பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 21, 2011

மராத்தியர் வரலாறு - Part 4


தஞ்சை மராத்தியர் வரலாறு
பகுதி IV

ஏகோஜி மகாராஜா காலமான பிறகு அவருடைய மூத்த மகனான 3ஆவது ஷாஜி மன்னனாகப் பட்டம் சூட்டிக் கொண்டான். ஷாஜி என்ற பெயர் அவனுடைய தாத்தாவின் அதாவது சிவாஜி மகாராஜாவின் தந்தையாருடைய பெயர். இவன் தஞ்சை மகாராஜாவாக, அவனுடைய தந்தையான ஏகோஜி அமைத்துத் தந்த உறுதியான ராஜ்யத்துக்கு அரசனாக ஆட்சியைத் துவக்கினான். இவன் திருமணம் செய்து கொண்ட மனைவி சிம்மாபாயி ஒருத்தி மட்டும்தான். உரிமைக்கு இவள் மனைவி, ஏனையோர் பலர் இவனுடைய சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவியாக இருந்தனர்.

இவன் ஆட்சிக்கு ஏகோஜியின் மூத்த மனைவியும், இவனுடைய தாயாருமான தீபாபாய் துணையாக இருந்து வழிகாட்டி வந்தார். இவனுடைய தம்பிகளான சரபோஜி, துக்கோஜி ஆகியோரும் வளர்ந்து நல்ல இளவரசர்களாக இருந்தனர். இவர்களுக்கும் 3ஆம் ஷாஜி திருமணங்களைச் செய்து வைத்துத் தனது கடமையைக் குடும்பத்துக்குச் சரிவர செய்தான்.

ஷாஜியும் தனது தந்தையைப் போலவே குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்தான். இவனது திறமையால் ராஜ்யத்தின் வருமானமும் அதிகரித்தது. மக்களிடமும் நல்ல பெயர் வாங்கினான்.

இவன் தஞ்சையை ஆண்டுவந்த காலத்தில் டில்லி பாதுஷா ஒளரங்கசீப்பின் தளபதிகளான முல்லா என்பவனும், ஜுல்ஃபிர்கான் என்பவனும் படையெடுத்து வந்து செஞ்சியை முற்றுகையிட்டனர். செஞ்சியைத் தொடர்ந்து மேலும் தெற்கே வந்து தஞ்சாவூரையும் முற்றுகையிட்டுத் தாக்கத் தொடங்கினார்கள். அந்த தளபதிகளுக்கு வேண்டிய செல்வங்களைக் கொடுத்தோ அல்லது ஏதோ ஒரு வழியில் ஒரு போர் நிகழாமல் அவர்களை மகிழ்வித்து உயிர்ச்சேதமின்றி திரும்ப அனுப்பி வைத்தான் மன்னன் ஷாஜி. அதே நேரத்தில் தங்கள் மராத்திய அரசு தஞ்சையில் அமையக் காரணமாக இருந்த பீஜப்பூர் சுல்தானையும் நன்றாக கவனித்து மகிழ்ச்சியடையச் செய்து, தஞ்சையை சாமர்த்தியமாக ஆட்சி புரிந்தான்.

இப்படி தஞ்சை மராத்திய மன்னர்கள் அமைதியாக ஆண்டு கொண்டிருக்கும் வேளையில் 3ஆம் ஷாஜியின் கடைசித் தம்பியான துக்கோஜிக்கு தாது வருஷம் ஒரு மகன் பிறந்தான். அவனை 5ஆம் ஏகோஜி என பெயரிட்டு அழைத்தனர். அவனுக்கு பாவா சாஹிப் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

தஞ்சை ராஜ்யத்தை அமைதியாகவும், போர்கள் எதுவுமின்றியும், மக்கள் நிம்மதியாக வாழவும் வழிவகுத்து ஆண்டுகொண்டிருந்த 3ஆம் ஷாஜியும் இறந்தார். அவருடைய இறப்புக்குப் பிறகு ஷாஜியின் மகன் 3ஆம் சரபோஜி மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். இவன் காட்டிகே வம்சத்தில் பிறந்த இரண்டு பெண்களை அதாவது சுலட்சணாபாயி, அபுரூபபாயி ஆகிய இருவரையும், சிரிக்கே குலத்தில் பிறந்த ராஜேஸ்பாயி ஆகிய பெண்கள் மூவரையும் திருமணம் செய்து கொண்டான். இவன் ஆட்சியும் பிரச்சினைகள் இல்லாமல் அமைதியாகவே இருந்தது.

இந்த காலகட்டத்தில் டில்லி பாதுஷா ஒளரங்கசீப் படையெடுத்து வந்து பீஜப்பூரைப் பிடித்துக் கொண்டார். பீஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவையும் சிறையில் அடைத்தார். இப்படி பீஜப்பூரின் ஆதரவு போய்விட்ட நிலைமையில் மிகவும் ஜாக்கிரதையாக தஞ்சையை ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான் 3ஆம் சரபோஜி.

இவனுடைய தம்பியின் பெயர் துக்கோஜி. இவன் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். மோதே வம்சத்தில் பிறந்த அருணாபாயி, இங்க்ளேயின் பெண்கள் ராஜகுமாரபாயி, மோகனாபாயி, மஹினாபாயி, லக்ஷம்பாயி இந்த ஐந்து பேர் அவர்கள். இவர்களைத் தவிர ஆறு பெண்களை இவன் சேர்த்துக் கொண்டான். அந்த அறுவரில் ஒருத்தி மட்டும் மராத்தி, மற்றவர்கள் நாயக்கர் வம்சத்துப் பெண்கள்.

இவன் மனைவியாகச் சேர்த்துக் கொண்ட மராத்தியப் பெண்ணை, கத்தியை வைத்துத் திருமணம் செய்து கொண்டான். அவள் பெயர் அன்னபூர்ணாபாயி. 'கத்தி வைத்து கல்யாணம்' என்பது ஒரு நாற்காலியில் கத்தியொன்றை வைத்து, அதற்கு பூமாலைகளைச் சூட்டி, ஒரு பிராமணப் பெண்ணை அழைத்து அவளைக் கொண்டு தாலியை எடுத்துக் கொடுக்கச் சொல்லி, அந்தக் கத்திக்கு தாலி கட்டுவார்கள். இங்கு மாப்பிள்ளை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு கத்தி இருக்கும்.

இப்படிக் 'கத்திக்' கல்யாணம் செய்துகொண்ட அன்னபூர்ணா பாயிக்கு சார்வரி வருஷத்தில் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பிரதாபசிம்மன். துக்கோஜி சேர்த்துக் கொண்ட மற்ற நாயக்கர் குலத்துப் பெண்களுக்கும் மாலசிராஜா, அண்ணா சாஹேப் ஆகிய மகன்களும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். இந்த விஷயங்கள் எல்லாம் அப்போது ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்த 3ஆம் சரபோஜியின் தம்பியான துக்கோஜி விவகாரம்.

துக்கோஜியின் மகனாகப் பிறந்த பிரதாபசிம்மன் வளர்ந்து பெரியவனாக ஆனான். அவனுக்கு மொகிதே வம்சத்தில் வந்த அகல்யாபாயி என்பவளைத் திருமணம் செய்து வைத்தார்கள். இது தவிர யமுனாபாயி, சகராபாயி, திரெளபதிபாயி, யஷ்வந்த்பாயி ஆகிய பெண்களையும் திருமணம் செய்து கொண்டான். இதில் இரண்டு பேரை அவன் தந்தையே செய்து வைத்தது, மற்றவர்களை இவனே சேர்த்துக் கொண்டான். இவர்கள் தவிர மராட்டி, வடுக ஜாதிப் பெண்களில் 7 பேரை இவன் ஆசைநாயகிகளாக வைத்திருந்தானாம். அடே அப்பா! பிறந்தால் மராட்டிய ராஜாவாகப் பிறக்க வேண்டும் போல் இருக்கிறது அல்லவா?

