பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, September 22, 2011

மராத்தியர் வரலாறு - Part 12

                                              Nawab Anwarddin Khan's death in War

தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 12

சதாரா சிறையிலிருந்து ஷாஜு மகாராஜாவினால் விடுதலை செய்யப்பட்ட சந்தா சாஹேப், அதோனிக்குச் சென்று அங்கு முசாஃபர் ஜங் மற்றும் சிலருடன் சேர்ந்து கொண்டு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்து ஆற்காட்டைப் பிடித்ததும், அன்வர்தின்கானைக் கொன்றுவிட்டு அவனது மகன் முகமது அலியைத் துரத்தி விட்டான் என்பதைப் பார்த்தோமல்லவா.

இனி அவன் செய்தவைகளைப் பார்ப்போம். சந்தா சாஹேப் புதுச்சேரி சென்று அங்கு பிரெஞ்சுக்காரர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆற்காட்டிலிருந்து ஓடிப்போய் திருச்சினாப்பள்ளியில் பதுங்கியிருக்கும் முகமது அலியைப் பிடித்துத் துரத்த வேண்டும் அதற்கு அவர்களிடம் உதவி கேட்டுப் பெற்றுக் கொண்டான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுப் பெரும் படையுடன் திருச்சினாப்பள்ளியை நோக்கி வந்தான்.

வரும் வழியில் தஞ்சாவூர் ராஜா பிரதாபசிம்மருக்கு ஒரு தூது விட்டான். தான் ஒரு பெரும் படையுடன் திருச்சிக்குப் போவதாகவும், தனது படைகளின் வழிச்செலவுக்குக் கணிசமான பண உதவி செய்ய வேண்டும் என்று மன்னரிடம் கேட்டு அனுப்பினான். ராஜாவுக்கு அதிர்ச்சி. இது என்ன இவன், நம்மை எதிர்த்துப் போரிட்டு முடியாமல் ஓடிப்போனவன், திருச்சியில் மராத்தா படைகளால் சிறைபிடிக்கப்பட்டு சதாரா சிறையில் இருந்தவன், ஷாஜு மகராஜ் இவனை எச்சரித்து அனுப்பியும் இவன் நம்மிடம் வந்து வாலை ஆட்டுகிறானே என்று கோபப்பட்டார்.

ஆனால், சந்தா சாஹேப் பெரும் படையுடன் வந்திருக்கிறான்; அவனுடைய குறி திருச்சியிலிருக்கும் முகமது அலி, இப்போது அவனிடம் வம்பு எதற்கு என்று எண்ணி, அவனைத் தட்டிக் கழிக்கும் விதமாக திருச்சி முகமது அலி நம்முடைய உதவி நாடி வந்திருப்பவர், அவருக்கு எதிரியான உங்களுக்கு உதவுவது முறையல்ல என்று சொல்லி அனுப்பினார்.

இந்த பதில் சந்தா சாஹேபுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. தனது படைகளைத் திருச்சிக்குப் போகாமல் தஞ்சையின் பக்கம் திருப்பினான். அவனும் ராசத் மோதிகானும் படைகளைக் கொண்டு வந்து தஞ்சாவூர் கோட்டையை முற்றுகை இட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி பற்றிய வரலாற்றுக் குறிப்பு:-- "Duplex (French General at Pondichery) proposed to Chanda Saheb that he must next attack Trichinopoly wherein Mohammad Ali had taken refuge and left Pondichery on 28th October 1749 towards Trichinopoly.

On December 13, 1749 the combined forces of Chanda Saheb and Muzaffar Jung crossed the Coleroon river into the Tanjore Kingdom and in a few days reached Tanjore which they began to siege."

பிரதாபசிம்ம ராஜா தனது படைகளோடு கோட்டைக்கு வெளியே வந்து சந்தா சாஹேப் படைகளுடன் இரண்டு மூன்று முறை சண்டை செய்தார். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சந்தா சாஹேபின் படைகள் தஞ்சாவூர் கோட்டைக்குள் புகுந்து கொள்ளை அடித்தார்கள். மகாராஜா பிரதாபசிம்மரும் அவ்வப்போது அவன் கூட்டத்தை அடித்து விரட்டிவிட்டு கோட்டையை சீரமைத்து, அவர்கள் ஊருக்குள் புகமுடியாதபடி பாதுகாப்புக்களை பலப்படுத்தினார்கள். இப்படி வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் இவனுடன் போராட வேண்டியிருப்பது குறித்து மன்னர் வருத்தமடைந்தார்.

