ஆக்கியோன்
தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு,
தஞ்சாவூர் 613007.
தொலைபேசி எண். 9486741885
மின்னஞ்சல்: privarsh@gmail.com
தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு.
(மக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொண்டது)
முதல் பகுதி.
தஞ்சை சோழ மன்னர்கள் ஆண்ட பிரதேசமல்லவா? அங்கு நாயக்க மன்னர்களும் அவர்களைத் தொடர்ந்து மராட்டிய மன்னர்களும் எப்படி வந்தார்கள்? இவைகள் பற்றியெல்லாம் ஆய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் "தஞ்சையை ஆண்ட நாயக்கர் வரலாறு" எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். அவர்களைத் தொடர்ந்து தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டார்கள். இது குறித்து மக்கன்சி சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப் படுகின்றன. அதன் அடிப்படையில் தஞ்சை மராட்டியர் வரலாறு குறித்து இங்கு பார்க்கலாம்.
1535இல் தஞ்சாவூரில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. முதலாம் நாயக்க மன்னர் சேவப்ப நாயக்கர். இவர் காலத்தில் பல நற்காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன. இப்படி தொடங்கிய நாயக்கர்கள் ஆட்சி தஞ்சையில் கடைசியாக 1675 வரை அதாவது 140 ஆண்டுகள் நடந்து முடிந்தன. கடைசி நாயக்க வம்சத்து அரசர் தஞ்சையில் விஜயராகவ நாயக்கர் ஆவார்.
விஜயராகவ நாயக்கர் 1631 முதல் 1675 வரை 44 ஆண்டுகள் தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்திருக்கிறார். இவருக்கு முன்பு இவருடைய தந்தையார் ரகுநாத நாயக்கர் ஆட்சி செய்தார். தந்தை ரகுநாத நாயக்கரும் சரி, மகன் விஜயராகவ நாயக்கரும் சரி பல துறைகளிலும் வல்லவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்திருக்கிறார்கள். நல்ல கலா ரசிகர்கள், தாங்களே பல கலைகளிலும் சிறப்பாகத் தேர்ந்தவர்கள். ரகுநாத நாயக்கர் போர்க்களங்கள் பல கண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவருடைய மகன் விஜயராகவ நாயக்கர் நாகப்பட்டினம் அருகில் டச்சு அல்லது போர்த்துகீசியரிடம் போரிட்டிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
கி.பி.1664இல் விஜயராகவ நாயக்கர் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரோடு போரிட்டிருக்கிறார். இந்தப் போரில் மதுரை நாயக்கர் வசம் இருந்த வல்லம் கோட்டையை இவர் மீட்டிருக்கிறார். இந்த வீரம் செறிந்த விஜயராகவ நாயக்கரின் வீழ்ச்சிக்குப் பின் தஞ்சையில் விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்தது.
தஞ்சையின் கடைசி நாயக்க மன்னராக இருந்த விஜயராகவ நாயக்கர் மதுரை சொக்கநாத நாயக்கரோடு போரிட்டார் என்று சொன்னோமல்லவா. அது குறித்த விவரங்களைப் பார்ப்போம். சொக்கநாத நாயக்கர் மதுரையை மட்டுமல்லாது திருச்சியையும் ஆண்டு வந்தார். விஜயநகர சாம்ராஜ்யம் தலையெடுத்து வளர்ச்சி பெற்ற காலத்தில் நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை தென்னகத்தில் கன்னியாகுமரி வரையிலும் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தில் பல பகுதிகளுக்கும் சிற்றரரசர்களாக நியமித்து அனுப்பி வைத்தனர். அப்படி வந்தவர்தான் தஞ்சைக்கு சேவப்ப நாயக்கர். அவர் சந்ததியில் வந்தவர்தான் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கரும்.
ஒரு சமயம் மதுரை சொக்கநாத நாயக்கர், தஞ்சை விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்து கொள்ளப் பெண் கேட்டு தூது அனுப்பியிருந்தார். அதற்கு விஜயராகவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சொக்கநாதர் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்தார்.