(தஞ்சையில் ஏன் இவ்வளவு சந்துகளும் பொந்துகளும் இருக்கின்றன, மக்கள் ஏன் அப்படி ஒளிந்து மறைந்து வாழ்ந்தார்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா?)

இந்த பிரதாபசிம்மனுக்கு ஒரு தங்கை. அவள் பெயர் சாமாபாயி. இவளை மல்லார்ஜி காடேஜிராவ் என்பவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார்கள். துக்கோஜிக்கு அவன் ஆசைநாயகிகள் மூலம் பிறந்த மூன்று குழந்தைகள் இறந்து போயின. அவர்களில் நானா சாஹேப் என்றொருவன். அவனுக்குத் திருமணம் ஆகி அப்பு சாஹேப் என்றொரு பிள்ளை இருந்தான்.

ஆக, இப்படி 3ஆம் சரபோஜியும், அவனுடைய தம்பியான துக்கோஜியின் வம்சமும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி தஞ்சையை நிரப்பிக் கொண்டிருந்தது. குடும்பம்தான் இப்படி பல கிளைகளாகப் பிரிந்து தழைத்து வளர்ந்து பெருகியதே தவிர அண்ணன் தம்பி இருவரும் ஒற்றுமையாக ஆட்சி புரிந்து தனது படை குடிகளை காவந்து செய்தார்களோ என்னவோ, தங்கள் பெரிய குடும்பத்தைப் பாதுகாத்தார்கள்.

இப்படி அண்ணன் தம்பி ஒற்றுமையாக இருந்தால் விதி சும்மா இருக்குமா? இல்லையே. இடையில் புகுந்து ஏதோ கலகம் விளைவித்துவிட்டது விதி. அதில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. துக்கோஜி தனது பரந்து விரிந்த மனைவிகளையும், வாரிசுகளையும் திரட்டிக் கொண்டு, அண்ணனிடம் போய் தனக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்டு, அதன்படி நாட்டைப் பிரித்துக் கொண்டு மகாதேவப் பட்டினம்* எனும் இடத்துக்குச் சென்று அங்கு மனைவி மக்களோடு வாழத் தொடங்கினான்.

(இந்த "மகாதேவபட்டினம்" என்பது இப்போதைய ராஜமன்னார்குடிதான். சரபோஜி ராஜா காலத்தில் தக்ஷிண துவாரகபுரம் என அழைக்கப்பட்ட ராஜமன்னர்குடியில் ஒரு பெரிய நகரை உண்டாக்கி அதற்கு மகாதேவபட்டினம் என்று பெயர் வைத்து அங்கு போய் துக்கோஜி இருந்து வந்தார். குடும்பத்தில் மனவேறுபாடு தோன்றியதால் துக்கோஜி மகாதேவபட்டினத்துக்குச் சென்றார் என்கிறது வரலாறு.)

தம்பி துக்கோஜியை மகாதேவப்பட்டினத்துக்கு அனுப்பிய பிறகு 3ஆம் சரபோஜி அமைதியாகத்தான் அட்சி புரிந்து வந்தான். ஆனால் அவனது மூன்று மனைவியருள் ஒருத்தியான அபரூபாபாயி என்பவளுக்கு கைகேயிக்கு அமைந்த கூனி போல சில பெண்கள் அமைந்தனர். அவர்கள் போட்டு தூபத்தில் அபரூபாபாயி மனம் கெடத் தொடங்கியது. அவர்கள் விடாமல் அரசிக்கு என்ன தூபம் போட்டார்கள்?

