பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 11, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 11

                      வரலாறு பேசும் பயணம் பகுதி 11
கல்லணை.       
       தஞ்சை மாவட்ட எல்லைக்குள் மட்டும் ஒரே நாளில் சென்று பார்த்துவரக் கூடிய ஒரு சுற்றுப் பயணத்தைத் திருவையாற்றிலிருந்து பாரதி இயக்கத்தினர் தொடங்கினார்கள். கல்லணைக்கு அருகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ பழமை வாய்ந்த ஒரு சிவாலயம் காவிரிக் கரையில் கல்லணை செல்லும் சாலையின் தென்புறம் இருக்கிறது. இந்த இடம் ஒரு காடுபோல காணப்படுகிறது. பள்ளி என்றாலே சமண பள்ளிகளைக் குறிக்கும். இவ்விடத்தில் முற்காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம். கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்றிலும் இந்த இடம் பாண்டிய நாட்டு ஒற்றர்கள் ஒளிந்து வாழப் பயன்பட்டதாக எழுதியிருப்பதிலிருந்து இது அப்போது எப்படி இருந்திருக்க வேண்டுமென்பது தெரிகிறது.

      தஞ்சை மாவட்டத்தின் கோடியில் இருக்கும் திருக்காட்டுப்பள்ளி அருகில் காவிரி யில் கட்டப்பட்டிருக்கும் பழங்கால அணைக்கட்டு கல்லணை என வழங்கப்படுகிறது. திருச்சிக்கு மேற்கிலுள்ள முக்கொம்பு என அறியப்படுகின்ற பகுதியில் மேலணை இருக்கிறது. அங்குதான் காவிரியும் கொள்ளிடமும் தனித்தனியாக பிரிகின்றன. அதில் காவிரி ஆறு கல்லணையை வந்தடைகிறது. இங்குதான் காவிரியிலிருந்து வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம் என கிளைகள் பிரிகின்றன. பயிர்ப் பாசனத்துக்கு கொள்ளிடம் தவிர மற்ற ஆறுகளில் மழை காலங்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வெள்ளம் வரும் காலத்தில் அதிகப்படி நீர் கொள்ளிடத்தில் பிரித்து விடப்படும். இந்த கல்லணை கட்டப்பட்டதால் வெள்ளம் வரும்போது டெல்டா மாவட்டம் பாதிக்கப்படாமல் அதிகப்படி நீர் கொள்ளிடத்தில் திருப்பிவிட இவ்வணை உதவுகிறது.

      கல்லணையை கி.பி. 2ஆம் நூற்றாண்டில் மாமன்னன் கரிகாலன் கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது. நாட்டில் இதுவே மிகவும் பழமையான நீர்ப்பாசன திட்டம். இந்த அணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடி. இது நேரான கட்டுமானமாக இல்லாமல் வில்போல் வளைந்த அமைப்பில் இருக்கிறது. அணையின் மேல் ஒரு பாலம் இருக்கிறது, இது தஞ்சை, திருச்சி மாவட்டங்களைப் பிரிக்கிறது. இவ்விடத்தின் முக்கியத்துவம், இயற்கை சூழ்நிலை ஆகியவை குறித்து இது ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. சோழன் கரிகாலனுக்கு இங்கொரு சிலை இருக்கிறது. ஒரு மணிமண்டபமும் அமைக்கப்பட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

 கச்சமங்கலம்.   

      காவிரி டெல்டா மாவட்டங்கள் நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாவட்டங்கள். உலகில் நீர் மேலாண்மைக்கு முதலிடம் கொடுத்தவர் எகிப்தியர்கள், சுமேரியர்கள், சீனர்கள் தவிர தமிழர்களும் ஆவர். பழ.கோமதிநாயகம் என்பார் இது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தியிருக்கிறார். அரசியல் வானில் புகழ்பெற்றவராகத் தமிழகத்தி சிறந்து விளங்கும் பழ நெடுமாறனின் சகோதரர். நமது நீர்நிலைகள் மீது அதிக அக்கறை கொண்டு, அவை எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது, அவற்றைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் ஆகியவை பற்றியெல்லாம் அவர் ஆராய்ந்திருக்கிறார். பொதுப்பணித் துறையில் பணியாற்றிய அவர் இத்துறையில் ஆழ்ந்த அனுபவம் வாய்ந்தவர். மிகப் பழமையான காலத்தில் தொழில்நுட்பம் வளராத நிலையில் மனிதன் நீர் நிலகளை கடவுளாக வழிபட்டு வந்திருக்கிறான்.

      தமிழகத்தில் தொன்மை வாய்ந்த அணை நமது கல்லணை என்பதைப் பார்த்தோம். அதன் மிக அருகிலேயே அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட மற்றொரு அணையும் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சோழமன்னன் அழிசியின் என்பாரின் மகன் சேந்தன் என்பவன் கட்டிய அந்த அணை கச்சமங்கலம் எனுமிடத்தில் காணப்படுகிறது. கல்லணைக்கு கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் காவிரியின் துணை ஆறான வெண்ணாற்றில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள கச்சமங்கலம் எனும் ஊரில் இருக்கிறது இந்த அணை. ஒரு காலத்தில் இந்த இடத்தில் மூன்று மைல் தொலைவுக்கு ஏராளமான பாறைகள் கொண்ட ஒரு தொடர் மலை இருந்திருக்கிறது. திருச்சிக்கு அருகிலுள்ள தூவாகுடி மலையின் தொடர்ச்சி இந்த மலை. அதிலிருந்த மலைக் குன்று ஒன்றை அப்படியே பெயர்த்து எடுத்து சற்று தூரம் தள்ளி வைத்து பாறைகளைக் குடைந்து தடுப்பு சுவர் எழுப்பி விட்டார்கள். பாறைகள் பெயர்த்தெடுத்த இடம் பள்ளமாக ஆகிவிட்டது. அந்த இடத்தின் இரு புறத்திலும் பாறைகள் சுவர்போல உருவாகின. இதனை கற்சிறை என்கின்றனர்.

      வெண்ணாற்றின் தண்ணீர் இந்த அணையில் நிரம்பியவுடன் அணையின் தென்கரை மதகு திறக்கப்பட்டு தண்ணீர் ஆனந்த காவேரி கால்வாய் மூலம் ராஜசுந்தரி சதுர்வேதமங்கலம் ஏரிக்குத் திருப்பிவிடப்படும். அந்த ஏரி இப்போது கள்ளப்பெரம்பூர் ஏரி என்று வழங்கப்படுகிறது. காவிரிக்கும் வெண்ணாற்றுக்கும் இடைப்பட்ட அந்த பகுதின் பெயர் ஆற்காட்டுக் கூற்றம். இது மேட்டு நிலம் இந்த ஏரி நிரம்பியவுடன் அணையின் வடக்கில் மதகுகள் மூலம் பிள்ளைக் கால்வாய் வழியாக தண்ணீர் வீரசிகாமணி பேரேரி வரை சென்றது. இது இப்போது அல்லூர் அழிசிகுடி ஏரி என்பதாகும். வீராணம் ஏரியை வெட்டிய பராந்தகச் சோழன்தான் இந்த ஏரியையும் வெட்டி வைத்தான்.

      வடகரை மதகு 16ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் காலத்தில் சீர்செய்யப்பட்டிருக்கிறது. அது குறித்த கல்வெட்டு ஒன்றை இப்போதும் இந்த மதகில் காணலாம்.

 மேலத் திருப்பூந்துருத்தி.

       கல்லணை தொடங்கி காவிரியின் கரையோரமாகவே வந்து திருப்பூந்துருத்தி எனும் கிராமத்தை வந்தடைந்தது பாரதி இயக்கக் குழு. இங்கு அவர்களுக்கு உள்ளூர் இந்து அமைப்பினர் அப்பர் மடம் என்ற இடத்தில் வரவேற்று அவ்வூரின் சிறப்புக்களை எடுத்துரைத்தனர். இவ்வூர் மேலத் திருப்பூந்துருத்தி என்றும் கீழைத் திருப்புந்துருத்தி என்றும் இரு பிரிவாக இருக்கிறது. மேலத் திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசர் சுவாமிகளால் பாடப்பட்ட புஷ்பவனேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இவ்வூரில் கோயில் கொண்டுள்ள பெருமான் ஆதிபுராணர் என்றும், பொய்யிலியர் என்றும் மக்களால் அறியப்படுகிறார். அம்மன் பெயர் செளந்தரநாயகி. செளந்தரம் என்றாலே அழகு. அழகால் அமர்ந்த நாயகி என்பது அழகான பெயர் அல்லவா? தேவாரப் பாடல்களைக் காவிரியின் வடகரைத் தலப் பாடல்கள், தென்கரைப் பாடல்கள் என்று வகை பிரித்திருக்கின்றனர். அந்த வகையில் இது தென்கரைத் தலங்களில் அமிந்த பதினொன்றாம் திருத்தலமாகும். இந்த சிவபெருமானை தரிசித்துப் பாடியவர்களுள் அருணகிரிநாதரும், வள்ளலார் ராமலிங்க சுவாமிகளும் அடங்குவர்.

      இவ்வூரின் தலபுராணம் சுவையானது. அப்பர் உழவாரப்பணி செய்துகொண்டு ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்தாரல்லவா? அப்போது அவர் இங்கு வந்து அந்தப் பணியைச் செய்திருக்கிறார். அப்பரின் பாதம் பட்ட தலம் என்பதால் தான் மிதிக்க அஞ்சி திருஞானசம்பந்த சுவாமிகள் ஆலயத்துக்கு வெளியே நின்று சுவாமியை தரிசனம் செய்தார். அப்போது நந்தி குறுக்கே மறைத்ததால் இறைவன் நந்தியைச் சற்று விலகி நிற்குமாறு பணிக்க இங்கு நந்தி சற்றே விலகி இருப்பதைக் காணலாம்.