இப்படி இந்த யுத்தம் இரண்டரை மாத காலம் நடைபெற்றது. இதனால் கோட்டைக்குள் இருந்த மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாயினர். அந்த சமயம் ஐதராபாத்திலிருந்து நிஜாமின் இரண்டாவது மகனான நாசிர் ஜங் பெரும் படையொன்றுடன் ஆற்காட்டுக்கு வந்தான். அங்கு நிஜாமின் படைகளை எதிர்த்துப் போரிட்ட ஆற்காடு படையின் சர்தார் சேஷராயர் என்பவர் கொல்லப்பட்டார். இந்த செய்தி தஞ்சையில் முற்றுகையில் ஈடுபட்டிருந்த சந்தா சாஹேபுக்குத் தெரிய வந்தது. அவன் உடனே தஞ்சை முற்றுகையை நீக்கிக் கொண்டு பிரெஞ்சுக் காரர்களின் பாதுகாப்பைத் தேடி பாண்டிச்சேரிக்கு ஓடிப்போனான்.

ஐதராபாத்திலிருந்து நிஜாமின் மகன் நாசிர் ஜங் படையுடன் வந்திருக்கும் செய்தி அறிந்து, அவர்கள் தங்களை மீண்டும் ஆற்காட்டு நவாபாக ஆக்குவார்கள் என நம்பி திருச்சியில் இருந்த முகமது அலி ஆற்காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான். போகும்போது அங்கு சந்தா சாஹேபுடன் மோதல் நிகழ்ந்தால் பாதுகாப்புக்காக முகமது அலி பிரதாபசிம்ம ராஜாவிடம் படை உதவி கேட்டார். மன்னரும் அவனுக்கு உதவியாகத் தஞ்சாவூர் படைகளை அனுப்பி வைத்தார். தஞ்சைப் படைக்கு மானோஜி ராவ் தலைமை வகித்துச் சென்றார். அவர்கள் ஆற்காட்டில் சில காலம் தங்கியிருந்து முகமது அலி அங்கு பத்திரமாக ஆற்காட்டு நவாபாக பதவி ஏற்றுக் கொண்டார் என்ற செய்தியையும் படைகளோடும் மானோஜி ராவ் தஞ்சை திரும்பினார். அந்த இடைப்பட்ட காலத்தில் ஐதராபாத்திலிருந்து படையோடு வந்திருந்த நாசிர் ஜங் காலமானார் என்ற செய்தியும் வந்து சேர்ந்தது.

"At Tanjore their (Chanda Saheb) were not fruitful, the Raja procrastinated. Suddenly news reached that Nazir Jung was fairly well on his march into Carnatic with a huge army. With very great difficulty, the French troops, Muzaafaar Jung and Chanda Saheb retreated to Pondichery."

நாசிர் ஜங் இறந்த போனவுடனே சந்தா சாஹேப்புக்கு தைரியம் வந்தது. இப்போது ஐதராபாத்தின் படை நாசிர் ஜங் இல்லாமல் போரில் இறங்காது. ஆகையால் நாம் போய் திருச்சியைப் பிடித்துக் கொள்ளலாம் எனும் நோக்கத்தில் கிளம்பிப் போனது. போகும் வழியில் அவர்கள் படை ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டது.

