தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி VIII
பிரதாபசிம்ம ராஜா ராமேஸ்வரம் போய்விட்டு, இராமநாதபுரம் ராஜாவின் அழைப்பின்பேரில் அவர் அரண்மனையில் விருந்தினராக இருந்து தஞ்சைக்கு வந்து ராஜ்ய நிர்வாகங்களைக் கவனித்துக் கொண்டிருந்த வேளையில் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
தஞ்சையில் கில்லேதாராக இருந்த சையதுவின் மகளைத் திருமணம் செய்து கொண்டு, தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு பிடிக்க முடியாமல், பாவா சாஹேப் ராஜாவிடம் வெகுமதிகளை வாங்கிக் கொண்டு திருச்சினாப்பள்ளிக்கு ஓடிய சந்தா சாஹேப் மறுபடி தொல்லை கொடுக்கத் தொடங்கினான். முதலில் அவன் திருச்சினாப்பள்ளியில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த மீனாட்சி ராணிக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினான். தனது ஆற்காட்டுப் படையுடனும், பிரெஞ்சுக்காரர்களின் துணையுடனும் திருச்சினாப்பள்ளிக்கு வந்து ராணி மீணாட்சியுடன் சண்டை செய்து குழப்பங்களை விளைவித்து நாட்டைப் பிடித்துக் கொண்டான். ராணி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாள்.
இப்படி அவனது முயற்சிகள் வெற்றி பெறுவதைக் கண்டு அவனால் சும்மா இருக்க முடியவில்லை. தஞ்சையின் மீது மீண்டும் அவனுக்கு ஒரு கண். தன் ஆற்காட்டுப் படையோடு திருச்சி படைகளையும் சேர்த்துக் கொண்டு தஞ்சையின் மீது படையெடுத்து வந்தான். தஞ்சை நகரத்தில் இருந்த கோட்டையை முற்றுகை இட்டான். கோட்டையினுள் பிரதாபசிம்ம ராஜா கோட்டைப் பாதுகாப்பை அதிகப்படுத்தி, அவன் ஊருக்குள் நுழைந்து விடாதபடி கடுமையாகக் காவல் புரிந்தார்.
கோட்டைக்குள் இருந்தபடி பிரதாபசிம்மர் முற்றுகையை நீக்க இரண்டு மாத காலம் போராடிப் பார்த்தார். வெற்றி இரு பக்கத்திற்கும் கிடைக்காமல் இருந்து வந்தது. இன்னும் எத்தனை காலம்தான் கோட்டையின் முற்றுகையை நீடிப்பது என்று சந்தா சாஹேப், பிரதாபசிம்மன் கோட்டைக்குள் ஆட்சி புரிந்து கொள்ளட்டம், நாட்டை நாம் எடுத்துக் கொள்வோம் என்று ஆங்காங்கே கொள்ளை அடித்தான்.
சந்தா சாஹேபுடன் ஆற்காட்டிலிருந்து சப்தர் அலி என்ற தளபதியும் வந்திருந்தான். அவனை அழைத்து பட்டுக்கோட்டை தவிர மற்ற பகுதிகள் முழுவதையும் ஜப்தி செய்து நம் பொறுப்பில் நீ ஆட்சியை கவனித்துக் கொண்டிரு, பிரதாபசிம்மன் கோட்டைக்குள்ளேயே இருந்து கொள்ளட்டும், எனக்கு திருச்சினாப்பள்ளியில் வேலை இருக்கிறது என்று சந்தா சாஹேப் போய் விட்டான்.
தஞ்சாவூர் கோட்டைக்குள் இருந்து கொண்டு ராஜா பிரதாபசிம்மன், வெளி உலக தொடர்பு இல்லாமலும், கோட்டைக்குள் இருக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வெளியிலிருந்து கொண்டு வர முடியாத சூழ்நிலையிலும், மிகவும் சிரமப் பட்டான். தனது சேனை வீரர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூட முடியாமல் தவித்துப் போனான். சம்பளம் கிடைக்காத வருத்தத்தில் வீரர்களும் சண்டை போடும் ஊக்கமோ, தைரியமோ இல்லாமல் இருந்தார்கள்.
செய்வதறியாமல் அப்போது சதாராவில் இருந்த சாஹு ராஜாவுக்கு ஒரு கடிதம் தூதன் மூலம் அனுப்பினார். தூதனிடமிருந்து செய்தியை அறிந்து கொண்ட சதாரா ராஜா சாஹு மகராஜ் உடனே ரகோஜி பான்ஸ்லே என்பவரையும், பத்தேசிங் என்ற தளபதியையும் அறுபதாயிரம் குதிரைப் படையுடன் பிரதாபசிம்மருக்கு உதவி செய்வதற்காகத் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தார்.
மராத்தியக் குதிரைப் படை மிக விரைவாகப் பயணம் செய்து வந்து சேர்ந்தார்கள். மராத்திய பிரதேசத்திலிருந்து ஒரு பெரும் குதிரைப் படை தஞ்சை மன்னனுக்கு உதவுவதற்காக வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் சந்தா சாஹேபின் கையாள் சப்தர் அலிகான் எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு திருச்சினாப்பள்ளிக்கு ஓடிவிட்டான்.
மராத்தியக் குதிரைப் படை தஞ்சாவூருக்கு வந்த போது எதிரிகள் ஓடிவிட்டதை அறிந்து, அவர்களைத் துரத்திக் கொண்டு போய் திருச்சினாப்பள்ளியில் அவர்களோடு யுத்தம் செய்தனர். அப்போது மதுரையிலிருந்து சந்தா சாஹேபின் தம்பியும் வந்து போரில் கலந்து கொண்டான். அங்கு நடந்த கடுமையான யுத்தத்தில் மராத்தியப் படைகள் வெற்றி பெற்றன. சந்தா சாஹேப், அவன் தம்பி, சப்தர் அலிகான் ஆகியோரைத் தஞ்சை படைகள் கைது செய்து திருச்சியைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
"The Marattas surprised Chanda Saheb in his Fort at Trichinopoly to surrender it. Leaving the Fort in the hands of Murari Rao Ghorpade, they retraced their steps homeward with Chanda Saheb as their prisoner."
தஞ்சையில் பிரதாபசிம்ம ராஜா தன் அமைச்சர் அண்ணப்பா சேடிகேயை திருச்சினாப்பள்ளிக்கு அனுப்பினார். அவர் போய் அங்கு சேர்ந்ததும் திருச்சியை அவர் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும்படி மராத்திய படைத் தலைவர்கள் சொன்னார்கள். மகாராஜாவின் உத்தரவு இல்லாமல் தான் அப்படிச் செய்ய இயலாது என்று சொன்ன மந்திரி அண்ணப்பா சேடிகே பாஜிராவ் கோர்படே என்பவரின் மகன் முரார்ஜி கோர்படே என்பவரின் பொறுப்பில் திருச்சியை ஒப்படைத்தார்.
போரில் கைது செய்யப்பட்ட சந்தா சாஹேபை மராத்திய வீரர்கள் சதாராவின் மன்னன் சாஹு மகாராஜாவிடம் கைதியாக அழைத்துச் சென்றனர். சதாராவில் சாஹு மகாராஜாவிடம் சந்தா சஹேப் சிறைக் கைதியாக இருந்து வந்தான்.
