ்லாமியர்கள் குடியிருக்கின்றனர். அவர்கள் மதச் சின்னங்களும், கொடிகளும்
அந்த அடிவாரத்தில் இருக்கின்றன. மேலே தொழுகைக்காக ஒரு மசூதியும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பிரிட்டிஷ் படையெடுப்பைப் போல பாரதி இயக்கத்தார் பலர் சென்றபோதும், மலையின் பாதி வரை
அனைவரும் செல்ல முடிந்தது, காரணம் அதுவரை போவதற்கு படிகள் இருந்தன. அதற்கு மேல் முண்டும்
முரடுமான பாறைகளைப் பிடித்துக் கொண்டு போக வேண்டியிருந்ததால் பலரும் திரும்பிவிட ஒரேயொருவர்
வினோத் என்பவர் மட்டும் உச்சிக்குச் சென்று அங்கிருந்த மசூதியையும் கண்டு வந்த பெருமை
இந்தப் பயணத்தில் குறிப்பிட வேண்டும்.
தொரப்பள்ளி.
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என வழங்கப்படும்
ராஜாஜியின் பிறந்த இல்லம் ஓசூரையடுத்த தொரப்பள்ளி எனும் கிராமத்தில் இருக்கிறது. அந்த
கிராமத்தைத் தேடிச் சென்றவர்களுக்கு அங்கிருந்த ஒரு பெருமாள் கோயிலும் அதனையடுத்த அக்ரஹாரத்தில்
ஒருசில வீடுகளும் காணப்பட்டன. அதில் ஒரு பழைய காலத்து ஓட்டு வீடுதான் ராஜாஜி பிறந்த
இல்லம் என்றார்கள். அதை உறுதி செய்வதுபோல அந்த வீட்டின் ஓட்டின் மேல் ஒரு பலகை அதில்
சக்கரவர்த்தி ராஜாஜி பிறந்த இல்லம் என்றிருந்தது. அந்த வீட்டினுள் ஒரு ஊழியர் இருந்தார்.
அந்த சின்னஞ்சிறு கிராமத்தைத் தேடி வந்து ராஜாஜியின் பிறந்த இல்லத்தைக் காண வந்த இவர்களைக்
கண்டு அவருக்கு மகிழ்ச்சி. அங்கிருந்த பொருட்களையெல்லாம் பற்றி விரிவாகச் சொன்னார்.
ஓடு தலையில் இடிக்கும்படியான அந்த பழைய இல்லம் உரு மாறாமல் நிர்வகிக்கப்படுவதை எண்ணி
உண்மையில் பெருமைப்பட வேண்டும். இந்தியாவின் கவர்னர் ஜெனரால இருந்தவர் இப்படிப்பட்ட
ஒரு சின்னஞ்சிறு வீட்டில் பிறந்தார் எனும்போது ஜனநாயகத்தின் பெருமை நமக்குப் புலப்படுகிறது
அல்லவா. அங்கிருந்த பொருட்களையெல்லாம் நீண்ட நேரம் பார்த்துவிட்டு ராஜாஜியின் பெருமையை
உள்வாங்கிக் கொண்டு கிளம்பும்போது அங்கு பணியாற்றிய ஊழியர் இவர்களைப் பிரிய மனமின்றி
தெருக்கோடி வரை வந்து இவர்களை வழியனுப்பிய காட்சி மனதுக்கு இதமாக இருந்தது.
டெங்கனிக்கோட்டை
(தேன்கனிக்கோட்டை)
டெங்கனிக்கோட்டை என பரவலாகப் பேசப்படும் தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டட்தில் உள்ள ஒரு நடுத்தர கிராமம். பெங்களூர் நகரத்திலிருந்து ஹொகேனக்கல்
எனும் சுற்றுலா இடத்துக்குச் செல்ல மக்கள் அட்டிபெலி, தேன்கனிக்கோட்டை, அஞ்சட்டி, நாட்றாபாளையம்
ஆகிய ஊர்கள் வழியாகத்தான் செல்வார்களாம். கர்நாடக மாநிலத்தின் எல்லையோர் இடங்கள் தொரப்பள்ளி,
தேன்கனிக்கோட்டை ஆகிய ஊர்கள். எனினும் இங்கு தமிழ் மொழியே பரவலாகப் பேசப்படுகின்ற மொழி.
