தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 16
தஞ்சை பிரதாபசிம்ம ராஜாவும், சென்னை கவர்னர் லார்டு பிக்காட்டும் ஒரு சமாதான, ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட செய்தியைப் பார்த்தோம். இனி தஞ்சாவூருக்கும் ஆற்காட்டுக்கும் இருந்த உறவு, உராய்வு ஆகியவை பற்றி பார்ப்போம்.
சந்தா சாஹேப் கொல்லப்பட்ட பிறகு தனது நவாப் நாற்காலிக்கு எந்தவித போட்டியும் இல்லை என்ற நிலை வந்த பிறகு நவாப் முகமது அலி ஆற்காட்டில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டார். அவரது போக்கில் அதிகமான மாற்றங்கள் தெரிந்தன. திருச்சினாப்பள்ளியில் நடந்த போரில் தனக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், மைசூர் ஆகிய ராஜ்யங்களின் படைகளோடு, ஆங்கில படைகளும், முரார்ஜி கோர்படேயும் சேர்ந்து வெற்றியை ஈட்டித் தந்த மகிழ்ச்சியில் ஆற்காட்டுக்குக் கப்பம் செலுத்த வேண்டிய புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ராஜ்யங்கள் இனி தங்களுக்குக் கப்பம் செலுத்த வேண்டியதில்லை என்ற சலுகையை அறிவித்திருந்தார்.
ஆனால் இப்போது அவருக்கு அதிக நிதி தேவைப்பட்ட நிலையில் அவர், மேற்சொன்ன ராஜ்யங்கள் தங்களுக்கு மீண்டும் கப்பம் செலுத்த வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை உண்டாக்கினார். திருச்சினாப்பள்ளிக்கு வந்து ஆற்காட்டு நவாப் மேற்சொன்ன ராஜாக்களை அழைத்து அவர்கள் உடனடியாக பழைய ஆண்டுகளுக்கும் சேர்த்து கப்பத் தொகையைத் தர வேண்டுமென்று நிர்ப்பந்தப் படுத்தினார். ஆனால், போரின் முடிவில் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த சலுகையை இப்போது நீக்க வேண்டிய அவசியம் குறித்தும், இப்போது பழைய பாக்கியையும் சேர்த்துத் தாங்கள் கப்பம் செலுத்த இயலாத நிலையில் இருப்பதையும் அவர்கள் நவாபிடம் எடுத்துச் சொன்னார்கள். நவாவு அவற்றில் எல்லாம் சமாதானம் அடையவில்லை. கப்பத் தொகை பெற்றே தீருவது என்ற ஒரே முடிவில் இருந்தார். மீறி இவர்கள் கப்பம் செலுத்தவில்லையானால் அவர்கள் மீது போர் தொடுக்கவும் தயாரானார்.
நவாபின் இந்தப் போக்கு சென்னையில் இருந்த ஆங்கில கம்பெனி அதிகாரிகளை எட்டியது. அவர்கள் தஞ்சாவூர் ராஜாவும் மற்றவர்களும் ஆற்காட்டு நவாப் சந்தா சாஹேபுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தபோது எத்தனை உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்த உதவிகளுக்குக் கைமாறாக அவர்களுக்கு அறிவித்த சலுகைகளை இப்போது மாற்றிக் கொள்வது பற்றி நவாப் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். உதவி செய்தவர்களுக்கு நவாப் செய்யும் கைமாறு இதுதான் என்று சொல்லி பூதலூரில் ஒரு சமாதான கூட்டம் ஏற்பாடு செய்தார்கள் ஆங்கிலேயர்கள். 1758ஆம் ஆண்டுக்குச் சரியான தமிழ் வெகுதான்ய வருஷம் பூதலூரில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது.
"The Nawab demanded from Prathaba Singh all arrears of tribute. Lord Pigot, the Governor of Madras deputed Mr.Josiah Du Pre, the second in council to settle the terms of the tribute payable to the Nawab. Accordingly it was agreed that the Raja Prathab should pay by five instalments in about 2 years, 22 lakhs of Rupees in discharge of the outstanding arrears with a further sum of 14 lakhs as a present to the Nawab and also an annual tribute of 4 lakhs afterwards."
இந்த உடன்பாடு ஏற்பட்ட சமயத்தில் பிரதாபசிம்ம ராஜாவின் மகன் துளஜேந்திர ராஜாவின் இரண்டாம் மனைவி ராஜகுமாரிபாயிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.
முன்பு குப்பி என்பவளுடைய மகன் காட்டுராஜா என்ற பெயரில் தஞ்சாவூர் ராஜ்யம் தனக்குத்தான் என்று உரிமை கொண்டாடி வந்தானல்லவா, அவனைத் தூண்டிவிட்டு அவனுக்குப் பின்பலமாக இருந்தவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கோயாஜி காங்க்டே என்பது. இவன் காட்டுராஜாவை நாட்டைவிட்டுத் துரத்திய பிறகு ஓடிப்போய் அரியலூர் காட்டில் ஒளிந்து கொண்டான். அங்கு அவன் ஒளிந்திருக்கும் செய்தி தஞ்சாவூருக்குக் கிடைத்தது. ஒரு சிறு குழுவாக வீரர்கள் அரியலூர் காடுகளில் தேடி அலைந்து அவனைப் பிடித்துக் கொன்று போட்டார்கள்.
பிரதாபசிம்ம ராஜா தஞ்சாவூரில் இப்படி பல காலம் திறமையோடும், ஆங்கிலேயர்கள், ஆற்காடு நவாப், சுற்றுப்புற ராஜ்யாதிபதிகள் ஆகியோருடன் ஒற்றுமையாக இருந்து ராஜ்யபாரம் செய்து கொண்டு வந்தார். அவருடைய காலத்தில் தஞ்சை ராஜ்யத்தின் புகழ் வடக்கே சதாரா, புனா, ஒளரங்காபாத் வரையில் பரவியிருந்தது. கிழக்கே அச்சி, யாழ்ப்பாணம், கண்டி தேசம், சிங்களம் வரையிலும், மேற்கே ஸ்ரீரங்கப்பட்டணம், பிதலூர் தேசம், குத்தி, கிருஷ்ணா தீரம், பண்ணானகாட் வரையிலும் பரவியிருந்தது.
பிரதாப சிம்ம ராஜாவின் உத்தமமான நடத்தை, அவர் செய்து வந்த தான தர்மங்கள், அவருடைய உதார குணம், மக்களுக்கு நன்மை செய்ய பல நடவடிக்கைகளை எடுத்தது, எதிரிகள் அஞ்சும்படியான வீரம் இவற்றால் அவருடைய புகழ் அதிகரித்தது, அவரது ராஜ்யத்தின் விஸ்தீரணம் அதிகரித்தது. மக்கள் மன்னரை மனதாரப் புகழ்ந்தார்கள். இப்படி மக்களின் ஆதரவைப் பெற்ற வேறு முடியரசர்கள் யாராவது உண்டா என்பது சந்தேகமே!
இத்தனை புகழுக்கிடையிலும் ராஜா சில தவறுகளைச் செய்யத் தவறவில்லை. அதில் ஒன்று, தன்னுடைய முந்தைய ராஜாக்கள் காலத்திலும், தன்னுடைய காலத்திலும் பல போர்க்களங்களுக்குச் சென்று தஞ்சாவூர் ராஜ்யத்துக்குப் பல வெற்றிகளைக் கொண்டு வந்து குவித்தவரும், போரில் சந்தா சாஹேபைப் பிடித்துக் கொண்டு வந்து சிறை வைத்து, பின்னர் நேரம் வந்த போது அவரை பலிகொடுத்து ஆற்காட்டு நவாப் முகமது அலியின் நட்பை பெற காரணமாக இருந்தவருமான தளபதி மானோஜி ராவை, அவரோடு ஏற்பட்ட ஏதோவொரு மனஸ்தாபம் காரணமாகப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு டபீர் நரோ பண்டிதர் என்பவரை சர்க்கிலாக நியமித்தார். இந்த சர்க்கில் என்கிற பதவி செயலாளர், நிர்வாக அதிகாரி போன்ற ஒரு உயர் பதவி. ராஜா செய்த பெரும் தவறு இதுதான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராஜாவின் உடல் நிலை, வயது முதிர்வின் காரணமாக கெட்டு வந்தது. தனது முடிவு நெருங்கிவிட்டது என்பதை ராஜாவும் உணர்ந்திருந்தார். அவருக்கு இயலாமை காரணமாக அதிகம் கோபம் வந்து எல்லோரிடமும் கடுகடுக்க ஆரம்பித்து விட்டார். அவர் மனம் சோர்வடைந்திருக்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டார்கள்.
