வரலாறு பேசும் பயணம் பகுதி 26
சதுரங்கப்பட்டினம்
(Sadras)
சதுரங்கப்பட்டினம் என்று இப்போது வழங்கப்படும் இவ்வூர்
முன்பு ஆங்கிலத்தில் SADRAS என்று வழங்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்து கிழக்காம 4 கி.மீ. தூரத்தில் கடற்கரையோரம் இருக்கும்
இது முன்பு டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாகச்
செல்பவர்கள் வெங்கம்பாக்கம் எனுமிடத்தில் இடது புறமாகச் சென்று இவ்வூரை அடையலாம். அங்கிருந்து
புதுப்பாக்கம் வழியாக மீண்டும் கடற்கரைச் சாலையில் இணைந்து விடலாம்.
இந்து நவீன யுகத்தின் வசதிகள் எவையும் கிடைக்காது.
தங்கும் அறைகளோ, நல்ல உணவுக்கான உணவு விடுதிகளோ இங்கு இல்லை. கல்பாக்கம் அருகில் இருப்பதால்
அங்கு போனால் எல்லாம் கிடைக்கும். மாமல்லபுரத்திலிருந்து இந்த இடம் சுமார் 10 கி.மீ.
போகவேண்டும். ஐரோப்பியர்கள் இந்தியாவில் தங்கள் வியாபாரத்தைத் தொடங்க புறப்பட்டு வந்து
கொண்டிருந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் ஆகியோருடன்
டென்மார்க்கிலிருந்து டச்சுக்காரர்களும் வந்தார்கள். அவர்கள் வந்து தங்கி ஒரு கோட்டையைக்
கட்டிக்கொண்டு தங்கள் வியாபாரத்தைத் தொடங்கிய இடம் தான் இந்த சதுரங்கப்பட்டினம் எனும்
சாட்ராஸ். இங்கு டச்சுக்காரர்கள் மெல்லிய மஸ்லின் துணிகள், முத்து, உணவு எண்ணெய் ஆகியவற்றைக்
கொணர்ந்து வியாபாரம் செய்தார்கள். 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் கோட்டை கட்டப்பட்டதாகத்
தெரிகிறது. இப்போது இந்தக் கோட்டையின் உட்புறம் எதுவும் இல்லை. அங்கு ஒரு காவலாளி இடத்தைச்
சுத்தம் செய்து நல்ல நிலையில் பாதுகாத்து வருகிறார். பாரதி இயக்கத்தினரை அந்தக் காவலாளி
அன்போடு வரவேற்று உட்புறம் அழைத்துச் சென்று பல இடங்களையும் காட்டினார். அவருடன் இவர்கள்
ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இந்த இடத்தில் ஐரோப்பியர்களுக்குள் அதாவது ஆங்கிலேயர்களுக்கும்
டச்சுக்காரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டு இரண்டு முறை மோதிக்கொண்டார்கள். இரண்டாவது
யுத்தத்தில் இந்த கோட்டை சின்னாபின்னப் படுத்தப்பட்டு டச்சுக்காரர்கள் ஆளை விடுங்கடா
என்று பிரிட்டிஷாரிடம் கோட்டையை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அது நடந்த ஆண்டு
1818.
இந்த கோட்டை கடலுக்கு மிக அருகில் இருப்பதால் கடலில்
கப்பலில் இருந்து கொண்டு பிரிட்டிஷ் கடற்படை குண்டுமாரி வீசியிருக்கிறது. சின்னஞ்சிறு
கோட்டை தாங்குமா அவர்களது ராட்சச தாக்குதலை. அழிந்தது கோட்டை, அழுந்த உட்கார்ந்தார்கள்
ஆங்கில வர்த்தகர்கள் நம்மையும் அடக்கி அடிமையாக்கிட.
இந்த வளாகத்தில் பலருடைய கல்லறைகள் காணப்படுகின்றன.
அதன் மீது இறந்த வீரனின் பெயர் ஆண்டு அனைத்தும் காணக்கிடைக்கின்றன. முன்னூறு ஆண்டுகளுக்கு
முன்பு இந்த பூமியில் ஐரோப்பியர்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னிறுத்திக் கொள்வதற்காகத்
தங்களுக்குள் போரிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொன்ற கொடுமைகளையெல்லாம், நம்மவர்கள்
எதுவும் செய்யமுடியாத அப்பாவிகளாகப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்ற வகையில்
நம் மக்கள் எப்படிப் பின்தங்கி இருந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
கனத்த மனதுடன் பாரதி இயக்கத்தார் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இடைக்கழி நாடு.
1.ஆலம்பாறை கோட்டை இடிபாடுகள் 2. கோட்டை இடிந்த மதில்சுவர்
18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முகலாயர் பாணி கட்டடக்
கலையில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. சதுரங்கப்பட்டினத்துக்கும் புதுச்சேரிக்கும்
இடைப்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கிழக்கே சில கல் தூரத்தில் கடற்கரையில்
அமைந்துள்ளது இந்த ஆலம்பாறை கோட்டை. கோட்டையின் பாதங்களை கடல் அலைகள் வந்து மோதிக்கொண்டிருக்கும்
அழகிய காட்சியைக் கண்டு ரசிக்கலாம். அருகில் சொல்லும்படியான கிராமமோ, வேறு முக்கியமான
கட்டடங்களோ கிடையாது. சிலர் மீனவர்கள் குடியிருப்புகள் மட்டுமே இந்த இடிபாடுகளுக்கருகில்
உள்ளது. அதில் குழந்தைகள் விளையாட ஒரு பூங்காவும் கட்டப்பட்டு அதில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறது.
அமைதியான அந்த சூழலில் கடற்காற்றை சுவாசித்துக் கொண்டு இடிந்து கிடக்கும் இந்த மாபெரும்
கோட்டையின் அழிவினைக் கண்டு வந்தனர் பாரதி இயக்கத்தினர்.
15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கிறது இந்தக்
கோட்டை. முகலாய மன்னர்கள் கட்டிய இந்தக் கோட்டையை அவர்கள் பிரெஞ்சு குடியேறிகளிடம்
1750இல் கொடுத்திருக்கின்றனர். ஏதோ நன்றிக்கடனுக்காக இது கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது,
எந்தவகை நன்றிக்கடன் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். பத்தாண்டுகளுக்குப்
பிறகு கிழக்கிந்திய கம்பெனியாருக்கும், பிரெஞ்சு நாட்டு வியாபாரக் கழகத்துக்கும் யுத்தம்
நடைபெற்றபோது, இந்தக் கோட்டையை ஆங்கிலேய கும்பினியார் பிடித்துக் கொண்டதோடு அதனை அழிக்கவும்
செய்தனர். முழுமையாக அதனை அழிக்க முடியாததால் அரைகுறையாக விட்டுச் சென்றதன் எச்சத்தைத்தான்
நாம் இப்போது காண்கிறோம். இது அழிக்கப்பட்டு விட்டதால், ஆங்கிலேயர்களும் சரி, நம்மவர்களும்
சரி இதில் அதிக அக்கறை செலுத்தவில்லையாயினும், இங்கு தயாரிக்கப்பட்ட நாணயங்களும், பலவிதமான
யுத்த தளவாடங்களும் இங்கிருந்து கம்பெனியார் மீட்டிருக்கின்றனர்.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியார் இழைத்த அழிவு
போதாதென்று, 2004இல் இந்தப் பகுதியில் வந்த ஒரு பூமியதிர்ச்சியும் சுனாமியும் இதனை
மேலும் கவிழ்த்துப் போட்டு விட்டது. ஐரோப்பிய நாடுகளின் வியாபார கம்பெனிகளுக்குள் நடந்த
சண்டையும், இயற்கையின் பேரழிவுகளும் தவிர இந்தப் பகுதி மக்களின் அலட்சியமும் இல்லாமல்
இருந்திருந்தால் இங்கு ஒரு அழகிய வரலாற்றுச் சின்னம் இன்றும் இருந்திருக்கும். மக்களின்
அலட்சியத்தால் இந்த அழகிய உறுதியான கோட்டையின் மீதி மிச்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அலைகளின்
வீச்சில் அழிந்து கொண்டு வருகின்றன. எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளாத
நிலையிலும் இந்த கோட்டை இடிபாடுகள் இன்னமும் தாக்குப்பிடிப்பது இதன் உறுதித் தன்மையைத்தான்
காட்டுகின்றது. இந்த பழமைவாய்ந்த நினைவுச் சின்னம் பற்றிய அறிவிப்புப் பலகைகள் இங்கு
காணப்பட்டாலும், அதுவுமே அழிந்து சிதைந்து கோட்டைக்குப் போட்டியாக கேவலமாக நின்று கொண்டிருப்பது
அவமானச் சின்னம் போல் இருக்கிறது.
ஆலம்பாரா கோட்டையின் இடிபாடுகள்
அனாதையாகக் காட்சியளிக்கின்றன.
கோட்டையின் மிகப் பெரிய சுவர்கள் பெயர்ந்து விழுந்து
கோட்டையிலிருந்து விடுபட்டு கடல் அலைகளால் மண்ணில் புதையுண்டு கிடப்பதைக் காணமுடிகிறது.
இடிபாடுகளின் இடையே கடல்வாழ் ஜீவராசிகள் சுகமாக வாசம் செய்து வருகின்றன.
கரையோரமெங்கும்
மீனவர்கள் தங்கள் படகுகளை இழுத்து வந்து பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்கின்றனர்.
இந்த இடம் பற்றி ஒரு வரலாற்று ஆசிரியர் குறிப்பிடும் வரிகளை அப்படியே ஆங்கிலத்தில்
பாருங்கள்: “Out in the
Indian Ocean somewhere, there is a former army post; abandoned now just like
the war and there is no doubt about it. It was the myth of fingerprints. Thatis
what that old army post was for.”
To be continued.............
No comments:
Post a Comment