பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, September 25, 2011

மராத்தியர் வரலாறு - Part 18


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 18

மராத்திய போன்ஸ்லே வம்சத்தாரின் ஆளுகை தஞ்சாவூரில் அதுவரை சுமார் நூறு ஆண்டுகள் நடந்து வந்திருக்கிறது. இது வரை மராத்திய மன்னர்கள் ஆளுகையில் மற்றவர்கள் எப்படியிருந்த போதிலும், மன்னருடைய பாதுகாப்பு படை வீரர்கள் மாவீரர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். இந்தப் படைகள் மட்டும் யுத்த களத்துக்கு அனுப்பப் பட்டிருந்தால் எத்தனை பெரிய சேனையையும் இவர்கள் துவம்சம் செய்திருப்பார்கள். அப்படியிருந்தும் தஞ்சாவூர் கோட்டை மராட்டியர் கையிலிருந்து நவாபின் கைக்குப் போக காரணம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். அதற்கு ஒரு காரணத்தை மக்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட குற்றம்தான் என்ன? பார்ப்போம்.

துளஜா ராஜா தஞ்சாவூர் ராஜ்யத்தின் அரசராக முடிசூட்டிக் கொண்ட நாள் முதலாக பெரிய அளவில் தான தர்மங்கள் எல்லாமும் செய்து வந்தார். வேத விற்பன்னர்களுக்கு சர்வ மான்னியங்கள் அளித்து, குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, கோயில்கள், கிறிஸ்து தேவாலயம், மசூதிகள் இவைகளை அவரவர் விரும்பியபடி கட்டிக் கொடுத்தும் வந்திருக்கிறார். அப்படிப்பட்டவைகளுக்கு நிரந்தரமான மான்யங்களையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

துளஜா நல்ல அறிவாளி. நன்றாகக் கல்வி கற்றவர். நல்ல தோற்றமும் உடையவர். மகா வீரன். இப்படியிருந்தும் இவருக்கு அமைந்த மந்திரிகள் துர்மந்திரிகளாகப் போய்விட்டனர். இதனால் ராஜாவுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல தவறான தீய காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

இப்படிப்பட்ட தீய கும்பலில் லிங்கோஜி போன்ஸ்லே என்று ஒருவன். இவனை தஞ்சை வட்டாரத்தில் 'கிளிப்பிள்ளை அண்ணா' என்று குறிப்பிடுவார்கள். இவனுக்கு ராஜ்ய நிர்வாக அறிவோ, விஷயங்களை நன்கு கிரகித்துக் கொள்ளும் சாமர்த்தியமோ கிடையாது. சதாராவிலிருந்து வந்தவன் என்ற ஒரே காரணத்துக்காக இவனை ராஜா தன் மந்திரியாக வைத்துக் கொண்டிருந்தார். ராஜாவைச் சுற்றியிருந்த துர்மந்திரிகளில் இவந்தான் தலைமையானவன்.

கோனேரி ராவ் என்றொரு ஆரணி பிராமணன். இவன் ராஜாவிடம் ஜமேதாராகப் பணி புரிந்து வந்தார். ஏதோ அரசாங்க காரியமாக அரண்மனைக்கு வந்த கோனேரி ராவ் இந்த லிங்கோஜியிடம் வாதம் புரிய நேரிட்டது. அப்போது லிங்கோஜியின் ஆட்கள் சிலர் அவனோடு இருந்தனர். அவர்களில் ஒருவன் கோனேரி ராவை அவமரியாதையாகப் பேசினான். இதைக் கேட்டு கோபங்கொண்ட கோனேரி ராவ் தன் கத்தியை எடுத்துக் கொண்டு அவனோடு சண்டை செய்யப் போனார். அப்போது லிங்கோஜியும் அவனோடு இருந்த மற்றவர்களும் ஒன்று சேர்ந்து கோனேரி ராவைக் காயப்படுத்தி வீழ்த்தி விட்டார்கள். கடுமையான காயத்துடன் கோனேரி ராவ் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தான்.

அங்கு அவன் கிடந்த நிலையை யார் பார்த்தாலும் லிங்கோஜியும் அவனது நண்பர்களும் வேண்டுமென்றே தவறு செய்திருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள். அந்த குற்ற உணர்வும் லிங்கோஜிக்கு இருந்தது. இந்த செய்தி மன்னனுக்கு எட்டியவுடன் அவர் உடனே அந்த மனிதனுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வீட்டுக்கு அனுப்பி ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்திருந்தால் பிழைத்திருப்பான். ஆனால் லிங்கோஜி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் உள்ளே சென்று ராஜாவிடம் கோனேரி ராவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கோள் மூட்டிவிட்டு, அவன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால் அரண்மனை சேவகர்கள் அவரைத் தாக்கிவிட்டார்கள் என்று பொய் சொன்னான். ராஜாவும் தன் மகனுக்கு உடல்நலம் சரியில்லை என்ற கவலையில் இருந்ததால், அந்த கோனேரி ராவை கால்களைப் பிரியால் கட்டி இழுத்துக் கொண்டு போய் கோட்டைக்கு வெளியே போட்டுவிடும்படி உத்தரவு இட்டார். அதன்படியே கடைநிலை ஊழியன் ஒருவன் அவர் கால்களைக் கட்டித் தெருவோடு இழுத்துச் சென்றான். போகும் வழியில் பாதியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. இது மிகவும் கொடூரம், இதனால் இந்த நாட்டுக்கு ஏதோ கேடு வரத்தான் போகிறது என்று மக்கள் பேசினார்கள்.இந்த சோக நிகழ்ச்சியைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தனர். இப்படி ஒருவனை அநியாயமாகக் கொலை செய்த பாவம் தான் இப்போது ராஜா பதவியை இழந்து தவிக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

