பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, September 23, 2011

மராத்தியர் வரலாறு - Part 14

                                                                    முகமது அலி

தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 14

சந்தா சாஹேப் பாளையம் (கோயிலடி) எனப்படும் கிராமத்துக்குச் சென்று அங்கு முகாமிட்டிருந்த மானோஜி ராவிடம் சரணடைந்ததையும், அவன் பாதுகாப்போடு தஞ்சாவூருக்கு அனுப்பப் பட்டதையும் பார்த்தோம்.

இனி அங்கு திருச்சினாப்பள்ளி போர்க்களத்தில் என்ன நடந்தது பார்க்கலாம். மறுநாள் பொழுது விடிந்தது. ஸ்ரீரங்கத்தில் சந்தா சாஹேபின் படை முகாமிட்டிருந்த பகுதியில் ஒரே பரபரப்பு. சந்தா சாஹேபை காணோம். வீரர்கள் குழப்பமடைந்தார்கள். தளபதிகள் கூடிப் பேசினார்கள். தலைவன் இல்லாமல் படை என்னதான் செய்ய முடியும்? முகமது அலிக்குச் செய்தி போயிற்று. போர்க்களத்திலிருந்து திடீரென்று சந்தா சாஹேப் மாயமாய் மறைந்து விட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவியது. அவன் எங்கு போயிருப்பான் என்று நாலாபுறமும் வீரர்கள் தேடி அலைந்தனர்.

ஒரு நாள், இரண்டு நாள் குழப்பத்தில் கழிந்தன. மூன்றாம் நாள் ஒரு செய்தி கிடைத்தது. சந்தா சாஹேப் மராத்தியப் படை வீரர்களிடம் சரண் புகுந்துவிட்டான். அவன் இப்போது தஞ்சை சிறையில் பத்திரமாக இருக்கிறான் என்பது அந்தச் செய்தி.

முகமது அலி திருச்சியில் இருந்து தளபதி மானோஜி ராவுக்கும், மகாராஜா பிரதாபசிம்மருக்கும் கடிதங்கள் எழுதினான். மிகப் பணிவாக எழுதியிருந்தான் அந்தக் கடிதங்களை. மகாராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் மகாராஜாவின் அனுக்கிரகத்தினால்தான் தான் உயிர் வாழ்வதாகவும், மகாராஜா செய்திருக்கிற உதவியால்தான் தான் இழந்த அரசை மீண்டும் பெற முடிந்தது என்றும், தங்களுக்கு வந்து நேரில் மரியாதை செய்ய வேண்டுமென்று நினைத்திருந்த நேரத்தில் மோதின்கானும், சந்தா சாஹேபும் படையெடுத்து வந்து தொல்லை கொடுத்து விட்டார்கள் என்றும் எழுதியிருந்தான்.

இவர்களால் தங்கள் ராஜ்யத்துக்கும் தொல்லைகள் வந்த போதும், வருவது வரட்டும் என்று நினைத்துத் தாங்கள் எனக்கு உதவி செய்ததால்தான் எனக்கு ஆற்காடு ராஜ்யம் மீண்டும் கிடைத்தது. ஆகையால் இப்பொழுது தாங்கள் தயவு பண்ணி என் தந்தையின் கொலைக்கு நான் பழிவாங்கும்படி, கொலைகாரன் சந்தா சாஹேபைத் என்னிடம் ஒப்படைத்து விட வேண்டுமாய்ப் பிரார்த்தனை பண்ணிக் கேட்டுக் கொள்வதாக அந்தக் கடிதத்தில் இருந்தது.

அது தவிர, சந்தா சாஹேபை எதிர்த்துப் போருக்கு மைசூரிலிருந்து வந்திருக்கும் நந்திராஜா, மொரார்ஜி கோர்படே ஆகியோரும் சந்தா சாஹேபைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டனர். கிழக்கிந்திய கம்பெனி ஆங்கில அதிகாரிகளோ, மிகவும் அதிகார தோரணையில் மன்னன் பிரதாபசிம்மருக்கு உத்தரவு பிறப்பித்தார்கள் அவனைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி. இவர்களையெல்லாம் மானோஜி ராவ் சந்தித்துப் பேசினார் (Troubleshooter போலிருக்கிறது). இறுதியில் சந்தா சாஹேப் தங்களிடம் சரணாகதி அடைந்து விட்டதாகவும், அவனுக்குத் தாங்கள் உயிர்ப்பிச்சை அளித்திருப்பதாகவும் சொல்லி அவனை அவர்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார்.

ஆயினும் ஆங்கிலக் கம்பெனியாரின் கெடுபிடி அதிகரித்தது. முகமது அலியின் குரலும் கெஞ்சலில் இருந்து மாறுபடத் தொடங்கியது. வேறு பல ராஜ்யத்தின் படைகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாலும், ஆங்கில அதிகாரிகளின் தொல்லை அதிகரித்ததாலும் இறுதியில் வேறு வழியில்லாமல் முகமது அலியிடம் சந்தா சாஹேபை ஒப்புவிக்க தஞ்சாவூர் மன்னர் சம்மதித்தார்.

சிறையில் இருந்த சந்தா சாஹேப், மானோஜி ராவிடம், தான் சரணடைந்த போதே இந்த உத்தரவாதத்தைத்தான் எதிர் பார்த்ததாகவும், இப்போது தன்னை சித்திரவதைக்கு உட்படுத்தி இறக்கும்படி செய்வது சரியா என்று கேட்டான். அப்படி ஒரு நிர்ப்பந்தம் இருக்குமானல், அவர்களிடம் என்னை உயிரோடு ஒப்புவிப்பதற்கு பதிலாக என்னைத் தஞ்சையில் உங்கள் கையால் கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சினான்.

அவனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, தஞ்சை மன்னர் சந்தா சாஹேபை தஞ்சையில் கொன்று அவன் உடலை முகமது அலிக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். *அதன்படி தஞ்சாவூரில் 17-6-1752 அன்று சந்தா சாஹேபின் தலை வெட்டப்பட்டு, தலை மட்டும் ஆற்காடு நவாப் முகமது அலிக்குத் திருச்சிக்கு அனுப்பப் பட்டது. உடல் தஞ்சையில் முதலில் புதைக்கப்பட்டது, பின்னர் அதுவும் எடுக்கப்பட்டு திருச்சி பெரிய பள்ளிவாசலுக்கு அனுப்பி அங்கு மரியாதைகளோடு அடக்கம் செய்யப்பட்டது.

(*இதில் கண்டுள்ள சில நிகழ்ச்சிகள் மற்ற சில வரலாற்றுக்கு மாறுபட்டுக் காணப் படுகிறது. குறிப்பாக சந்தாசாஹேபின் மரணம் குறித்தது. சந்தா சாஹேப் மானோஜி ராவிடம் சரணாகதி அடைந்தது, முகமது அலியின் வற்புறுத்தலால் சந்தா சாஹேப் தஞ்சையில் தலை வெட்டப்பட்டது இவைகள் வரலாற்றில் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சந்தா சாஹேப் சேனைக்குப் படை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வர போய்க்கோண்டிருந்த போது அவரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றதாகவும் சொல்லப் படுகிறது.

கொவிலடியில் சந்தா சாஹேப் மானோஜி ராவிடம் சரண் அடைந்த பின், மராத்திய படைகள் பிரெஞ்சுப் படையுடன் வீரமாகப் போராடி அவர்களைத் தோற்கடித்து விரட்டியடித்தது.

இந்த காரியங்களுக்காக நவாப் முகமது அலி மராட்டிய மன்னன் பிரதாபசிம்மருக்கு நன்றிக் கடனாக 10 லட்சம் பணமும், திருச்சினாப்பள்ளி ராஜ்யத்துக்கு உட்பட்ட கோவிலடி, இளங்காடு ஆகிய கிராமங்களையும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் ராஜாவுக்கு நன்கொடையாக வழங்கினார். அது போலவே புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானுக்குக் கப்பத் தொகையினை இனி ஆற்காட்டு நவாபுக்குச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவு இட்டான்.

யுத்தம் தொடங்கும் முன்பாக முகமது அலி வெற்றி பெற்றால் திருச்சினாப்பள்ளி ராஜ்யத்தை மைசூர் ராஜாவுக்குத் தந்து விடுவதாக வாக்களித்திருந்தார். மைசூர் ராஜாவுக்கு அப்படி திருச்சியைத் தருவதற்கு மனமில்லாமல் இப்போது அதன்படி நடக்க இயலாது என்பதைத் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட மைசூர் ராஜாவும், முரார்ஜி கோர்படேயும் முகமது அலியின் மீது போர் தொடுத்தனர். இப்படியொரு எதிர்பாராத யுத்தம் கூட்டணிக்குள் நேர்ந்துவிட்டதை அடுத்து முகமது அலி வழக்கம் போல தஞ்சாவூர் ராஜாவிடம் உதவி கேட்டார். இவரும் படைகளை அனுப்பி வைத்தார். அப்போது நடந்த போரில் மைசூர் ராஜாவின் படைகளில் இருந்த ஏராளமான யானைகளில் ஒன்று தஞ்சாவூருக்கு ஓடிவந்து விட்டது. போரில் தஞ்சை வீரர்கள் வெற்றி பெற்றார்கள். மைசூர் படையினரிடமிருந்து பீரங்கி ஒன்றையும் தஞ்சை வீரர்கள் கைப்பற்றிக் கொண்டு வந்தனர்.

மைசூர் ராஜாவிடமிருந்து திருச்சியைக் காப்பாற்றி, அதனை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, திருச்சியைச் செப்பனிட்டுவிட்டு நவாப் ஆற்காடு திரும்பினார். அங்கிருந்து ஆங்கில அதிகாரிகளைச் சந்தித்து நன்றி சொல்ல சென்னைக்கும் சென்றார்.

அப்படி நவாப் போகிற வழியில் பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகையில் மொரார்ஜி கோர்படேயின் தம்பியான புஜங்க ராவ் என்பவனும், அவனது மருமகனும் தங்கள் படையோடு வந்து நவாபை வழிமறித்துத் தாக்கினார்கள். அங்கு நடந்த போரில் நவாபின் சேனை சுட்டதில் புஜங்க ராவும், அவன் மருமகனும் இறந்து போனார்கள். அதன் பிறகு நவாப் வழியில் தொல்லை எதுவும் இல்லாமல் ஊர் போய்ச்சேர்ந்தார்.

இப்படி வழியில் திருவதிகையில் தனது தம்பி புஜங்க ராவும் அவன் மருமகனும் முகமது அலியோடு போரிட்டு மாண்டு போன செய்தியை முரார்ஜி கோர்படே கேட்டு மனம் துக்கப்பட்டான். அவனுக்கு எல்லாமே வெறுத்துப் போய்விட்டது. மிகுந்த மன வருத்தத்துடன் தனது சொந்த ஊரான கூட்டி (Gooty) க்குச் சென்று விட்டான். மைசூர் ராஜா நந்திராஜா சில காலம் திருவானைக்காவைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்து விட்டு அவனும் ஊர் திரும்பினான்.

(இன்னும் உண்டு)


No comments:

Post a Comment

You can give your comments here