பிராமணர்கள் யார் ?
திரு ராதாகிருஷ்ணன் என்கிற ஒரு அன்பர் மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரையொன்றிலிருந்து ஒரு பகுதியை எனக்கு அனுப்பியிருந்தார். மகாகவியின் சிந்தனை நமக்கொன்றும் புதியதல்ல என்றாலும், அதுகுறித்து விரிவாக மக்களுக்குத் தெரிவித்தால்தான் பாரதியின் கருத்தின் முக்கியத்துவம் புரியும். மகாகவி பாரதி ஜாதியவாதி அல்ல. ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட மனிதஜாதி. ஒரு காலத்தில் பாரதியைப் பார்ப்பனக் கவி என்று மறைக்கப் பார்த்தவர்கள் உண்டு. பிறகு அவர்களே அவனைப் புரிந்து கொண்டு சிறப்புச் செய்யத் தொடங்கினர். பிராமணர்களில் ஒரு பகுதியினர் பாரதி தங்களை மிகவும் காட்டமாகத் தாக்கியிருக்கிறான் என்று குறைபட்டுக் கொள்கின்றனர். அவனை அதனால் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த கருத்துக்களெல்லாம் காலம் கடந்தவை. இன்னமும் பாரதியை இந்த நாடு புரிந்து கொள்ளவில்லை என்றால், அது இந்த நாட்டு மக்களின் அறியாமையைத்தான் காட்டும். பாரதி ஒரு சர்வதேச பார்வையும், ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட 'மனித ஜாதி'யை மட்டும் சார்ந்தவன் என்பது மீண்டும் ஒரு முறை பறை சாற்ற விரும்பியபோது, தமிழ் விரும்பி எழுதிய இந்த நீண்ட கட்டுரை மிகவும் சரியான, துல்லியமான, நேர்மையான 'பாரதியின் ஜாதியப் பார்வையை' விளக்குவதாக அமைந்தது. அதை இங்கு அனைவருக்கும் கொடுக்கிறேன். தமிழ் விரும்பிக்கு நமது மனப்பூர்வமான நன்றி.ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். அது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கக் கூடாது. கடந்த 95 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டில் உருக்கொண்டு, வளர்ந்து அரசியலை, சமூகத்தை, கல்வியை, தனிமனித வாழ்க்கையை 'வெறுப்பு' எனும் ஆயுதம் கொண்டு தாக்கி வரும் ஒரு அநீதி ஒருகால கட்டத்தில் மக்கள் புரிந்து கொள்வது அவசியம். இந்த 'வெறுப்பின்' வேர் நீளப் பதித்து ஆல்போல் தழைத்து சமூகத்தின் அமைதியைக் குலைத்து வருகிறது. இந்த 'வெறுப்பு' ஒன்றை மட்டும் வைத்து நமது பொது வாழ்க்கை சீர்குலைந்து விட்டது. அது நேராக ஆக இதுதான் நல்ல தருணம். கட்டுரையைப் படியுங்கள். தமிழ் விரும்பிக்கு நன்றி.
பாரதி கூறிய பிராமணனை புரிந்து கொள்வோம்.
தமிழ் விரும்பி.
"உலகத்தில் இருக்கிற கோயில்களில் பாதிக்கு மேல் இந்தியாவில் தான் இருக்கின்றன. அதிலும் பாதிக்கு மேற்பட்ட ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பக்தி நூல்களில் பாதிக்கு மேல் இந்தியாவில் தான் இருக்கின்றன. அதிலும் பாதிக்கு மேற்பட்ட நூல்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவையே" - காஞ்சிப் பெரியவர்.
வேதங்கள் ஒரு பார்வை.
வேதம் என்றுக் கொண்டால் ஒருகோடி மடங்கில் நமக்கு கிடைத்து ஓன்று இரண்டே பங்கே என்பர். ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் வேறுபட்ட பல விசயங்களை போதித்தன...
ரிக் வேதத்தில் முதலில் இயற்கையையும், அதன் பிறகு வருணன், இந்திரன், ருத்திரன், சூரியன் (விஷ்ணு), உஷை (விடிவெள்ளி), சரஸ்வதி நதி, பூமி என்ற பெண் தெய்வங்களையும் போற்றினர். இருந்தும்
"ஏகம் ஸத் விப்ரா பஹூதா வதந்தி" என்பது மூலம். (ரிக் I .164 .)
பல தெய்வங்கள் வணங்கப் பட்டாலும் "உண்மை ஒன்று; அதனை உயர்ந்தோர் பல பெயரில் அழைப்பர்" என்று ரிக் வேதம் கூறுகிறது என்பர்.
அதோடு அஞ்சத்தக்க வராக இருந்த ருத்திரனும், யஜூர் வேதத்தில் மகாதேவனாக போற்றப் படும், யாவும் ஒரேக் கடவுளென இரண்டறக் கலந்தார்கள்...அதர்வணம் கூறும்.. பேய்கள், மந்திர தந்திரங்கள் இவைகளை எல்லோரும் எடுத்துக் கொள்ளவில்லை... அது அப்படி இருக்க...
இந்து மதம் பற்றிப் பார்ப்போமானால், அது உலகில் உள்ள சர்வ மதங்களையும் தடையின்றி ஏற்றுக்கொள்ளும் தாயன்பு மிக்கதாகவே இருந்திருக்கிறது... அதை பகவத் கீதையிலே கிருஷ்ணனும்
"அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகிறார்" (9. 23.)
"பிறர் அன்னியரிடமிருந்து பெற்ற சுருதிகளை (வேதங்களை) வழிபடுகிறார்கள். அவர்களும் அந்த சுருதிகளின் படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்லுவார்" (13. 26.) என்றே கூறியிருக்கிறான்.
இவைகள் வேதங்கள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டும் மேம்பட்டும் நின்றாலும் எல்லாமும் ஒன்றான ஒன்றையே போற்றி பிறப்பருக்கின்றன என்பதாகும்.
அதுவே பின்னாளில் உலகில் தோன்றிய அனைத்து மதங்களையும் தன்னுள்ளே அரவணைக்கவும் ஏதுவாகவும் அமைந்தது (முதலாம் நூற்றாண்டில் மயிலாப்பூருக்கும், ஆறாம் நூற்றாண்டில் கேரளத்திற்கு வந்த யூதர்கள்; கபீர்தாசரையும் இந்துத்துவத்தை - இஸ்லாத்தோடு இணைக்கவும், பின்னாளில் அவரின் சீடர் குருநானக்க்கையும் போன்றோர் பலரையும் சுதந்திரமாக சிந்தித்து செயல் புரிய விட்டது.. இந்த மதமும், இந்த தேசமும் தான்) .
இதுவே இந்து மதத்தின் தன்மை... மேலும் இந்து மதம் சிந்தனை சுதந்திரமும் வழங்கி இருந்தது / இருக்கிறது / இருக்கும் என்பதற்கும் சான்று இதுவே.
ஏழாம் நூற்றாண்டில் அரேபியரின் கட்டாயத்தில் பலியாகாமல்.. ஈரானியர் இந்தியாவில் வந்து பார்சிகளாக வாழ்வதும்... இந்தியாவிற்கு நண்பனாக வந்த இஸ்லாமியர்கள்... சேர நாட்டில் குடியேறி இந்துக்களின் பெண்களை மணந்து அவர்களின் மாப்பிள்ளைகள் ஆகியதும்,
சுந்தரமூர்த்தி சுவாமிகளது நண்பரான சேரமான், இஸ்லாமியர்களை தாயன்போடு ஆதரித்தான் என்பதும்.. சோழ நாட்டிலும் அவர்கள் குடியமர்ந்ததும்.. தர்காக்களைக் கட்டியதும் அறிவோம்...
பதினொன்றாம் நூற்றாண்டிலேயே ஒரு சாயித் இளவரசர்... திருச்சி நகரில் தீவிரமாக இஸ்லாத்தைப் பரப்பியதாக செவிவழி செய்தியாக அறிகிறோம்.
வெள்ளையர்களின் வருகையும் 1833 -லிருந்து 1857 -வரை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கொம்பெனி இங்கிலாந்து பேரரசின் ஒரு கிளையாக செயல் பட்டது இவை யாவும் நாம் அறிவோம். வெள்ளையர்களின் வருகை….. அவர்களின் நோக்கம் இந்தியச் செல்வங்களைக் கொள்ளை அடிப்பதே...
பிறகு பின்னாளில் இங்கேயே இந்தியர்களை அடிமையாக்கி அவர்களின் சாதியத்தின் வேறுபாடுகளை, அதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை தமக்கு சாதகமாகக் கொண்டு, அவர்களை ஒற்றுமை இல்லாமல் செய்து ஏற்கனவே பிளவு பட்டுக் கிடந்த சமூகத்தை தன வயமாக்கி, தொழில் சாலைகள் அமைத்து பொருள்கள் உற்பத்தி செய்து சந்தையும் படுத்தினர். அதற்கு ரயில்வே, மின்சாரத்தந்தி இவைகளையும் அமைத்தனர்.. அதை அவன் ஆக்கிரமித்திருந்த அனைத்து நாடுகளிலும் இவர்களைக் கொண்டேயும் செய்தனர். முதலில் மன்னர்கள் எதிர்த்து போராடினர் அதை வெள்ளை அரசாங்கம் ஒரு பொருட்டாக கருதவில்லை. இந்தக் கதைகள் எல்லாம் நாம் அறிவோம்..
சாதி முறைகளின் துவக்கம்! பயன்? ஏன்? எப்போது / எதுவரை?
சாதி முறைகள் பண்டைய இந்தியாவில் (மகாபாரத போருக்கு பிறகு என்கிறது புராணம்); இருந்தும் இந்த அமைப்பு கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகள் பழமையே என்கிறார் சுவாமி விவேகானந்தர். சமூக நலனுக்காக ஆரம்பிக்கப் பட்டதே.
இந்த ஜாதிகளால் தான் முப்பது கோடி ஜனங்களுக்கும் வயிற்றுக்கும் ஏதோ உணவு கிடைகிறது. அது ஒரு நிறைவான அமைப்பு இல்லை தான் இருந்தும் ஜாதி என்று ஒன்று இல்லைஎன்றால் இன்று சம்ஸ்கிருத நூல்கள் இருந்திருக்காது.
இந்த ஜாதி முறைகளாலே பாதுகாப்பு சுவர்கள் கட்டப்பட்டன; அவற்றைச் சுற்றி எத்தனையோ படையெடுப்புகளும், பொங்கி வந்து மோதின, ஆனால் அவற்றால் அந்த சுவர்களை தகர்க்க முடியவில்லை. ஜாதியின் உபயோகம் இன்னும் தீர வில்லை அதனால் தான் அது இன்னும் இருக்கிறது.
அதன் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் அதனை மென் மேலும் உறுதிப் படுத்தி உள்ளது. இந்தியா ஒன்று தான் இன்னமும் ஆக்கிரமிக்க வில்லை அதுவும் அசோகச் சக்ரவர்த்தியின் நிபந்தனைக்குப் பிறகு" இவ்வாறு 1896 -ல் விவேகானந்தர் சொற்பொழிவாற்றி இருக்கிறார்.
ஆக, இங்கே பாதி விஷயங்கள் பிடி பட்டிருக்கும் என நம்புகிறேன்.
இது இப்படி இருக்க வேதங்கள் பெரிதும் போற்றப் பட்டு யாகங்களும் சிறந்து விளங்கிய காலம். அவைகளுக்கெல்லாம் பிறகு பல காலக் கட்டங்களை கடந்து வந்த இந்தியா தமது மக்களின், நாட்டின் சமூகத்தின் நலனுக்காக, அந்நியரிடம் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்காக ஏற்பாடு செய்து கொண்ட முறையே இந்த சாதி முறை.
