பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 21, 2011

மராட்டியர் வரலாறு - Part 5


தஞ்சை மராட்டியர் வரலாறு
பகுதி V

நேற்றைய பதிவில் 3ஆம் சரபோஜி காலமான செய்தியோடு முடித்திருந்தோம். அதற்கு முன் மன்னனுக்கு வாரிசு இல்லாமல் போனதும், அவன் தம்பி துக்கோஜியின் குடும்பம் பெருத்துவிட்டது என்பதையும் பார்த்தோம். 3ஆம் சரபோஜியின் மனைவி அரூபபாயி தனக்குப் பிள்ளை பிறந்துவிட்டதாக ஒரு பொய்ச் செய்தியைச் சொல்லியதும், அந்த ரகசியத்தை துக்கோஜி தனது அண்ணன் 3ஆம் சரபோஜியிடம் சொன்ன செய்தியையும் பார்த்தோம். இந்த நிலையில் பிள்ளை இல்லாமல் 3ஆம் சரபோஜி மாண்டு போனார். இனி என்ன? பார்ப்போம்.

இந்த நிகழ்வு குறித்த ஓர் ஆங்கில குறிப்பு இருக்கிறது. பார்ப்போமா?

"Saraboji had no child and tradition relates how one of his Queens named Aparoopabai fearing that the throne would go to the sons of Thukkoji, pretended pregnancy and foisted upon her husband as his own offspring, a stranger boy who was known subsequently as Savai Shahaji. Her plan was however miscarried and Saraboji ordered her to get rid of the bogus son."

3ஆம் சரபோஜி இறந்தபோது, தனக்குப் பிள்ளை பிறந்ததாகச் சொல்லி ஏமாற்றிய அபரூபாபாயி என்ன செய்தாள் தெரியுமா? மற்ற இரு மனைவியர்களான சுலட்சணாபாயி, ராஜேஸ்பாயி ஆகியோர் மன்னனின் உடலுடன் உடன்கட்டை ஏறி மாண்டு போனபோது, இவள் மட்டும் அப்படிச் செய்யவில்லை.

அண்ணன் 3ஆம் சரபோஜி மாண்டுபோனார் என்ற செய்தி கேள்விப்பட்டு மகாதேவப்பட்டினத்திலிருந்து தம்பி துக்கோஜி தஞ்சாவூருக்கு வந்து ராஜ்ய பாரத்தை நடத்தத் தொடங்கினார். அப்படி இவர் தஞ்சையில் ராஜ்யபாரம் நடத்திக் கொண்டிருந்த போது இவருடைய நாயகியர்களுக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளும் இறந்து போனார்கள்.

ஆனால் நானா சாஹேப் சந்ததியில் அப்பு சாஹேப் என்பவன் இருந்தான். அப்போது திருச்சினாப்பள்ளியில் நாயக்கர் வம்சத்து ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு ராணி மீனாட்சி ஆட்சி செய்து கொண்டிருந்தாள். இவள் ஒரு பெண்தானே என்று சில பாளையக்காரர்கள் அவர் மீது படையெடுத்து வந்தனர். ராணி மீனாட்சி தஞ்சைக்கு உதவி கேட்டு தூது அனுப்பினாள். துக்கோஜி ராணி மீனாட்சிக்கு உதவி செய்யத் தன் படையை திருச்சிக்கு அனுப்பினார். எதிரிகள் தோற்று ஓடினர். ராணி மீனாட்சியும் தஞ்சை அரசருக்கு நன்றியைத் தெரிவித்து, இவ்விரு அண்டை ராஜ்யங்களும் பரஸ்பரம் ஒற்றுமையாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தன.

அதன்பின் சில ஆண்டுகள் நன்றாக ஆட்சி புரிந்த துக்கோஜி நள வருஷத்தில் தெய்வகதி அடைந்தார்.

துக்கோஜி மரணமடைந்த பிறகு அவருடைய மூத்த மகன் பாவாசாஹேப் ஒரு வருஷம் ஆட்சி புரிந்தான். இந்த ஒரு வருஷத்தில் இவன் ராஜ்யத்தில் எவரையும் நம்பவில்லை. தன்னைச் சுற்றி எல்லோருமே சதி செய்கிறார்கள் என்றும், கத்தியோ, கட்டாரியோ வைத்திருந்தால் தன்னைக் கொல்லத்தான் அலைகிறார்கள் என்று சந்தேகம் அடைவார்.

வீதியில் செல்லும்போது தன்னைப் பார்க்கிறவர்கள் எல்லாம் தனக்குத் தீங்கு செய்ய நினைக்கிறார்கள் என்று சந்தேகம். யாராவது வாயை அசைத்தால் போதும், அவர்களைச் சந்தேகத்தோடு பார்ப்பார். அவர்கள் ஏதோ மந்திரம் ஜெபிக்கிறார்களோ நம்மை வசியம் செய்ய என்று பயம் உண்டாகும். எதிரில் யார் கை வீசிக் கொண்டு வந்தாலும் நம்மை அடித்துப் போட்டுவிடுவானோ என்கிற பயம். இப்படி அவன் ஓர் 'தெனாலி'யாக இருந்திருக்கிறான்.

இப்படிப்பட்ட தலையாட்டி பொம்மை (தஞ்சாவூர் என்றால் தலையாட்டி பொம்மை என்று இவரால்தான் புகழ் கிட்டியதோ!) கிடைத்தால் போதாதா? சுற்றியிருக்கும் ஜால்ரா கூட்டத்துக்கு. ஜால்ராக்கள் சொல்லுகின்றபடி அவர்கள் கைகாட்டியவர்களுக்கெல்லாம் நன்மைகளைச் செய்தார். ஜால்ராக்களுக்குப் பிடிக்காதவர்கள் ராஜாவை நெருங்கக்கூட முடியாது. இப்படி இந்த 'தெனாலி' தஞ்சை ராஜ்யத்தை ஆண்டு வந்த காலத்தில் .....

ஆற்காடு பிரதேசத்தில் இருந்த தோஸ்த் அலிகான் என்பவனுடைய மருமகன் சந்தா சாஹேப் என்று பெயர் கொண்டவன் ஒரு சிறிய படையோடு வந்து தஞ்சாவூர் ராஜா பாவா சாஹேபுடன் சண்டை செய்தான். இந்த சந்தா சாஹேப் ஆற்காட்டு நவாப் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், இவனுக்கு பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவு இருந்தது என்பதும் தெரிய வந்தது.

இப்படியொரு சோதனை வந்தால்தான் கோழைக்கும் வீரம் வரும் போலிருக்கிறது. சந்தா சாஹேப் சண்டைக்கு வந்து தஞ்சை கோட்டையை முற்றுகை இட்டபோது ராஜா பாவா சாஹேப் பயந்து ஓடிவிடவில்லை. எப்படி அவருக்கு அப்படியொரு தைரியம் வந்ததோ தெரியவில்லை. அவரே தனக்கு எல்லா பந்தோபஸ்தும் செய்துகொண்டு கோட்டையின் வாயிலுக்கு வந்தார். தஞ்சை சைனியத்தை அணிவகுத்து நிற்கச் செய்து தானே கோட்டை மதில்மேல் ஏறி நின்று அங்கிருந்த பீரங்கிகளை எதிரிகளை நோக்கிச் சுடச் செய்தார். வீரர்களுக்கும் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். போரிட்ட வீரர்களுக்கே நம்பமுடியவில்லை, இவர் நமது ராஜாதானா என்று. இவர் செய்த யுத்தத்தைப் பார்த்தவர்கள் பிரமித்துப் போயினர்.

இப்படி தஞ்சை கோட்டையை பல நாட்கள் முற்றுகையிட்டிருந்த சந்தா சாஹேப் கோட்டையைப் பிடிக்க முடியாததாலும், தான் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்து போனதாலும், முற்றுகையை விட்டுவிட்டு ஊர் போய்ச்சேர்கிறேன், எனக்கு கணிசமான பொன்னும் பொருளும் கொடுத்தால் என்று பேரம் பேசி அவற்றையும் பெற்றுக் கொண்டு அக்கம் பக்கத்துக் கிராமங்களைக் கொள்ளை அடித்துக்கோண்டு திருச்சினாப்பள்ளி போய்ச் சேர்ந்தான்.

சந்தா சாஹேப் சம்பந்தமான ஒரு ஆங்கில வரலாற்று நூல் கூறும் செய்தியைப் பார்ப்போம்.

"Baquir Ali was Killedar of Vellore. His brother was Dosth Ali Khan who had a son and five sons-in-law of whom the third was the well known Adventurer Chanda Saheb."

"In spite of his illness he (Baba Saheb, the king of Tanjore) fought hard against Chanda Saheb who attacked Tanjore on his way to Trichinopoly and made him retreat in 1735."

இந்த யுத்தத்துக்குப் பிறகு பாபா சாஹேப் அதிகநாட்கள் உயிர் வாழவில்லை. பிங்கள வருஷம் அவர் உயிர் நீத்தார்.

அப்போது ராஜ்யத்தை ஆள வாரிசு உரிமை பெற்ற தகுதி வாய்ந்த ராஜாவோ அல்லது அமைச்சர்களோ, அல்லது யோக்கியமான உறவினர்களோ யாரும் அகப்படவில்லை. இந்தக் குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு யாராவது புதிய மனிதர்கள் தலையிட்டு ராஜ்ய பாரத்தைப் பிடுங்கிக் கொள்வார்களோ என்ற அச்சத்தில் பாபா சாஹேபின் மனைவி சுஜான்பாயி அவசரமாக அரசியாகப் பட்டம் சூட்டிக் கொண்டாள். இது பிங்கள வருஷம் தொடங்கி அடுத்து காளயுக்தி வரை தொடர்ந்து அவளது ஆட்சி நடந்தது. இவள் ராஜ்யபாரம் செய்து கொண்டிருந்த நேரத்தில் அவளுக்கு எதிர்பாராமல் ஒரு தொல்லை நேர்ந்தது.

(நாளை பார்ப்போம்)

No comments: