பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, September 22, 2011

மராத்தியர் வரலாறு - Part 11


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 11

ஆற்காட்டு நவாப் அன்வதீர்கான் படை திரட்டிக் கொண்டு வந்து தஞ்சாவூர் மீது போர் தொடுப்பதற்காகப் பசுபதிகோயில் கிராமத்துக்கு அருகில் ஒரு திடலில் முகாமிட்டிருந்தான் என்பதையும், அவனை எதிர்த்துப் போரிட தஞ்சை மன்னர் பிரதாபசிம்ம ராஜா ஒரு பெரும் படையை கோவிந்தராவ், மானோஜி ராவ் ஆகியோர் தலைமையில் பசுபதிகோயிலுக்கு அனுப்பினார் என்பதைப் பார்த்தோம் அல்லவா.

இவ்விரண்டு படைகளும் விடியற்காலை நேரத்தில் எதிர் எதிரே வந்து மோதிக் கொண்டன. போர் தொடங்கியது. தஞ்சாவூர் சேனைக்கு மானோஜி ராவ் தலைமை ஏற்றிருப்பது அந்த படை வீரர்களுக்கு தெம்பைக் கொடுத்தது. அவர் ஒரு மாபெரும் வீரன், அவர் தலைமையில் போரிடுவது சாதாரண வீரனுக்குக் கூட பெருமை தரக்கூடியது. போர் உக்கிரமாக நடந்தது. தஞ்சை வீரர்கள் ஆக்ரோஷமாகப் போராடினார்கள். எதிரியின் வஞ்சகம், தேவையில்லாமல் தம் மீது போர் தொடுத்தது இவையெல்லாம் சேர்ந்து தஞ்சை படையை மிக உக்கிரமாகப் போர் செய்யத் தூண்டியது.

அநியாயமாக நம் மீது படையெடுத்து வந்த அன்வதிர்கானின் படை மீது தஞ்சை வீரர்கள் இடிபோல் விழுந்து தாக்கினார்கள். இவர்கள் தாக்குதலை சமாளிக்க முடியாத ஆற்காட்டு வீரர்கள் பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் போட்டது போட்டபடி ஓடத் தொடங்கினார்கள். தஞ்சை வீரர்கள் அவர்களுடைய பீரங்கிகளை பறித்துக் கொண்டார்கள். ஆற்காட்டு படை வீரர்களைத் தப்பி ஓடவிடாமல் தடுத்து ஏராளமானவர்களைக் கொன்று குவித்தார்கள் தஞ்சை வீரர்கள். ஆற்காட்டு படையில் வந்திருந்த பெரிய பெரிய சர்தார்கள் கூட தஞ்சை தாக்குதலைத் தாங்க முடியாமல் ஓடத் துவங்கினார்கள்.

போர்க்களத்தில் ஓர் அதிசயம். ஆற்காட்டாரின் போர் யானை உடலெங்கும் தஞ்சை வீரர்கள் எறிந்த ஈட்டிகள் குத்தியிருக்க அது அசையாது ஓரிடத்தில் நின்றுகொண்டே உயிரை விட்டது. தஞ்சை வீரர்கள் அந்த யானையின் மீது ஏறி, அதன் மீது கட்டப்பட்டிருந்த அம்பாரியை அறுத்து உடைத்து தூர வீசினார்கள். இந்த சந்தடியில் நவாப் அன்வதீர்கான் தஞ்சை வீரர்களிடம் மாட்டிக் கொண்டான். உடனே மராத்திய வீரர்கள் அவனை வெட்ட வாளை ஓங்கிக் கொண்டு பாய, அவன் பயந்து அலறினான். "பிரதாபசிம்ம ராஜா மீது ஆணை! என்னை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று ஓலமிட்டான். தங்களது ராஜா மீது ஆணை என்று அவன் கத்தினதும், மராத்திய வீரர்கள் தயங்கி நின்றார்கள் என்ன செய்வது என்று தெரியாமல். அன்வதீர்கான் பிரதாபசிம்ம ராஜாவின் பெயரால் உயிர் பிழைத்தான்.

உடனே தஞ்சாவூர் கோட்டையில் இருந்த பிரதாபசிம்ம ராஜாவுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அவர் அன்வதீர்கான் நவாபின் சுபேதார் ஆனபடியால் அவனை ஒன்றும் செய்யாதீர்கள், விட்டுவிடுங்கள் என்று உத்தரவிட்டார். தஞ்சாவூர் படைகள் அவனை விரட்டி அடித்துவிட்டு வெற்றி நடைபோட்டு தஞ்சாவூர் திரும்பினார்கள்.

தனக்கு உயிர் பிச்சை கொடுத்து, தன்னை வாழவைத்த பிரதாபசிம்மருக்கு அன்வதீர்கான் வஸ்திரங்களும் கொடுத்தனுப்பி அத்தோடு ஒரு கடிதமும் அனுப்பியிருந்தான். இவற்றை ராஜாவிடம் சேர்ப்பிக்கச் சொல்லி வீரர்களிடம் கொடுத்தனுப்பிவிட்டு அவன் ஆற்காடு போய்ச்சேர்ந்தான். இந்த போரில் ஆற்காடு படையில் பங்கு கொண்ட ஒரு வெள்ளை யானை, உயிரோடு தஞ்சாவூர் சேனைக்குக் கிடைத்தது.

இந்த நிலையில் அங்கு சதாராவில் சிறையில் கிடந்த சந்தா சாஹேப் என்ன ஆனான் என்று பார்க்கலாமா? அவன் அங்கு நீண்ட காலம் சிறையில் இருந்ததைக் கண்டு சதாரா மன்னர் ஷாஹு ராஜா, கைதியான சந்தா சாஹேபிடமிருந்து ஏழு லட்சம் பணம் பெற்றுக் கொண்டு அவனை விடுதலை செய்து போகச் சொல்ல உத்தரவிட்டார். அவன் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு அவனை ராஜா எச்சரித்து அனுப்பினார். நீ எங்கு போகவேண்டுமோ போ, ஆனால் தஞ்சாவூரில் இருப்பது நம்ம ராஜ்யம், அங்கு போய் வாலாட்டினாயோ, உன்னை சும்மா விடமாட்டோம் என்று எச்சரித்து அனுப்பினார் ஷாஜு ராஜா.

விடுதலையான சந்தா சாஹேப் சதாராவிலிருந்து புறப்பட்டு வருகின்ற வழியில் அதோனி (இப்போது ஆந்திர மாநிலத்தில் இருக்கிறது) சென்று அங்கு ராஸ்த் மொகிதீன் கான், நிஜாமின் பேரன் முஸாஃபர் ஜங், ஆகியோரோடு சேர்ந்து கொண்டு 25000 வீரர்கள் கொண்ட ஒரு படையை நிறுவினான். இந்தப் படைக்குத் தேவையான பீரங்கிகள், துப்பாக்கிகள் இவற்றோடு படையை நடத்திக் கொண்டு தெற்கு நோக்கிப் புறப்பட்டான்.

வழியில் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக் காரர்களுக்கு தூது அனுப்பி அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தான். அவர்களைக் கண்டு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு, அதன்படி அவர்களுடைய உதவிகளையும் பெற்றுக் கொண்டு ஆற்காடு வந்தான். ஆற்காட்டில் ஆட்சியில் இருந்த அன்வதீர்கானை போருக்கு அழைத்து அவனோடு போரிட்டு அவனைத் தோற்கடித்தான் சந்தா சாஹேப். இந்த சண்டை ஆம்பூர் எனும் இடத்தில் நடந்தது. ஆற்காடு சந்தா சாஹேப் வசம் போயிற்று.

இப்படி அன்வதீர்கானுக்கும் சந்தா சாஹேபுக்கும் ஆம்பூரில் சண்டை நடந்து கொண்டிருந்த போது ஆற்காட்டில் இருந்த அன்வதீர்கானின் மகன் முகமது அலி அங்கிருந்து தப்பி ஒருவரும் அறியாமல் நாகப்பட்டினம் வந்தடைந்தான். அங்கு வந்து சந்தா சாஹேபுக்குத் தெரியாமல் தஞ்சை மன்னருக்கு ஒரு தூதுவனை கடிதம் கொடுத்து அனுப்பி வைத்தான்.

மிகவும் மரியாதையாகவும், மன்னரைப் புகழ்ந்தும் அந்தக் கடிதத்தில் முகமது அலி எழுதியிருந்தான். தன் தந்தை அன்வதீர்கானுக்கு சந்தா சாஹேபினால் ஏற்பட்ட கதியையும், ஆற்காடு அவன் கைக்குப் போய்விட்ட செய்தியையும் சொல்லி, தனக்கு மன்னர்தான் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தான்.

என்னதான் இவனுடைய அப்பன் அன்வதீர்கான் நம்மோடு சண்டை செய்ய படையோடு வந்தவன் ஆயினும் போரில் தோற்று உயிர்ப்பிச்சை கேட்டு ஓடிப்போனான். அவனுடைய பிள்ளையான இவனை இப்போது இருக்கும் சூழ்நிலையில் நாம்தான் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார் பிரதாபசிம்மர்.

இப்போது முகமது அலிக்கு நாம் அடைக்கலம் கொடுப்பதனால் சந்தா சாஹேபின் விரோதம் நமக்கு ஏற்படத்தான் செய்யும். அவன் ஒன்றும் யோக்கியன் இல்லை. அப்படி அவனால் நமக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் அவனை அப்போது சரியாக கவனித்து விடலாம் என்று எண்ணி, முகமது அலியைத் தஞ்சாவூருக்கு வந்துவிடும்படி செய்தி அனுப்பினார்.