இந்த சாதி முறை அடிப்படையே, இந்துமத அடிப்படை என்பார் பலர். சாதி முறை என்பது பண்டைய இந்தியச் சமுதாயத்தில் அமைந்த வம்சப் பரம்பரைத் தொழில் பிரிவினை ஏற்பாடே யாகும்.
உண்மையில் இந்த சாதி முறைக்கும் இந்து சமயத்திற்கும் தொடர்பு இருக்குமானால்! அது தான் இந்து மத சாரம் என்றால்! நந்தனையும், திருப்பாணாழ் வாரையும் போற்றியதே அந்த சமயம்.
இந்துக்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளும் ராமகாவியத்தில் கூட கம்பன், ராமனின் சகோதரர்களை நான்கில் இருந்து குகனையும், சுக்கிரீவனையும் சேர்த்தும்; இன்னும் சொன்னால், வ்பீஷ்ணனையும், காகுந்தனையும் அரவணைத்தே சென்றது கூட கூர்ந்து கவனிக்கத் தக்கதே.
சமயத்திற்கு சாதி முறையை அடிப்படையாகக் கொள்வது, தானடித்த மூப்பாகச் செய்யும் ஒரு முயற்சியே ஆகும். சாதி முறை என்பது சமுதாய அமைப்பின் ஓர் ஏற்பாடே. ஆகவே கால காலமாக அதனை சாடியே வந்துள்ளனர் சமய ஞானிகள்...
அந்தவழியிலே சங்கரரும், ராமானுஜரும் பெரும்பங்காற்றி யுள்ளனர் இவர்கள் வேதத்தின் முடிவாகிய வேதாந்தத்தை அதாவது உபநிடதங்களை தந்தார்கள்.
உபநிடதங்கள் தோற்றம் பற்றிய ஒரு பார்வை.
"உபநிடதங்கள் என்பன வேதத்தின் முடிவு / வேதாந்தம் என்பதாகும். பெரும்பாலும் பிராமணர்களும், ஷத்திரியர்களும் நமது ஆச்சாரியர்களாக இருந்திருக்கின்றனர். பெரும்பாலான உபநிடதங்கள் ஷத்திரியர்களால் எழுதப் பட்டவை. வேதங்களில் கர்மகாண்டப் பகுதி பிராமணர்களால் எழுதப் பட்டவை. இந்தியா முழுவதும் ஆச்சாரியர்களாக இருந்தது பெரும்பாலும் சத்திரியர்களே, அவர்களின் போதனைகள் பெரும்பாலும் உலகம் தழுவியவைகளாகவே இருந்தன. பிராமண ஆச்சாரியர்களுள் இருவரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவு பரந்த நோக்கைப் பெற்றிருக்கவில்லை. அவதாரங்களாக வழிபடப் பட்டு வரும் ராமரும், கிருஷ்ணரும், புத்தரும் சத்திரியர்களே." என்பர் சுவாமி விவேகானந்தர்.
சாதி முறை சமுதாய அமைப்பிற்கு உதவி செய்ய அமைந்ததாலும், அந்த சமுதாயம் சார்ந்த சமயத்தையும் கைகோர்த்துக் கொள்வது இயல்பே. அப்படி சமுதாயத்தில் அறிவுக்கும், அரணுக்கும், பொருளுக்கும், இவைகள் ஒருங்கே செயல்பட அடிப்படையாக ஒரு பிரிவையும் கொண்டு நான்கு பிரிவாக இயங்கியிருக்கிறது இந்த சமுதாயம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இப்படி இந்தப் பிரிவுகள், ஒரு சில தகுதி, விருப்பு, இயல்பு, சேவை மனப்பான்மை இப்படி பல அளவீடுகளில் பிரிக்கப் பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி பிரிந்த பிரிவில் எல்லாவற்றிற்கும் முக்கியமான அறிவைத் தரும் பொறுப்பு முதாலவதாக ஒரு பிரிவினரிடம் தரப் பட்டு இருந்தது... அவர்களிடம் அதை தந்தாலும் அவர்களின் வாழ்வாதாரம் என்பது இந்த சமூகத்தின் பொறுப்பு.
ஆக, அப்படி அறிவுக்கும், அதைத் தரும் வேதக் கல்விக்கும் பொறுப்பேற்ற அந்த சமூகம் பிரமாணம் என்னும் வேதங்களை ஓதியும், ஒதுவித்தும் இந்த சமூகத்தைப் பார்த்துக் கொண்டது.
இந்த சமூகம் அவனை பார்த்துக் கொண்டது.
சமூகத்தின் நியதிகளாக; அதிலும் அறிவு தரும் உயரிய தொழிலை செய்யும் அவனிடம் அகந்தை வராது. ஏனென்றால் அவன் வேதம் படிக்கிறான், வேதம் படிப்பவன் என்ன கதி அடைவான் என்பதை விளக்கத் தேவையில்லை...
இருந்தும் அவனுக்கும் அவன் குடுபத்திற்குமான உணவினை அவன் மற்றவர்களிடம் பெற்றே வாழ வேண்டும் அதுவும் அன்றாடம் பெற்றே வாழ வேண்டும் என்பது ஒரு நியதி.
வேதம் கற்றவன் பார்ப்பான்... அவன் ஞானம் வரப் பெற்றவன் பேரொளியில் கலக்க முயன்று வெற்றியும் பெற்றவன். அவன் பேரானந்தத்தில் திளைப்பவன்... அவனுக்கு இந்த உலகாயாதப் பொருளில் பற்று இல்லை... இருந்தும் அவனும் இல்லறத்தில் உள்ளவன்... அவனுக்கும் குடும்பம், மனைவி மக்கள் உண்டு.... பாரதி கூறிய அத்தனையும்
“ எவனொருவன் இரண்டற்றதும், பிறவி,குணம்,தொழில் என்பவை
இல்லாததும்,உள்ளும்..புறமும் ஆகாசம் போல கலந்திருப்பதும்,அளவிடக்
கூடாததும்..அனுபவத்தால் இறுதிப்பொருளை, நேருக்கு நேராக தெரிந்து காமம்
,ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய்
பாபம்,மாற்சரியம்,விருப்பம்,ஆசை,மோகம் முதலியவை
நீங்கியவனாய்,இடம்பம்..அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய்
இருக்கின்றானோ,,இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணன் என்பது
சுருதி,ஸ்மிருதி,புராண இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும்.
பிராமணன் என சொல்ல ஆசைப்படுபவர் அனைவரும் மேற்கூறப்பட்ட நிலையைப் பெற
முயற்சி செய்யக் கடவர்."
அந்நாளில் அந்த பிராமணனிடம் அவனின் லட்சணமாகவே இருந்தது.
ஆமாம் அந்த லட்சணம் தான் அவனை அனைவருக்கும் பிராமணன் என்றுக் கூறிற்று... அவன் யாகம் வளர்த்தான்... வேள்விகள் செய்தான்... அவன் தன்னை மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்த வேண்டும் என்று அல்ல, தான் யாரென்று எளிதில் விளங்கிக் கொள்ள சில அடையாளங்களை சுமந்துக் கொண்டான்.
அவன் மாத்திரம் அல்ல தொழில் செய்வோர் யாவரும் தன்னை அடையாள படுத்திக் கொள்வது எல்லா இடங்களிலும், எல்லாக் காலத்திலும் கடை பிடிக்கும் ஒரு வழக்கமே.
இங்கே ஒரு விஷயத்தை நினைவுப் படுத்த வேண்டும். உலகில் உள்ள பெரும்பாலான மதங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டதும் வேதாந்தத்தில் கூறப் பட்டதுமான கர்ம வினை தான் ஒருவனின் பிறப்பை. அதாவது ஒருவன் முன்பு செய்த கர்மத்தின் படி தந்து வாழ்வை தொடர சூழல் கொண்ட குடும்பத்தில் அப்படிப் பட்ட பெற்றோருக்கு பிள்ளையாகப் பெறச் செய்கிறது என்பதையும். மேலும் இவன் தந்து கர்மத்தை தீர்த்து நற்கதிக்கு முயன்று பேரொளியில் கலக்காதப் பட்சத்தில், மீண்டும் அவனின் கர்ம வினை அடுத்தப் பைரவியை நிர்ணயிக்கிறது. ஆக, பாரதி கூறி இருப்பது போல் முன்னைய மற்றும் இருக்கும் பட்சத்தில் அடுத்தப் பிறவி அவரவர் கர்மவினையைப் பொறுத்தே.
இப்படியாக காலம் சென்றது... அறிவுத் தருபவன் உண்மையில் சிறந்தவன்... அவன் மாதா, பிதாவுக்கு அடுத்தப் படியாக மதிக்கப் படுபவன் / மதிக்கப் பட வேண்டியவன்... அவனின் வேத அறிவு, பல சாஸ்திரங்களின் அறிவு, அவனை மக்கள் மாத்திரம் அல்ல மன்னர்களும் போற்றும், நன்றி பாராட்டும் அளவு உயரந்தது... அதற்கு அன்பின் மிகுதியால் அந்த இல்லறத்தொனுக்கு பரிசாக; அந்த சமூகம் அவனுக்கு பரிசுகளை வழங்கிற்று... மன்னர்கள் நிரந்தர ஜீவனத்திற்கு மானியங்களை வழங்கிற்று...
இருந்தும், மன்னராட்சியில் பாதகமே, இந்த சமூகம், தனி மனித சுதந்திரம் இல்லை. என்பதாலே மன்னராட்சியை இந்த பாரதியும் வெறுத்தொதிக்கினான்... வேண்டாம் என்றான் என்பதை அவனின் கவிதைகளை படித்தவர்கள் அறிவர்.
பாஞ்சாலி சபதத்திலே அவனின் ஆதங்கத்தைஎல்லாம் கொட்டித் தீர்த்திருப்பான்.... படித்துப் பாருங்கள்.
அதே வேளையில் இந்திய தொழில் அபிவித்திக்கும், அறிவிற்கும் லாபத்தோடு உதவினாலும்; மிக குறுகிய காலத்தில் இந்தியா தொழில் அபிவிருத்திப் பெற்றதால் அப்படி உதவிய… வேல்ஸ் - ஐ 1906 ஜனவரி 29 -ல் “பாரதத்தாய் வரவேற்பதாக” பாரதி பாராட்டி வரவேற்க தயங்கவில்லை.
இந்த சமூக அமைப்பிற்கான சாதிப்பிரிவை பாழடித்ததில் பேயரசுகளுக்கு பெரும் பங்குண்டு... அது தொன்று தொட்டு இன்றும் செத்தப் பாம்பை அடித்து மக்களிடம் கெட்ட உணர்வுகள் ஏற்பட இன்றும் இந்த அரசுகளும் அதே வேலைகளைத் தான் செய்து கொண்டு தான் இருக்கிறது.
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி...
பண்டைய இந்தியாவில் இருந்த மன்னர்கள் காடுகளில் இருந்த முனிவர்களையும் மிஞ்சிய வேத அறிவைப் பெற்றிருந்தனர், அவர்களுக்கே வேதாந்த விளக்கங்களைக் கூறியும் இருந்திருக்கிறார்கள் என்பதைக் காணமுடிகிறது...
அப்படிப் பட்ட சத்திரியர்கள்... பிற்காலத்தில்... பொன், பெண், மண்ணின் மீதும், புகழின் மீது ஆசைக் கொண்டு.. தங்களது கடமைகளை மறந்து ஆசைகளுக்கு அடிமையாகி வேதாந்தம் கூறும் புலனடக்கம் இல்லாமல் செயல் பட்டதன் விழைவு...
அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை, தர்மம் கெட்டும் போனது இதன் தாக்கம் சமூகத்தில் பிரதி பலித்தது. மேலும் அது இந்த சாதிய ஒழுங்கு முறையையும் பாதித்து இருக்கும் என்பதை நம்ப வேண்டியும் உள்ளது. அத்தனைக்கும் வழி கோலியது.
மன்னர்களின் நடவடிக்கையால், வீழ்ச்சியில் இந்த பிராமணனும், மற்ற சமூகத்தாரும் பின்னப்பட்டார்கள். சமூகம் பிளவுப் பட்டது.
மன்னன் மன்னனாக இல்லாத போது, மற்ற எவை தான் சரியாக இருந்திருக்க முடியும். எளியோரை வலியோர் ஏமாற்றவும், ஒற்றுமை குழையவும், வழி கோலியது. அதுமட்டும் அல்ல இன்னும் பலவும் உண்டு..
ஆக, சமூகம் உயர்வு தாழ்வு, கொண்டதும் பிளவு பட்டதும் ஒரு தனிப் பட்ட பிரிவைக் குறை கூறுவதாக சொல்வது உணமையாகாது... இதில் எல்லோருக்கும் பொறுப்பிருக்கிறது.
எது எப்படியானாலும்... கல்வி புகட்டுபவன் தான் பொறுப்பாக வேண்டியதாகிறது... எல்லாம் இவனே சுமக்க வேண்டியவனாகிறான்.... இருந்தும் அவனும் அந்த நேரத்தில் என்னக் காரணத்தாலோ சுயநல வாதியாக நடந்து கொண்டான் என்பதும் உண்மையே.
வழிபாடு, சாஸ்திரங்கள், மந்திரங்கள்.
இந்துக்கள் வழிபாடு அவரவர் விரும்பும் கடவுளை விரும்பும் விதத்தில் வணங்குவது. இருந்தும் ஒரு வரையறை செய்து கோவில்களைக் கட்டி அதிலே சில முறைகளை ஏற்படுத்தியும். சில உண்மை சாஸ்திரங்களை கொண்டும், மந்திரங்களைக் கொண்டும் வழிபாடுகள் நடந்திருந்த காலம் அது. இதிலே முக்கிய அம்சம், குளித்து முடித்து விட்டு செய்யும் பிராணயாமமும், தியானமும், மந்திர ஜபமும் ஆகும்.
இது மனதையும் உடலையும் நேர் படுத்தும். தெய்வ உருவ வழிபாடும் அநுபூதி அடைவதற்கான வழியே தந்தது...
இப்படியாக சென்றுக் கொண்டிருந்த வேளையில் வழிபாட்டின் நோக்கம் மங்கிப்போய்... கோவில், வழிபாடு நடை முறைகள் பாதை மாறிப் போயின... பொய் சாஸ்திரங்கள், வீண் வாதங்கள் பெருகின.
கருத்து வேறுபாடும், இன பாகுபாடும், சாதி வெறியும் பெருகின.. இவையும் இந்திய சாதி அமைப்பில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தி இருந்தன. இதிலே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் பெரிதும் தலை தூக்கி ஆடியது.
இதில் என்னக் கொடுமை என்றால்.... வருண தருமப் படி நான்கு சாதிகள் என்ற அளவில் நிற்கவில்லை. காலப் போக்கில் ஒவ்வொரு சாதியிலும் பலக் கிளை சாதிகளும் தோன்றிக் கொண்டே வந்தது. மேலும் இந்து சமுதாயத்தில் ஆயிரக்கணக்கான சாதிகள் மலிந்தும் விட்டன.
சாதிபுதர்கள் பெருகியதால் சமுதாய ஒற்றுமை, பொதுநல உணர்வு என்ற நற்குணங்கள் குறைந்துக் கொண்டே போயின. கால ஓட்டத்தில் அவைகள் மறைத்தே போயின.
கடைசியாக ஒவ்வொரு சாதியையும், தனி சடங்குகளையும், தனி வழிபாட்டுத் தெய்வங்களையும், பழக்க வழக்கங்களையும் கொண்டு அவரவர் இஷ்டம் போல் வாழலானார்கள்.
சமூக நீதியும் கூட சாதிக்கொரு நீதி, வீதிக்கொரு நீதி, ஆணுக்கொருநீதி, பெண்ணுக்கொரு நீதி, வரியோனுக்கு ஒரு நீதி, கொளுத்தொனுக்கு ஒரு நீதி... என்றெல்லாம் பெருகி கடைசியில் சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் கல்வியறிவு இல்லாமல் இருக்கும் கடைசி பிரிவினர் கூட தங்களுக்குள் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேசும் நிலையம் பெருகியது.
இங்கே அச்சூழலில் பெரும்பாலும், பிராமணன் தனது நிலையை சரி செய்து கொண்டு மௌனம் சாதித்து விட்டான். அந்த பாவத்திற்கு பரிகாரம் தேடிக் கொண்டானா! அதை பிற்பகுதியில் பார்ப்போம்.
வேத காலம் போயிற்று... மன்னர்காலம் முடங்கிப் போயிற்று... இப்போது வணிகர் காலம்... அந்நியராட்சி வந்தது... என்ன செய்திற்று?...
"நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விளக்கினோம். ... உலகத்தில் எல்லா ஜாதி யாரிலும் வகுப்புகள் உண்டு. ஆனால், தீராத பிரிவுகள் ஏற்பட்டு ஜாதியை துர்பலப் படுத்தி விடுமானால் அதிலிருந்து நம்மை குறைவாக நடத்துதல் அந்நியர்களுக்கு எளிதாகிறது. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" - பாரதியார்.
சுரண்டவந்த வெள்ளையன், நிரந்தரமானான். பொருளாதார சுரண்டலுக்கு ஏதுவாக... ரயிலையும், மின்சாரத் தந்தியையும் உண்டாக்கினான்...
பிறகு புதிய பல நவீன இதுவரை வர்ண பேதம் கொண்டு தொழில் செய்து வந்த இந்த இந்தியச் சமூகத்தில் புதிய பல தொழில்களை பெருக்கினான். அடிமைகளாய் மக்களை நடத்தி அவர்களின் உழைப்பில் காசு கொழுத்தான்... பாவப் பட்ட சனங்கள் என்ன செய்வார்கள்?... பன்னூறு ஆண்டுகளாகப் படையெடுத்து வந்த பரதேசிகளை எல்லாம் ஜீரணித்து வந்த பாரத் சமுதாயம் வெள்ளையனின் ஆக்கிரமிப்பில் தடுமாரிப்போனது.
தனது தொழிலுக்கு அடிமைகளாய் இருந்த மக்களிடம் நவீனக் கல்வியறிவை புகட்டி அவர்களின் திறத்தால் தந்து தொழிலகளை இன்னமும் பெருக்கி வளர்ந்தான் வெள்ளையன்.
அப்படி இருக்க சிறு தொழில் செய்த நம்மவர்களின் தொழிலும் நலிவுற்றது..நவீன தொழில் செய்ய எத்தனித்து எந்திரக் கொள்முதல் செய்த போதும் வெள்ளையனின் சதியால் அதுவும் சீரழிக்கப் பட்டது... ஏற்கனேவே பல சூழலில் சீரழிந்துப் போன சமூகம் வேறுபட்ட பல சமயம் புகுந்து ஆழமாக பிரிந்து போன சமூகம், வெள்ளையனின் பல சூழ்ச்சியால் பாழடைந்தும் அவனின் பல்வேறுப் பட்ட வரிகளால் நொறுங்கிப் போன சமூகம், இந்த சாதி என்னும் பேய் பிடித்து ஆட்டி மேலும் மேலும் வேற்றுமைக்கு தீனி போட்ட நேரத்தில் தான்...
சுரண்ட வந்தக் கூட்டம் அதோடு நிற்காமல் இந்திய சமூகத்தில் இருக்கும் பிளவை, தீண்ட தகாதவர்களாக மற்ற வர்ணத்தாரால் நடத்தப் பட்டவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.
அந்நிய நாட்டில் இருந்து போதகர்கள் வந்தார்கள், உதவி செய்வதென்று வந்து இவர்களையெல்லாம் மதம் மாற்றம் செய்தார்கள்... சதியால் பிளவுபட்ட இந்தச் சமூகம் இன்னும் மதத்தின் பெயராலும் பெரிதும் பிளவுடலாயிற்று.
அந்நியன் அடிமைப் படுத்திய போது... சாதியாலும் மதத்தாலும் பிளவு பெற்ற மக்கள் தேசிய உணர்வு அற்றவர்களாக விடுதலை வேட்கை இல்லாதவர்களாக, வெள்ளையர்களின் அடிவருடிகாலாகவும், அவன் போடும் ரொட்டித் துண்டுக்காக அவன் ஏவல் நாய்களாகவே இருந்தார்கள்.
அந்நியனின் சூழ்ச்சிக்கு ஆளாகியும்... மூதாதையர் கூறிய வேதக் கூற்றுக் களை மறந்து வேறு வழியும் இல்லாமல் நிற்கும் பிராமணர்கள் தங்களது தவ, ஜப நிஷ்டைகளை முழுவதும் கடை பிடிக்க முடியாத ஒரு நிலை... தடுமாற்றம்... மற்றவர்களும் அப்படியே அவதியுற்ற நேரம்.. அந்த சூழலில்;
நாம் யார்? நமது கடமை என்ன? என்பதையும் உணர்ந்தும் செயல் படுத்த முடியாமல் தடுமாறிப் போயிருந்த இந்த சமூகத்திற்கு நல் வழி காண்பிக்க...
வேதாந்தம் கூறும் அந்த லட்சியப் பாதையை, இந்திய நாட்டிலே பட்டித் தொட்டியெல்லாம் அந்த லட்சியம் பரவ, திக்குத் தெரியாமல் நின்ற இந்த சமூகத்தை சரியான ஒரு பாதையில் நகர்த்து வதற்கு...
ஒரு வங்கப் புயல் ஒன்று உருவானது... அது உலகமெல்லாம் சென்று ஒரு கலக்கு கலக்கி கடைசியாக ராமேஸ்வரத்தில் மையல் கொண்டு காலூன்றி தென் இந்தியாவின் வழியே நாட்டிற்குள் புகுந்தது... அந்த புயல் வெறும் வேதாந்தத்தை கொண்டுவரவில்லை அதோடு கையிலே செயல் முறை வேதாந்தத்தையும் கொண்டு வந்தது.
அருவமும், உருவமுமாக எங்கும் நீக்கமற எல்லாமாகியும், மாசு அற்றதுமாகியும், ஆதியும், அந்தமும் அற்றதுமாகியும் விளங்கும் அந்தப் பேரொளியில் அந்தப் பெருங்கடலில் இருந்து சிதறிய சிறுத் துளிகலாகிய உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும்... எத்தனைப் பிறவிகளை எடுத்தும் கர்ம வினைகளை தீர்த்தும் கடைசியாக எங்கிருந்து வந்ததோ அங்கேயே அந்த பேரொளியில் கலப்பதே படைப்பின் தத்துவம்..
அதுவே நமது லட்சியம் என்றும்..
அதனை செயல் படுத்த நான்கு வழிகள் உண்டு அதிலே வேத காலம் தொடக்கி இன்றுவரை... ஞானயோகம், ராஜயோகம், பக்தியோகம் என்று வியாபித்து... அடுத்ததாக கர்மயோகத்தில் நாட்டல் கொண்டு நிற்கிறது என்பது தான் அந்த செய்தி....
எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு; சரணாகதித் தத்துவம் என்பது பக்தி யோகம்...
அதற்கு மட்டும் அல்ல எந்த யோகத்திற்கும் ஒரு ஆத்மா தயாராக வேண்டுமென்றாலும்.. அது தன்னை சுத்திகரித்துக் கொண்டு புலன்களை ஆளுமைக் கொண்டு, உள்ளும் புறமும் தூய்மைக் கொண்டு முயற்சிக்க வேண்டும் இது தான் முதல் படி.