ராஜா 3ஆம் சரபோஜியின் தம்பி துக்கோஜி மகாதேவப்பட்டினம் போய்விட்டாலும், அவனுக்குக் குடும்பம் மிகவும் பெரிதாகிவிட்டது. ஏகப்பட்ட மனைவிகள், மகன்கள், மகள்கள் என்று பெரிய கூட்டம் அங்கே இருந்தது. 3ஆம் சரபோஜிக்கோ உரிமை மனைவியர் மூலம் மக்கட்பேறு இல்லை. அதனால் சரபோஜியின் மனைவியான அபரூபாபாயி என்பவளிடம் சில பெண்கள் தூபம் போட்டனர். என்னவென்று? "மன்னனுக்கு மக்கட்பேறு இல்லை. ஆனால் உன் மைத்துனன் துக்கோஜிக்கு வம்சம் பெருத்து விட்டது. உன் கணவனுக்குச் சந்ததி இல்லாததால், ராஜ்யாதிகாரம் இளையவனான துக்கோஜிக்குப் போய்விடும். இதை மனதில் வைத்துக் கொண்டு ஏதாவது செய்" என்று சொல்லிக் கொடுத்தனர்.

அந்த அபரூபாபாயி ஒரு தந்திரம் செய்தாள். தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு வயிற்றைப் பெரிதாகக் காட்டிக் கொண்டிருந்துவிட்டு, கடைசியில் தனக்குப் பிரசவம் ஆகிவிட்டதாக ஒரு பொய்யையும் சொல்லி எல்லோரையும் ஏமாற்றினாள். எல்லோரும் அவளுடைய சாமர்த்தியமான பொய்யை நம்பினர். ராஜாவுக்கு வாரிசு பிறந்துவிட்டது, நமக்கு ஒரு ராஜா கிடைத்துவிட்டான் என்று நாடு முழுவதும் விழா கொண்டாடினார்கள்.

அரண்மனைக்குள் நடக்கும் மூடுமந்திரங்களை மக்கள் என்ன கண்டார்கள்? அது ராஜரகசியம் அல்லவா?

யாரோ ஒரு தாதிக்குப் பிறந்த குழந்தை ஒன்றைக் கொண்டு வந்து ராணி அரூபாபாயிக்குப் பிறந்ததாகச் சொல்லி அந்தக் குழந்தைக்கு ராஜ உபசாரங்கள் நடந்தன. அந்தக் குழந்தைக்கு ஷகாஜி என்று பெயரும் சூட்டப்பட்டது. அரண்மனை அந்தப்புரத்தில் நடந்த இந்த ரகசியங்கள் எல்லாம் மக்கள் பிரதானிகளுக்குத் தெரியவில்லையே தவிர மகாதேவப்பட்டினத்தில் இருந்த ராஜாவின் தம்பி துக்கோஜிக்குத் தெரிந்து விட்டது. தம்பி துக்கோஜி தன் அண்ணனிடம் நடந்த விவரங்களைச் சொல்லி, அவன் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறான் என்பதையும் எடுத்துச் சொன்னான்.

நடந்த உண்மைகளையெல்லாம் கேள்விப்பட்டு ராஜா என்னவெல்லாம் செய்திருப்பான் என்று சொல்லவும் வேண்டுமா? அப்படியே செய்தும் விட்டான். அது சரி, நாட்டை 3ஆம் சரபோஜி ஆண்டு கொண்டிருக்கிறான். அவன் தம்பி துக்கோஜி பாகம் பிரித்துக் கொண்டு மகாதேவப்பட்டினம் போய்விட்டான். இடையில் அரண்மனையில் இப்படியொரு தில்லுமுல்லு நடந்திருக்கிறது. அதற்கும் இந்த வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது. பின்னால் வரப்போகும் சில பிரச்சினைகள் இந்த நிகழ்ச்சியால் ஏற்படவிருக்கிறது. அப்போது நினைவு படுத்திக் கொள்ளலாம். இனி வரலாற்றுக்கு வருவோம்.

இந்த நிகழ்ச்சிகளெல்லாம் நடந்த பிறகு சில ஆண்டுகள் 3ஆம் சரபோஜி ஆட்சி புரிந்தபின் கீலக வருஷம் காலமானார்.

(இனி நாளை தொடர்வோம்)

No comments:

Post a Comment

You can give your comments here