Arcot Nawab Mohamad Ali
தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 13
ஒரு பிரிட்டிஷ் மேஜர் வெடித்த பீரங்கிக் குண்டு சந்தா சாஹேபின் தோழன் ஆலம் கானின் தலையைச் சுக்கு நூறாக உடைத்ததையும், அவன் படைகள் சிதறுண்டு போனதையும், பலர் முகமது அலியின் படையிடம் கைதாகினர் என்பதையும் பார்த்தோம். இனி, சந்தா சாஹேப் தொடங்கிய இந்த யுத்தம் என்னவாயிற்று என்பதைப் பார்ப்போம்.
ஆலம் கானின் மரணம் சந்தா சாஹேபுக்கு பேரிழப்பாக இருந்தது. ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமோ என்று எண்ணத் தொடங்கினான் சந்தா சாஹேப். முகமதி அலியைச் சுலபமாக வென்று திருச்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் பிரெஞ்சுப் படையின் உதவியோடு இங்கு வந்தால் எத்தனை எதிர்ப்பு நமக்கு. தஞ்சை படைகள் ஒரு புறம்; புதுக்கோட்டை, ராமநாதபுரம் படைகள் ஒரு புறம். மைசூரிலிருந்து வந்திருக்கும் படைகள், போதாதற்கு ஆங்கிலேயரின் படைகள் வேறு. நாம் பிரெஞ்சுக்காரர்களை நம்பினால், முகமது அலி ஆங்கிலேயர்களைத் துணைக்குக் கொண்டு வந்து விட்டானே. இப்போது என்ன செய்வது? பொறியில் அகப்பட்ட எலிபோல தவித்தான் சந்தா சாஹேப்.
என்றாலும் போர் என்று வந்தாகிவிட்டது. வருவது வரட்டும் என்று தொடர்ந்து போர் புரிந்தான். பல நாட்கள் போர் நடந்தது. சந்தா சாஹேப் ஸ்ரீரங்கத்தில் இருந்தான். திருச்சிக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையே காவிரி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. வடபுறத்தில் தானும் பிரெஞ்சுக்காரர்கள் படையும் மாட்டிக் கொள்ள, மைசூர் நந்திராஜாவின் படைகள் மேற்கிலிருந்து தாக்க, முரார்ஜி கோர்படேயின் படைகள் ஒரு புறமும், மானோஜி ராவின் மராத்தியப் படைகள் கிழக்கிலிருந்தும் முன்னேறி வர, தெற்கே முகமது அலியின் படைகளும் பிரிட்டிஷ் படைகளும் தன்னை நாலா புறமும் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்க விழி பிதுங்கினான். அவன் படை வீரர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. நான்கு புறத்திலும் தாக்குதல் கடுமையாக நடந்தது. சந்தா சாஹேப் வெறு வழியில்லை இத்தோடு ஒழிந்தோம் என்று முடிவுக்கு வந்தான்.
சந்தா சாஹேபுக்குத் தெரிந்து விட்டது. இனி வேறு வழியில்லை. நாம் செய்த முயற்சிகளெல்லாம் வீணாகிவிட்டன. தப்பிப் பிழைத்துப் போகலாம் என்றாலோ போக வழியில்லை, எல்லா வழிகளும் எதிரிகளால் சூழப்பட்டு விட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் நம்மைப் பிடித்து விடுவார்கள். முகமது அலியிடம் என்னை ஒப்படைத்து விடுவார்களானால் அதைவிட கொடுமை வேறு வேண்டியதில்லை. அவன் நம்மைச் சித்திரவதை செய்தே கொன்று விடுவான். அவன் அப்பனை நான் கொன்றிருக்கிறேன் அல்லவா. இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கிற போது, எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி தஞ்சாவூர் மானோஜி ராவின் கொள்ளிதான். ஆகையால் அவரிடம் போய் சரணடைந்து காப்பாற்றச் சொல்லுவது ஒன்றுதான் வழி. அவர் ஒரு மூத்த போர் வீரன். இரக்க குணம் உள்ளவர். சரணாகதி என்று போய்விட்டால் நிச்சயம் அவர் நம்மைக் காப்பாற்றுவார். ஒருக்கால் நாம் அவர்களுக்குச் செய்த தீங்குகளை மனத்தில் வைத்துக் கொண்டு நம்மைக் காப்பாற்றாமல் போனால்? எது எப்படியோ, இவரைத் தவிர நமக்கு இப்போதைக்கு வேறு ஆளும் இல்லை, மார்க்கமும் இல்லை, ஆகவே மானோஜி ராவிடம் போய் சரணாகதி ஒன்றுதான் வழி என்று முடிவுக்கு வந்தான் சந்தா சாஹேப்.
சதாராவில் நம்மை விடுதலை செய்த போது ஷாஜு மன்னர் என்ன சொன்னார்? நீ எங்கு வேண்டுமானாலும் போ, ஆனால் தஞ்சாவூர் பக்கம் மட்டும் போய்விடாதே, ஏனென்றால் அது நம்முடைய அரசு என்று சொன்னாரே, அதை மனதில் வாங்காமல் இப்படியொரு தவறைச் செய்து பிரதாபசிம்ம ராஜாவையும் பகைத்துக் கொண்டோமே, என்று மனம் கலங்கினான்.
தஞ்சாவூர்க் காரர்களுக்கு முகமது அலியும், பிரிட்டிஷ் படையும் நண்பர்களாக இருக்கின்றனர். நிச்சயம் அவர்கள் நம்மை அவர்களிடம்தான் ஒப்படைப்பார்கள். ஆனால் முகமது அலியிடம் மாட்டிக் கொண்டால் அவன் நிச்சயம் நம்மை உயிரோடு தோலை உரித்துச் சித்திர வதை செய்து விடுவான். ஆகையால் நடப்பது நடக்கட்டும். நம்மை பலியிடுவதானால் மானோஜி ராவே அந்தக் காரியத்தைச் செய்யட்டும், என்ன ஆனாலும் சரி முகமதி அலியின் கையில் மட்டும் மாட்டவே கூடாது என்று முடிவெடுத்தான் சந்தா சாஹேப்.
அன்று இரவு .....
திருவரங்கத்தில் சந்தா சாஹேப் படைகள் முகாமிட்டிருந்த பகுதியில் எங்கும் ஒரே அமைதி. இரவு நேரத்தில் விளக்குகள் எதுவும் இல்லாத நேரத்தில் தனது கூடாரத்திலிருந்து சந்தா சாஹேப் மட்டும் வெளியே வந்தான். அங்குக் கட்டியிருந்த தனது குதிரையை அவிழ்த்துக் கயிற்றைத் தன் கரங்களால் பிடித்துக் கொண்டான். இருளில் அவனோடு வெளிவந்த பணியாள் ஒருவனையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு சிறிது தூரம் சத்தம் எழுப்பாமல் நடந்து சென்று பின்னர் அவன் குதிரையில் ஏறிக் கொள்ள, பணியாள் வழிகாட்டிக்கொண்டு ஓடிவர இருட்டில் கிழக்கே காவிரி ஆற்றின் கரையோடு பயணமானார்கள்.
காவிரிக் கரையோடு சில மைல்கள் ஓடிவந்த ஆளைப் பின்பற்றி சந்தா சாஹேபும் தன் குதிரையில் பயணம் செய்து ஓரிடத்துக்கு வந்து சேர்ந்தான். அந்தப் பகுதிக்குப் பாளையம் என்று பெயர். காவிரி நதியின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த அந்த இடத்துக்கு இப்போது கோயிலடி என்று வழங்கப்படுகிறது. அங்குதான் அப்பக்குடத்தான் எனும் பெருமாள் ஆலயம் இருக்கிறது. அந்தப் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மராட்டியப் படைகள் பாடி இறங்கியிருந்த கூடாரங்கள் இருந்தன. அவற்றின் நடுவில் தஞ்சைக் கொடி பறந்து கொண்டிருந்த கூடாரத்தில்தான் தளபதி மானோஜி ராவ் தங்கியிருந்தார்.
மானோஜி ராவை எழுப்பி தான் சரணடைய வந்திருக்கும் செய்தியைச் சொல்லச் சொல்லி தன்னுடன் வந்த பணியாளை அனுப்பிவைத்தான் சந்தா சாஹேப். அந்த பணியாள் தூங்கிக் கொண்டிருந்த மானோஜி ராவின் கூடாரத்துக்குச் சென்று அங்கு காவல் இருந்த வீரனிடம் தான் வந்திருக்கும் செய்தியைச் சொல்ல தளபதி எழுந்து வந்தார்.
தன்னிடம் சரணடைய சந்தா சாஹேப் வந்திருக்கும் செய்தியறிந்து முதலில் அதிர்ச்சியடைந்தார். என்றாலும் இருட்டில் ஒருவரும் அறியாமல் தன்னைத் தேடி வந்திருக்கும் அவனை எப்படி திரும்பிப் போ என்று சொல்லுவது, அல்லது அவனை கைது செய்வது? ஒன்றும் புரியாமல் அவனைப் போய்ப் பார்த்தார் மானோஜி. அவரிடம் தன் நிலைமைகளை யெல்லாம் எடுத்துச் சொல்லி தன்னுடைய இக்கட்டான இந்த நேரத்தில் மானோஜி ராவ் மட்டும்தான் தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதை உருக்கமாக எடுத்துரைத்தான்.
முகமது அலியிடம் மாட்டிக் கொண்டால் தன்னைச் சித்திரவதை செய்து கொல்வான். அந்த நிலை எனக்கு ஏற்படாமல் தாங்கள்தான் எப்படியாவது என்னைக் காப்பாற்ற வேண்டும். நான் உங்கள் மராத்தியப் படையிடம் சரணடைந்து விடுகிறேன். இனி தஞ்சை மன்னர் விட்ட வழி. நான் கட்டுப்படுகிறேன் என்றான்.
மானோஜி ராவ் அவனிடம், 'நீர் ஏன் தனியாக வந்தீர்? உம்மைக் காப்பாற்ற நம்மாலே ஆகாது. நீங்கள் இதுவரை செய்திருக்கும் காரியங்களினால் எங்கள் மகாராஜா உங்கள் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார். உம்முடைய சரணாகதியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தேவையானல் சிறிது பணம் தருகிறேன், அதை வாங்கிக் கொண்டு உங்கள் ஊர் பக்கம் ஓடிவிடுங்கள். அப்படி அங்கே போக விருப்பம் இல்லாவிட்டால் துணைக்கு விசுவாசமான ஆளை அனுப்புகிறேன். தெற்கு திசையில் அடர்ந்த காடுகள் இருக்கின்றன. அங்கு போய் மறைவாக இருந்துவிட்டுப் பிறகு உமக்குச் செளகரியப் படும்போது தப்பிச் சென்று எங்கு போக இஷ்டமோ அங்கு போய்விடலாம். அப்படியில்லை யென்றால் இங்கிருந்து உடையார்பாளையம் பகுதி காட்டுக்குள் போய் அங்கிருந்து வேட்டவலம், திருவண்ணாமலை, காட்டு வழியாக தப்பிப் போய் விடலாம். உமக்கு இதில் எது உசிதமோ அதன்படி செய்யும்', என்று கைகழுவி விட்டார்.
மானோஜி ராவ் சொன்ன எவையும் அவன் காதுகளில் ஏறவில்லை. ஒரேயடியாக மானோஜி ராவ் தான் தனக்கு கதி என்று அழிம்பு பிடித்தான். எனக்கு எதுவும் தெரியாது. உங்களை மட்டும்தான் நம்பி நான் இங்கு வந்தேன். நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய பெரிய உபகாரம் என்ன வென்றால், என்ன நேர்ந்தாலும் என்னை முகமது அலியிடம் உயிரோடு ஒப்படைத்துவிடக் கூடாது. அப்படியொரு நிர்ப்பந்தம் நேர்ந்தால், அவனிடம் ஒப்படைக்காமல் அதற்கு முன்பாகவே உங்கள் மனிதர்கள் கைகளால் என்னைக் கொன்று போடுங்கள் என்றான் கண்களில் நீர் சோர. நான் உங்கள் அபயம் என்று வீழ்ந்தான் சந்தா சாஹேப்.
அவனது நிலைமை கண்டு இரக்கம் கொண்டார் பெரிய மனது உள்ள மானோஜி ராவ். 'உன்னை முகமது அலியிடம் உயிரோடு ஒப்புவிக்க மாட்டேன், கவலைப் படாதே என்று அபயம் கொடுத்தார்.பிறகு அவனுக்குத் தங்குவதற்கு ஒரு இடத்தைத் தயார் செய்து கொடுத்து, அதனை பிறர் அறியா வண்ணம் ரகசியமாக வைத்திருந்தார். உடனே தஞ்சாவூருக்கு ஒரு தூதனை அனுப்பி மன்னரிடம் விவரமாக எல்லா விஷயங்களையும் சொல்லச் சொல்லி இரவே ஆளை அனுப்பினார்.
தூக்கத்தில் இருந்த ராஜாவுக்கு விஷயம் போனது. அவர் பதறித் துடித்து எழுந்து ஆலோசித்து மானோஜிக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பினார். அதில், சந்தா சாஹேப் நமக்குச் செய்திருக்கும் துரோகத்துக்கு எல்லாம், அவனிடம் இரக்கம் காட்டவே கூடாது; அவனைக் காப்பாற்றக் கூடாது. ஆனால், அவன் இப்போது நாமே கதி என்று சரணாகதி அடைந்திருக்கிறான். ஆகவே அவனை இப்போது நாம் கைவிடமுடியாது. அவனை இந்த நேரத்தில் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. ஆகவே அவனை உடனடியாக பிறர் அறியாவண்ணம் தஞ்சாவூருக்குத் தக்க பாதுகாப்போடு அனுப்பி வைக்கும்படி உத்தரவு அனுப்பினார். மானோஜி ராவ், மன்னர் சொற்படி அவனை பாதுகாப்பாகத் தஞ்சைக்கு அனுப்பி வைத்தார்.
(இனியும் தொடர்ந்து வரும்)
No comments:
Post a Comment