போருக்குப் புறப்படும் முன்பாக விஜயராகவ நாயக்கர் தன் குடும்பத்தார் அனைவரையும் ஓரிடத்தில் கூட்டிவைத்து அவர்களுக்குச் சில அறிவுரைகளை வழங்கினார். நடக்கப் போகும் போரில் தான் வெற்றி பெற்றால் சரி, அப்படி இல்லாமல் ஒருக்கால் தான் போரில் தோற்றுப் போக நேர்ந்தால், நீங்கள் அனைவரும் எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொண்டு அவமானப் படாமல், உயிர் துறந்து விடுங்கள் என்று சொல்லி, அதற்கான வழிமுறைகளையும் சொல்லிவிட்டுப் போர்க்குப் புறப்பட்டுச் சென்றார்.
சொக்கநாதருக்கும் விஜயராகவருக்கும் இப்படியொரு விரோதம் நிகழ அவர் பெண் கேட்டு இவர் கொடுக்க வில்லை என்பதுதான் காரணம் என்பதைப் பார்த்தோமல்லவா. விஜயராகவர் சொக்கநாதருக்குப் பெண் கொடுக்க மறுக்க ஒரு காரணம் இருந்தது. முன்னதாக மதுரை திருமலை நாயக்கர் விஜயராகவனின் சகோதரியை மணம் செய்து கொண்டிருந்தார். பிறகு என்ன காரணத்தாலோ அந்தப் பெண் மதுரையில் கொலை செய்யப்பட்டு விட்டாள். இந்த காரணத்தினால்தான் சொக்கநாதனுக்குப் பெண் கொடுக்க விஜயராகவ நாயக்கர் விரும்பவில்லை. முந்தைய அனுபவம் அவருக்கு பசுமையாக நினைவிருந்தது.
மதுரை படைக்கு தளவாய் வேங்கடகிருஷ்ணப்ப நாயுடு, பேஷ்கார் சின்னத்தம்பி முதலியார் ஆகியோர் தலைமை வகித்து படைநடத்தி வந்தனர். திருச்சியை விட்டுப் புறப்பட்ட இந்தப் படை முதலில் வல்லம் கோட்டையைப் பிடித்துக் கொண்டது. பிறகு தஞ்சாவூரை முற்றுகை இட்டது. அப்போது விஜயராகவ நாயக்கர் அரண்மனையில் சிறை வைத்திருந்த தனது மகன் மன்னாரு தாசனை மன்னித்து விடுதலை செய்து போரில் ஈடுபட வைத்தார்.
இவர்கள் இருவருமாகச் சேர்ந்து மதுரை படையோடு போர் புரிந்தனர். தோல்வி அடையும் நிலையில் தன் அரண்மனைக்கு செய்தி சொல்லி அனுப்பினார் விஜயராகவர். முன்பே திட்டமிட்டிருந்தபடிக்கு அரண்மனைப் பெண்டுகள் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு இறந்து போயினர்.
கி.பி.1675 பிப்ரவரி 3ஆம் நாள் தஞ்சை வடக்கு வீதிக்கு அருகில் இருக்கும் ராஜகோபாலசாமி கோயில் அருகே நடைபெற்ற போரில் கடும் சமர் புரிந்து விஜயராகவ நாயக்கர் வீரமரணம் அடைந்தார். அவரோடு அவரது மகன் மன்னாரும் உயிர் துறந்தான்.
அரண்மனைப் பெண்கள் அனைவரும் உயிர் துறந்த போது, விஜயராகவரின் மனைவியருள் ஒருத்தி தனது நான்கு வயது குழந்தையை தாதி ஒருத்தியிடம் கொடுத்துத் தப்பித்துப் போய் குழந்தையை எப்படியாவது வளர்த்துப் பெரியவானாக்கச் சொல்லிவிட்டு அவளும் இறந்து போனாள். போரின் முடிவில் தஞ்சாவூர் ராஜ்யம் மதுரை சொக்கநாத நாயக்கர் வசம் போயிற்று. வெற்றி பெற்று தஞ்சை கோட்டைக்குள் நுழைந்த சொக்கநாதன் தனது தம்பியாகிய அழகிரி என்பவனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு மதுரை திரும்பினான்.
விஜயராகவனின் குழந்தையை மறைத்து எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற அந்தத் தாதி, செங்கமலதாஸ் என்று பெயருள்ள அந்தக் குழந்தையை நாகப்பட்டினத்தில் ஒரு செல்வந்தரான செட்டியாரிடம் கொடுத்து வளர்க்கச் செய்தாள். வசதியான குடும்பத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட நாயக்க வம்சத்து குழந்தையான செங்கமலதாஸ் நன்கு கல்வி கற்றான். போர்ப் பயிற்சியும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
ராயசம் வெங்கண்ணா என்று ஒரு மந்திரி. இவர் ஒரு தெலுங்கு நியோகி பிராமணர். ஆந்திரத்திலிருந்து நாயக்க மன்னர்களுடன் தஞ்சைக்கு குடிபெயர்ந்தவரின் வம்சம். இவர் இருநூறு நாயக்கப் படை வீரர்களைத் திரட்டிக் கொண்டு நாகப்பட்டினம் போனார். அங்கு தஞ்சையிலிருந்து தப்பிச் சென்ற தாதியைப் பிடித்து, குழந்தை எங்கே என்று விசாரித்து, அந்தக் குழந்தை செங்கமலதாஸ் செட்டியாரிடம் வளர்வதை அறிந்து, அவனையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மந்திரி ராயசம் வெங்கண்ணா பீஜப்பூர் சுல்தானிடம் சென்றார்.
பூஜப்பூர் சுல்தானிடம் தஞ்சையில் நடந்த விவரங்கள் அனைத்தையும் சொல்லி, போரில் விஜயராகவன் மாண்டபின் குடும்பத்தார் அனைவரும் மாண்டு போக, எஞ்சிய இந்த ஒரு குழந்தையை தாதி கொண்டு போய் நாகப்பட்டினத்தில் வளர்த்து வரும் செய்தியைச் சொன்னார் வெங்கண்ணா. மீண்டும் தஞ்சையில் விஜயராகவ நாயக்கரின் மகன் ஆட்சி புரியவும், மதுரை அழகிரியை தஞ்சையிலிருந்து விரட்டவும் உதவி கேட்டார்.
அதற்குள் மதுரை நாயக்க மன்னர் குடும்பத்தில் தகறாறு ஏற்பட்டுவிட்டது. அண்ணன் சொக்கநாதனுக்கும் தம்பி அழகிரிக்கும் மோதல். இந்த நேரத்தில் பீஜப்பூரில் வெங்கண்ணா உதவி கேட்டு போன இடத்தில் சுல்தான் இவர்கள் தஞ்சையை மீண்டும் மீட்டெடுக்க உதவி புரிவதாக வாக்களித்தான்.
சுல்தான் அலிஅடில்ஷா, அப்போது பெங்களூரில் தங்கியிருந்த சத்ரபதி சிவாஜியின் தந்தையான ஷாஜியின் மற்றொரு மனைவியின் மகனான ஏகோஜியை அழைத்து விஜயராகவ நாயக்கரின் மகனுக்கு உதவி செய்யும்படி பணித்தார். அவரும் கலாஸ்கான், அபுதல் அலீம் எனும் இரு வீரர்களை பெரும் படையுடன் அனுப்பி வைத்தார். இந்த பூஜப்பூர் படையுடன் ஏகோஜியும் தன் படைகளைச் சேர்த்துக் கொண்டு போருக்குப் புறப்பட்டார்.
பீஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷா ஏகோஜியிடம், மதுரை நாயக்க மன்னர்களைத் தஞ்சாவூரை விட்டு விரட்டிவிட்டு தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கரின் வம்சத்தாரிடம் தஞ்சையை ஒப்புவித்துவிட்டு, அவர்களே இனி ராஜ்யத்தை ஆள வேண்டுமென்று உத்தரவிட்டுவிட்டு, படையெடுப்புச் செலவையும், பேஷ்கஷ் (கப்பம்) பணத்தையும் வாங்கிக் கொண்டு வந்து சேரும்படிச் சொன்னார். சுல்தானின் உத்தரவுப்படி ஏகோஜி பெங்களூர் ராஜ்யத்தை தனது உதவியாளராக இருந்து வந்த காகால்கர் காடேஜு ஜாகா என்பவனிடம் ஒப்புவித்து விட்டு சுல்தான் படையுடன் தன் படையையும் இணைத்து அதற்குத் தலைமை தாங்கி தஞ்சாவூர் நோக்கிப் புறப்பட்டார் ஏகோஜி.
(இதன் தொடர்ச்சி நாளை)
No comments:
Post a Comment