தஞ்சாவூர் ராஜ்யத்தை தங்களுக்கு கப்பப் பணம் வரவேண்டுமென்பதற்காக ஆற்காடு நவாப் பிடித்துக் கொண்டு ஆக்கிரமித்திருக்கும் செய்தியை ஆங்கிலேய அதிகாரிகள் இங்கிலாந்தில் இருந்த Court of Directors க்கு தகவல் அனுப்பினார்கள். எப்போதும் சென்னையிலிருந்து ஆங்கில அதிகாரிகள் கம்பெனி மேல் அதிகாரிகளுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் ஆற்காட்டு நவாப் பற்றிய செய்திகளை எழுதுவார்கள். ஏனென்றால் தென் இந்தியா முழுவதிலும் உள்ள பாளையக்காரர்களிடமிருந்தெல்லாம் கப்பத் தொகையை வாங்கும் அதிகாரத்தை கம்பெனிக்கு ஆற்காட்டு நவாப்தான் கொடுத்திருந்தார். அப்படி நவாப் முகமது அலிகானுடைய விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆங்கில கம்பெனியார், இதுவரை தஞ்சாவூர் ராஜாவால் இந்த ஆற்கட்டு நவாப் நன்மைகளைத்தானே அடைந்து வந்திருக்கிறான். அப்படியிருக்க கப்பப் பணம் செலுத்தவில்லை என்பதைக் கூறி தஞ்சாவூர் ராஜ்யத்தின் மீது தன் மகன் தலைமையில் படை அனுப்பி சண்டையிட்டு அவர்களிடம் கப்பப் பணமும், யுத்த செலவுகளையும் வாங்கிக் கொண்ட பிறகும், நவாப் நியாயமில்லாமல் தஞ்சாவூர் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டது மிகவும் அநியாயம். தஞ்சாவூர் ராஜா நெடுங்காலமாக செய்து வந்த உதவிகளையெல்லாம் மறந்துவிட்டு, நன்றிகெட்டத் தனமாக நவாப் நடந்து கொண்டதால், ஆங்கிலேய கம்பெனியார் லார்டு பிக்கெட் (Lord Pigot) என்பவரைச் சென்னைக்கு கவர்னராக நியமனம் செய்து அவரைப் போய் தஞ்சாவூர் ராஜ்யத்தை மீட்டு மராட்டிய ராஜாவிடமே ஒப்படைத்துவிட்டு வரும்படி உத்தரவிட்டு அனுப்பி வைத்தார்கள்.

கம்பெனியாரின் உத்தரவுப்படி சென்னை வந்த லார்டு பிக்கெட் தஞ்சாவூருக்கு வந்து நவாபிடமிருந்து ராஜ்யாதிகாரத்தை மராத்திய ராஜாவுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு அவருக்குப் பட்டாபிஷேகமும் செய்வித்து கம்பெனிக்கும் தகவல் அனுப்பி வைத்தார். இதெல்லாம் நடந்தது ஏப்ரல் 1776இல்.

துளஜா ராஜாவுக்கு இந்த ஏற்பட்டினால் மிகுந்த சந்தோஷம். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாருடைய கருணையினால், நீதி, நேர்மை இவற்றல் தனக்கு ராஜ்யத்தை மீண்டும் அடைந்ததற்காக ஆங்கில அதிகாரிகளிடம் தஞ்சை கோட்டையின் கிலேதார் Foujdar ஆகிய சேனாதிபதி பதவிகளை ஒப்படைத்தார். அந்த அதிகாரிகளின் ஆங்கில படைகளுக்கான செலவுக்கு என்று பல நிவந்தங்களையும் ராஜா செய்து வைத்தார். இது தவிர ஆங்கிலேயர்களுக்கு லட்சம் பொற்காசுகளும், நாகூர் பிரதேசத்திலுள்ள 277 கிராமங்களையும் இனாமாகக் கொடுத்தார்.

