FINAL PART
தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 22
தஞ்சாவூரின் மாமன்னராக விளங்கிய சரபோஜி IV காலமான செய்தியைச் சென்ற பகுதியில் பார்த்தோமல்லவா. அவருடைய ஆட்சியின் தொடக்க காலத்திலேயே ஆங்கிலேயர்கள் ஆட்சி நிர்வாகத்தைத் தாங்களே வைத்துக் கொண்டு மன்னருக்கு செலவுக்கும், கோட்டை நிர்வாகம், பாதுகாப்பு இவற்றுக்காகவும் கணிசமான தொகையினை கொடுத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம். ஆக, சரபோஜி IV காலத்திலேயே தஞ்சாவூர் ஆங்கில கம்பெனியார் வசம் போய்விட்டது. இவருடைய காலத்துக்குப் பிறகு ராஜ்யம் இருந்த நிலைமை எப்படியிருந்திருக்கும் என்பதையும், சரபோஜி IV இன் ஆட்சி அதிகாரமில்லாத ஆட்சி என்பதையும்பார்க்கலாம்.
சரபோஜி IVஇன் இரண்டாம் மனைவி அகல்யாபாயிக்குப் பிறந்தவர் சிவாஜி II. 1808ஆம் வருஷம் பிரபவ வருஷம் மாசி மாதம் 23ஆம் தேதி 22-3-1808இல் இவர் பிறந்தார். அதே வருஷம் செப்டம்பர் 30இல் அன்னப் பிராச்சனம், குடுமி கல்யாணம், வித்யாரம்பம், இடுப்பில் சிறு கத்தி அணிதல் ஆகியவை 1811இல் நடைபெற்றது.
இவருக்கு 1818இல் இவரது 10ஆம் வயதில் திருமணம் நடைபெற்றது. முதலில் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சைதம்பா பாயி. ராமச்சந்திர சூர்வேயின் மகள் காமாட்சி அம்பாபாயி எனும் பெண்ணை இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி சரபோஜி IVஇன் மகள் வயிற்றுப் பேத்தி. மாமனைத் திருமணம் செய்து கொண்டார் இந்த சைதம்பாபாயி. மூன்றாவதாக ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார் இவர், அவள் பெயர் பத்மாம்பாபாயி. இவர்கள் அனைவருமே சிவாஜி IIக்கு முன்னதாகவே காலமாகிவிட்டனர்.
Shivaji II Raja
இவை தவிர 1852இல் 44ஆம் வயதில் ஒரே நாளில் இவர் 17 கல்யாணங்களைச் செய்து கொண்டாராம்.இவருக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒத்துப் போகவில்லை. 1838இல் இவரைப் பற்றி ரெசிடெண்ட் ஒரு புகாரை அனுப்பினார். 1848இல் ரெசிடெண்ட் சிவாஜி II தன்னை அலட்சியம் செய்து விட்டதாகப் புகார் அனுப்பினார்.
சிவாஜி II மகாராஜாவுக்கு கூடா நட்பு அமைந்திருந்தது. மாதுசாமி மாடிக் என்பவனுடைய நட்பினால், கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இவர் கடங்காரர் ஆனார். தாயாருடைய நகைகளை வாங்கி அடகு வைத்துப் பணம் வாங்கி செலவு செய்தார். ஸர்க்கேல் தேவாஜி ராவ் என்பவர் அரண்மனையில் ஒரு கெளரவமான அதிகாரி. அவரை இவர் பதவி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
இப்படி பல வகைகளிலும் நல்ல பெயர் எடுக்காமல் சிவாஜி II ராஜா 1855இல் தனது 48ஆம் வயதில் அக்டோபர் 25ஆம் தேதி காலையில் இறந்து போனார். சிவாஜி IIவின் மனைவியான காமாட்சியம்பாபாயி, கம்பெனிக்கும் மற்ற பாயிமார்களுக்கும் எதிராக ஒரு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். 1857இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அப்போது இந்தியாவில் பிரபல வழக்கறிஞ்சராக இருந்த நார்ட்டன் துரை என்பவர் வக்கீலாக இருந்த நடத்தினார். இந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் காரணமாகத்தான் மராத்திய மன்னர் பரம்பரையினருக்கு அவர்களுடைய சொத்துக்கள் திரும்பக் கிடைத்ததாகவும் தெரிகிறது.
1857 ஏப்ரல் 20ஆம் தேதியிட்ட ஒரு ஆவணத்தில் கீழ்கண்ட பாயிமார்களின் பெயர்கள் காணப்படுகின்றன.
சையம்பா உமாம்பா ஜயதாம்பா ஜீஜாயி
தீபாம்பா ராமகுமாரம்பா சகுணாம்பா அபரூபாம்பா
யஷ்வந்தம்மா அனசாம்பா கெளராம்பா அருணாம்பா
சுகுமாராம்பா கிரிஜாம்பா சீமாம்பா
ராஜா இறந்த போது இவருடைய இரு மனைவிமார்களின் வயது 20ம் 12ம் ஆகியிருந்தது. இப்படியாக புகழ் பெற்ற தஞ்சை மராத்திய ராஜ்யம் இந்த சிவாஜி IIஇன் காலத்தோடு முடிவுக்கு வந்தது. அதன் பின் ஆங்கிலேயர்கள் தஞ்சையை நேரடியாக ஆளத் தொடங்கிவிட்டனர்.
