பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, September 21, 2011

மராத்தியர் வரலாறு - Part 3


Ekoji
தஞ்சை மராத்தியர் வரலாறு
பகுதி 3

தஞ்சை கோட்டையை மிக சுலபமாக உயிர்ச்சேதம் அதிகமின்றி பிடித்து வெற்றி பெற்ற ஏகோஜி தஞ்சை கோட்டையை விட்டு கீழவாசல் வழியாக வெளியேறி அங்கு முகாமிட்டான். தஞ்சை நிர்வாகத்தை அரண்மனையில் பணிபுரிந்த காரியஸ்தர்களிடம் ஒப்படைத்தான். தனது வஜீர் இருவரையும் தத்தமது ஊர்களுக்குத் திரும்புமாறு ஏகோஜி பணித்தார். எனினும் தஞ்சாவூர் ராஜ்யம் யாருக்கு என்பதில் இன்னமும் இழுபறி நீடித்து வந்தது.

இப்படி இரண்டு மாத காலம் கடந்து போயிற்று. இந்த காலகட்டத்தில் வடக்கே டில்லி முகலாய சக்கரவர்த்தி தக்ஷிண சுல்தான்கள் அனைவரையும் போரில் வென்று அனைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். இந்த செய்தி தஞ்சாவூர் நகருக்கு வெளியே முகாமிட்டிருந்த ஏகோஜிக்கும் கிட்டியது. தனது தலைவரான பீஜப்பூர் ராஜ்யமும், பீஜப்பூர் சுல்தானும் இந்நேரம் முகலாயருக்கு அடிபணிந்திருப்பாரோ, அவரது விஜயபுரம் என்கிற பீஜப்பூர் ராஜ்யம் முகலாய சக்கரவர்த்தி ஒளரங்கசீப் வசம் போயிருக்குமோ என்ற எண்ணம் ஏகோஜிக்கு உதயமாயிற்று.

மாறியுள்ள இந்த சூழ்நிலையில் ஏகோஜி இங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டாரானால் தங்கள் நிலைமை என்ன, நாம் என்ன செய்வது என்று அவருடன் இருந்த இரு வஜீர்களுக்கும் ஒரு சந்தேகம் தோன்றியது. ஒருக்கால் தஞ்சையை தங்கள் இருவரில் யாரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றாலும் தங்களால் இந்த ராஜ்யத்தைச் சரிவர பரிபாலனம் செய்ய முடியுமா என்ற ஐயப்பாடும் தோன்றியது. திருச்சியை ஆண்டு கொண்டிருக்கும் நாயக்க மன்னர்கள் பலம் பொருந்தியவர்கள். அவர்கள் நம்மை மீண்டும் தாக்கி இந்த ராஜ்யத்தையும் பிடுங்கிக் கொள்வார்கள். நமது மன்னரான அலிஅடில்ஷாவும் தஞ்சையை நாமே வைத்துக் கொள்ளச் சம்மதிக்க மாட்டார்.

ஏகோஜி தஞ்சையை ஆள்வதாக இருந்தால், அவர் திருச்சியையும் போரிட்டு மீட்டு அந்த ராஜ்யத்தையும் தஞ்சையோடு இணைத்துக் கொள்வார். மேலும் ஏகோஜியின் சகோதரர் சிவாஜி ராஜா வடக்கே மிகவும் பலம் பொருந்திய ராஜாவாக இருக்கிறார். ஆகையால் அலிஅடில்ஷாவும் சிவாஜி ராஜாவுக்கு பயந்து கொண்டு ஏகோஜியின் வம்புக்கு வரமாட்டார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு வஜீர்கள் இருவரும் ஏகோஜியிடம் அவரே தஞ்சாவூருக்கு அரசராக ஆகவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

வடக்கே நிலவும் குழப்பம், சுல்தான்கள் டில்லி சக்கரவர்த்திக்கு அடிபணிந்து போனது இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஏகோஜியும் தஞ்சைக்குத் தானே மன்னராக அறிவித்துக் கொள்ள சம்மதித்தார். உடனே சகம் 1597 நள வருஷம் சித்திரை மாதம் (1676 ஏப்ரல் மாதம்) தஞ்சாவூர் ராஜ்ய பாரத்தை ஏகோஜி ஏற்றுக் கொண்டு தஞ்சாவூரின் முதல் மராத்திய மன்னனாக முடிசூட்டிக் கொண்டார். குழப்பத்தில் ஆழ்ந்து தவித்துக் கொண்டிருந்த தஞ்சாவூர் ராஜ்ய மக்களும், மந்திரி பிரதானிகளும், மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

தஞ்சை மன்னனாக முடிசூட்டிக் கொண்டு சிங்காதனம் ஏறிய ஏகோஜி தனது எஜமானன் பீஜப்பூர் சுல்தானுக்கு ஏராளமான பரிசுப் பொருள்களும், கப்பமும் அனுப்பி தான் தஞ்சை அரியணையை ஏற்க வேண்டிய சந்தர்ப்பத்தை விளக்கி கடிதம் எழுதினார்.

தெற்கே தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் பீஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவுக்கு தூதர்கள் மூலமும், ஏகோஜியின் கடிதம், அவர் அனுப்பிய பேஷ்கஷ், பரிசுப்பொருட்கள், துணிமணி, செல்வம் ஆகியவற்றிலிருந்து தெரிய வந்தது. ஏகோஜி காட்டிய பணிவு, மரியாதை இவற்றைக் கண்டு மனம் மகிழ்ந்த சுல்தான் ஏகோஜியை வாழ்த்தி பரிசுப் பொருட்களை அனுப்பி, இனி தஞ்சாவூர் ராஜ்யத்தை வம்ச பரம்பரையாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளும்படி சாசனம் பண்ணிக் கொடுத்தனுப்பினார்.

தஞ்சையில் இப்படி நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்த நேரத்தில் திருச்சிராப்பள்ளியில் இருந்த நாயக்க மன்னர் தனது ஆதரவாளர்களுடனும், நட்பு அரசர்களுடனும் தஞ்சை குறித்து ஆலோசனைகள் நடத்தினர். இப்படி தங்களுக்கு எதிராக சதியாலோசனை திருச்சியில் நடக்கும் செய்தியறிந்த ஏகோஜி, தனது படைகளைச் செலுத்திக் கொண்டு போய் திருச்சி நாயக்கர் மன்னர்களுடன் யுத்தம் செய்தார். அந்த எதிர்பாராத யுத்தத்தில் திருச்சி நாயக்க மன்னர் தோற்றுப் போனார். வெற்றி பெற்ற தஞ்சை மராத்திய மன்னன் ஏகோஜிக்கு செந்தலை, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களை வெற்றிலைப் பாக்குக்காக என்று எழுதிக் கொடுத்து சாசனம் செய்து கொடுத்தார்கள். இந்தப் போரில் தனது வெற்றிக்காகப் பாடுபட்ட இரண்டு வஜீர்களுக்கும் சகல மரியாதைகளையும் செய்து, பரிசுகளைக் கொடுத்து மன்னர் அவர்களைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.

பீஜப்பூர் சுல்தான் பெங்களூரிலிருந்த ஏகோஜியைத் தஞ்சைக்குச் சென்று நாயக்க மன்னர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பூசலைத் தீர்த்துவிட்டு வருமாறு அனுப்பினாரல்லவா, அப்போது ரகுநாத் நாராயண் என்பவரை ஏகோஜிக்கு உதவிக்காக அனுப்பினார். ஆனால் அவரோடு ஏகோஜிக்கு ஒத்துப் போகவில்லை என்பதால் அவர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவிடம் சென்றுவிட்டார்.