இந்த முதல் படியை சமயம் அதாவது பக்தி, தருகிறது... ஆக, பூஜை, மந்திரம் வழிபாடு இவைகள்... அந்தப் பேரொளியில் கலக்க செய்து கொள்ளும் ஏற்பாடு... இப்படிப் பக்தியால் பண்பட்ட பின்பு, இடையறாத பக்தியால், அன்பால், காதலால் சக்தியை பற்றி அவளின் மூலம் அந்த பரம் பொருளை அடைவது பக்தியோகம்....
அடுத்ததாக கர்ம யோகம்.. அதாவது இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் அன்பு கொண்டு தனக்கென வாழாது, பொன், பொருள், புகழ் இவற்றின் மீதும் பற்றுக் கொள்ளாமல்... அதாவது கடமையை உணர்ந்து பலனை எதிர்பாராமல் கர்மம் செய்வது அந்தப் பேரொளியில் கலந்து அமரத்துவம் பெறுவதே கர்மயோகம்...
பக்தி மற்றவைகளில் இருந்து எளியது.... அதற்கு வழிபாடும், மந்திரமும், பூஜை புனஷ்காரங்களும் உதவி செய்யும்... அது தொடர்பான அனைத்தையும் இந்தப் பிராமண சமூகம் இந்த மானுடத்திற்கு செய்து வந்துள்ளது / செய்தும் வருகிறது.
வைதீகம் என்பது என்ன?
சாப்பிடுவது, அருந்துவது, திருமணம் போன்ற விசயங்களில் குறிப்பிட்ட ஜாதி விதிகளை கடைபிடிப்பதே தற்காலத்தில் வைதீகம் என்று கருதப் படுகிறது. வேறு விஷயங்களில் இந்து தன விருப்பப் படி எந்தக் கொள்கையையும் நம்பலாம். இயக்க அமைப்பு அதுவும் இந்தியாவில் ஒருபோதும் இருந்ததில்லை. ஆகவே வைதீகக் கோட்பாடுகளை வகுக்கவும் ஓர் அமைப்பைச் சார்ந்த யாரும் இல்லை. பொதுவாக வேதங்களை நம்புபவர்கள் வைதீகர்கள் என்று சொல்கிறோம். ஆனால், உண்மையில் துவைதிகள் தாம் பலர் வேதங்களைவிட புரானகலையே பெரிதும் நம்புகின்றனர் என்பர் விவேகானந்தர்.
வேதாந்தம் தரும் படைப்பின் தத்துவம், ஒவ்வொரு உயிரின் லட்சியம் என்பது நான்கு யோகங்களில் ஒன்றைக் கொண்டு பேரொளியில் கலப்பதே... வேறெல்லாம் இவைகளுக்கு உதவுவதாகவும், அல்லது அவசியமற்றதாகவும் இருக்கின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
சரி, யுகங்கள் நான்கு இவைகள் சுழற்சியில் வந்துக் கொண்டிருக்கின்றன... இதிலே மிகவும் கடுமையானது, கொடுமையனதுமான கலியே, அதை வெல்ல அதாவது அதை உணராது அதிலிருந்து தப்பிக்க... அதன் கொடுமையை உணரும் மனத்தை மறக்கச் செய்ய வேண்டும்...
அப்படி செய்து அமரத்துவம் செய்யும் நான்கு வழிகளில் இந்தக் கலிக்கு தகுந்தது... பக்தி யோகம், அதனினும் தகுந்தது கர்மயோகம் என்பதனாலே கலியுகத்திர்காகவே கண்ணன் கீதையை தந்திருக்கிறான். இப்படி பல விளக்கங்களுடன் செயல் முறை விளக்கங்களையும் சுவாமி விவேகானந்தர் பரப்பி வந்த நேரத்தில்....
அவர் விட்டுச் சென்றப் பணிகளை தொடர்ந்தும் செயல் படுத்திக் கொண்டிருக்கும் போது தான்.
தனக்கு நினைவுத் தெரிந்த நேரத்தில் இருந்தே ஒரு ஞானத் தேடலில், மோனத்திலே திரிந்து... யோகங்கள் செய்து சக்தியை தொழுது அனுபூதியோடு அமரத்துவமும் பெற போராடிக் கொண்டிருந்த மகா கவி பாரதிக்கு,
ஆச்சாரியார்களும், அவர்கள் வழியிலே விவேகானந்தரும் இந்த மானுட சமூகத்திற்கு செய்ய வேண்டியவைகளாக எண்ணிய செய்த காரியத்தை தானும் செய்ய வேண்டும் என்று துணிந்திருக்கிறான். அதை அவன் சிறப்புற செயல் படுத்த, அதை இன்னும் எளிமைப் படுத்தி இந்த மானுடம் ஒளிபெற என்னவெல்லாம் செய்யலாம் என்ற ஞானம் பெற பல வாய்ப்புகள் கிடைத்தன... அவைகள் யாவும் இயற்கையாகவே நடந்தன...
சரி, இந்தச் சூழலில் பாரதியின் சிந்தனையும் செயல் பாடுகளும்... வேதாந்தத்தின் வழியிலே, கீதையின் சாரத்திலே... இந்த உலகம் முழுவதும் அமரத்துவம் பெற வேண்டும், அது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்... அப்படி ஆரம்பிக்கும் போது அதற்கு
என்ன என்னத் தடைகள் இருக்கிறது?...
அதன் மூலம் என்ன?...
அவைகள் உண்மையா?...
அவசியமா?.. சத்தியமா?...
காலக் கோலமா?...
காலாவதியான பழையத் தேவைகளா?
அதனை எப்படி சரி செய்வது?
என்றெல்லாம் சித்தித்து செயல் பட ஆரம்பித்தான்...
அப்படிப் பட்ட நிலையில் தான் அவனுக்கு இந்த சமூகமும், அது அடைத்திருக்கும் சீர்கேடும் பாரதியின் கண்களில் பட்டு சிந்தையில் உறுத்தியது. அப்போது அவன் கண்ணில் பட்டது, அவன் பிறந்த இனமும், அதனின் தன்மையும், அதனின் கடமையும்.
எந்த ஒரு மாற்றமும் பள்ளிக் கூடத்தில் ஆரம்பிக்க வேண்டும்... குழந்தைகளிடம் ஆரம்பிக்க எவ்ண்டும். ஆக, அறிவு எங்கிருந்து வழங்கப் படுகிறதோ! அங்கிருந்து ஆரம்பித்தான்.
அறிவை பிராமணன் தருகிறான் அவனின் தடு மாற்றம் இந்த சமூகத்தை நிலை மாற்றம் அடையச் செய்து விட்டது.. அதனாலே அவன் அங்கே வேதகால பிராமணனை கொண்டு வந்து நிறுத்துகிறான்.
“எவனொருவன் இரண்டற்றதும், பிறவி,குணம்,தொழில் என்பவை
இல்லாததும்,உள்ளும்..புறமும் ஆகாசம் போல கலந்திருப்பதும்,அளவிடக்
கூடாததும்..அனுபவத்தால் இறுதிப்பொருளை, நேருக்கு நேராக தெரிந்து காமம்
,ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய்
பாபம்,மாற்சரியம்,விருப்பம்,ஆசை,மோகம் முதலியவை
நீங்கியவனாய்,இடம்பம்..அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய்
இருக்கின்றானோ,,இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணன் என்பது
சுருதி,ஸ்மிருதி,புராண இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும்.
பிராமணன் என சொல்ல ஆசைப்படுபவர் அனைவரும் மேற்கூறப்பட்ட நிலையைப் பெற
முயற்சி செய்யக் கடவர்.”
இவன் தான் பிராமணன், இப்படி நீவீர் இருக்க வேண்டும்... என்றுக் கூறியவனும்;
அப்படி மட்டுமே இருப்பது இப்போது சாத்தியப் படாதுஅதற்கு முன்பு சிலக் கடமைகள் இருக்கு...
இந்த சமூகம் ஒரு குடும்பமாக இருந்தது... இப்போது இந்த சமூகத்தில் பல குடும்பம் வந்துவிட்டது...
வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை, - தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.
நாலு வகுப்பும்இங் கொன்றே; - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.
ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே - மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;
ஏவல்கள் செய்பவர் மக்கள்! - இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ?
மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல
வீடு நடத்துதல் கண்டோ ம்.
சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
முந்தையக் காலங்களில் விஞ்ஞானம் வளரவில்லை, நவீனத் தொழில் பெருகவில்லை...
இப்போது எல்லாம் மாறிப்போச்சு... அதனாலே அந்தப் பழைய வழக்கங்களையும், காலாவதியாகிப் போன சாதீய சமுதாய அமைப்புத் தேவை இல்லை...
அதோடு பழைய சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் உண்மையோ? பொய்யோ? அது எல்லோருக்கும் இப்போது பொருந்தாது... அதனுள்ளே பல பொய்களும் புகுந்துவிட்டன... அவைகளும் இப்போது தேவை இல்லை...
இப்போது நமக்குத் தேவை அந்நியனிடம் இருந்து விடுதலை... அது தான் நமது மூச்சு பேச்சு யாவும்.... ஒன்று படுவோம்... ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையே நாம் அனைவருக்கும் தாழ்வே என்று அனைவரையும் ஒன்று சேர்கிறான்...
நமது வீழ்ச்சிக்கும், வேதனைக்கும், அடிமைத் தனத்திற்கும் பெரிதும் துணை நின்ற இந்த சாதீய அமைப்பே அவைகள் இனியும் நமக்கு வேண்டாம் என்று விண்ணை முட்டப் பாடுகிறான். வேதம் புதுமை .செய்யவே முனைகிறான்.
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
அப்படியும் விடாபிடியாக.... வெள்ளையனுக்குப் பயந்து போய்... நிலையில்லாத இந்த வாழ்வை பெரிதென்று எண்ணி அந்த நாட்களிலே வேதக் கல்வியை தொடர வழியும், அவசியமும் இல்லாமல் போனதால் வேறு வழியில்லாமல் நித்திய ஜீவனத்திற்கு ஆங்கிலம் கற்று வெள்ளையனின் நிர்வாகத்தில் அவர்களுக்கு தோண்டு செய்த, தான் பிறந்த இனத்து மக்களை பார்த்து கொதித்து எழுகிறான்..
நீங்கள் எல்லாம் யார்? உமது அருமை பெருமை என்ன? உமது கடமை தான் என்ன? என் இப்படி ஆனீர்கள்? இது தர்மமா? இது அடுக்குமா?
தான் பிறந்த இனம் என்ற உரிமையில் அவர்களை உருட்டுகிறான், மிரட்டுகிறான், புதிய கோணங்கி அடிக்கிறான்.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு. 1
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான்,போவான்,ஐயோவென்று போவான்! 2
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்.
சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது; 3
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடி,சொல்லடி,மலையாள பகவதீ!
அந்தரி,வீரி,சண்டிகை,சூலி
குடுகுடு குடுகுடு 4
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது,சுறுசுறுப்பு விளையுது:
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
சாத்திரம் வளருது,சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடி சக்தி,மலையாள் பகவதி;
தர்மம் பெருகுது,தர்மம் பெருகுது. 5
உண்மை இது அல்லவோ, இந்த சமூகம் உங்களிடம் அல்லவா தங்களை ஒப்படைத்து இருந்தது... என்று தாவிக் குதிக்கிறான்...
மதப்பிரிவுகள், சாதிப்பிரிவுகள், சடங்குகள், சாஸ்திரங்கள் எல்லாம் அனுபூதிக்கு உதவுமா?