தஞ்சைக்கு வந்த முகமது அலியை மரியாதையுடன் வரவேற்று மகாராஜா தன்னுடைய தோட்டத்திலேயே அவனுக்குத் தங்க இடம் கொடுத்து அவனுக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்தார். (அந்த தோட்டம் இப்போதைய தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் அரசினர் ஆசிரியர் பயிற்சி பள்ளி இருக்குமிடம்).

ஓடிவந்த ஆற்காட்டு முகம்மது அலி மூன்று மாத காலம் தஞ்சையில் ராஜாவின் ஆதரவில் தங்கினான். இங்கிருந்தபடியே முகம்மது அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்த தளவாய் தேவராஜனுக்கும், தென்பகுதி பாளையக்காரர்கள் அனைவருக்கும் நிஜாம் நாசர் ஜங் (இவர் ஐதராபாத் நிஜாம், நிஜாம் உல் முல்க் என்பவரின் இரண்டாவது மகன். இவனுக்குப் போட்டியாக முளைத்தவன் தான் நிஜாமின் பேரன். அவன் தான் சந்தா சாஹேபுடன் சேர்ந்து கொண்டிருக்கிற முசாஃபர் ஜங்) கடிதம் எழுதினான். இவர்கள் தவிர காளஹஸ்தி, வேங்கடகிரி பொம்மராஜா முதலானவர்களுக்கும் கடிதம் எழுதினான். இப்படி சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பிரதாபசிம்ம ராஜாவிடம் சொல்லிவிட்டுத் திருச்சினாப்பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தான்.

முகமது அலி தஞ்சைக்கு வருவதற்கு சிலகாலம் முந்திதான் பிரதாபசிம்ம ராஜா தன் மகன் துளஜா ராஜாவுக்கு மோத்தேயின் மகளை முதல் கல்யாணம் செய்து வைத்தான். மோத்தே என்பவரின் மகளின் பெயர் ராஜேஸ்பாயி சாஹேப். அது முடிந்து சில நாட்களுக்குள் பிரதாபசிம்மரின் மனைவி அகல்யாபாயி காலமானாள். மன்னரின் நான்காம் மனைவியான யஷ்வந்த்பாயிக்கு இரண்டு பெண்கள். அந்தப் பெண்களை மாடிக் என்பவரின் குடும்பத்திலும், நிம்பாளகர் குடும்பத்திலும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பினார்.

பிரதாபசிம்மருக்கு ஆசை நாயகிகள் ஏழு பேர் என்று முன்னமே சொல்லியிருக்கிறோம் அல்லவா? இவர்களில் அன்னபூர்ணாபாயி என்று ஒருத்தி. இவளுக்கு ராமசாமி, கிருஷ்ணசாமி என்று இரண்டு மகன்கள். ஒரு ராஜ ரகசியம். இவ்விரு பிள்ளைகளும் ராஜாவுக்குப் பிறக்கவில்லையாம். ஏதோ தில்லு முல்லு நடந்திருக்கிறது என்று அரண்மனையில் பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. இவ்விருவரில் கிருஷ்ணசாமி சீக்கிரம் இறந்து போனான். ராமசாமிக்கு 'அமர்சிங்' என்று பெயர் கொண்டு அழைக்கப்பட்டான். இந்த அமர்சிங் 1750ஆம் ஆண்டில் பிறந்தவன். இவைகள் எல்லாம் சுமார் ஐந்தாறு ஆண்டுகள் இடைவெளியில் நடைபெற்ற சம்பவங்கள்.

(இனி அடுத்த பகுதியில் பார்ப்போமே)

1 comment:

  1. ஒரே மூச்சாக அனைத்தையும் படித்து விட்டேன்... இப்போது அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.. நல்ல ஆட்சியாளனாக இருப்பது தான் எவ்வளவுக் கடினம்.. அதோடு அவனுக்கும் எவ்வளவு நெஞ்சுரமும், விவேகமும், கருணையும் இருக்க வேண்டும் என்பதை காண முடிகிறது... ஆனால், ஆசை மனதில் புகாதவரை எல்லோரும் நல்லவர்களாக இருந்து இருப்பதும்.. ஆரம்ப நோக்கம் சரியாக இருப்பினும்.. காலப் போக்கில், பதவி சுகம் படுத்திய பாடல் பாழாய்ப் போனதும் புரிகிறது... இருந்தும் கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மையே தருகிறது... அருமையான தொடர் படிக்க காத்திருக்கிறேன்.

    இவ்வளவும் தட்டச்சு செய்யத் தான் உங்களால் எப்படி முடிந்தது என்பது தான் எனக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது..
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete

You can give your comments here