ஏகோஜி தஞ்சையைப் பிடித்துக் கொண்டு மன்னராக ஆனபிறகு, மராத்தியத்தில் இருந்த அவரது பெரிய அண்ணன் சத்ரபதி சிவாஜி தஞ்சாவூர் ராஜ்யத்தில் பாதியைத் தனக்குத் தந்துவிடக் கேட்டதாகவும், ஏகோஜி மறுத்ததால் இருவருக்கும் மனவருத்தம் ஏற்பட்டது என்றும் தெரிகிறது. இதன் பொருட்டு சத்ரபதி சிவாஜி தென்னாட்டுக்குப் படையெடுத்து வந்து செஞ்சியைப் பிடித்துக் கொண்டு, பின்னர் வேலூரையும் தாக்கினார். ஏகோஜிக்கு ஒரு கடிதம் அனுப்பி அவரைத் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டிருந்தார். ஏகோஜி ஏனோ அவரைச் சென்று காணவில்லை. எனவே சிவாஜி ராஜா கொள்ளிடத்துக்கு வடக்கேயுள்ள பகுதிகளைப் பிடித்துக் கொண்டு தன்னுடன் வந்து சேர்ந்து கொண்ட ரகுநாத் நாராயணனிடம் கொடுத்து விட்டதாகத் தெரிகிறது. இதன் பிறகு இவ்விருவருக்குள்ளும் சில மோதல்கள் நிகழ்ந்தன. இறுதியில் இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இவ்வாறு ஏகோஜி தஞ்சை மன்னனாக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு பிங்கள வருஷம் கி.பி.1677இல் மூன்றாவது மகன் பிறந்தான். அவனுக்கு துக்கோஜி என்ற பெயர் சூட்டப்பட்டு வளர்ந்தான். ஏகோஜியின் முதல் மனைவியான இங்க்ளே வம்சத்துப் பெண் தீபாபாயி சாஹேப் என்பவரின் வயிற்றில் பிறந்தவர்கள் இந்த மூன்று பிள்ளைகளும். இந்த ராணி தீபாபாயி சாஹேப் என்பவரைப் பற்றி "தீபாம்பாள் சரித்திரம்" எனும் வரலாற்று நூல் இருக்கிறது. இதனை எழுதியவர் சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று, சென்னையில் குடிபுகுந்து, மெலட்டூர் பாகவத மேளாவில் பாடி பங்குபெற்று வரும் சமஸ்கிருத பண்டிதர் என்.சீனிவாசன் ஆவார்.

ஏகோஜியின் இரண்டாம் மனைவி மோஹிதே வம்சத்தின் அண்ணுபாயி சாஹேப் என்பவர். இவ்விரு மனைவியர் தவிர ஏகோஜிக்கு மற்றும் ஒன்பது பேர் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஸ்ரீகள் (ஸ்த்ரீகள்) இருந்தனர். அப்படி சேர்த்துக் கொள்ளப்பட்ட பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகள் உண்டு. அவர்கள் சந்திரபான், சூரியபான், மித்திரபான், காளேபான், கீர்த்திபான், விஜயபான், உதையபான் இப்படிப் பெயர் கொண்ட ஏழு பேர். இவர்களில் சந்திரபான் என்பவன் நல்ல வீரன். ஆக மொத்தம் ஏகோஜிக்கு உரிமை மகளிர் மூலம் மூவரும், சேர்த்துக் கொண்டவர்கள் மூலம் எழுவருமாக பத்து பிள்ளைகள்.

தஞ்சை ராஜ்யாதிகாரம் கிடைத்த பிறகு தஞ்சையில் ஏகோஜி தர்ம சாஸ்திரப்படி ஆட்சிபுரியலானார். பழைய குழப்பங்கள் தீர்ந்து நியாயம், தர்மம், வீரம் விளைந்த நிலமாக தஞ்சை மீண்டும் மாறத் தொடங்கியது. முதன் முதலாக தமிழ் பேசும் இந்தப் பகுதிக்கு மராத்தி மொழி பேசும் ஒரு ராஜா அமைந்ததாலும், அவர்கள் பெயர் இவர்களுக்குப் புதிது என்பதாலும், ராஜா ஏகோஜியின் பெயரை தமிழ் மக்கள் "ஏகராஜா" என்றே அழைத்தார்கள்.

ஏகோஜி என்ற பெயர் மருவி சில இடங்களில் இவரது பெயர் 'வெங்காஜி' என்றும் குறிப்பிடப் படுகிறது. ஆனால் இவரது தம்பியின் பெயர் வெங்காஜி என்பது. இங்கு குடிபுகுந்த சில ஆங்கில மிஷினரிகள் இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 1676இல் தஞ்சைக்குக் குடிபுகுந்த மிஷினரிகள் தங்கள் நாட்குறிப்பில் இப்படி எழுதுகிறார்கள்: "Venkaji sought to make himself beloved by the people" என்று. இங்கு வெங்காஜி என்று குறிப்பிடப்படுபவர் ஏகோஜியே.

ஏகோஜியின் மனைவிமார் தீபாபாயி, அண்ணுபாயி என்பதையும், சேர்த்துக் கொண்ட மனைவிமார் ஒன்பது பேர் என்பதையும் பார்த்தோமல்லவா. இப்படிச் சேர்த்துக் கொண்ட ஒன்பது பேரில் ஒருவரான கங்காபாயி என்பவர் இறந்து போன செய்தியையும், அவரது உத்தரகிரியைக்காக ராஜாங்க கஜானாவிலிருந்து 50 சக்கரம் பொற்காசுகள் கொடுத்ததாகவும் குறிப்பு இருக்கிறது.