தானமாகத் தரப்பட்ட கிராமங்களின் விவரம்:--
கீவளூர் பிரதேசம் ... 41 கிராமங்கள்
சிக்கல் ... ... 62 கிராமங்கள்
செம்பியன்மாதேவி ... 34 கிராமங்கள்
பாலக்குறிச்சி ... 27 கிராமங்கள்
மாகிளி ... 27 கிராமங்கள்
கிள்ளுக்குடி ... 25 கிராமங்கள்
தேவூர் ... 31 கிராமங்கள்
அடியக்கமங்கலம் ... 8 கிராமங்கள்
நாகூர் துறைமுகம் ... 1 கிராமம்
வலிவலம் ... 21 கிராமங்கள் ஆக மொத்தம் 277

இப்படியொரு ஒப்பந்தம் ஆன பின்பும் ஆற்காடு நவாபு தஞ்சாவூர் ராஜாவிடமிருந்து தனக்குக் கப்பம் வரவேண்டுமென்று முயற்சிகளை மேற்கொண்டான். அதற்கு ராஜா நவாபு அநியாயமாகத் தஞ்சாவூர் கோட்டையைப் பிடித்துக் கொண்டு காலங்காலமாகச் சேர்த்து வைத்திருந்த நகைகளையெல்லாம் சூறையாடிக் கொண்டு போய்விட்டதைக் கணக்குப் பார்த்தால் கப்பத் தொகையைப் போல இரண்டு மடங்கு கொள்ளை அடித்துக் கொண்டு போயிருக்கிறான் என்று தெரிவித்தான். இப்போதுள்ள ராஜ்யம் ஆங்கிலேயர் மீட்டுக் கொடுத்த ராஜ்யம், ஆற்காட்டு நவாபுக்கு எந்த விதத்தில் நமக்குத் தொடர்பு கிடையாது, ஆகவே கப்பம் கட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசாமல் இருந்து விட்டான்.

முன்பு கோனேரி ராவ் என்பவருக்கு நாம் இழைத்த கொடுமையினால்தான் தமக்கு இப்படிப் பல துன்பங்கள் நேர்ந்துவிட்டன. நாட்டை இழந்து செல்வம் இழந்து தவித்த போது வெள்ளைக்காரன் தயவில் மீண்டும் அவற்றைப் பெற்றோம். லிங்கோஜி போன்ஸ்லே போன்ற துர்மந்திரிகளின் கெடு மதியால் நான் இழைத்த தீங்கிற்காக வருந்தும்படியாகிவிட்டது. பிரம்மஹத்தி தோஷமும் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் இனி இப்படிப்பட்ட துன்மார்க்கர்களை அண்ட விடக்கூடாது. உத்தமமான மனிதர்களைத்தான் தனக்கு அமைச்சர்களாக வைத்துக் கொள்ள வேண்டும், அவர்கள்தான் துரோகம் செய்ய மாட்டார்கள். கொடும் செயல்களைச் (அகாத கிருத்தியம்) செய்யப் பயப்படுவார்கள் என்று நிச்சயித்துக் கொண்டான்.

துளஜாவின் மூன்றாவது மனைவி மோகனாபாயிக்குக் குழந்தை வரம் வேண்டி நீடாமங்கலத்தில் ஒரு ராமர் கோயிலும், புஷ்கரணியும் வெட்டி வைத்தார். அதன் பலனாய் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பெற்றுவிட்டு மோகனாபாயி தானும் இறந்து போனாள். தனக்கு ஆண் குழந்தை இல்லாமையால் ராஜா சுலக்ஷணாபாயி, மோகனாபாயி இருவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தான். மோகனாபாயிக்கு ஒரு மகன் பிறந்து பத்தே நாட்களில் இறந்து போயிற்று. அதன் பின்பு ஒரு பிள்ளை பிறந்தது. அதுவும் ஆறு வயதில் வைசூரி போட்டி இறந்தது.

(இனி அடுத்த பகுதியில்)1 comment:

 1. /////நன்றிகெட்டத் தனமாக நவாப் நடந்து கொண்டதால், ஆங்கிலேய கம்பெனியார் லார்டு பிக்கெட் (Lord Pigot) என்பவரைச் சென்னைக்கு கவர்னராக நியமனம் செய்து அவரைப் போய் தஞ்சாவூர் ராஜ்யத்தை மீட்டு மராட்டிய ராஜாவிடமே ஒப்படைத்துவிட்டு வரும்படி உத்தரவிட்டு அனுப்பி வைத்தார்கள்.

  கம்பெனியாரின் உத்தரவுப்படி சென்னை வந்த லார்டு பிக்கெட் தஞ்சாவூருக்கு வந்து நவாபிடமிருந்து ராஜ்யாதிகாரத்தை மராத்திய ராஜாவுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு அவருக்குப் பட்டாபிஷேகமும் செய்வித்து கம்பெனிக்கும் தகவல் அனுப்பி வைத்தார்.////

  இந்த வெள்ளையர் களையே துரை என்றுக் கருதி இருக்கிறான் பாரதி என்பதை அறிய முடிகிறது... மேலும் இன்னும் பல நல்ல துரைமார்களை பாரதி போற்றிய பெரியோர்கள் என்ற தங்களது நூலில் காணும் பாரதியின் கட்டுரைகளில் இருந்தும் அறிய முடிகிறது...
  நன்றிகள் ஐயா!
  வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்,

  ReplyDelete

You can give your comments here