அனுபூதியே யாவரின் லட்சியம் என்பது வேதாந்தம்.
அநுபூதி பெற்ற ஒருவன் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறான். ஆகப் பெறப் போகிறவனும் அதனை நன்கு உணர வேண்டும் இல்லை என்றால் அதுவே பெரும் தடையாக இருக்கும்.
சடங்குகள், சாஸ்திரங்கள் நல்லவைகளே அவைகள் அநுபூதி நிலையை அடைய உதவினால். ஆனால் அவைகள் உதவாத போது? அவை உடனே மாற்றப் பட வேண்டும்.
இதனால் சீர் பட்டு கிடக்கும் இந்து மதம் சரி செய்யப் பட வேண்டும் என்று நல்லார் சிலர் வேத உபநிடதக் கருத்துகளை மீண்டும் ஆய்ந்து அதன் சாரங்களை பிரம்மா சமாஜத்திற்கும், ஆரிய சமாஜத்திற்கும், ராமகிருஷ்ண இயக்கத்திற்கும் மூல மந்திரங்களாய் பிரகடனப் படுத்தினார்கள் இவை யாவும் பாரதியும் அறிவான்.
'அறிவாளிகள், அறிவிலிகளை பழிக்கக் கூடாது. ஆனால், அவர்களுக்கு தகுந்த செயல் மூலம் உகந்தப் பாதையைக் காட்டி, தாங்கள் இருக்கிற இடத்தை அடியச் செய்யலாம்.' (கீதை 3.26)
இதைத் தானே மகாகவி செய்தான்.
நீவீர் அறியாது செய்பவைகள் யாதும் பொய், தவறு, பழையக் குப்பைகள், அவைகளின் தேவைகள் முடிந்துப் போனது. கலி வந்துவிட்டான் அவனை வெல்ல நாம் அவசரமாக கிருத யுகம் படைக்க வேண்டும் அதனாலே அந்தக் குப்பைகளை எல்லாம் தூக்கி எறியுங்கள்...
காலமாறிப் போச்சு, பழைய கட்டுக்களை உடைத்து எரிந்து வெளியே வாருங்கள் என்று அவர்களுக்காக, அவர்களோடு யாவருக்காகவும், அவர்களிடம் இருந்து கொண்டு அவர்களோடு வாதாடுகிறான். இந்த உலகமே உய்யப் போராடுகிறான்.
எப்படித் தனியாகவா? அது தான் இல்லை.
அவனோடு அவனைப் போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட வேதாந்த அறிவும், நவீனக் கல்வியும் படித்த கற்று தெளிந்த தன்குல மக்களாகிய பல இளைஞர்களையும் தோழர்களாக வைத்துக் கொண்டும் தான்.
பாரதி, நேர்பட பேசுபவன் அதனாலே இது தவறு, இது வேண்டாம், இது கூடாது என்று பகிரங்கமாகக் கூறினான்.
இந்த சாதீயக் கொடுமைக்கெல்லாம் காரணம் யாவருமே என்று சமுதாயத்தில் கீழே நிற்கும் தனது தமிழ் சாதி சகோதரர் களையும் கடுமையாக சாடி கடிந்துக் கொள்ளத் தவறவில்லை, என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.
சுதந்திரம் பெரும் முன்னமே அவனின் அவசரமோ, அதற்கான அழைப்போ, தீர்க்க தரிசனமோ தெரியவில்லை பள்ளுப் பாடிவிடுகிறான்.
சரி, பாரதி எண்ணிய வண்ணம் சுதந்திரம் பெற்றாகியாச்சு.. பள்ளுப் பாடுகிறான்.... எப்படி
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு)
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே.
இங்கே காலம் மாறியது, காட்சியும் மாறியது இது அத்தனைக்கும் யார் பொறுப்பு? எல்லோரும் தான் பொறுப்பு?
தீமை ஒழிந்தது நன்மை பிறந்தது இது சாத்தியப் பட நாம் யாவருமே தான் காரணம் என்று தமிழ் சாதியையே போற்றி பாராட்டிப் பெருமிதம் கொள்கிறான்.
சுதந்திரம் வாங்கியாச்சு நாம் அனைவரும் சமம் என்பது உறுதியாச்சு... என்று பாடியவனின்.
அடுத்த கட்ட நினைவு... சரி சுதந்திரம் வாங்கியாச்சு...
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!
சாதிகள் இல்லை, சமய வேற்றுமை இல்லை... எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர்விலை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்.... என்றுக் கூறிக்கொண்டே…
அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமாகி தொழில் பலப் பெருக்கச் சொன்னான்... சேதுவை மேல் நிறுத்தி வீதி சமைக்கச் செய்து சிங்களத் தீவிர்கோர் பாலம் அமைக்கச் சொன்னான். பண்டமாற்றம் செய்து பயனுறச் சொன்னான்..
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.
நாட்டின் பாயும் நதிகளை ஒன்றாக இணைத்து வேளாண்மை செழிக்க நல்ல தொரு வழியும் சொன்னான்.
சரி அத்தனையும் செய்தாலும்; முழுச் சுதந்திரம் கிடைத்ததா? இது தான் அந்தச் சுதந்திரமா? சிட்டுக் குருவியைப் போல் விட்டு விடுதலையாகுவீரே! என்றானே அந்தச் சுதந்திரமா இது.
இல்லை இதோ அதனை நோக்கியே பயணிக்கிறான்.
சுதந்திர நாட்டிலே அடிமைப் பட்டுக் இடக்கும் பெண்குலத்தின் அடிமை களையவேண்டும்... அவர்கள் சக்தியின் வடிவினர்கள்... அவர்கள் ஆணோடு சமத்துவம் பெற வேண்டும், பட்டம் பெற வேண்டும், சட்டங்கள் செய்ய வேண்டும்... என்றெல்லாம் கூறியவன், அப்படிப்பட்டப் பெண் தான் நல்ல அறிவுள்ள மக்களைப் பெற்று வளர்க்க முடியும் அப்படி செய்யும் போது அந்தக் குடும்பம் சிறக்கும், அப்படி சிறந்தக் குடும்பங்கள் கொண்ட ஊரும், நாடும் சிறக்கும்...
அப்படி ஒரு நிலை வரும் போது நமது வேதாந்தம் கூறும் லட்சியத்தின் பாதை தெரியும். அப்போது பல நன்மைக்களைக் கொண்ட இந்தியா முழுவதும் சமத்துவமும், சகோதரத்துவமும், உண்மைச் சுதந்திரமும் பெறும். அதுவே நாம் அனைவரும் அமரத்துவம் பெற்று பேரொளிப் பெற வழி வகுக்கும்.
அதுவே நமது லட்சியம், அந்த பேரானந்த நிலையைப் பெறுவதே உண்மையான சுதந்திரம் அது இந்த உலகிற்கே கிடைக்க வேண்டும் என்று தனது பேராவலை கூறுகிறான் பாரதி.
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்,
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க!
அது ஒரு நாள் நிச்சயம் நிகழும். ஆம், ஆம், ஆம் என்று உறுதியாகச் சொல்லுகிறான் பாரதி இந்தியா உலக மக்கள் அனைவரும் அமரத்துவம் பெறும் வழியை உலகிற்களிக்கும் என்று… மிகவும் அறுதியிட்டு சொல்லுகிறான் அந்த தீர்க்க தர்ஷி.
அப்போதும் கலி யுகம் கலியுகமாகவே இருக்கும். ஆனால், இந்த உலகில் உள்ள அனைவரின் மனமும் கிருத யுகத்தில் திளைத்திருக்கும்... கலி தான் வாழ இடமில்லாமல் வீழ்ந்து விடும் என்றான்...
இவன் இந்த உலகையே தனது உள்ளங்கையில் வைத்து உற்று உற்றுப் பார்த்து அதன் விடிவுக்கே பாடு பட்டவன். அவன்தானே அனுபூதியாக முடியும். கலியின் வீழ்ச்சியை உலகில் வேறொரு இடத்திலே ஆரம்பித்ததை எண்ணிக் களிக் கூத்தாடுகிறான்.
அதன் தொடக்கத்தைத் தான் அவன் ரஷ்யப் புரட்சியிலேக் கண்டான்.... மன்னர் ஆட்சியை சில இடங்களில் தனிப் பட்ட மன்னரை பாராட்டினாலும் பெறும் பாலும் வெறுத்துத் தள்ளினான் பாரதி.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும், இன்றைய நிலையை அறிந்தும், மேலோர், கீழோர் என்றும் இந்த சாதீயக் கொடுமையை பிராமணச் சமூகம் தான் நடத்துகிறது என்று இன்றும் பேசுவார் உள்ளாரா? அப்படி இருந்தால் அதை என்ன வென்று சொல்வது! கண்ணிருந்தும் குருடராவார்கள் அவர்கள்.
பிறகு என்ன யார் அந்த பிராமணன் என்ற ஆராய்ச்சி அதனை நோக்கித் தானே போகிறது. இந்தக் கொடுமையெல்லாம் அரசாங்கமே செய்கிறது என்பதை உணர்வாரோ அவர்.
பாரதி, பிராமணன் எப்படி இருந்தான் அல்லது எப்படி இருந்தால் அவன் பிராமணன், என்று வேத காலத்தைக் / வேதாந்தக் கருத்தைக் காண்பித்ததன் அர்த்தம்.
அது அந்த பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களே அது உங்களுக்கு ஒத்து வராது... காலம் மாறிப்போனதால், சமூகம் மாறிப் போனது, உங்களின் போக்கும் மாறியது... அதனால் அவைகளை எல்லாம் விட்டு விடுங்கள்.
சாஸ்திரம், தவ,ஜப நிஷ்டைகள் யாவும் அவசியமும், ஏதுவும் உள்ளவர்கள் வேண்டுமென்றால் கொள்ளுங்கள்... அது அந்தி காலத்தில் சாத்தியப் படலாம்.. நாலு காசு சம்பாதிக்க அவசியப் பட்டவனுக்கு சரிவராது. என்று அவர்களை வழிப்புணர்வு செய்து வெளி வரச் சொன்னான்.
அப்படி இருக்க அதைப் பற்றிய கவலை அந்த சமூகத்தாருக்கு இருக்குமாயின் அதை குறையென்று சொல்ல முடியாது...
அது அவர்களாக யோசிக்க வேண்டியது... அதனால் வேறு யாருக்கும் எந்த பாதகமும் இல்லை.
அப்படி இல்லாயின் யார் அந்த பிராமணன்? அவனின் நேம நிஷ்டைகளை கை கொள்கிறானா? என்பவைகள் போன்ற ஆராய்ச்சி எல்லாம் அவசியமில்லாதது.
சம்பந்தமில்லாமல் வேறு இனத்தை சேர்ந்தவர்கள் அது பற்றி சிந்திக்க, குறை கூற முற்பட்டால் அது அவசியமற்றது. அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகிறானே... பாரதி நன் மக்களுக்குப் பொதுவாக சொன்ன விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது, அதை அவர்கள் செய்தால் போதும்.
இதில் வரலாற்றை நன்கு படித்தவன், இந்த மொழி, இனம், நாடு, கலை, இலக்கியம், கலாச்சாரம், அரசியல் என்று சமூகத்தின் பல வற்றிலும் தொன்று தொட்டு, அதனைக் காக்கவும், உயர்வு பெறவும், வளர்க்கவும், தங்களது உடல் பொருள், ஆவி அத்தனையும் தொலைத்தும்.
மேலேக் கூறிய அத்தனையும் இம்மண்ணில் இன்றும் உயிர் பெற்று இருக்க, எல்லோரும் சமதர்மமாகவும்; சகோதரத்துவுமாகவும்; சுதந்திரமுமாகவும் இருக்க, பழைய இலக்கியங்களை எல்லாம் தொலைந்துப் போன பகுதிகளையெல்லாம் தேடித் திரிந்து, பெற்று சேர்த்தும், கோர்த்தும்.
மொழியையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், இந்திய இனத்திலே பலப் பிரிவுக் கொண்டு காலகாலமாக வாழும் இந்தத் தமிழனையும், அவனில் இருந்து வேறு யாரோ மாதிரி பிரிவு கொண்டு இவர்களை வேற்றுமைப் படுத்தியும் திரியும் ஒரு சிலரும், பழைய தமிழனின் வாழ்வு முறைப் பெருமைகளை இன்றும் இந்த மொழியில் நிலைக்கச் செய்ததும் இந்த பிராமணத் தமிழன்தான் என்பதை மறுப்பாரோ?.
இவர்கள் பாரதி கூறிய தமிழ் சாதியை சேர்ந்தவர் என்பதையும் மறுப்பாரோ?.
இந்த சமூகம் பயனுறவே... தான் பெற்ற உயர் கல்விகளைக் கொண்டு தான், தனது மனைவி, மக்கள் என்று வாழாது, இந்த மண்ணிற்காகவும், இந்த மொழிக்காகவும், இந்த நாட்டு சுததிரத்திற் காகவும் உழைத்து சிறையில் வாடியும் தனது வாழ்வை தொலைத்தும், தன்னுயிரையும் விட்டும், தன இனத்தின் பெருமையை நிலைநாட்டிய நன் மக்கள் அவர்கள் மொத்த மக்கள் தொகையில் சிறுபான்மையினரே.
அவர்கள், முன்னொரு காலத்திலே மௌனம் சாதித்ததற்கு பரிகாரமும் தேடிக் கொண்டதோடு. பல்லாயிரம் மடங்கு பயனையும் தந்து விட்டார்கள் என்பதை மறுக்க மறைக்க முடியாது.
அவர்கள் இந்தியாவின் காடு மேடெல்லாம் நடந்தே சென்று; எல்லா செல்வங்களையும் ஒன்றாக்கி நாம் அனைவரும் பங்கு போட்டு உரிமையோடு எடுத்துக் கொள்ளும் அத்தனையும் அந்த ஒரு சிறு சமூகத்தில் பிறந்து வந்தவர்களின் அரும் உழைப்பே என்பதை ஈரமுள்ள எந்த மனமும் ஏற்றுக் கொள்ளும்.
அப்படி ஏற்றுக் கொள்ளும் போது ஒரு வேலை தனது மூதாதையரின் அங்க அடியாளங்களை அவர்கள் பெருமையோடு சுமந்து திரிய விரும்புபவர்களுக்கு, நாம் அதை நன்றியோடு பரிசளிப்போம். அணிந்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவோம்.
இன்னொன்றையும் சொல்லவேண்டும், பிராமணக் குடும்பத்தில் பிறந்த அந்த இளைஞர் மக்களிடம் கேட்டால் உண்மை விளங்கும்.
அவர்கள் அணிந்து இருக்கும் அந்த பூணூல் எத்தனை நேரங்களில், அவர்களின் சூழலினால் கோணலான மன இயல்புகளை நேர் செய்திருக்கும் என்று.
அப்படி இருக்கும் போது அவைகளை சுமந்து திரியும் நமது தமிழ் சாதி மக்கள், நமது சகோதரர்கள், தனது ஒழுக்க நெறியில் திசை திரும்பாமல் இருக்க அது உதவுமேயானால் அது நமக்கும் நமது தமிழ் சாதிக்கு பெருமை தானே!
இன்றைய சமூக சூழலில் எத்தனையோ கொடுமைகள் நிகழ்கின்றன அதிலே வேதத்தை சரியாக படிக்கவில்லை என்ற குற்றச் சாட்டுக்கள் தனக்குத் தானே சுமத்திக் கொண்டாலும், அந்த பிராமண சகோதரர்கள் எத்தனை கொலை கொள்ளைகளில் ஈடுபட்டு வழக்கும், சிறையும் சந்திக்கிறார்கள்.
அவர்கள் அதை விரும்புவதில்லை. காரணம் அந்த சமூகம் இந்த நாட்டிற்காக எத்தனையோ வழக்கையும் சிறையும் சந்தித்து பெருமைப் பட்டிருக்கிறது. யாவரும் நாட்டுக்கு உழைத்தார்கள் என்பதை மறுப்பதிற்கில்லை. இருந்தும், அது ஒரு சிறுபான்மை இனம் இந்த நாட்டிற்கு நிறைய செய்திருக்கிறது என்பதே உண்மை.
அவர்களின் பெயர்களை எல்லாம் பட்டியல் இட்டால் பல பக்கம் கொள்ளாது என்றே விட்டு விடுகிறேன். தென்னாட்டு வீரச் சிங்கம் என்குல வீரத் தமிழன் வாஞ்சி நாதனை மட்டும் விட்டு விட முடியாமல் சொல்லியும் செல்கிறேன்.
சுதந்திர இந்தியாவில் இன்று அந்த சமூகத்தின் நிலையென்ன? விரும்பிய பாடம் படிக்க முடிவதில்லை... திறமையிருந்தும் அதை இந்த நாட்டிற்கு தந்து நாட்டை உயர்த்த தாராளமான அனுமதி இல்லை...
கீழ் உள்ளவனை மேலேக் கொண்டு போகவேண்டும் என்று எண்ணியவர்கள் அந்த நல்ல சிந்தனையை அவசரப் படுத்தி குறுக்கு வழியிலே சென்று; கீழே இருப்பவனுக்கும் அந்தத் தகுதியை பெற வைத்தும்; அவனுக்கும் மேலே இருக்க இடத்தை தயார் செய்தும், கீழ் உள்ளவனை மேலேற்றவில்லை.
மாறாக மேலே இருப்பவனை கீழேத் தள்ளியும்.. தகுதி உள்ளவனை மேலே ஏறவிடாமல் தடுத்தும். அப்படி கீழே இருந்து அவசர அவசரமாக மேலே ஏற்றியவனை கண்காணிக்காமல் இன்று நாடு படும் அவலம் உலகறியும்.
இது பழைய வர்ண பேத முறையைப் போல் பிறப்பால் அவனின் அறிவும், திறமையும், முயற்சியும் பிரிக்கப் பட்டதை விட பல மடங்கு அபாயகரமானதும், அசிங்க மானதும் கூட.
காலமும் காட்சியும் மாறிப் போனதென்றால். ஒருவனின் தனிப்பட்ட அறிவு, அவனின் ஆர்வம், திறமை, அவன் தேர்ந்தெடுக்கும் அத்தனைக் கூறுகளும் இருக்கும், ஒருவனுக்கு அந்தக் கல்வியைத் தந்தால் தானே, அந்தத் துறை மேலும் சிறப்படையும், உலக அரங்கில் இந்தியா நிமிர்ந்து நின்று போட்டி இடும்.
உண்மையிலே புதிய விஞ்ஞானம் படைக்கும். அப்படி இல்லது. பழைய வர்ண பேதத்தை தலை கீழாகத் திருப்பிப் போட்டு; பிறப்பால் மட்டுமே அவர்களுக்கு முன்னுரிமை என்றுக் கூறி அவர்கள் எடுத்தது போக மீதம் இருந்தால் தான் மற்றவர்களுக்கு என்றால்.
பழைய காலாவதியாகிப் போன சாதீய சமுதாய முறையில் இருந்து இது எந்த விதத்தில் சிறந்தது. சென்ற அரை நூற்றாண்டில் இதன் நோக்கமும் நிறவெறி விட்டது. இப்போது அது காலாவதியாகி விட்டது.
ஆமாம், இதுவும் காலாவதியாகிப் போன ஒரு மருந்தே அதை ஏற்கும் இந்த சமூகம் வேறு பல எதிர் வினைகளை அனுபவித்தே ஆக வேண்டும். இது தவிர்க்க முடியாதது.
எந்த ஒரு சட்டமும் அன்றைய சூழலில் மக்களுக்காக எழுதப் படவேண்டும். அது பொருளாதார நிலையை மனதில் கொண்டு அரசாங்கம் உதவலாமே; தவிர புத்தியும், தகுதியும் குறைந்தோருக்கு, பிறப்பை வைத்து மாத்திரமே வாய்ப்பளிப்பது அறிவீனமே!
சீர் திருத்தம் என்பது அன்றைய நோயிக்கு மருந்தாக வேண்டும். அறிவோடு சிந்தித்தால் அனைவருக்கும் இது விளங்கும்.
பொருளாதார ரீதியிலே, காரண காரியத்தோடு அவசியப் பட்டவர்களுக்கு கரம் நீட்டி சமுதாயத்தில் பொருளாதார தேவை இருப்பவனுக்கு உதவும் நிலை வர வேண்டும்.
அது தான் சம தர்மம். அதை விடுத்து பழைய நிலையை இன்னும் பாழாக்கும் நிலைக்கு பதவி மோகமும், பணம் ஊட்டும், ஓட்டும் சேர்க்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு இயங்குவது நாட்டின் நல்லதிற்கல்ல.
இருந்தும் என்போன்ற பாரதி பித்தர்களுக்கு ஒரு சிறு வருத்தம் உண்டு. சில சூழ்நிலையில் குடும்பப் பாரம்பரியத்தை மறந்து தடுமாற்றம் கொள்ளும் அந்த சமூக இளைஞர்களைக் கண்டு வருத்தம் கொள்வது உண்டு.
பாரதி கூறிய பிராமணன் லட்சணம் பிராமணக் குடும்பத்தில் மாத்திரம் அல்ல, இந்திய மக்களாகிய யாவருக்கும் வரவேண்டும். அப்போது தான் அனைவரும் அமரத்துவம் பெற முடியும். ஆம், யாவருக்கும் வரவேண்டும் அதை யாவரும் கடை பிடிக்க வேண்டும் என்பதே அவனின் விருப்பமும் .
" பின் யார் தான் பிராமணன்..
எவனொருவன் இரண்டற்றதும், பிறவி,குணம்,தொழில் என்பவை
இல்லாததும்,உள்ளும்..புறமும் ஆகாசம் போல கலந்திருப்பதும்,அளவிடக்
கூடாததும்..அனுபவத்தால் இறுதிப்பொருளை, நேருக்கு நேராக தெரிந்து காமம்
,ரோகம் முதலிய குற்றங்களில்லாதவனாய்
பாபம்,மாற்சரியம்,விருப்பம்,ஆசை,மோகம் முதலியவை
நீங்கியவனாய்,இடம்பம்..அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய்
இருக்கின்றானோ,,இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணன் என்பது
சுருதி,ஸ்மிருதி,புராண இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும்.
பிராமணன் என சொல்ல ஆசைப்படுபவர் அனைவரும் மேற்கூறப்பட்ட நிலையைப் பெற
முயற்சி செய்யக் கடவர்.”
தமிழ் ஜாதியில் பழைய குல வழக்கு இல்லாமல் போனது காலத்தின் மாற்றம், அவசியம், நவீன விஞ்ஞானம் செய்த புதுமை என்றுக் கூட சொல்லலாம். இந்த சூழலில் யார் பிராமணன்? என்று அந்த குடும்பத்தில் சொல்கிறார்களோ இல்லையோ.
இந்த சமுதாயமும், அதை நடத்தும் அரசாங்கமும் சொல்கிறது யார் பிராமணர்கள்? என்று.
இந்த மண்ணிலே சாதிகள் சுத்தமாக அழிக்கப் படும் வரை இந்த ஆராய்ச்சி செய்ய எவனும் முயற்சி செய்வது முட்டாள் தனமே.
