தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி IX
ஒரு வழியாக பிரதாப சிம்ம ராஜாவுக்கு சர்க்கிலாக இருந்த அண்ணப்பா முதலானோரிடமிருந்து வந்த தொல்லைகள் முடிவுக்கு வர, புதிய பிரச்சினைகள் முளைத்தன. முன்பு திருச்சினாப்பள்ளி கோட்டையை சந்தா சாஹேபிடமிருந்து பிடித்து முரார்ஜி கோர்படே என்பவனிடம் ஒப்படைத்துவிட்டு மராத்திய வீரர்கள் சதாராவுக்குப் போனார்களல்லவா, அந்த முரார்ஜி தொல்லை கொடுக்கத் தொடங்கினான்.
முரார்ஜியிடம் திருச்சியை ஒப்படைத்து விட்டுப் போன பின்பு ராஜாவாக இருப்பதன் சுகம் அவனுக்குப் பிடித்துப் போய்விட்டது. திருச்சி மட்டுமென்ன, தஞ்சாவூரையும் பிடித்துக் கொண்டால் என்ன? தஞ்சாவூர் நல்ல வளம் மிகுந்த நாடு. நல்ல வருமானம் கிடைக்கும். இப்படிப்பட்ட ராஜ்யத்தை நாம் கைப்பற்றிக் கொண்டால் என்ன என்பது அவனது எண்ணம். இது குறித்து தனது அந்தரங்க ஆலோசகனான இன்னிஸ் கானுடன் கலந்து ஆலோசித்தான். இதைத்தான் "விநாச காலே விபரீத புத்தி:" என்று சொல்லுவார்கள்.
முரார்ஜியும் இன்னிஸ் கானும் விவாதித்தனர். தஞ்சாவூர் ராஜா நமக்கெல்லாம் எஜமானன், அதுமட்டுமல்ல அவன் இப்போது தன்னை வலுவாக ஆக்கிக் கொண்டிருக்கிறான். அவனுடன் இருக்கும் மானோஜி ராவ் மிகச் சிறந்த போர்த்தளபதி. ஆகையால் நேரடியாகப் போய் அவனோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியாது. எனவே தஞ்சை ராஜ்யத்தின் ஒரு சிறு பகுதி கிடைத்தால்கூட போதுமே. கொடு என்று கேட்டால் தரமாட்டான். ஆகவே சண்டையிட்டு ஒரு சிறு பகுதியை மட்டும் பிடித்துக் கொண்டு விடலாம். பெரிய யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக பிடித்த மட்டும் போதுமென்று ஓடிவந்துவிடலாம் என்று திட்டமிட்டார்கள்.
இரண்டாயிரம் குதிரை வீரர்களைத் தாயார் செய்து கொண்டான் முரார்ஜி கோர்படே. இந்தப் படை ரகசியமாகத் தஞ்சாவூர் ராஜ்யத்தில் புகுந்து கொள்ளையடித்துவிட்டு கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவது என்று தொடங்கினார்கள். தஞ்சை படைகள் இருந்தால் ஓடிவிடுவது, இல்லாத இடங்களில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடுவது இதுபோன்ற கோழைத்தனமான காரியங்களில் ஈடுபட்டான் முரார்ஜி கோர்படே.
இப்படி இவன் சில்விஷமம் செய்து வருவதைக் கண்டு பிரதாபசிம்மர் தனது படைத் தளபதி மானோஜி ராவ் தலைமையில் ஒரு சிறு படையை அனுப்பி இந்தப் பொடியனுக்குச் சரியான பாடம் கற்பித்துவிட்டு வருமாறு பணித்தார்.
மானோஜி ராவ் யுத்தத்தில் புலி. பல போர்க்களங்களைக் கண்ட அனுபவஸ்தர். அவருக்கு இவன் என்ன சுண்டைக்காய். மானோஜி ராவின் படைகள் இன்னிஸ்கானைத் தேடி பல இடங்களில் அலைந்தன. அவர்களை ஒரு ஆற்றங்கரையில் கண்டார் மானோஜி ராவ். அங்கு அவர்கள் மீது பாய்ந்து தாக்கி இருநூறு பேருக்கு மேல் கொன்றுவிட்டு, ஐநூறு அறுநூறு குதிரைகளையும், வீரர்களையும் சிறை பிடித்துக் கொண்டு தஞ்சை வந்து சேர்ந்தார்.
