தஞ்சை மராட்டியர் வரலாறு - 2
பகுதி 2.
பீஜப்பூர் சுல்தானுடைய ஆணைப்படி ஏகோஜி, பெங்களூர் ராஜ்யத்தைத் தனது உதவியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தனது படையோடும், சுல்தானின் படையோடும் தஞ்சை நோக்கிப் பயணமான செய்தியை முதல் பகுதியில் பார்த்தோம்.
ஏகோஜி பெங்களூரில் கிளம்பி தஞ்சையை நோக்கி வருகிற வழியில் ஆரணியில் இருந்த கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டார். அங்கு ஆரணி நிர்வாகத்தை கவனிக்க ஆட்களை நியமித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். அங்கு அப்போது ஆட்சி புரிந்து வந்த மதுரை சொக்கநாத நாயக்கரின் தம்பியான அழகிரியைத் தோற்கடித்து திருச்சிக்கு விரட்டிவிட்டு தஞ்சாவூர் நாயக்க அரசுக்குச் சொந்தமானவர்களிடம் ஆட்சியை ஒப்புவித்தார். தஞ்சை நாயக்க மன்னர்களிடமிருந்து வரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை வசூல் செய்து கொண்டு திரும்புமாறு தனது இரு வஜீர்களுக்கும் உத்தரவிட்டுவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பத் தொடங்கினார். அப்படி அவர் திரும்பி வரும் வழியில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து திருமழபாடி எனும் ஊரில் தங்க நேர்ந்தது. காரணம் அப்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிகளில் ஒருவருக்குப் பிரசவ நேரம் நெருங்கியிருந்ததே காரணம். திருமழபாடியில் முகாமிட்டிருந்த ஏகோஜியின் மனைவிக்கு அங்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் சரபோஜி I என்று பதவிக்கு வந்த மன்னர்.
தஞ்சை நாயக்க மன்னரிடமிருந்து பேஷ்கஷ் வசூல் செய்து கொண்டு திரும்புவதற்காக அங்கு முகாமிட்டிருந்த இரண்டு வஜீர்களுக்கும் தஞ்சை மன்னன் பேஷ்கஷ் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அப்போது தஞ்சை அரண்மனையில் ராஜாவின் வாரிசு யார் என்பதில் போட்டி, சண்டை ஏற்பட்டிருந்தது. இவர்களுக்குள் நடந்த குடும்பச் சண்டையில் தங்களைப் பதவியில் அமர்த்திய பீஜப்பூர் சுல்தானையும், அவர்களது படைத் தளபதி ஏகோஜியையும், பேஷ்கஷ் வாங்கிச் செல்ல காத்திருந்த வஜீர்களையும் மறந்து போய் அலட்சியம் செய்து வந்தனர். இவ்விரு தூதர்களையும் ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம்கூட இருந்ததாகத் தெரிகிறது.
தஞ்சை மன்னரின் இப்படிப்பட்ட துரோக சிந்தையும், ஏமாற்றும் எண்ணத்தையும் தூதர்கள் மூலம் நகரத்துக்கு வெளியே முகாமிட்டிருந்த இவ்விரு வஜீர்களும் தெரிந்து கொண்டனர். தஞ்சை அரசரின் சபையில் இருந்த நகரத்துப் பெரியவர்கள் சிலர் இந்த வஜீர்களிடம் வந்து நடக்கும் விஷயங்களைச் சொல்லி, தற்போது தஞ்சையை ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் வஞ்சக எண்ணம் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய நடத்தையும் அரச பதவிக்கு ஏற்றதாக இல்லை. போகிற போக்கைப் பார்த்தால் இவர்களுக்குள் எந்த நேரத்திலும் சண்டை மூளலாம். அதனால் உயிர் இழப்புக்களும், ராஜ்யத்துக்குக் கேடும் ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில் தஞ்சை ராஜ்யத்தை இவர்களிடம் ஒப்புவித்துவிட்டுப் போவது சரியாக இருக்காது என்று எடுத்துரைத்தனர்.
தஞ்சைப் படைகளும் இப்போது இந்த மன்னரின் கட்டுப்பாட்டில் இல்லை. இரண்டொரு நாட்களில் படையினர் கலகம் செய்து மன்னரை வீழ்த்திவிட்டு ராஜ்யத்தைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையைத் தவிர்க்க உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று நகரத்துப் பெரியவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.