ஒரு வேலை முயன்று அதற்கு பாரதி கூறிய பதிலின் அர்த்தம் புரியாமல், இன்னும் தேடித் திரிந்தால் அவர்கள் இன்றைய அரசாங்கத்திடம் கேட்பதே முறை என்பதே எனதுக் கருத்து.
அது தான் முத்திரையுடன் சான்றிதழ் அளித்து; திறமை அறிவு இருந்தாலும், பிறப்பைக் குறித்து அவர்களை புழுதியில் தள்ளுகிறது.
இன்றைய எதார்த்த நிலையில் இன்றும் இந்தியாவில் பதவி, பணம், அந்தஸ்து பார்க்காமல் அனைவருக்கும் சமதர்மமும், சமநீதியும் கிடைக்க வேண்டும் என்று முழுநேர ஊழியர்களாக உண்டியல் சுமந்து திரியும் கம்யூனிஸ்ட் என்னும் போது உடமை இயக்கத்தில் முன்னின்று உழைத்துக் கொண்டிருப்பவர்களில் இவர்கள் தான் அதிகம் என்பதை உலகம் அறிந்தவர்கள் அறிவர்.
பாரதி கூறும் செயல் முறை வேதாந்தம் / சரியான நேரத்தில் கண்ணனால் சொல்லப் பட்ட கீதை / சங்கரரும், ராமானுஜரும் போதித்ததும் / அதற்கு செயல் முறை தந்து நேரடியாக செயலில் இறங்க வேண்டும் என்ற விவேகானந்தர் கூவலிட்டதும்.
கடைசியாய தனக்கு முன்னவர்களைப் போல் தனது அவதார நோக்கத்தை நிறைவு செய்ய படிக்காத பாமரனும் எளியமுறையில் அமரத்துவம் பெற மேலே பிராமணனின் லட்சணம் என்றானே அந்த நிலையில் ஒரு மோனத்திலே நின்று கர்மத்தில் நாட்டம் கொள்வதே சிறந்த வழி என்றுக் கூறி எங்கும் நிறைந்த பிரமத்திலே கலந்து இப்போதும் இப்பூமியை வளம் வந்தும் கொண்டிருக்கிறான் அந்த உலக மகாகவி பாரதி.
ஆக, சமூகம் ஒரு குடும்பமாக இருக்கும் போது அங்கே பிராமணன் அறிவுக்கு தலைமை தாங்கினான். கால மாற்றத்தால் அந்த சமூகம் பல சிறு குடும்பம் ஆனப் பிறகு,
ஒவ்வொரு சிறு குடும்பத்திலும் வேதம் படிக்கப் பட வேண்டும் அதாவது வேதாந்தம் கூறும் லட்சியம் வளர்க்கப் பட வேண்டும். அதனாலே பிராமணர் என்ற ஒரு சமூகம் தனித்து இயங்க முடியாது. இனி அதை ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்டிரும் அவர் தம் மக்களுமாக செய்யப் பட வேண்டும் என்று... தனி மனித லட்சியத்தை தனி மனிதனிடமே ஒப்படைத்து விட்டான் பாரதி.
நீந்தத் தெரியாதவரை தூக்கி சுமந்திருக்கலாம். இனி யாவரும் தனியே நீந்த வேண்டிய அவசியத்திற்கு வந்தாயிற்று என்று கூறாமல் கூறி விட்டான்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவனடி சேரா தவர்.
நிறைய சான்றுகளை பாரதியின் வழியே கொண்டு வந்து குறுக்க வேண்டு என்று பல இடங்களில் அவனது செய்யுள்களை தவிர்த்து அதன் சாரங்களை மாத்திரமே கூறியுள்ளேன்.
பாரதியின் பாடல்களை படித்தவர்கள் அதனை உணர முடியும் என்பது எனது எண்ணம்.
பாரதியை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களுக்கு தான் அவனின் எண்ணம் செயல் யாவும் நன்றாகப் புரியும்.
அவனின் எழுத்தில் எங்கோ ஒரு சிறு பிரிவை எடுத்துக் கொண்டு அதற்கு அவரவர் தனக்கு சாதகமாக மற்றவர்களை சாட வேண்டும் என்றே அர்த்தம் கற்பித்துக் கொண்டால் அது அவர்களின் மனதில் புகுந்த மாயையே.
பாரதி கூறிய எளிய செயல் முறை வேதாந்தம் எங்கே என்போரே! இதோ இங்கே அது நமக்காக.
பரசிவ வெள்ளம்
உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார்
[வேதியரே. 1
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே. 2
எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவதாய் 3
வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய். 4
தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி,5
தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே. 6
எங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே. 7
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே. 8
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொரு
[ளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே. 9
எல்லாந் தானாகி யிரிந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே. 10
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே. 11
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்;
எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே. 12
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே. 13
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே. 14
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா! 15
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா! 16
எண்ணமிட்ட லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா! 17
எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற்
[போதுமடா! 18
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா! 19
காவித் துணிவேண்டா,காற்றைச் சடைவேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே 20
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! 21
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற்
போதுமடா! 22
சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம்
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா! 23
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ்சிரத்தை யொன்றே போதுமடா! 24
நன்றி வணக்கம்.
அன்புடன்,
தமிழ் விரும்பி.
"அறிவொன்றே தெய்வம்"
வாழ்க வளர்க பாரதியின் புகழ்.
9 comments:
மகாகவி பாரதிக்கு நினைவாஞ்சலி!
சக்தியோடு கலந்த நித்திய பேரொளியே!
சாகாவரம் பெற்ற சமத்துவக் கவியே!
மனிதசாதி மண்ணிலே மாண்புற வாழ
மகத்துவ கவிபலத் தந்த மகாகவியே!
ஞாலம் போற்றும் ஞானியர்தம் கருத்தை
ஞாலம் உயரநாளும் உழைக்கும் - எளிய
பாமரனும் அறிந்தே பயனுற வேண்டி
பாக்கள்பலப் பாடி; மாக்கள் அல்ல - நீவீர்
பரமனின் மக்கள், மண்ணில் தெய்வம்
உண்மை, உழைப்பு, ஒற்றுமையோடு - இங்கே
ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி
ஒருமையாய் உள்ள இயற்கையின் பன்மையை
சக்தியின் தோற்றமதை நாளும் போற்றியே
சத்திய ஜோதியில் கலந்துநற் கதிபெறுவீர்
சாத்திரம் வேண்டாம்வேறு பலசடங்குகள் வேண்டாம்
அன்பொன்றே போதும்ஆண்ட வனைச் சேர
அன்பின் வடிவினன், அன்பில்வாழும் - அந்த
அன்பின் பதம்பற்றி அன்பால்அன்பை அடைந்தே
இன்பம் முருவீர் இன்னல் களைவீர் என்றே
மானுடம் சிறக்க மாகவி பாடிய - உலக
மகாகவி மறைந்து தொண்ணூறாண்டுகள் -ஆயினும்
மனிதசாதிக்கு உழைத்து மங்காப்புகழ் கொண்ட
மாணிக்கப் பேரொளியை மனதாரப் போற்றுவோம்
வாழ்க வளர்க மகாகவியின் புகழ்!
வாழிய! வாழிய!! வாழியவே!!!
அன்புடன்,
தமிழ் விரும்பி.
பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தும், பாரதியின் தொண்ணூறாவது ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் சிறப்புற அன்னை சக்தி அவள் அருள வேண்டிக் கொள்கிறேன். நன்றிகள்.
வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்
sirappaana கட்டுரை, வெளியிட்ட கோபாலன் சாருக்கு நன்றி! இந்த கட்டுரையில் உங்கள் சிந்தனையின் ஆழம் வெளிப்படுகிறது.
இந்துக்களிடம் மறுபிறவி நம்பிக்கை அதிகம் உண்டு. அடுத்த ஜென்மத்தில் நாம் எந்த சமூகத்தில் / ஜாதியில் வேண்டுமானாலும் பிறக்கலாம், அப்படியிருக்க என் ஜாதி/மதம்தான் உயர்ந்தது என்று சொல்வதே நகைப்பிற்குரியது. எந்த ஜாதியில் / மதத்தில் பிறந்தாலும் பெருமைப்படவோ / வருத்தப்படவோ அவசியமில்லை. தமிழ்நாட்டில் இருந்தவரை எந்த ஜாதி / மதம் என்ற கேள்விகளும் / பேச்சும் இருக்கும். அதுவே வேறு மாநிலத்துக்குப்போகும்போது நீ எந்த மாநிலத்தை சேர்ந்தவன் என்ற கேள்வி வரும். இன்னும் வேறு நாடுகளுக்குப்போகும்போது நீ எந்த நாடு என்று கேட்பார்கள். தமிழ்நாட்டை விட்டு வெளியில் இருப்பவர்களிடம் நம் ஊர்க்காரர்கள் யாரையாவது பார்க்க நேர்ந்தால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. 'நீங்க எந்த ஊரு' என்றுதான் கேட்கிறோமே தவிர ஜாதியைப்பற்றி பேசுவதில்லை. அதே சமயம் வடஇந்தியாவில் ஏகப்பட்ட ஜாதிகள் இருக்கின்றன. நாம் இந்த ஜாதி / மதம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வருவதுதான் பாரதியின் கனவை நனவாக்கும். இன்றைய தலைமுறையினர் அப்படி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. - உமா
இந்த பதிவைப்படித்தபோது எனக்குத் தோன்றியவை:
௧. பிராமணர்கள் தினமும் ஜெபிக்கும் காயத்ரி மந்திரம் விஸ்வாமித்திரர் என்ற ஷத்திரியரால் கற்பிக்கப்பட்டது.
௨. இயேசு பிறந்தபோது ஜோதிடர்கள் சிலர் அப்போதைய கிரக நிலையைக் கணக்கிட்டு அவரைச் சென்று பார்க்க புறப்பட்டதாக எப்போதோ படித்தேன்.
௩. இராவணன் ஓர் ஆரியன், அவன் கொல்லப்பட்ட நாளையே நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்பது வழிவழியாக வரும் நம்பிக்கை. இதை நீங்கள் குறிப்பிட்ட சமூகத்தினரும் கொண்டாடவே செய்கின்றனர்.
௪. செட்டியார்கள் கூட காயத்ரி ஜெபம் செய்வார்கள் என்று வாத்தியாரின் ஒரு கதையில் படித்த நினைவு. அவர்களும் இன்னும் சில சமூகத்தினரும் கூட பூணூல் போட்டிருப்பார்கள். (இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள் விளக்கலாம்).
௫. நமது முன்னோர்கள் விடுதலைக்காகப்போராடியபோது இருந்த அதே ஜாதி/மதத்திற்கு அப்பாற்பட்ட ஒற்றுமையை அன்னா ஹசாரேவின் போராட்டத்திலும் காணமுடிந்தது. - உமா
நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள இட ஒதுக்கீடால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இதைப்பற்றி மேலும் எழுத விருப்பமில்லை.
கட்டுரையில் நிறைய இடங்கள் நெகிழ்ச்சி ஏற்படுத்தின. - உமா
////Uma said...sirappaana கட்டுரை, வெளியிட்ட கோபாலன் சாருக்கு நன்றி! இந்த கட்டுரையில் உங்கள் சிந்தனையின் ஆழம் வெளிப்படுகிறது.
இந்துக்களிடம் மறுபிறவி நம்பிக்கை அதிகம் உண்டு. அடுத்த ஜென்மத்தில் நாம் எந்த சமூகத்தில் / ஜாதியில் வேண்டுமானாலும் பிறக்கலாம், அப்படியிருக்க என் ஜாதி/மதம்தான் உயர்ந்தது என்று சொல்வதே நகைப்பிற்குரியது. எந்த ஜாதியில் / மதத்தில் பிறந்தாலும் பெருமைப்படவோ / வருத்தப்படவோ அவசியமில்லை. தமிழ்நாட்டில் இருந்தவரை எந்த ஜாதி / மதம் என்ற கேள்விகளும் / பேச்சும் இருக்கும். அதுவே வேறு மாநிலத்துக்குப்போகும்போது நீ எந்த மாநிலத்தை சேர்ந்தவன் என்ற கேள்வி வரும். இன்னும் வேறு நாடுகளுக்குப்போகும்போது நீ எந்த நாடு என்று கேட்பார்கள். தமிழ்நாட்டை விட்டு வெளியில் இருப்பவர்களிடம் நம் ஊர்க்காரர்கள் யாரையாவது பார்க்க நேர்ந்தால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. 'நீங்க எந்த ஊரு' என்றுதான் கேட்கிறோமே தவிர ஜாதியைப்பற்றி பேசுவதில்லை. அதே சமயம் வடஇந்தியாவில் ஏகப்பட்ட ஜாதிகள் இருக்கின்றன. நாம் இந்த ஜாதி / மதம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வருவதுதான் பாரதியின் கனவை நனவாக்கும். இன்றைய தலைமுறையினர் அப்படி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. - உமா////
நன்றி உமா...
நானும் திருவாளர் வெ. கோபாலன் ஐயா அவர்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குணங்கள், கொள்கைகள் மனிதனுக்கு மனிதன் வேறு படுகிறது... அதை மனிதர்கள் யாவரும் புரிந்து கொண்டு அன்பு பாராட்டி, ஒருவருக்கொருவர் உதவி செய்து அப்படி முடியாது போனால் குறைந்த பட்சம் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். பெரியர், சிரியர் என்பது அவரவர் செய்கையிலே என்பர் சான்றோர்.
மனித உறவுகள் நிறைய இருக்கிறது..... அதில் திருமண உறவு என்பது தான் இந்திய சமூகத்தில் இந்த பிரச்சனையை தற்காத்து நிற்கிறது... சில சம்பிரதாய நடவடிக்கைகளுக்கு வேண்டுமானால் இவைகள் அவசியமாக இருக்கலாம்... இருந்தும் உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் திருமண உறவில் இந்த சிரமம் இருக்காது எனத் தோன்றுகிறது... அந்த வகையில் பாரதி கூட அவசியப் பட்டால்.. இந்துக்கள் (பிராமணர்கள்) சைவர்கள் மற்ற சைவர்களோடு கொண்டு கொடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.
ராஜாஜி கூட தனது குடும்பத்தில் அப்படி ஒரு நிகழ்வை ஏற்படுத்தினார்கள். எனினும் ஜி.சுப்ரமணிய ஐயர் அவர்கள் தமது மகள் சிவப்பிரியாவிற்கு மறுமணம் செய்து வைத்ததே உயரிய மனிதநேய மிக்க நேர்த்தியான செயல்... அன்றே மறுமலர்ச்சி ஆரம்பித்து விட்டது. இன்றைய நிலையில் உலகமே ஒரு குடும்பமாக இருக்கும் சூழலும் கனிந்து விட்டது... இது கூட பாரதியின் குறிக்கோளுக்கு புதிய பாதை அமைக்கிறது என்பதைக் காண முடிகிறது.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மருமகள் கூட ஒரு ஜப்பானியர் என்பதை நாம் அறிவோம்.. இது போன்ற நல்ல மாற்றங்கள் தான் இந்த மானுட சமூகம் வேற்றுமைக் களைந்து ஒன்றுபட வாய்ப்பாகும்.
ஒவ்வொருவரிடமும் உள்ள நல்ல பழக்க வழக்கங்கள் பகிர்ந்து பின்பற்றப் பட வேண்டியது என்பது மட்டும் எண்ணமாகக் கொண்டாலே போதும்.
கடவுள். அன்பும் அறிவுமானவன் என்பதை அறிந்தவர்கள் வேறு பாகுபாடு கொள்ள மாட்டார்கள். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" இன்றைய தலைமுறையும் மாறிவருகிறது என்ற தங்கள் கருத்து உண்மை. அதுவே நன்றும் கூட.... உயர நின்று பார்த்தால் தான் உலகம் நன்குத் தெரியும்... அப்படிப் பார்த்தவன் மகாகவி பாரதி. நன்றி.
////Uma said...
இந்த பதிவைப்படித்தபோது எனக்குத் தோன்றியவை:
௧. பிராமணர்கள் தினமும் ஜெபிக்கும் காயத்ரி மந்திரம் விஸ்வாமித்திரர் என்ற ஷத்திரியரால் கற்பிக்கப்பட்டது.
௨. இயேசு பிறந்தபோது ஜோதிடர்கள் சிலர் அப்போதைய கிரக நிலையைக் கணக்கிட்டு அவரைச் சென்று பார்க்க புறப்பட்டதாக எப்போதோ படித்தேன்.
௩. இராவணன் ஓர் ஆரியன், அவன் கொல்லப்பட்ட நாளையே நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்பது வழிவழியாக வரும் நம்பிக்கை. இதை நீங்கள் குறிப்பிட்ட சமூகத்தினரும் கொண்டாடவே செய்கின்றனர்.
௪. செட்டியார்கள் கூட காயத்ரி ஜெபம் செய்வார்கள் என்று வாத்தியாரின் ஒரு கதையில் படித்த நினைவு. அவர்களும் இன்னும் சில சமூகத்தினரும் கூட பூணூல் போட்டிருப்பார்கள். (இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள் விளக்கலாம்).
௫. நமது முன்னோர்கள் விடுதலைக்காகப்போராடியபோது இருந்த அதே ஜாதி/மதத்திற்கு அப்பாற்பட்ட ஒற்றுமையை அன்னா ஹசாரேவின் போராட்டத்திலும் காணமுடிந்தது. - உமா////
உண்மைதான் உமா.. பெரும்பாலான உயர்ந்த தெய்வீகமானவைகள் (உபநிடதங்கள், மந்திரங்கள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று யாவும்..) படைக்கப் பட்ட போது அந்த ஆத்மா தெய்வீகத்தில் கலந்த நிலையில் நின்று சொல்லப் பட்டிருக்கிறது... பெரும்பாலும் உபநிடதங்கள் கூட ஞானிகள் கூறியதாக அவர்களின் சீடர்களே எழுதியதாக அறிகிறோம்... மேரிக் கியூரி யின் ரேடியன் பற்றிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு முடிவு மிகவும் சுவாரஸ்யமானது... அது கூட இந்த நிலையில் நிகழ்ந்தது என்பது நடந்த உண்மை... ஆக பேரொளியில் கலந்த ஆத்மா என்றால் அதுஅ தெய்வம் தானே... அதாவது மனத்தை தொலைத்த நிலை... ஆக, அந்த இறைவனின் அருள் அது தான் அன்றால் அவனால் படைக்கப் பட்ட அவனின் குழந்தை யாருக்கு வேண்டுமானாலும் அந்த நிலை வராலாம் என்பதையே பாரதி வேதாந்தத்தின் வழியே கூறுகிறான்.
வேதகாலத்தில் இரண்டு பிரிவு... அமரத்துவம் பெற்றவர், பெற முயற்சி செய்கிறவர் என்பதே அது... ஆண், பெண் என்ற பேதம் கூட இல்லை என்கிறான் பாரதி.. பல வேதங்கள் பெண்களால் படைக்கப் பட்டிருக்கின்றன... என்றும் கூறுகிறான். அது தான் உண்மையான மனித சமூக நிலை அது தான் இப்போதைய தேவை என்பது தான் மகாகவியின் விருப்பமும்.
இயேசு பற்றிக் கூறுகையில்.. அவர் தனது பதினான்கு வயதிலிருந்து இருபத்தொன்பது வயது வரை இமயமலையில் இருந்திருக்கிறார், அங்கு இருந்த ஞானிகளுடன் கலந்து இருந்து சென்றிருக்கிறார்.. அவரின் வரலாற்றில் இந்த வயதில் அவரைப் பற்றியக் குறிப்புகளுமே இல்லாமல் இருப்பதாக அதாவது அவரைக் காணவில்லை entruk கூறுகிறார்கள்.... இதை எனது ஒரு கிருஸ்துவ நண்பரே என்னிடம் இது பற்றி தேவலாயத்தில் பேசியதாகவும் கூறினார்...
தங்களின் பாரதியைப் பற்றிய தெளிவானப் புரிதலுக்கும், மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும் சகோதிரி...
sorry, இது சிறப்பான கட்டுரை அல்ல, முரண் பல இடங்களில் தொடை தட்டி நிற்கிறது... இந்து மதம் வர்ணாசிரமத்தை போதிக்கவில்லை என்று கூறியது, பின்பு வர்ணாசிரமத்தை போதிக்கும் கீதை அருமையான புத்தகம் என்று முரண் பட்டதும்... பூணூல் போட்டவன் கொலை பாவங்களை செய்ய மாட்டான் என்று கூறியதும், சங்கரர் வழி வந்தவர் இன்று கொலை பழி சுமந்து திரிவதும் முரண்... கர்ம பலன் என்று கூறி விட்டு இட ஒதுக்கீடு கிடைக்காமல் கஷ்டப் படுகிறோம் என்று கூறுவது முரண்... விதி என்று வந்து விட்டால், கர்ம பலன் என்று வந்து விட்டால் முன் ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவம் இந்த ஜென்மத்தில் திறமை இருந்தும் இட ஒதுக்கீடு காரணமாய் மேல் எழ முடியவில்லை என்று கூறுவது நியாயம்... நீங்கள் உயர போக முடியாததற்கு காரணம் கர்ம வினை இல்லை என்றால் எதுவுமே கர்ம வினை அல்ல...
சாதி வாரியான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவன் என்ற முறையில் இந்த கட்டுரையின் ஏழ்மையான பிராமணர்களின் கஷ்டங்கள் இருக்கிறது என்றாலும் இதை இவ்வளவு முரண்களுடன் படைத்திருப்பது அனாவசியம்...
மன்னிக்கவும் இப்படி நான் எழுதியதும் உங்களை பொறுத்தவரை கர்ம வினை...
இதற்க்கு நீங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கையும் உங்களை போருத்தவரி கர்ம வினை..
என்னை பொறுத்தவரை மனிதனின் வினை..
Yes, Chettiyaars are vaisyas and they are entitled for upanayanam and Gayathri Japam.
பாரதியை ஒரு பார்ப்பனீயக் கவிஞன் என்ற காலக்கட்டத்தில்கூட, பரதியைப் பட்டிதொட்டிகளில் எல்லாம் கொண்டு சென்றவர் தோழர் ப. ஜீவானந்தம். 1967-ல் ஆட்சியைப் பிடிப்பதற்காக திராவிட இயக்கமானது, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முழக்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டவது. ஆனால். எந்தச் சூழலிலும் அவ்வரிகளுக்குச் சொந்தமானவரை--திருமூலரைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. அதே போன்று பாரதியையும் ஏற்றுக் கொண்டது. நம்மோடு வாழ்ந்தவர் பாரதி. அவரது புகைப்படங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்தாமல், கற்பனைப் பாரதியை--முறுக்கு மீசையும் முண்டாசும் கொண்ட பாரதியை இளைய தலைமுறைக்கு அறிமுகப் படித்தியது. பாரதி காவலர்கள், வாரிசுகள் கூட மறுப்புத் தெரிவிப்பதில்லை. ஏனென்று தெரியவில்லை/ அசல் கிடைக்காதபோது கற்பனைக்குச் செல்ல வேண்டியதுதான். உதாரணம் திருவள்ளூவர் மற்றும் மாதிபதிகள் . பாரதிக்கு எதற்காக கற்பனைப்படம்?
Post a Comment