பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 21, 2011

மராத்தியர் வரலாறு - Part 7


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி VII

சையீது தனது மகளுக்கும் சந்தா சாஹேபுக்கும் கல்யாணம் செய்வித்தது குறித்து மகிழ்ந்து போனான். தன் மருமகன் தஞ்சாவூர் ராஜாவாக ஆகப் போகும் நாளுக்காக ஏங்கினான். திருமணம் முடித்து தஞ்சாவூர் கோட்டைக்குத் திரும்பிய சையீது சந்தா சாஹேபுக்கு ஒரு கடிதம் எழுதி ஒரு நம்பிக்கையான தூதன் மூலமாக கொடுத்தனுப்பினான்.

அதில் நீங்கள் திருவிடைமருதூரிலிருந்து இரவே கிளம்பி உங்கள் சேனையோடு புறப்பட்டு விடியற்காலை தஞ்சாவூர் கோட்டைக்கு வந்து சேர வேண்டும். வழக்கப்படி கோட்டை வாசல் திறக்கப்படும் போது நீங்கள் உங்கள் சேனையோடு கோட்டைக்குள் வந்து அரண்மனைக்குள் நுழைந்து ராஜாவைச் சிறைப்படுத்தி ஆட்சியைப் பிடித்துக் கொள்ளுங்கள். இங்குள்ள சேனாதிபதியும் கில்லேதாரும் நமது ஆட்கள்தான். ஆகையால் அவர்களிடமிருந்து உங்களுக்கு எந்த எதிர்ப்பும் ஏற்படாது என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான்.

இவை அத்தனையையும் கூடவே இருந்து பார்த்துக் கொண்டிருந்த சையதின் தம்பி காசிம் உடனே ராஜா பிரதாபசிம்மரிடம் சென்று அத்தனை விவரங்களையும் தெரிவித்தான். ராஜ பக்தி, தேச பக்தி, தின்ற உப்புக்கு நன்றி விசுவாசம் இவை அத்தனையும் நிரம்பிய அந்த விசுவாச ஊழியன் காசிமை மன்னர் பாராட்டினார்.

இவைகளைக் காட்டிலும் அபாரமான காரியம் ஒன்றையும் காசிம் செய்தான். இவனைப் போன்ற ராஜ விசுவாசிகள் பலரை ஒன்று சேர்த்து சையது கடிதம் கொடுத்தனுப்பிய தூதனை வழியில் மடக்கிப் பிடித்து, அந்த கடிதாசியையும் பிடுங்கிக் கொண்டு தூதனையும் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து மகாராஜாவிடம் ஒப்படைத்தான்.

இதுவரை நடைபெற்ற விஷயங்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர் சம்பந்தப்பட்ட அனைவரும். மன்னர் பிரதாபசிம்ம ராஜா உடனே தனது நெருங்கிய சகாக்களான அவருடைய மைத்துனர் மல்லார்சி காடேராவ், அன்னப்பா சேட்டிகே, தளபதி மானோஜி ராவ் ஜக்தாப் ஆகியோரை அழைத்து ரகசிய ஆலோசனை செய்தார். சையது செய்யும் சூழ்ச்சிகளுக்காக அவனைக் கொன்றுவிடுவதுதான் சரி என்று முடிவு செய்தனர். அதன் பின் சையதை எப்படி வரச் செய்வது, அவனை எப்படி கொலை செய்வது என்பதையும் அவர்கள் முடிவு செய்துவிட்டுக் கலைந்து சென்றனர்.

பிரதாபசிம்ம ராஜாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் எல்லோரும் ஆயுதபாணிகளாக அரண்மனை மண்டபமொன்றில் மறைந்து கொண்டார்கள். அந்த மண்டபத்தின் நடுவில் ஒரே ஒரு ஆசனம் மட்டும் போடப்பட்டு அதில் ராஜா அமர்ந்து கொண்டார். ஒரு தூதனை அனுப்பி சையதிடம் சொல்லி, சில அரசாங்க விஷயங்கள் பற்றி பேச வேண்டும் வரச் சொல் என்று சொல்லி அனுப்பினர். சையது தனது திட்டம் எப்படியும் நிறைவேறிவிடும், தன் மருமகன் தஞ்சாவூர் ராஜாவாக ஆகிவிடுவான் என்ற ஆணவ மிதப்பில் இருந்தான். ஆகையால் ராஜா ஐந்தாறு முறை கூப்பிட்டனுப்பிய பிறகு மெதுவாக அரண்மனைக்குச் சென்று ராஜாவைக் காண வந்தான். அவன் ராஜா அமர்ந்திருந்த மண்டபத்தினுள் நுழைந்தவுடன் ராஜா அவனிடம் சற்று இங்கேயே இரு இதோ வந்துவிட்டேன் என்று அவசரமாக எழுந்து உள்ளே போய்விட்டார்.

