பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, September 22, 2011

மராத்தியர் வரலாறு - Part 10


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி X

கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது தேவிகோட்டை. இந்த கோட்டை ஒரு மைல் சுற்றளவு உள்ளது. இதன் மதிற்சுவர் பதினெட்டடி உயரமுள்ளது. மதிற்சுவரில் ஆங்காங்கே சதுரமாகவும், வட்டமாகவும் கோபுரங்கள் அமைந்திருக்கும். கடலோரமுள்ள இந்தக் கோட்டைத் தங்களுக்குப் பயன்படும் என்று ஆங்கிலேயர்கள் அதனை வாங்கிக் கொண்டார்கள். அந்தத் தீவினருகில் ஒரு ஆங்கிலேயர்களுடைய கப்பல் மூழ்கியதாகவும், அப்போது அந்த கப்பலுக்குள் இருந்தப் பொருட்களை தஞ்சாவூர் ராஜாவின் ஆட்கள் எடுத்துக் கொண்டதாகவும், அதற்கு ஈடாக அந்த தேவிகோட்டைத் தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஆங்கிலேய வியாபாரிகள் அங்கு தங்கிவிட்டனர்.

இந்த தேவிகோட்டை தஞ்சை மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதால், இதில் அன்னியர்கள் வந்து தங்கள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமித்துக் கொண்டதனால் கோபமடைந்த பிரதாபசிம்ம ராஜா தனது படைத்தலைவர் மானோஜி ராவுடன் ஒரு படையை அனுப்பி தேவிகோட்டையில் தங்கியிருந்த ஆங்கில வியாபாரிகளைத் துரத்திவிட்டு அதனை கையகப் படுத்திக்கொண்டு, அந்தக் கோட்டைக்குக் காவலாக ஜாபர் சாஹேப் என்பவனை நியமித்துவிட்டு வரச் சொன்னார். மானோஜி ராவும் அப்படியே செய்தார்.

சிலகாலம் கழித்து தேவிகோட்டையிலிருந்து விரட்டப்பட்ட ஆங்கிலேய வியாபாரிகள் தங்கள் படை பலத்தை அதிகரித்துக் கொண்டு மீண்டும் தேவிகோட்டையைப் பிடிப்பதற்காக வந்தனர். இந்த செய்தி அறிந்த மன்னர் பிரதாபசிம்மன் தனது படைகளை அனுப்பினார். அப்படி அனுப்பப்பட்ட ராஜாவின் படைகள் கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்தனர். பல குதிரைகள் ஆற்று மணலில் புதையுண்டன. படை வீரர்கள் சிலரும் வீரப்பா என்கிற ஒரு தளபதியும் இறந்து போயினர்.

இந்த எதிர்பாராத நிகழ்ச்சியினால் சோர்ந்து போன மன்னர் பிரதாபசிம்மர் ஆங்கிலேய வியாபார கம்பெனியாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். யுத்த செலவுக்காக ஆங்கிலேயர்கள் தஞ்சாவூர் ராஜாவிடம் பணம் கேட்டனர். அந்த உடன்படிக்கையின்படி யுத்த செலவுக்காக பணமும், குப்பியின் மகன் காட்டுராஜா இருந்தானல்லவா, அவனை விரட்டிவிட்ட பிறகு ஆங்கிலேயர்களிடம் புகலடந்திருந்தான், அவன் செலவுக்காக 40000 பணமும் ராஜா கொடுத்தார். தேவிகோட்டையை ஆக்கிரமித்து வைத்திருப்பதற்காக ஆங்கிலேய வியாபாரிகள் ராஜாவுக்கு வருஷத்துக்கு 1100 வராகன் வாடகை கொடுப்பதாகவும் உடன்பட்டனர். இந்த நிகழ்ச்சி 1749இல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தஞ்சாவூர் ராஜ்யத்தில் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஐதராபாத் நகரத்தில் இருந்த நிஜாம் ஷாஜதீகான் என்பவன், தெற்கே நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான். சந்தா சாஹேப் சதாராவில் சிறையில் அடைபட்டிருப்பது குறித்து, தான் இருக்கும்போது இப்படியெல்லாம் நடந்து விட்டதே என்று அவனுக்குக் கோபம் இருந்தது. சந்தா சாஹேபும், தோஸ்த் அலிகானின் மகன் சப்தர் அலிகானும் பிரெஞ்சு படைகளின் ஆதரவோடு திருச்சினாப்பள்ளிக்குப் போய் அந்த ராஜ்யத்தின் பெண் அரசியை நீக்கிவிட்டுத் தான் பிடித்துக் கொண்டதும், தஞ்சாவூர் மராட்டிய ராஜா சதாராவிலிருந்து மராட்டியப் படைகளை வரவழைத்து அவர்களுடன் தன் படைகளையும் அனுப்பி போரில் வென்று சந்தா சாஹேபை சதாராவுக்கு சிறையில் அடைக்க அனுப்பி வைத்த செய்தியையும் நிஜாம் கேள்விப் பட்டிருந்தான்.

அந்த நேரத்தில் திருச்சியில் முராரி ராவ் கோட்டையை கவனித்து வந்தான். அந்த நேரத்தில் ஐதராபாத் நிஜாம் தனது படைகளை அனுப்பி திருச்சினாப்பள்ளியை முற்றுகை இட்டார். திருச்சி கோட்டை மிகவும் வலுவானது. சுமார் ஆறு மாத காலம் கோட்டையை முற்றுகை இட்டு, ஒரு வழியாக முராரி ராவை கோட்டையை விட்டு வெளியே வரவழைத்து துரத்திவிட்டு கோட்டையை அன்வர்தின் கான் வசம் கொடுத்து விட்டார் நிஜாம். இப்போது ஆற்காட்டோடு, திருச்சினாப்பள்ளியும் அன்வர்தின்கான் வசம் போயிற்று.

"The success of Marathas greatly perturbed the aged Nizam and he personally undertook an expedition to the South in order to settle matters. When the Nizam arrived with a large army at Arcot in March 1743 all the Chiefs of the Country promptly submitted to him, while Murari Rao was ordered to quit Trichinopoly and Anwarddin was made the Nawab of Arcot."

ஆற்காட்டு நவாப் அன்வர்தின்கான் நிஜாமிடமிருந்து எப்படி ஆற்காட்டையும், திருச்சினாப்பள்ளியையும் பெற்றார் என்பதன் வரலாறு இது.

ஆற்காடு சுபாவும், திருச்சினாப்பள்ளி சுபாவும் தன் அதிகாரத்துக்குள் வந்த பிற்பாடு அன்வர்தின்கானின் தனது மகன் மாபோஸ்கானை தஞ்சாவூர் சென்று தங்களுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை பெற்று வரும்படி அனுப்பினான். திடீரென்று மாறிவிட்ட சூழ்நிலை காரணமாகவும், ஏற்கனவே ஆங்கில வியாபாரிகளுக்குப் பணம் கொடுத்து நொடித்துப் போன நிலையில் இப்போது ஆற்காட்டு நவாபுக்கு எப்படி கப்பம் கட்டுவது என்ற பிரச்சினை தலைக்குடைச்சலை தந்தது பிரதாபசிம்மருக்கு. தன்னிடம் இப்போது பணம் இல்லை, சிறிது அவகாசம் கொடுத்தால் கப்பத்தை ஒழுங்காகக் கட்டிவிடுவதாகச் சொல்லி அனுப்பினார் மன்னர்.

ஆற்காடு நவாப் இந்த சால்ஜாப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. கொடுத்தால் கப்பம், இல்லையேல் சண்டை என்று தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்துவிட்டான் ஆற்காடு நவாப். படைகளுக்குத் தலையேற்று வந்தவன் மாபோஸ்கான். இப்போது பிரதாபசிம்மருக்கு தன்மானப் பிரச்சினையாக ஆகிவிட்டது. போர் செய்து இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவது என்று முடிவு செய்து, தனது படைகளுடன் கோட்டைக்கு வெளியே வந்து ஆற்காட்டு நவாபின் படைகளோடு சண்டை செய்தார்.