      அதுமட்டுமா? திருஞானசம்பந்தர் மதுரையில் பாண்டியனின் பிணியைத் தீர்த்து சமணர்களை வாதில் தோற்கடித்து சோழநாடு திரும்பி வருகையில் திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் உபசாரங்களை ஏற்றுக் கொண்டு ஞானசம்பந்தரின் வரவை நோக்கி மேல் திசையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பல்லக்கில் உட்கார்ந்து வழிநெடுக “அப்பர் எங்குற்றார்?” என்று கேட்டுக்கொண்டே வந்த ஞானசம்பந்தர் காதில் “அடியேன், இதோ இங்குற்றேன்” என்று குரல் கேட்டது. குரல் வந்த இடம் தம்முடைய பல்லக்குக்கு அடியில் இருந்து. அப்போதுதான் தெரிந்தது நாவுக்கரசர் பல்லக்கைத் தன் தோளில் சுமந்து கொண்டிருப்பது. அவர் பல்லக்கிலிருந்து குதித்து பெரியவரான அப்பரை வணங்க, அப்பரோ குழந்தை ஞானசம்பந்தரை வணங்க இந்தக் காட்சி எப்படி இருந்தது என்பதை பெரிய புராணம் வர்ணிக்கிறது. நெற்கதிர் முற்றிய வயல் முழுதும் பயிர் செழித்து நிற்கிறது. மெல்ல வீசும் தென்றல் காற்றில் முற்றிய கதிர்கள் முன்னும் பின்னுமாக கவிழ்ந்து ஆடுகிறது. அது போல பெரியவர் இருவரும் ஒருவரை முந்திக் கொண்டு வணங்கியதாக வர்ணனை வருகிறது. அப்படி நடந்த இடம் இந்தத் திருப்பூந்துருத்தியாம்.

      சிவபெருமானை நோக்கியே நந்தியம்பெருமான் படுத்திருப்பார். ஆனால் மூன்றே மூன்று இடங்களில் மட்டுமே அதாவது திருப்பூங்கூர், பட்டீஸ்வரம், திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களில் மட்டும் நந்தி சற்று விலகி இருப்பார்.

      இத்தலத்தின் சிறப்புகள் பல. அவை திருவையாறு சப்தஸ்தானத் தலங்கள் ஏழில் இதுவும் ஒன்று. பூந்துருத்தி காடவநம்பி என்பாரின் அவதாரத் தலம் இது. சம்பந்தரின் பல்லக்கைத் தன் தோளில் அப்பர் சுமந்து வந்ததால் இதனை சம்பந்தர் மேடு என்பர். திருவாலம்பொழில் எனும் ஊருக்கும் வெள்ளம்பரம்பூருக்கும் இடியில் ஒரு மண் மேடு இருக்கிறது, இந்த சம்பவத்தை நமக்கு நினைவூட்ட. அங்கு இந்த விழா நடைபெறுகிறது.

      அப்பர் பெருமான் இவ்வூரில் அமைத்த “திங்களும் ஞாயிறும் தோயும் மடம்” எனும் பெயரில் ஒரு மடம் இருக்கிறது, அது இப்போது அப்பர் மடம் எனும் பெயரில் அறியப்படுகிறது. அப்பர் பெருமான் இங்கு பலகாலம் தங்கி திருஅங்கமாலை, தாண்டகங்கள் பல பதிகங்கள் பாடியிருக்கிறார்.


      திருவையாறு சப்த ஸ்தானத் தலங்களில் இதுவும் ஒன்று. மற்ற ஊர்கள் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருநெய்த்தானம் ஆகியவைகளாகும். இவ்வேழு ஊர்களிலும் ஒரே நேரத்தில் நடக்கும் திருவிழாதான் சப்தஸ்தானம். பங்குனி மாதத்தில் திருமழபாடியில் நந்திக்குத் திருமணம் நடக்கும். திருவையாறு ஐயாறப்பர் நந்தியுடன் சென்று திருமணத்தை நடத்திவைப்பார். பின்னர் அந்தத் திருமணத்துக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்த மற்ற ஆறு தலங்களுக்கும் நந்தியைத் தம்பதி சகிதமாக அய்யாரப்பர் அழைத்துச் செல்வதுதான் சப்தஸ்தானம். திருமணத்துக்குப் பழங்கள் கொடுத்த திருப்பழனம், சோறு போட்ட திருச்சோற்றுத்துறை, வேத பிராமணர்களை அனுப்பிய திருவேதிகுடி, கண்டிகை மாலைகளைக் கொடுத்த திருக்கண்டியூர், வாத்தியக் குழல்களான துருத்தியை அனுப்பிய திருப்பூந்துருத்தி, நெய் கொடுத்த திருநெய்த்தானம் ஆகியவைகளை அவை. அப்படிப்பட்ட பெருமை மிக்கத் தலத்தில்தான் ஸ்ரீநாராயண தீர்த்தரின் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் அங்கு அவர் பாடிய தரங்கிணி பாடி அவருக்கு ஆராதனை செய்யப்படுவதும் இங்குதான்.
                               To be continued..........

No comments: