தஞ்சை மராத்தியர் வரலாறு
பகுதி VI
முன்பு 3ஆம் சரபோஜி ஆட்சி செய்து கொண்டிருந்த போது அவருடைய மனைவி அபரூபாபாயி தனக்குப் பிள்ளை இல்லை என்பதால் தான் கர்ப்பமாகி யிருப்பதாகப் பொய் சொல்லி, ஒரு பிள்ளையும் பிறந்ததாக மற்றொரு பொய்யையும் சொல்லி, ஏதோவொரு இரவல் குழந்தையைக் காட்டி ஏமாற்றினாள் அல்லவா? அந்த குழந்தைக்கு நாமகரணம் கூட செய்து வைத்தார்கள் சவாய் ஷாஜி என்று. அந்த பிள்ளை இப்போது உயிரோடு இருக்கிறான் என்கிற தகவல் கிடைத்தது. இந்த அபரூபாபாயி செய்த தில்லுமுல்லு குறித்து எழுதும்போது இந்த விவகாரம் பின்னர் ஒரு குழப்பத்தில் கொண்டு போய் விடப்போகிறது, அதனால்தான் இதனை இங்கு விரிவாகச் சொல்கிறோம் என்று குறிப்பிட்டோமல்லவா? அந்த குழப்பம் குறித்துத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
அன்று அபரூபாபாயிக்குப் பிறந்ததாகச் சொல்லப்பட்ட குழந்தை சரபோஜியால் விரட்டப்பட்டுவிட, அந்தக் குழந்தையைக் கொல்லாமல் எங்கேயோ ரகசியமாக வளர்க்கத் தலைப்பட்டார்கள். அந்த குழந்தை உயிரோடு இருக்கிறது என்கிற செய்தியை கோயாஜி காட்டிகே எனும் அரசாங்க ஊழியன் ஒருவன் வந்து அரண்மனையில் தெரிவித்தான். அதன் காரணமாக ஒரு கலகம் இங்கே பிறந்தது.
அந்த காட்டிகே சொன்னான், காட்டில் குப்பி என்பவளிடம் அந்த குழந்தை வளர்கிறது. இதுதான் சரியான நேரம் என்று கருதிய அந்த காட்டிகே உடனே காட்டுக்குப் போய் குப்பி எனும் பெண்மணியைப் பார்த்து ஆசைகாட்டி அந்தப் பையனை அழைத்துக் கொண்டு உடையார்பாளையம் போனான். அங்கு போய் சில முக்கிய பிரமுகர்களையெல்லாம் சந்தித்து விஷயத்தைச் சொல்லி மேலும் சில பாளையக்காரர்களையும் உதவிக்குச் சேர்த்துக் கொண்டு, அவர்கள் மூலம் சிறிது பணம் திரட்டிக் கொண்டு ஒரு சேனையை உருவாக்கினான். அது போதாதென்று தேவிபட்டினத்தில் குடியேறியிருந்த டச்சுக்காரர்களையும் போய் சந்தித்து விஷயத்தை அவர்களிடம் சொல்லி அவர்களுடைய உதவியையும் பெற்றுக் கொண்டான். அதன் பின் தஞ்சை கோட்டையிலும் பலரைச் சந்தித்து 3ஆம் சரபோஜியின் மனைவி அபரூபாபாயிக்குப் பிறந்த குழந்தை உயிரோடு இருக்கிறது, அவன் தான் பட்டத்துக்கு உரியவன் என்று அவர்களது மனங்களை மாற்றித் தன் வசம் சேர்த்துக் கொண்டு, ராணி சுஜனாபாயி ஏமாந்திருந்த சமயம் அவளைச் சிறைபிடித்துவிட்டு ஆட்சியை காட்டில் வளர்ந்த குப்பியின் மகன் பெயரில் அவனே கைப்பற்றிக் கொண்டான்.
காட்டில் குப்பியிடம் வளர்ந்த பையன் தான் ராஜகுமாரன் என்று சொல்லி நம்பவைத்தான். அந்த பையனை காட்டு ராஜா என்றே அழைக்கத் தொடங்கினர். காட்டிலே வளர்ந்தவன், நாகரிகம் தெரியாதவன், ராஜ குடும்பத்தையும் சேராத ஒரு போலி ஆசாமி ஆகையால் அவன் ராஜ்யத்தை ஆண்ட சிறிது காலத்திற்குள் அவனது போக்கு நடத்தை அனைத்தும் வெறுக்கத்தக்கதாக அமைந்தது. இந்த இளைஞனின் போக்கு நடவடிக்கைகளை கண்ட மக்கள் இவன் அரச குடும்பத்தான் இல்லை, ஒரு போலி ஆசாமி என்பதை உறுதி செய்து கொண்டனர்.