தெலுங்கும், கன்னடமும் இங்கு அதிக அளவில் பேசப்படுகின்றன. 1654 வரை இவ்விடத்தை மைசூரின்
கந்தீரவ நரச ராஜா என்பார் ஆண்டு வந்தார். பிறகு ஹைதர் அலி ஆட்சியை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் ஹைதருக்கும் பிரிட்டிஷுக்கும் நடந்த யுத்தத்தில் இந்த ஊரும் பகடைக்காயாக மாறியிருந்தது.
இது யாருக்கு என்பதில் போட்டா போட்டி இருந்தது. இங்கு ஒரு கோட்டை இருக்கிறது. அதுதான்
சுற்றுலா வருவோருக்கு இங்கு ஒரு ஈர்ப்பு.
பாப்பாரப்பட்டி.
பாப்பாரப்பட்டி எனும் பெயர் எங்கோ கேட்ட பெயராக
இருக்கிறதா? ஆம்! சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா பாரத மாதாவுக்கு ஒரு
ஆலயம் எழுப்பத் திட்டமிட்டிருந்தது இந்தப் பாப்பாரப்பட்டியில்தான். இவர் ஆலயம் கட்டுவதற்காக
ஒரு நண்பர் இவருக்கு இடத்தையும் தானமாகக் கொடுத்திருந்தார். அங்கு பாரதமாதா ஆலயம் கட்ட
சுப்பிரமணிய சிவா அடிக்கல் நாட்டினார், வங்க தேசத்திலிருந்த பிரபலமான தலைவர் ஒருவரை
அழைத்து வந்து விழா நடத்தினார்.
ஹொகேனக்கல் செல்லும் வழியில் பாப்பாரப்பட்டிக்குள்
சென்று அங்கு சிவாவின் நினைவாலயம் எங்கே என்றதும் ஊரின் மையப்பகுதியில் மிகப்பெரிய
இடத்தில் நான்கு புறமும் உயர்ந்த சுவர் எழுப்பியிருக்க அதன் ஒரு பக்கம் ஒரு நினைவில்லம்
மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சுப்பிரமனிய சிவா பற்றிய தகவல்கள் பதிவிடப்
பட்டிருந்தன. அந்த பூமியில் சிவா கட்ட விரும்பிய பாரதமாதா ஆலய அஸ்திவாரத்தின் மீது
அவருக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டு இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து போவது மகிழ்ச்சியளித்தது.
நாங்கள் அங்கே சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஓரிரு கார்களில் சில முக்கியஸ்தர்கள்
வந்தார்கள். அவர்களில் ஒருவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்றும் ஏனையோர் நீதித்துறையில்
உயர் பதவி வகிப்பவர்கள் என்றும் தெரிய வந்தது. அன்று சிறையில் தொழுநோய் வந்து ரயில்
வண்டியில் கூட ஏற விடாமல் தடுக்கப்பட்டு மதுரையிலிருந்து பாப்பாரப்பட்டி வரை நடந்தே
வந்து மாண்டுபோன தியாகி சுப்ரமணிய சிவாவின் ஆவி இப்போதாவது தான் மதிக்கப்படுவது கண்டு
மகிழலாம். வாழ்க தியாக சிவாவின் புகழ்!
அதியமான்கோட்டை
வருகின்ற வழியில் அதியமான்கோட்டை எனும் ஊர் இருந்தது.
அங்கு ஒரு கோட்டை இருக்குமென்று விசாரித்ததில் அங்கு மன்னன் அதியமானுக்கு ஒளவை நெல்லிக்கனி
கொடுத்த நினைவிடம் இருக்கிறது. அந்த மணிமண்டபத்தைப் போய் பார்க்கலாம் என்று போனபோது
அங்கு யாரும் இல்லை. எப்படியோ உள்ளே நுழைந்து பார்த்தபோது மிக அற்புதமான நினைவாலயம
அங்கு நிறுவப்பட்டிருப்பது தெரிந்தது. வாயிலில் ஒரு அரிய சிலை. அதில் நீரூற்றுக் கிடையே
ஒளவைக் கிழவி மன்னன் அதியமானுக்கு இறவாத நிலை
தரும் நெல்லிக்கனியொன்றைத் தர, அதை அவன் திரும்பவும் புலவர் ஒளவைக்கே கொடுக்கும் காட்சி
சிலை வடிவில் இருந்தது. பண்டைய தமிழ்ப் புலவர் மன்னர் உறவின் பெருமையைக் கண்டு மகிழ்ந்து
புறப்பட்டனர்.
To be continued...........
No comments:
Post a Comment