இதற்கு என்ன செய்யலாம் என்று வஜீர்கள் நகரத்துப் பெரியவர்களுடன் ஆலோசித்து, மீண்டும் ஏகோஜி மன்னரைத் தஞ்சைக்குத் திரும்பச் சொல்லி அவரே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். ஏகோஜியும் நல்ல வேளை இன்னமும் ஊர் திரும்பவில்லை. மனைவியின் பிரசவத்தை யொட்டி அவர் இன்னமும் திருமழபாடியில்தான் முகாமிட்டிருந்தார்.
இதன் பிறகு வஜீர்கள் இருவரும் நகரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை கவனித்து வந்தார்கள். அவர்கள் கவனித்த வகையில் நகரத்துப் பெரியவர்கள் சொன்ன செய்திகள் உண்மைதான் என்பதை உணர்ந்தார்கள். அதுமட்டுமல்லாமல் தஞ்சை ராஜ்யத்தின் படைத் தளபதிகள் சிலர் வந்து வஜீர்களிடம் முன்பு ஊர்ப்பெரியவர்கள் சொன்ன செய்தியை ஊர்ஜிதம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊர்ப் பெரியவர்களை அழைத்து வஜீர்கள் சொன்னார்கள், எங்களால் இப்போது கூட தஞ்சை அரண்மனையையும், ஆட்சி அதிகாரத்தையும் பறித்துக் கொள்ள முடியும். அதனை நாங்கள் இருவர் மட்டும் முடிவு செய்ய முடியாது. திருமழபாடியில் தங்கியிருக்கும் ஏகோஜிக்கு தகவல் அனுப்புகிறோம். அவர் வந்து எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி முடிவெடுத்து நடந்து கொள்வோம் என்றனர்.
வஜீர்களின் வேண்டுகோளை ஏற்று தஞ்சை நகர பெருமக்கள் பிரதிநிதிகள் வஜீர்கள் கொடுத்த கடிதத்துடன் திருமழபாடி சென்று ஏகோஜியைச் சந்தித்து நடந்தவைகளை விவரமாக எடுத்துக் கூறினர். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று ஏகோஜி ஒரு சிறுபடையோடு தஞ்சாவூருக்கு கிளம்பி, அங்கிருந்த வஜீர்களையும் சேர்த்துக் கொண்டு தஞ்சையைப் பிடிக்க ஏற்பாடு செய்தார். அதன்படி ஏகோஜியின் சிறு படை தஞ்சையில் தங்கியிருந்த வஜீர்களோடு தஞ்சைக் கோட்டைக்குள் வடக்கு வாசல் வழியாக உள் நுழைந்தது.
ஏகோஜியின் படைகள் தஞ்சைக்குள் நுழைந்த வடக்கு வாசலுக்கு 'அல்லிதர்வாசா' எனப் பெயரிடப்பட்டது. மராத்தியப் படைகள் தஞ்சை நகரத்துக் கோட்டைக்குள் நுழைந்த போது, தஞ்சை நாயக்க அரசரும் அவரது பரிவாரங்களும், குடும்பத்தாரும் எதிரே வந்து எதிர்த்தார்கள். அங்கு அரச பரிவாரங்களுக்கும், மராத்திய படையினருக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஏழெட்டு பேர் இறந்து போனார்கள். மீதமுள்ள நாயக்க படையினர் சின்னாபின்னமடைந்து சிதறிப் போனார்கள்.
மிகச் சுலபமாக தஞ்சாவூர் கோட்டை ஏகோஜி வசம் வீழ்ந்தது. தஞ்சை கோட்டையை மராத்தியர்கள் பிடித்துக் கொண்டார்கள் என்ற செய்தி அறிந்து ஆங்காங்கே ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புகளும் சிறிது நேரத்தில் ஓய்ந்து போயின. வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்த ஏகோஜியின் படைகள், கிழக்கு வாசல் வையாக வெற்றி வீரர்களாக வெளிவந்த போது, மக்கள் ஆரவாரம் செய்தனர். வெற்றியோடு ஏகோஜி வெளிவந்த கீழவாசல் வெற்றிவாசல் எனும் பெயரில் 'பத்தே தர்வாசா' எனப் பெயர் பெற்றது.
(இதன் தொடர்ச்சி நாளை)
No comments:
Post a Comment