இந்த சூதையும், பித்தலாட்டத்தையும், வந்திருக்கும் ராஜா போலி என்பதையும் தெரிந்து கொண்ட தஞ்சையின் தளபதியாக இருந்த சையிந்து (சையது) என்பவன் இப்படியொரு போலி, ராஜ்யம் ஆள்வது கூடாது என்று நடந்ததற்கு வருத்தமடைந்தான். இவனை இங்கிருந்து துரத்தி அடித்துவிட வேண்டும், அதற்கு என்ன செய்வது?
முன்பு துக்கோஜி ராஜா ஆசை நாயகியாக வைத்துக் கொண்டிருந்த பெண்களில் மராத்திய ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இருந்தாள். அவளுக்கு ஒரு பிள்ளை பிறந்தான், அவன் பெயர் பிரதாபசிம்மன் என்று முன்னமேயே சொல்லியிருக்கிறோம் அல்லவா? அந்த பிரதாபசிம்மனைத்தான் ராஜாவாக ஆக்க வேண்டும், அவன் எல்லா தகுதிகளும் உள்ளவன், நல்ல வீரன், ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனை சித்தார்த்தி வருஷம் பட்டம் கட்டி தஞ்சைக்கு ராஜாவாக ஆக்கினார்கள். துக்கோஜி ராஜாவின் மகனாக இருந்தும், ராஜ வம்சத்தினராயிருந்தும், எல்லா தகுதிகளும் இருந்தும், அவர் தாலி கட்டிய மனைவியின் மகன் இல்லை என்பது ஒரு குறையாகத்தான் இருந்தது.
ஒரு வழியாக பிரதாபசிம்மன் ராஜாவாக முடிசூட்டப்பட்டான். அவர் முடிசூட்டிக் கொண்ட சில நாட்களில் பிரதாபசிம்மனின் முறைப்படியான இரண்டாவது மனைவி திரெளபதிபாயி என்பவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகன் தான் பின்னால் பட்டத்துக்கு வந்து புகழ்பெற்ற துளஜா ராஜா.
உண்மையில் குப்பி வளர்த்த அந்த பையன் யார்? அபரூபாபாயி பொய் சொல்லித் தனக்குப் பிறந்ததாக அவனைக் காட்டினாலும், அவன் வெள்ளாட்டி ஒருத்தியின் மகன். சுபானியன் என்பது அவனது பெயர். இப்படி பொய் சொல்லி ஒருவனை ராஜவம்சத்தான் என்று பட்டம் கட்டியது போன்ற சூழ்ச்சிகளில் தஞ்சாவூரின் தளபதி சையதுவுக்குத் தொடர்பு உண்டு என்கிற செய்தி தெரிய வந்தது.
யார் இந்த சையது என்கிற சையந்து? இவன் மராட்டிய மன்னர்களிடம் பலகாலம் பணியாற்றி வந்தவன். முதல் மராட்டிய ராஜா ஏகோஜி ராஜா பொது மக்களுக்கு ஏராளமாக தான தர்மங்களைச் செய்து வந்தவன். காவேரிக் கரை ஊர்கள் பலவற்றில் பல ஆலயங்களை எழுப்பித்தான். இடிந்து போன அல்லது பாழடைந்து போன பல ஆலயங்களைப் புனருத்தாரணம் செய்தான். வேத பண்டிதர்களுக்கு என்று சர்வ மானிய அக்ரஹாரங்களைக் கட்டிக் கொடுத்தான். சதாசர்வ காலமும் பொது நலம் வேண்டி இந்த அந்தணர்கள் மக்கள் நல்வாழ்க்கைக்காக மழை வேண்டியும் யாகங்களைச் செய்து கொண்டும், வேத பாராயணங்களைச் செய்து கொண்டும் வர நியமங்கள் நிறுவி வைத்தான். யாகம் வேள்வி இவைகளுக்கு நிறைய திரவியங்களைக் கொடுத்தான். யாத்திரிகர்கள் செல்லும் பாதைகளில் பல அன்ன சத்திரங்களைக் கட்டினான். இப்படி இவர்கள் பரம்பரையாகப் பல தர்ம காரியங்களைச் செய்து வந்தார்கள்.
மன்னன் பிரதாபசிம்ம ராஜாவும் அதே போல பல தர்மங்களைச் செய்து வந்தார். தளபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த சையதுவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. இவன் கோயிலில் பணியாற்றிய மோகனா என்கிற தேவதாசியைத் தன் மாளிகையில் கொண்டு போய் வைத்துக் கொண்டான். மற்றொரு தாசியைக் கெடுத்து விட்டான். இப்படி இவன் பல தகாத காரியங்களையும் தவறுகளையும் செய்து வந்த போதும் பிரதாபசிம்ம ராஜா இவனிடம் முதலில் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. நாமோ புதிதாக ராஜாவாக வந்திருக்கிறோம்; இவனோ பல ராஜாக்களிடம் வேலை செய்திருக்கிறான், இவனிடம் இப்போது ஒன்றும் தகறாறு வேண்டாம் என்று அமைதி காத்தார் பிரதாபசிம்மர்.
இந்த சையது சும்மா கிடந்த ஒரு பையனை ராஜா என்று சொல்லி சிம்மாசனத்தில் உட்கார வைத்தது அனைவருக்குமே கோபம். காட்டு ராஜா என்று பெயர் வேறு. இந்த சையதுக்கு ஒன்றுமில்லாதவனை ராஜாவாக ஆக்கியதும் நானே, இப்போது அவனை விரட்டிவிட்டு முழு உரிமை இல்லாத பிரதாபசிம்மனை ராஜாவாக ஆக்கியதும் நானே என்ற இறுமாப்பு அதிகமாக இருந்தது. காட்டு ராஜா மன்னனாக இருந்த போது தனக்கு வேண்டாத சிலரை பாவாசாஹேபுக்கு நெருக்கமாக இருந்தவர்களை சித்திரவதை செய்தோம். இன்னமும் நாம் நினைத்ததை யெல்லாம் செய்ய முடியும், யாரால் தடுக்க முடியும் என்று அகந்தை கொண்டான் சையது. தானும் எத்தனை நாட்கள்தான் தளபதியாக இருந்து கொண்டிருக்க முடியும் என்று திட்டம் தீட்டி என்ன செய்யலாம் என்று ஆலோசித்தான். முடிவில் ஆற்காட்டு நவாபு வம்சத்தில் வந்து, முன்னர் தஞ்சை கோட்டையை முற்றுகை இட்டு ஓடிப்போன சந்தா சாஹேபுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். பின்னர் மெதுவாக சந்தா சாஹேபை தஞ்சாவூர் ராஜாவாகப் பிரகடனப் படுத்தி விடலாம் என்று எண்ணினான்.
தான் திட்டமிட்ட சூழ்ச்சியை நிறைவேற்றிட தனக்கு உதவிக்கு ஆட்கள் வேண்டுமே என்ன செய்வது. அரண்மனையில் வேலை பார்த்து வந்த தனது சொந்த தம்பியான காசிம் என்பவனைக் கூட்டுச் சேர்த்துக் கொள்ள எண்ணினான். இந்த காசிம் மிகவும் யோக்கியமானவன். ராஜ விசுவாசம் உள்ளவன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யாதவன். துரோக சிந்தனை இல்லாதவன். அவனுக்குத் தன்னுடைய அண்ணனின் சதிகார எண்ணம் துளியும் பிடிக்கவில்லை. ஆகவே அவன் பிரதாபசிம்ம ராஜாவின் பாதுகாப்புப் பணியில் இருந்த காரணத்தால் தனது அண்ணனின் துரோக எண்ணத்தை ராஜாவின் காதுகளில் போட்டு வைத்தான்.
காசிம் சொன்ன விஷயங்களைக் கேட்ட பிரதாபசிம்ம ராஜா பொறுமையாக யோசித்து காசிமிடம் "நீ சொல்வது உண்மையா?" என்றார். அதற்கு அவன், "மகாராஜா, நான் சொன்னது உண்மையா, பொய்யா என்பதை இன்னம் சிறிது நாட்களில் தாங்களே உணர்ந்து கொள்வீர்கள்" என்றான்.
"Saiyeed, the Killedar of the Tanjore Fort and the most powerful Captain, conscious of the army whichbacked him, interfered successfully in the internal matters of the Tanjore Rulers." "He seems to have entertained the idea of usurping the throne for his daughter."
சையீது தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலானான். ராஜாவிடம் போய் தன் பெண்ணை ஆற்காடு நவாப் சந்தா சாஹேபுக்குக் கல்யாணம் செய்ய இருப்பதாகவும், அது தஞ்சை ராஜ்யத்தின் நன்மைக்காகத்தான் என்றும் பொய்யை அவிழ்த்து விட்டான். அதற்கு பிரதாபசிம்ம ராஜா சொன்னார், "நல்லது, உன் பெண்ணை நம் ராஜாங்க நன்மைக்காக 'நவாயத்' இன முஸ்லீமுக்குக் கொடுப்பதற்கு சந்தோஷம். ("Navayats a tribe, which appears to have originally settled at Bhatkal in North Canara and is known on the West coast as "Bhatkali". It takes a high place among Mussalmans and does not inter marry with other tribes.")
இந்தக் கல்யாணச் செலவை நாம் கொடுக்கிறோம், ஆனால் கல்யாணத்தை தஞ்சாவூர் கோட்டையில் வைத்துக் கொள்ள வேண்டாம். மத்தியார்ச்சுனம் (திருவிடைமருதூர்) ஊரில் வைத்துக் கொள் என்று நல்லவிதமாகச் சொன்னார்.
சையதுக்கு மிகுந்த சந்தோஷம். ராஜா சொன்னபடிக்கு திருவிடைமருதூருக்குப் போய், வெகு ஆடம்பரமாய் கல்யாணமும் பண்ணி மறுபடியும் தஞ்சாவூர் கோட்டைக்குத் திரும்பி வந்தான்.
(நாளை தொடருவோம்)
No comments:
Post a Comment