உதாரணமாக, ராஜா சுவாமி தரிசனம் செய்வதற்காகத் திருவாரூர் ஆலயத்துக்குச் சென்றார். அங்கு வழியில் காவலுக்கு வந்த சேவகர்கள் ஓடிவந்த போது ராஜா மீது தூசி படிந்து விட்டது. இதற்காக அந்த காவலர்களின் தலைகளை வெட்டும்படி உத்தரவிட்டு விட்டார் ராஜா. இது என்ன இப்படி? ஒன்றுமில்லாத அற்பச் செயலுக்காக காவலர்களின் தலையை வெட்டுவதாவது? என்று மக்கள் வருத்தமடைந்தனர். இதைப் போன்ற பல தீயச் செயல்களை மன்னர் தனது இறுதிக் காலத்தில் செய்யத் தொடங்கினார்.
நாட்டிலும், அரண்மனையிலும் சில தீய சகுனங்கள் ஏற்படலாயின. ராஜா காலமாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இரவில் 12 நாழிகைக்கு மேல் 22 நாழிகை வரைக்கும் பெருத்த அழுகுரல் எங்கிருந்தோ கேட்க ஆரம்பித்தது. அந்த அழுகைச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், கோட்டைக்குள்ளிருந்துதான் வந்தது போல் இருந்தது. ஆனால் கோடைக்குள்ளிருந்து கேட்டால் வெளியிலிருந்து வருவது போல் கேட்டது. இது என்ன மர்மம் என்று அனைவரும் திகைத்தார்கள். இப்படி சுமார் மூன்று மாத காலம் அழுகுரல் நள்ளிரவில் கேட்டால் எப்படி இருக்கும்?
இது தவிர அரண்மனையின் மேல்புறத்தில் நாயக்கர் காலத்திய கோபுரம் ஒன்று இருந்தது. அது திடீரென்று இடிந்து வடக்குப் புறமாக விழுந்தது. இது ஒரு அபசகுனம் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.
துக்கோஜி ராஜா என்று இவரது முன்னோர் ஒருவர் ஆட்சி புரிந்தார் என்பதை பார்த்தோமல்லவா? அவருடைய ஆசை நாயகிகளின் பிள்ளைகளில் இறந்தவர்கள் போக மீதமிருந்த நானா சாஹிப் என்ற பிள்ளை மட்டும் அப்பு என்ற பெயரோடு இருந்தான். அவனும் இந்த நேரத்தில் இறந்து போனான். இந்த அப்புவின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிற்பாடு பிரதாபசிம்ம ராஜா தம்முடைய மகன் துளஜேந்திர ராஜாவுக்கு நல்ல புத்திமதிகளைச் சொல்லி, நல்ல நினைவு இருக்கும்போதே சுபானு வருஷம் ஒரு நாள் தெய்வகதி அடைந்தார்.
அவரை ஸம்ஸ்காரம் செய்யும்போது அவருடைய சிதை நெருப்பில் வீழ்ந்து அவருடைய மூன்றாவது மனைவி யமுனாபாயி சாஹேபும், ஐந்தாவது மனைவி சக்கவாற்பாயியும் உடன்கட்டை ஏறி மாண்டு போனார்கள். துளஜேந்திர ராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
முடிசூட்டு விழாவுக்கு ஆற்காடு நவாப் முகமது அலிகான் வஸ்திர மரியாதைகளையும் ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தார். இது தவிர நவாப் ஓர் அரிய பரிசையும் ராஜாவுக்காக அனுப்பியிருந்தார். அது ஒரு பறவை. "முதர் முறுக்" என்ற பெயர் கொண்ட ஒன்றரை ஆள் உயரமுடைய, அதாவது 9 அடி உயரம் உள்ள ஒரு அபூர்வ பறவை. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்கள் போல இருந்தது. இப்படியொரு அபூர்வ பரிசை ஆற்காடு நவாப் அனுப்பினார்.
அதன் பிறகு துளஜேந்திர மகாராஜா நாலைந்து வருஷங்கள் தனது தந்தையைப் போலவே தர்ம நெறி தவறாமல், மக்களுக்கு நன்மை செய்து கொண்டு ஆட்சி புரிந்து வந்தார்.
(இவர் ஆட்சி பற்றி தொடர்ந்து பார்க்கலாம்)

No comments:
Post a Comment