அந்தப் பெரிய மண்டபத்தில் தனியே விடப்பட்ட சையது ஏன் என்ன என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்த போது திடீரென்று சில வீரர்கள் அவன் மீது பாய்ந்து தாக்கினர். அவனைப் பிடித்து கைகால்களைக் கட்டினர். பின்னர் அவனை அங்கேயே வாளால் வெட்டிச் சாய்த்தனர். பெரிய பெரிய கனவுகளோடு அங்கு வந்த சையது மண்டபத்தில் பிணமானான்.

"Prathab when he became King was not prepared to tolerate the usurped authority of the Killedhar and therefore at an opportune moment he removed this enemy in his pathu of advancement by executing him."

"Sayeed was murdered and buried on the northern bank of Vadavar where a large Mantapam still marks the spot of his internment and is called Syed Ghori." (the same can be seen between North Gate and Vadavar river)

சையதைக் கொன்ற பிறகு அவன் வீட்டின் மேலும் வீரர்கள் புகுந்து, தப்பி ஓடியவர்கள் போக மீதமுள்ளவர்களைப் பிடித்து ஒருவர் பாக்கியில்லாமல் கொன்று போட்டார்கள்.

இதற்குப் பிறகு அன்னப்பாவை சர்க்கிலாகவும், சேனாதிபதியாகவும், மல்லார்ஜி காடேராவை கில்லேதாராகவும், டபீர் நாரோ பண்டிதருக்கு சிட்னிசும் (செயலாளர் பதவி) கொடுத்து மிக அற்புதமாக ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார் பிரதாப சிம்ம ராஜா. மராட்டிய மன்னர்களிலேயே அதிகமாக போரில் ஈடுபட்டவரும், தனிப்பட்ட வீரம் நிறைந்தவரும், விவேகமுள்ளவராகவும் விளங்கியவர் இந்த பிரதாபசிம்ம ராஜா.

இதன் பின்னர் ராஜா பிரதாப சிம்மர் ராமேஸ்வரம் யாத்திரை சென்று அங்கு நீராடினார். ராமநாத சுவாமி தரிசனம் செய்தார். அங்கு பல தீர்த்தங்களிலும் நீராடி பல தான தர்மங்களைச் செய்தார். அப்படி புனித யாத்திரை சென்றுவிட்டு ராமேஸ்வரத்திலிருந்து தஞ்சைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரம் ராஜாவாக இருந்தவர் தஞ்சை ராஜாவின் தயவால் தங்கள் மறவர் ராஜ்யம் நிலைத்திருப்பதற்கு நன்றிக் கடனாக மரியாதை நிமித்தம் பிரதாபசிம்மரை எதிர்கொண்டு வந்து மரியாதை செய்தார். பிரதாப சிம்மர் தங்கள் அரண்மனைக்கு வந்து ஒரு நாள் தங்கிச் செல்ல வேண்டுமென்றும் வேண்டினார். மகாராஜா பிரதாப சிம்மரும் ராமநாதபுரம் ராஜாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ள நினைத்தார். அவர் உள்ளே நுழைந்ததும், அவர் பின்னால் வந்து கொண்டிருந்த அவருடைய பரிவாரங்களை உள்ளே நுழைய விடாமல் சிலர் தடுத்து விட்டனர். இதனை அறிந்த பிரதாபசிம்மர் தானும் வெளியே வந்து ராமநாதபுரத்தில் தங்காமல் பயணத்தைத் தொடர்ந்தனர்.

இதனை அறிந்த ராமநாதபுரம் ராஜா, நடந்த தவறுக்காக வருந்தி, ராஜாவின் பல்லக்கைப் பிடித்துக் கொண்டு இரண்டு காத தூரம் நடந்தே வந்தார். இப்படி அவர் மனம் வருந்தி தன் பல்லக்கைப் பிடித்துக் கொண்டு வருவதைக் கண்டு பிரதாபசிம்மர் மனம் இரங்கி திரும்பவும் ராமநாதபுரம் சென்று அவருடன் தங்கி அவருடைய உபசாரங்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் திரும்பினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தஞ்சாவூர் ராஜ்யமும், ராமநாதபுரம் ராஜ்யமும் ஒற்றுமையாக அனுசரித்து நடந்து கொண்டனர்.
                                                             Prathap Sing Maharaja
(நாளையும் தொடரும்)

No comments:

Post a Comment

You can give your comments here