இப்படி இருக்கையில் தஞ்சாவூரில் பிரதாபசிம்மரின் மந்திரியாக இருந்த அண்ணப்பா சேட்டிகே தனது ராஜ்ய பரிபாலன பணிகளை ஓரளவுக்கு நன்றாகச் செய்து வந்தாலும், மனதில் சில சூழ்ச்சிகளையும் செய்து கொண்டிருந்தார். அதாவது ராஜாவுக்குச் சொந்தமான சில உடைமைகளை மன்னருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் தனக்கும், தன் மனைவிக்கும் சொந்தமாக வைத்துக் கொண்டார். மன்னர் உரிமை மனைவிக்குப் பிறக்காதவர் என்ற ஏளன எண்ணத்தில் அவ்வப்போது அவரிடமே மரியாதையில்லாமல் பேசத் தொடங்கினார். இதையெல்லாம் கவனித்த மகாராஜா பிரதாபசிம்மர் சமயம் பார்த்து அண்ணப்பாவை சர்க்கில் என்கிற பதவியிலிருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
அப்போது பிரதாபசிம்ம ராஜாவிடம் தளபதியாக இருந்தவர் மானோஜி ராவி. இவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். மகா வீரர். அவரிடம் சேநாதிபதி பதவியோடு சர்க்கில் பதவியையும் கொடுத்து நிர்வகிக்கச் சொன்னார். அண்ணப்பாவைத் அவனுடைய வீட்டிலேயே கைதியாக இருக்கும்படி உத்தரவிட்டார்.
இந்த ஏற்பாடு அண்ணப்பாவுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. தான் வெகு நாட்கள் சேனைத் தலைவனாகவும், சர்க்கிலாகவும் இருந்த காரணத்தால் படை வீரர்கள் எல்லோரும் தன் பக்கம் இருப்பார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டான். தன் சகோதரனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு விலை உயர்ந்த பட்டாடைகளை அணிந்து கொண்டு வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்தான். நேரே அரண்மனைக்குப் போய் மன்னன் பார்க்க வேண்டுமென்று எதிரில் அமர்ந்து கொண்டான். அப்போதே அவன் தர்னா செய்திருக்கிறான். இப்படி வந்து உட்கார்ந்தவர்கள் கையில் ஆயுதங்களையும் ஏந்தி வந்திருந்ததால் மன்னருக்கு இவர்கள் ஏதோ திட்டமிட்டுக் குழப்பம் விளைவிக்க வந்திருக்கிறார்கள் என்று சந்தேகம் வந்தது.
இவர்கள் இப்படி ஆயுதபாணிகளாக வந்து உட்கார்ந்திருப்பதன் நோக்கம் என்ன? என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேட்டு வரும்படி ஆளை அனுப்பினார் மன்னர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அண்ணப்பா தனக்கு படை வீரர்கள் ஆதரவு கிடைக்கும் என்கிற விபரீத எண்ணத்தில் வாளை உருவிக்கொண்டு மன்னரை எதிர்க்கத் தொடங்கினான். அப்போது நடந்த சிறு போரில் சிலர் காயமடைந்தனர்.
இவனுடைய போக்கைக் கவனித்த மன்னர், சரி இவன் ஏதோ திட்டத்துடந்தான் வந்திருக்கிறான். லேசில் அடங்க மாட்டான் என்று எண்ணிய மன்னர், தன் படை வீரர்களை அழைத்து அண்ணப்பாவைப் பிடித்துக் கைது செய்து கொண்டுவரும்படி பணித்தார். அண்ணப்பாவுக்கும் சிலர் ஆதரவாக இருந்ததால், அரசாங்கப் படைக்கும் அண்ணப்பா படைக்கும் அங்கே ஒரு யுத்தம் நடந்தது.
சண்டையில் ராஜாவின் பக்கம் அதிகம் பேர் இருந்ததாலும், அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள் என்பதாலும் போரில் அண்ணப்பா உட்பட, அவன் தம்பி மற்றும் ஏழெட்டு பேர் உயிர் நீத்தார்கள். அண்ணப்பா வெட்டுப் பட்டு இறந்து கிடந்ததைப் பார்த்த பிரதாப சிம்மருக்கு அவன் மீது பரிதாபம் உண்டாயிற்று. பாவம்! இவன் எத்தனை உண்மையாக விசுவாசத்தோடு ஊழியம் செய்திருக்கிறான். இவனுக்கு ஏன் இப்படியொரு விபரீத புத்தி ஏற்பட்டது என்று மிகவும் வருந்தினார்.
(நாளை தொடரலாம்)
1 comment:
அது ஏன் பட்டுக்கோட்டை தவிர பிற பகுதிகளை ஜப்தி பண்ணினார்கள் நண்பரே☺
Post a Comment