அப்போது தஞ்சாவூரில் மராத்திய ராஜாவின் படையில் ஜமேதார் (சுபேதாருக்கு அடுத்தது) ஆலம்கான் எனும் பட்டாணிய முஸ்லீம் (ஆப்கானிய முஸ்லீம்) 100 குதிரைப் படைக்குத் தலைவனாக இருந்தான். இவன் மதுரையிலிருந்து வந்து இங்கு வேலைக்குச் சேர்ந்தவன். இவனுக்கு ஏதோ காரணமாக மகாராஜா பிரதாபசிம்மரிடம் மனஸ்தாபம் ஏற்பட்டது. உடனே அவன் ராஜாவிடம் சென்று தனக்குச் சேர வேண்டிய சம்பள பாக்கியை வாங்கிக் கொண்டு வேலையைவிட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நேரே போய் சந்தா சாஹேபின் படையில் சேர்ந்து கொண்டான்.

ஆற்காட்டுக்குப் போய்விட்டு முகமது அலி திருச்சிக்கு வந்திருந்தான். அந்த நேரத்தில் சந்தா சாஹேப் திருச்சி மீது படையெடுக்கும் செய்தி அறிந்து அவன் தஞ்சை பிரதாப சிம்மரிடம் உதவி கேட்டு தூது அனுப்பினான். தஞ்சை ராஜா 15000 வீரர்களையும், 1000 குதிரை வீரர்களையும், பெரிய பீரங்கிகள், நிறைய உணவுப் பொருட்கள் அனைத்தையும் மானோஜி ராவ் தலைமையில் அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானும் படைகளும் உணவுப் பொருட்களும் அனுப்பி வைத்தார். ராமநாதபுரம் சேதுபதி ராஜாவான உடையத் தேவரும் தனது படைகளை உதவிக்கு அனுப்பி வைத்தார். மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணம் தளவாய் நந்தராஜ் எனும் சர்தாருடன் பெரும் படை உதவிக்கு வந்தது. ஏற்கனவே திருச்சியை ஆண்ட முரார்ஜி கோர்படேயும் முகமது அலிக்குத் துணையாக நின்றான். இப்படி பல ராஜ்யத்துப் படைகளோடு சந்தா சாஹேபை எதிர்க்க முகமது அலி தயாராக ஆனார்.

ஒரு புறம் முகமது அலியின் ஆதரவுப் படைகள்; மறுபுறம் சந்தா சாஹேபும் அவனது ஆதரவுக்கு பிரெஞ்சுப் படைகளும் போருக்கு ஆயத்தமாக நின்றன. முகமது அலிக்கு ஆதரவாக தஞ்சையின் மானோஜி ராவ் ஒரு வீரம் செறிந்த போரைச் செய்தார். பீரங்கிகளின் முழக்கம் வெகு தூரம் கேட்டுக் கொண்டிருந்தது. யுத்தம் மிகக் கடுமையாக நடைபெற்றது. ஏராளமான யானைகள், குதிரைகள், வீரர்கள் செத்து விழுந்தனர். யுத்த களத்தில் கழுகுகள் பிணங்களைக் கொத்தித் தின்றன.

அப்போது ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் படையொன்று வந்து சேர்ந்தது. அந்தப் படையின் மேஜர் மானோஜி ராவிடம் சண்டைக்கு என்ன காரணம் என்று கேட்டார். மானோஜி ராவ் நடந்த வரலாற்றை அவருக்கு எடுத்துக் கூறினார். சந்தா சாஹேப் மீது ஆத்திரமடைந்த அந்த ஆங்கில மேஜர் உடனே ஓடிப்போய் ஒரு பீரங்கியை இயக்கி நாலைந்து முறை சந்தா சாஹேப் படையை நோக்கிச் சுட்டார். அப்போது கூடாரமொன்றில் இருந்த சந்தா சாஹேபின் படைத்தலைவன் ஆலம்கானின் தலை சுக்குநூறாக உடைந்து போயிற்று.

அந்த சமயம் பார்த்து தஞ்சை மராத்திய படைகள் ஆலம்கானின் படைகளின் மீது விழுந்து தாக்கினார்கள். ஆலம்கான் படை சின்னாபின்னமடைந்தது. உயிர் இழந்தவர் போக எஞ்சியிருந்தவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இப்பையாக ஆற்காட்டு நவாப் முகமது அலியின் வெற்றி தஞ்சாவூர் மராத்திய படையினரால் சாதிக்கப்பட்டது.

(இனியும் தொடரும்)







No comments: