பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 24, 2011

மராத்தியர் வரலாறு - Part 17


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 17

தஞ்சை ராஜ்யத்தை நீண்ட நாட்கள் ஆண்ட மன்னர் எனும் பெருமைக்குரியவரும், பல வீரதீர போராட்டங்களில் வெற்றி பெற்று தஞ்சையை தலை நிமிர வைத்தவருமான பிரதாபசிம்ம ராஜா தனது முதிர்ந்த வயதில் காலமான செய்தியையும், அவருடைய மகன் துளஜேந்திர ராஜா பட்டத்துக்கு வந்ததையும் சென்ற பகுதியில் பார்த்தோம். இனி துளஜா ராஜா பற்றி பார்க்கலாம்.

துளஜா பதவியேற்ற நாலைந்து வருஷங்கள் பிரதாபசிம்மரைப் போலவே திறமையாகவும், நல்ல பெயரோடும் குறை சொல்ல முடியாத அளவில் ஆட்சி புரிந்து வந்தார். ஆற்காட்டு நவாப் முகமது அலிகானிடமும் நல்ல பெயர் பெற்றிருந்தார். மதுரை முமதீன் (கும்மந்தான்) மகமது யூசுப்கான், மைசூரில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஹைதர் அலி ஆகியோரிடமும் நல்ல தொடர்பும், நல்ல பெயரும் வாங்கியிருந்தான்.

அப்போது மைசூர் ராஜா பரம்பரையினர் மைசூர் அரண்மனையில் இருக்க வைத்துவிட்டு, ஹைதர் அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்து கொண்டு ராஜ்ய பாரம் செலுத்தி வந்தார். ஹைதர் அலி பதவிக்கு வந்த பிறகு பல இடங்களின் மீது படையெடுத்து மகத்தான் வெற்றிகளையும் பெற்றிருந்தார். அது போலவே ஹைதர் ஆற்காட்டு நவாபின் மீது படையெடுத்து வந்தார். அங்கிருந்து தஞ்சாவூர் ராஜ்யத்தின் மீதும் கண் வைத்துக் கொண்டு இந்தப் பக்கமும் வரத் தொடங்கினார். அப்படி வந்த அவரது படைகள் திருமுல்லைவாடி எனுமிடத்தில் தங்கிக் கொண்டு துளஜாவுக்கு செய்தி சொல்லி அனுப்பினார். தஞ்சை ராஜாவிடம் ஹைதர் நான்கு லட்சம் வராகன் பணமும், நான்கு யானைகளையும் வாங்கிக் கொண்டு யுத்தம் செய்யாமல் திரும்பப் போய்விட்டார்.

"Tanjore did not escape the depradations of Haidar and in 1769 he made plundering raid into the country. The Raja got terrified and in order to save his people's lives, he finished the affair with Haidar by paying a trifle, i.e. 4 lakhs of Rupees and four elephants."

தஞ்சை ராஜ்யத்தில் துளஜேந்திர ராஜாவிடம் உசேன்கான் சூர் என்பவர் 'காறுபாறு' எனும் பதவியில் இருந்தார். இவர் ஆற்காடு நவாபுக்குச் சேரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை ஆங்கிலேயர் மூலம் செலுத்தாமல் தானே நேரடியாகக் கொண்டு போய் செலுத்தினார். இவர்களுக்குள் இருந்த ஒப்பந்தப்படி பேஷ்கஷ் பணத்தை ஆங்கிலேயரிடம் கொடுத்து, அவர்கள்தான் நவாபுக்குக் கொடுப்பார்கள். இந்த உசேன்கான் சூர் இப்படிச் செய்ததால் நாட்டுக்கு ஆபத்து வரவிருந்தது. நாகப்பட்டினத்தில் கப்பலில் வந்து இறங்கிய யானையொன்று தஞ்சாவூருக்கு வரவேண்டியது, அதனை சிவகங்கை ராஜ்யத்தின் ராஜா தனக்கு என்று அந்த யானையைக் கொண்டு போய்விட்டார். அந்த யானை தஞ்சாவூருக்கு என்று தெரிந்தும் சிவகங்கை ராஜா கொடுக்காததால் கோபமடைந்த தஞ்சாவூர் ராஜா சிவகங்கை மீது படையெடுத்துச் சென்றார்.

அங்கு நடந்த போரில் அவர்களுடைய கோட்டையை இடித்து உட்புகுந்து வெற்றி பெரும் நேரத்தில் துளஜாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. இவனைத் தோற்கடித்து கோட்டையை இடிப்பதால் நமக்கு என்ன லாபம். நம் யானையை மீட்டுக் கொண்டு, படையெடுத்து வந்த செலவையும் நஷ்ட ஈடாக மேலும் பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணம் கொண்டார். அந்த எண்ணத்தை அவர்களிடம் சொல்லவும், அவர்களிடமிருந்து, தான் பிடித்துக் கொண்ட பகுதிகளைத் தாங்களே வைத்துக் கொண்டு, போருக்கு நஷ்ட ஈடாக ஒரு லட்சம் வராகன் பணமும் முப்பதாயிரம் பெருமானமுள்ள நகைகளும், இரண்டு பெரிய யானைகளையும், இரண்டு பீரங்கிகளையும் பெற்றுக் கொண்டு வெற்றியோடு தஞ்சாவூருக்குத் திரும்பி வந்தார்.

"The regent of Ramnad came to terms according to which the Tanjore Raja was allowed to remain in possession of the tracts conquered by him and to receive one lakh of rupees in specie and thirty thousand rupees in jewels, two large elephants and two pieces of Cannon."

ஊர் திரும்பிய துளஜா ராஜா தனது இரண்டாவது மனைவியாகிய ராஜகுமாரிபாயியின் மகளை காட்டிகே ராவ் என்பவனுக்கு மிக விமரிசையாக செலவு செய்து திருமணம் செய்து வைத்தார்.

இப்படி தஞ்சாவூர் ராஜா செலவுகளை அதிகரித்துக் கொண்டு போன காரணத்தால் இரண்டு வருஷங்களாக ஆற்காடு நவாபுக்குச் செலுத்த வேண்டிய கப்பம் கொடுக்கப்படாமல் நிலுவையில் தங்கிவிட்டது. இந்த செய்தி அறிந்த ஆற்காடு நவாபு முகமது அலிகான் துளஜாவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. வடக்கே இருக்கும் அவனது உறவினர்களும் நல்ல செல்வாக்கு உடையவர்களாக இருக்கிறார்கள். துளஜாவும் தன் தகப்பனைப் போலவே நல்ல வீரனாகவும் இருக்கிறான். ஆகவே இவன் கூடிய விரைவில் மிக செல்வாக்கு உள்ள அரசனாக ஆகிவிடுவான். அப்படி அவன் செல்வாக்குப் பெறுவது நமக்கு ஆபத்தாகக்கூட முடியலாம். ஆகையால் அவனை இதற்கு மேல் வளர விடாமல் தடுக்க ஒரு உபாயம் தேடினான்.

அவன் இதுவரை கொடுக்காமல் இருக்கும் கப்பப் பணத்தை உடனடியாகக் கொடுக்கச் சொல்லி கேட்டு, அப்படி அவன் கொடுக்க முடியாமல் போனால், தஞ்சாவூரை நமது படைகளைக் கொண்டு ஆக்கிரமித்து அவனை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்வதுதான் நல்லது என்று திட்டமிட்டான். அந்த திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு ஒரு தூதனை தஞ்சாவூருக்கு அனுப்பித் தங்களுக்கு சேரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும், இல்லையேல் தங்கள் படையோடு வந்து தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்வோம் என்று நவாபு சொல்லி அனுப்பினார்.

அப்போது துளஜாவுக்கு அமைந்து மராத்தியப் பிரதேசத்து துர்மந்திரிகள் ராஜாவின் மனதைக் கெடுத்து ஆற்காட்டு நவாபு கேட்கிறபடி பேஷ்கஷ் பணத்தைக் கொடுக்கக்கூடாது என்று உபதேசம் பண்ணினார்கள். நாம், பிரதாபசிம்ம ராஜா காலத்தில் பதவி இழந்து ஒளிந்து மறைந்து வாழ்ந்த நவாபுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்ததோடு, அவரது எதிரியான சந்தா சாஹேபையும் பிடித்துக் கொடுத்த நன்றியை மறந்து இப்போது அவர்கள் நம்மிடம் பேஷ்கஷ் கேட்பது சரியில்லை. ஆகையால் கொடுக்க முடியாது என்று பதில் அனுப்பினார்கள்.

இந்த பதிலினால் ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப் முகமது அலிகான் எப்படியும் தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்வது என்ற வெறியில், துளஜாவின் தந்தை பிரதாபசிம்மர் செய்த உதவிகளையும் மறந்து தனது மகனான உம்தத் உல் உமரா என்பவனின் தலைமையில் ஒரு பெரும்படையை அனுப்பி தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்ள அனுப்பினான்.

இந்தப் படை தஞ்சாவூர் கோட்டையை முற்றுகையிட்டு யுத்தம் செய்தது. அந்த நிலையிலும் துளஜாவுக்கு அமைந்த துர்மந்திரிகள் ஆற்காட்டு நவாபின் படைகளோடு யுத்தம் செய்வதுதான் சரி என்று யுத்தம் செய்யத் தூண்டினார்கள். அப்போது ராஜாவின் அழிவுக்கு இந்த துர்மந்திரிகள் வழிவகுக்கிறார்கள் என்பதை அறிந்த ராஜ சபையில் இருந்த ஊர்ப்பெரியவர்கள் மன்னனிடம் சென்று நவாபுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து சமாதானமாகப் போய்விடுவதுதான் சரி, அனாவசியமாக சண்டை நடந்தால் பல உயிர்கள் போய்விடும் என்று சொல்லி எச்சரித்தார்கள். இந்த யோசனையை மன்னன் ஏற்றுக் கொண்டு, ஆற்கட்டு படை செலவுக்காக எட்டு லக்ஷ வராகனும் அது தவிர பல லக்ஷம் பெருமான நகைகளும் கொடுத்து சமாதானம் செய்து கொண்டான். இவை போக இன்னும் கொடுக்க வேண்டிய பாக்கி பணத்துக்காக ராஜ்யத்தின் மாயூரம், கும்பகோனம் போன்ற பகுதிகளை அவர்களுக்கு உரிமைச் சாசனம் பண்ணிக் கொடுத்து விட்டார்.

இப்படி துளஜா ராஜாவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெற்றுக் கொண்ட உம்தத் உல் உமரா தஞ்சைக் கோட்டையைச் சுற்றிக் கொண்டு மேற்குப் புறமாகப் போய் வல்லத்துக் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்தபடி திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலிருந்த கோயிலடி, இளங்காடு சீமையை தம்முடைய சுவாதீனத்தில் எடுத்துக் கொண்டு, திருச்சினாப்பள்ளிக் கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றான்.

"By the first settlement dated 20th of October 1771, Tulajaaji agreed to pay eight lakhs of rupees as arrears of tribute ... By the second settlement dated 25th Oct. 1771 the Rajah assigned the district of Mayuram and part of the district of Kumbakonam yielding an annual revenue of sixteen and a quarter lakhs of rupees for two years in lieu of the payment of 32-1/2 lakhs of rupees estimated as war indemnity."

"As the possession of the Fort of Vallam, the key of Tanjore was of utmost importance to the Wallajah interests, the Nawab directed his son Umdut Ul Umara who settled the terms, to obtain possession of it. A fresh negotiation ensured and Umdat Ul Umara forced the helpless Rajah to restore not only Vallam but also Koyilady and Elangadu to the Nawab."

பிறகு துளஜா ராஜா யஷ்வந்த் ராவ் என்பவரை சென்னைக்கு அனுப்பி, நவாபைச் சந்தித்துச் சமாதானம் பேசும்படி அனுப்பி வைத்தார். அப்போது நவாப் சமாதானம் பேசும் மன நிலையில் இல்லாததால், அவரோடு பேசாமல், அவருக்கு ஒரு குதிரையையும், சில வஸ்திரங்களையும் கொடுத்து, துளஜாவுக்கு ஒரு கடிதம் கொடுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார்.

துளஜா நவாபுக்கு ஏராளமாகப் பணத்தையும் கொடுத்து, ராஜ்யத்தின் சில பகுதிகளையும் எழுதிக் கொடுத்து விட்டதால் ராஜ்யத்தில் பணத் தட்டுப்பாடு வந்தது. அந்த நேரம் பார்த்து நவாபு தனது படைத் தளபதிகளை அழைத்து, அவர்களுடன் தனது படையொன்றையும் அனுப்பி தஞ்சாவூரைப் பிடித்துக் கொள்ளும்படி அனுப்பி வைத்தார். அப்போது வடக்கே யிருந்து மாதவ ராவ் சதாசிவ் என்பவனும் அங்கு வந்திருந்தான். அவனையும் தன் இரண்டாவது மகனான அமீருல் உமரா   என்பவனுடன் தஞ்சைக்கு அனுப்பினான்.

நவாபின் அந்தப் படை தஞ்சாவூருக்கு வந்து சண்டை செய்து கோட்டைக்குள் புகுந்து ராஜ்யத்தையும் அபகரித்துக் கொண்டது. டபீர் நாரோ பண்டிதர் என்ற அமைச்சரை நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள நியமித்துவிட்டு சிலகாலம் கும்பகோணத்தில் தங்கியிருந்துவிட்டு, பிறகு சென்னைக்குத் திரும்பினர். இந்த வகையில் துளஜா கையிலிருந்து தஞ்சாவூர் ராஜ்யம் நவாபுக்குச் சென்று அப்படி இரண்டு மூன்று வருஷங்கள் தஞ்சை நவாப் ஆட்சியில் இருந்தது.

"Tanjore experienced the worst calamity during the three years, when the Nawab controlled the Kingdom with his men. During the interval of about 2 years and seven months (actually from 17th September 1773 to 11th April 1776) between the dethrownment and reinstatement of Raja Thulaja the country remained under the direct Govt. of Nawab of Arcot."

(இன்னும் தொடரும்)

No comments:

Post a Comment

You can give your comments here