ஏகோஜி ராஜா 1682இல் இறந்து போனார். இவர் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து படையுடன் திரும்பப் போனபோது கட்டுமரத்தில் கடந்து சென்றதாக ஒரு செய்தி உண்டு. மற்றொரு செய்திப்படி பாபாஜி பாவார் என்பவர் தனது முதுகில் இவரைச் சுமந்துகொண்டு சென்றதாகவும் செய்தி இருக்கிறது. அது போலவே இவருடைய அண்ணன் சத்ரபதி சிவாஜி ராஜா ராமேஸ்வரம் சென்று திரும்பிய போது இவரை திருமழபாடியில் சந்தித்ததாகவும், மற்றொரு இடத்தில் திருவாடி (திருவையாறு) யில் சந்தித்ததாகவும் செய்திகள் இருக்கின்றன.

சுதந்திர இந்தியாவில் மராட்டிய மாநில அரசு கற்றறிந்த பேராசிரியர்கள் சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்து, சத்ரபதி சிவாஜியின் ஆட்சி, அவர் ஆண்ட பிரதேசங்கள், அவர் பயணம் செய்த இடங்கள் இவற்றைக் கண்டறிந்து செய்திகளைச் சேகரிக்க ஆணையிட்டனர். அந்தக் குழு தமிழகத்துக்கும் வந்து சத்ரபதி சிவாஜி பயணம் செய்த தடங்களை ஆய்வு செய்தபோது, கொள்ளிடக்கரையில் அமைந்திருந்த ஒரு பவானி அம்மன் கோயிலில் அம்மன் சிலைக்குப் பின்புறம் ஒரு கேடயமும், அதில் இரு வாளும் இருந்ததைக் கண்டு ஆய்வு செய்ததில் அது சத்ரபதி சிவாஜி கொடுத்தது என்பது தெரிய வந்தது.

சத்ரபதி சிவாஜி கொள்ளிடம் ஆற்றைத் தன் வெண் புரவியில் கடக்க எத்தனித்த போது வெள்ளம் குதிரையோடு சிவாஜியையும் அடித்துச் சென்றதாம். அப்போது கிராம மக்கள் சிவாஜியை, அவர் யார் என்று தெரியாமலே காப்பாற்றி, அவருக்கு ஜுரம் வந்துவிட்டபடியால் சில நாட்கள் வைத்திருந்து வைத்தியம் பார்த்து குணம் ஆன பின்பு அனுப்பி வைத்தனராம். குதிரையும் வேறொரு இடத்தில் கரையேறி அவர்களால் பத்திரமாக வைக்கப்பட்டிருந்ததாம். அப்போது அந்த கிராம மக்களுக்காகக் கொடுத்ததுதான் இந்த கத்திகளும் கேடயமும் என்பதை மராத்திய அரசு அமைத்த குழு கண்டுபிடித்தது.

மன்னர் சரபோஜி II தனது 'பான்ஸ்லே வம்சத்து வரலாறு' என்று கல்வெட்டில் எழுதி வைத்திருக்கும் பெரிய கோயில் கல்வெட்டில், சிவாஜி ராமேஸ்வரம் வந்துவிட்டு ஏகோஜிக்குத் தெரியாமலே தஞ்சை கோட்டையை அதன் பாதுகாப்புக் குறித்து பார்வையிட்டு ஊர் திரும்பியதும் ஒரு கடிதம் மூலம் தெரிவித்ததாகத் தெரிகிறது. அந்தக் கடிதத்தில் சத்ரபதி சிவாஜி தஞ்சையில் ஒரு கடையில் தனது வாளையும், தலைப் பாகையையும் அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டுத் தனக்கு அனுப்பும்படியும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. தஞ்சை கோட்டை மிகவும் பலமுள்ளதாக கழுகு வடிவத்தில் இருப்பதாகவும், அதில் ஒரு பகுதியை நன்கு பலப்படுத்தினால் மட்டும் போதும் என்றும் சத்ரபதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இப்படியாக தஞ்சையின் முதல் மராட்டிய மன்னன் ஏகோஜியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

(இனி தொடர்ந்து நாளை)No comments:

Post a Comment

You can give your comments here