இரண்டாம்
உலகப் போரை ஜெர்மனியின் ஹிட்லர் தொடங்கி வைத்து ஐரோப்பிய நாடுகளை வென்று தன்னகப் படுத்திக்
கொண்ட அதே நேரத்தில் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ஆப்பிரிக்க நாடுகளை பிடித்துக்
கொண்டு முன்னேறிய நேரம். ஜப்பான் பெர்ள் துறைமுகத்தில் குண்டு வீசி கிழக்கு முனையில்
யுத்தத்தைத் தொடங்கியது. ஹிட்லர் மேற்கிலிருந்து முன்னேறி வரும் நேரத்தில் ஜப்பான்
கிழக்கத்திய நாடுகளையெல்லாம் மின்னல் வேகத்தில் பிடித்துக் கொள்ள, அங்கெல்லாம் ஆக்கிரமித்திருந்த
பிரிட்டன் அந்தந்த நாட்டை ஜப்பான் வசம் விட்டுவிட்டு தனது ஆங்கில படைகளுடன் பின்வாங்கத்
தொடங்கி விட்டது. தங்கள் தலை தப்பினால் போதும் என்ற பிரிட்டனின் எண்ணம் சுபாஷ் சந்திர
போசுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. பிரிட்டனின் சுயநலம், துரோகம் இவற்றைக் கண்டு பொங்கினார்.
பிரிட்டனால் கைவிடப்பட்ட ஆசிய நாடுகளின் படைகளில் இருந்த இந்தியர்களைக் கொண்டு இந்திய
தேசிய ராணுவத்தை உருவாக்கி அதற்கு அவரே தலைவரானார். ஜெர்மனியிலிருந்து புறப்பட்ட நேதாஜி
ஜப்பான் சென்றார், அங்கு அவருக்கு ராஜ மரியாதை கிடைத்தது. அங்கிருந்து அவர் மலேயா,
பர்மா, சிங்கப்பூர் ஆகியவிடங்களில் ஏராளமானோர் ஐ.என்.ஏ.வில் சேர்ந்தது மட்டுமல்லாமல்,
ஏராளமான பணம், நகைகள் இவற்றையும் கொண்டு வந்து குவித்தனர். இந்தியர்கள் கொடுத்த பணத்தில்
அவர் ஒரு வங்கியையும் தொடங்கினார். ஒரு இஸ்லாமிய நண்பர் அவருக்கு ஐம்பது லட்சம் ரூபாய்
வங்கிக்கு நன்கொடையாகவும், சில பெண்கள் அவரவர் எடைக்கு எடை பொன்னும் கொடுத்தார்கள்.
ஐ.என்.ஏ. எனும் இந்த்ய தேசிய ராணுவத்தில் காந்தி
பிரிவு, நேரு பிரிவு, ஆசாத் பிரிவு, ஜான்சி ராணி பிரிவு என்றெல்லாம் ராணுவப் பிரிவுகளைக்குப்
பெயரிட்டார். அவரும் ராணுவ உடை அணிந்து ஒட்டு மொத்த ஐ.என்.ஏ.வுக்கும் தலைமை தளபதியாக
விளங்கினார்.
1943
அக்டோபர் மாதம் நாட்டுக்கு வெளியே சுதந்திர இந்திய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்தார். அதற்கு
அவர்தான் பிரதம மந்திரியும் பிரதம தளபதியுமாவார். இந்த சுதந்திர இந்திய அரசு அடுத்த
சில தினங்களில் பிரிட்டன் மீதும் அமெரிக்கா மீதும் யுத்தப் பிரகடனம் செய்தது. நேதாஜி
உருவாக்கிய சுதந்திர இந்திய அரசு வெளி மண்ணில் இயங்கி வந்த போதே ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ்,
மங்கோலியா, சயாம், குரோஷியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து ஆகிய நாடுகள் அங்கீகரித்தன.
சுதந்திர இந்திய அரசாங்கத்தின் தலைமையகம் முதலில் சிங்கப்பூரில் இருந்தது, பின்னர்
பர்மாவுக்கு மாற்றப்பட்டது.
ஜப்பான்
கைப்பற்றிய அந்தமான் தீவுகள் நேதாஜியின் சுதந்திர இந்திய அரசு வசம் அளிக்கப்பட்டது.