இன்னிஸ்கான் போரில் மாண்டு போனான். அவன் தொல்லை அதோடு ஒழிந்தது. தஞ்சை மீண்டும் அமைதிக்குத் திரும்பியது.
இது இப்படியிருக்க, திருச்சினாப்பள்ளியிலிருந்து போர்க்கைதியாக்கி சந்தா சாஹேபை சதாராவுக்கு அழைத்துச் சென்ற பத்தேசிங் ரெகோஜி பான்ஸ்லே என்பவர்சதாராவுக்குக் கொண்டு போய் சிறையில் அடைத்து வைத்தார். சந்தா சாஹேபின் நண்பன் ஒருவன் மகமது அரப் என்பவன், ஆயிரக்கணக்கான குதிரைகள், ஐந்து யானைகள், கொஞ்சம் துப்பாக்கி ஏந்திய போர் வீரர்கள் ஆகியோருடன் புதுச்சேரிக்கு வந்து அங்கு இருந்த பிரெஞ்சுக் காரர்களிடம் உதவி கேட்டான் சந்தா சாஹேபுக்காக. பிரெஞ்சுக் காரர்களும் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்கள். சந்தா சாஹேப் சதாராவில் சிறையில் இருப்பது பற்றியும் அதற்குக் காரணமானவன் தஞ்சாவூர் ராஜா பிரதாபசிம்மன் என்றும் சொல்லி இவர்களுக்கு எதிராகப் போரிடப்போவதாகச் சொல்லி புறப்பட்டு வந்தான் அந்த மகமது அரப்.
இவன் அங்கிருந்து நேராக உடையார்பாளையம் காட்டுப் பகுதிக்கு வந்தான். அந்த காடுகளில் ஒளிந்து திரிந்து இரவு நேரங்களில் சுற்றுப்புற பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தான். இப்படி அடிக்கடி திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெறுக் கொள்ளை சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தின.
இதுபற்றி புகார்கள் தஞ்சை மன்னர் பிரதாபசிம்மருக்கு வந்து சேர்ந்தன. அவர் தளபதி மல்லார்ஜி காடேராவ், மானோஜி ராவ் ஆகியோருடன் ஒரு சிறு படையை அனுப்பி கொள்ளைக்காரர்களைப் பிடித்து வருமாறு கட்டளையிட்டார். இந்த தஞ்சாவூர் படை சுமார் ஒரு மாதகாலம் சுற்றித் திரிந்து கடைசியில் திருக்காட்டுப்பள்ளி கோட்டையின் அருகில் மகமது அரபை மடக்கிப் பிடித்தார்கள். அவனுக்குச் சொந்தமாக இருந்த யானைகள், குதிரைகள், விருதுகள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு மகமது அரப்பையும் அவனது சேனை வீரர்களையும் கொன்று போட்டார்கள்.
வெற்றி வீரர்களாக ஏராளமான குதிரைகள், யானைகள் இவற்றோடு தஞ்சைக்குத் திரும்பிய இவ்விரு வீரர்களையும் மகாராஜா தக்க மரியாதைகளுடன் வரவேற்றார். அந்த இரு தளபதிகளுடைய வீரத்தைப் பாராட்டி அவ்விருவருக்கும் மகாராஜா அவர்கள் மீட்டுக் கொண்டு வந்த விருதுகள் அவ்வளவையும் அவர்களுக்கே சொந்தமாகக் கொடுத்து விட்டார்.
(இன்னும் வரும்)
1 comment:
நேற்றுதான் இரண்டு பகுதிகள் படித்தேன். அதற்குள் ஒன்பதாவது பகுதி வந்துவிட்டதா? இப்போதுதான் படித்துமுடித்தேன். சுவாரசியமாக இருக்கிறது மராட்டியர் வரலாறு. - உமா
Post a Comment