தஞ்சாவூருக்கு வடக்கே இரண்டு மைல் தூரத்தில் சண்டை நடந்தது. கடுமையான சண்டைக்குப் பின் மாபூஸ்கான் படை தோற்று ஓடத் தொடங்கியது. ஓடியவர்கள் சும்மா ஓடுவார்களா. போகும் வழியில் இருந்த கிராமங்களையெல்லாம் சூறையாடிவிட்டு ஓடினார்கள். சிலர் ஆங்காங்கே இருந்த கிராமங்களில் தங்கி விட்டார்கள். மாபூஸ்கான் சிறைப்பட்டான். சிறைப்பட்ட ஆற்காடு நவாபின் மைந்தன் மாபூஸ்கானை மன்னர் பிரதாபசிம்மர் மரியாதையோடு நடத்தி அவனையும், அவனோடு எஞ்சிய வீரர்களையும் விடுவித்து ஊருக்குத் திருப்பி அனுப்பினார். உண்மையில் இந்தப் போரின் முடிவு பிரதாபசிம்மருக்கு வெற்றியையும், மாபூஸ்கானுக்குத் தோல்வியையும் கொடுத்திருந்த போதிலும் தஞ்சை மானுவல் என்ன சொல்லுகிறது தெரியுமா?

"In two letters the Nawab speaks in bostful language of victories gained by his troops over those of the King of Tanjore in two separate battles. In the first of these conducted by his eldest son Mapuz khan the Tanjorean army consisted of 5000 horse and 30000 foot composed of natives of Palghat and other Countries and the loss by Tanjore amounted to 200 men killed and 400 wounded and about forty taken prisoners."

இவ்விரு செய்திகளில் எது உண்மை? மரியாதைக்குரிய குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற தலைசிறந்த ஆராச்சியாளர்களும், வரலாற்று ஆசிரியர்ளும்தான் சொல்ல வேண்டும்.

மாபூஸ்கான் தஞ்சாவூரில் தோல்வி அடைந்த விஷயத்தைத் தன் தந்தை அன்வர்தீன்கானுக்கு தூதன் மூலம் செய்தி அனுப்பினான். தஞ்சாவூர் ராஜா கப்பம் செலுத்தத் தவணைதானே கேட்டான், இவன் அவனிடம் சண்டைக்குப் போய்விட்டான் என்று அவன் தவறை சரிக்கட்டவோ என்னவோ நடந்தவற்றை மாற்றிச் சொல்லிவிட்டான் ஆற்காட்டு நவாப்.

அன்வர்தீன்கான் ஆற்காட்டில் இருந்து கொண்டு என்ன சொன்னான்? நமது நவாபின் படை தோற்பதாவது. பெருத்த அவமானமாச்சே! என்று கெளரவம் பார்த்து, ஒரு பெரும் படையை, குதிரைப்படை, காலாட்படை இவர்களைத் தயார் செய்து கொண்டு, பீரங்கிகள், துப்பாக்கிகள் சகிதம் தஞ்சாவூர் ராஜ்யத்தை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற வைராக்கியம் பூண்டு புறப்பட்டான்.

வரும் வழியில் வேங்கடகிரி, வேட்டவலம் முதலான பாளையக்காரர்களையும் தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தான். அன்வர்தீன்கான் தலைமையில் வந்த அந்தப் பெரும் படை தஞ்சாவூருக்கு ஈசானிய திசையில் (வடகிழக்கு) ஆறு மைல் தூரத்தில் பசுபதிகோயில் என்கிற கிராமத்துக்கு அருகில் ஒரு பெரிய மைதானத்தில் முகாமிட்டது. கி.பி.1751இல் நடைபெற்ற செய்தி இது.

ஆற்காட்டு நவாப் அன்வர்தீன்கான் படையெடுத்து வந்து பசுபதிகோயில் அருகில் தங்கியிருக்கும் செய்தி மன்னர் பிரதாப சிம்மருக்குச் சொல்லப்பட்டது. உடனே ராஜா தன்னுடைய படைவீரர்கள் 3000 பேரோடு பீரங்கிகள் முதலான ஆயுதங்களைக் கொடுத்து கோவிந்தராவ் சேட்டிகே, மானோஜி ராவ் ஜெகதாப் ஆகியோர் தலைமையில் போர் செய்ய அனுப்பி வைத்தார். இந்த படையோடு தஞ்சை மராட்டிய ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஏழு வீரர்களும் சென்றனர். நான்கு சர்தார்களும் உடன் சென்றனர். பசுபதிகோயில் போர் என்னவாயிற்று?

தொடர்ந்து பார்ப்போம்.No comments:

Post a Comment

You can give your comments here