1943 டிசம்பர் 30 அன்று நேதாஜி அந்தமான் தீவிற்கு விஜயம் செய்து, இந்திய தேசியக் கொடியை
ஏற்றி வைத்து, இந்திய நாடு இருக்கும் திசை நோக்கி நின்றுகொண்டு ஒரு சுதந்திர தின உரை
நிகழ்த்தினார். அது இன்றளவும் நமக்கு ஒலிவடிவத்திலும் கிடைக்கிறது. நாட்டு விடுதலைக்குப்
பாடுபட்ட எண்ணற்ற தியாகசீலர்களைச் சிறையில் அடைத்து வைத்து கொடுமைகள் புரிந்த இடம்
அந்தமான். அந்த பூமியில் முதல் சுதந்திர இந்திய அரசு பிறந்தது மகிழ்ச்சிக்குரியது.
யுத்த
காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கிழக்காசிய நாடுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை
மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். பெருமைப் படுத்தினார்கள். இவர் அணிந்த மாலையொன்று
12 லட்சம் ரூபாய் கொடுத்து ஒருவர் ஏலத்தில் எடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
1945இல் இவர் தொடங்கிய வங்கியின் மூலதனம் 36 கோடியைத் தாண்டியது (இது அந்த காலத்தில்).
சிங்கப்பூர் வானொலியிலும், பர்மாவிலிருந்தும் நேதாஜி வானொலி மூலம் உரையாற்றினார்.
இந்திய
தேசிய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை இவர் ஜப்பானிடமிருந்து விலைக்கு வாங்கினார்.
சிலர் நினைப்பது போல ஜப்பான் இவ்வுதவிகளைச் செய்து நேதாஜியைத் தங்கள் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தனர் என்பது பொய். ஐ.என்.ஏ.வின் போர்க்கள கோஷம் “டெல்லி சலோ” என்பதுதான்.
1944ஆம்
வருஷம் ஜனவரி 26ஆம் தேதி (அப்போதெல்லாம் தேசியவாதிகள் ஜனவரி 26ஐ சுதந்திர தினம் என்றே
முடிவு செய்து வைத்திருந்தனர்) நேதாஜி ஐ.என்.ஏ.வின் ராணுவ அணிவகுப்பைப் பார்வை யிட்டார்.
அதில் “ஜெய்ஹிந்த்” கோஷமும் “டெல்லி சலோ” சூளுரையும் வானைப் பிளந்தன.1944 பிப்ரவரி
4 அன்று ஐ.என்.ஏ. மேஜர் மிஸ்ரா என்பவர் தலைமையில் இந்தியாவின் பிரிட்டிஷ் படைகளை அரக்கான்
மலைப் பகுதியில் தோற்கடித்தது. தொடர்ந்து வெற்றிகள் பல பெற்று, அந்த போரில் தோற்ற பிரிட்டிஷ்
இந்திய படைகளில் இருந்த இந்திய வீரர்கள் ஐ.என்.ஏ.வில் இணைத்துக் கொள்ளப் பட்டனர். இந்தியாவின்
பகுதிகளாக விளங்கிய மணிப்பூர், அசாமின் கொஹிமா போன்ற இடங்களுக்குள்ளும் நேதாஜியின்
படை நுழைந்து விட்டது.
இந்த
காலகட்டத்தில் போரில் ஜப்பான் ஆயுதங்கள் சப்ளை செய்யாததால் நேதாஜி தன் ஐ.என்.ஏ.படைகளைப்
பின்வாங்க உத்தரவிட்டார். அமெரிக்கா ஜப்பான் மீது ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில்
அணுகுண்டுகளைப் போட்டு பேரழிவை உண்டாக்கியது. ஜப்பான் கையொடிந்த நிலைமையில் தவித்த
நேரத்தில் இந்திய பிரிட்டிஷ் படைகள் பர்மாவின் உட்புகத் தொடங்கியது. நேதாஜி தன் படைகளைப்
பின்வாங்கச் சொல்லிவிட்டு தான் ஜப்பான் செல்வதற்காக 1945 ஆகஸ்ட் 16ஆம் தேதி விமானத்தில்
ஏறிப் பயணம் மேற்கொண்டார்.
அவர்
பயணம் செய்த விமானம் பார்மோசா தீவிற்கருகில் பறக்கும் போது தீப்பற்றி கடலில் விழுந்தது.
நேதாஜிக்கு பலத்த தீக்காயங்களுடன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிர்
நீத்தார்.. இந்த செய்தியை அவருடன் பயணம் செய்த காயத்துடன் உயிர் பிழைத்த ஐ.என்.ஏ.கர்னல்
ஹபிபுர் ரெஹ்மான் உறுதி செய்தார்.