முடிவுரை:
தஞ்சை மராத்திய மன்னர்கள் இங்கு சுமார் 180 வருஷங்கள் அதாவது கி.பி. 1676 தொடங்கி 1855 வரையில் ஆட்சி புரிந்தார்கள். அவர்கள் கலை, இலக்கியம், சிற்பம், சித்திரம், மருத்துவம் ஆகிய கலைகளில் நாடு சிறந்து விளங்கும்படி செய்தார்கள். சரபோஜி IV காலத்தில்தான் சிறப்பாக இருந்தது. இந்த நான்காம் சரபோஜி 1798 தொடங்கி 1832 வரை மிக உன்னதமான நிலையில் தஞ்சை ராஜ்யத்தை வைத்திருந்தார். மன்னருக்கும் பல மொழிகள் தெரியும். பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கலைஞர்களையும் ஆதரித்து வந்தார்.
இவர் காலத்தில் வைத்திய சாஸ்திர கல்விக்காகவும், மேன்மைக்காகவும் "தன்வந்த்ரி மகால்" எனும் மருத்துவ சாலை இயங்கி வந்தது. இவரது மகன் சிவாஜி II காலத்திலும் இது போற்றி பாதுகாக்கப் பட்டது. இங்கு ஆங்கில முறை வைத்தியம் தவிர சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவ முறைகளும் கொடுக்கப்பட்டன. மனிதர்கள் தவிர பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றின் மருத்துவங்களும் இங்கு கவனிக்கப் பட்டன. அஸ்வ சாஸ்திரம் (குதிரை வைத்தியம்) கஜ சாஸ்திரம் (யானை) போன்றவற்றுக்கும் வைத்தியம் கற்பிக்கப் பட்டது.
தஞ்சாவூரின் கடைசி மன்னர்கள் பரம்பரை நாயக்க மன்னர்கள் அவர்களை யடுத்து மராட்டி மன்னர்கள் இருந்தார்கள். அவர்களுடைய காலம்
வருமாறு:
நாயக்க மன்னர்கள் 1532 முதல் 1673 வரை சேவப்ப நாயக்கர் தொடங்கி விஜயராகவ நாயக்கர் வரையிலான 141 ஆண்டுகள்.
மராத்திய மன்னர்கள் ஆட்சி 1676இல் தொடங்கி 1855 சிவாஜி II காலம் வரையிலான காலம் வரையிலான 179 ஆண்டுகள்
* இந்த வரலாறு மெக்கன்சி சுவடிகளைப் பின்பற்றி எழுதப் படுகிறது. இதில் கண்டுள்ள சில நிகழ்ச்சிகள் மற்ற சில வரலாற்றுக்கு மாறுபட்டுக் காணப் படுகிறது. குறிப்பாக சந்தாசாஹேபின் மரணம் குறித்தது. சந்தா சாஹேப் மானோஜி ராவிடம் சரணாகதி அடைந்தது, முகமது அலியின் வற்புறுத்தலால் சந்தா சாஹேப் தஞ்சையில் தலை வெட்டப்பட்டது இவைகள் வரலாற்றில் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சந்தா சாஹேப் சேனைக்குப் படை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வர போய்க்கோண்டிருந்த போது அவரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றதாகவும் சொல்லப் படுகிறது.
** மகாராஜா சரபோஜி IV தனது அன்பிற்குரிய முக்தாம்பாளின் வேண்டுகோளுக்கிணங்க அன்ன சத்திரம் கட்டியது ஒரத்தநாடு எனுமிடத்தில். அந்த சத்திரமும், இன்னம் வேறு பல ஊர்களிலும் கட்டப்பட்ட சத்திரங்களும் பலகாலம் சேவை செய்தன. அவற்றின் சொத்துக்கள் அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருவாய்த் துறையில் சத்திரம் இலாகா என்று ஒன்று இன்றும்கூட பல ஸ்தாபனங்களை நடத்தி வருகின்றன. முக்தாம்பா சத்திரத்தில் தங்கி இலவசமாக உணவும், இருப்பிடமும் தந்து படித்தவர்கள் ஏராளம்.
***மகாராஜா சரபோஜி திருவையாற்றில் சம்ஸ்கிருதம் கற்பதற்கென்று ஒரு கல்லூரியை உருவாக்கினார். அந்தக் கல்லூரி முதலில் சம்ஸ்கிருதம் மட்டும் கற்பிக்கப் பயன்பட்டது. பின்னர் தமிழ் படிக்கவும், அதன் பின் இப்போது அது ஒரு கலைக்கல்லூரியாகவும் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. கல்வியிலும் கலைகளிலும் சரபோஜி ஆர்வம் கொண்டிருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
வரலாற்றில் குறிப்பிடப்படும் இரண்டு நிகழ்ச்சிகள் ருசிகரமானவை. அதில் ஒன்று:--
***காஞ்சி காமகோடி மடத்தை அலங்கரித்த சந்திரசேகரேந்திர சுவாமிகள் என்பவர் திருவானைக்காவில் இருக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடகம் செய்து, ஆலய குடமுழுக்கையும் முடித்து வைத்தார். அப்போது அவர் காஞ்சியில் இல்லாமல், கும்பகோணத்துக்கு வந்து விட்டார். அவர் கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகிப் போனது. ஆகையால் அவர் காவிரியின் வடகரையோடு திருக்காட்டுப்பள்ளி, திருனெய்த்தானம், திருவையாறு வழியாக கும்பகோணம் திரும்பும் வழியில் தஞ்சை மன்னரிடம் நிதியுதவி கேட்டனுப்பினார். அப்போதைய மன்னர் (துளஜேந்திர ராஜாவாக இருக்க வேண்டும்) மறுத்துவிட்டார். சுவாமிகளை அவர் தஞ்சைக்கு விஜயம் செய்யும்படி கேட்டுக் கொண்டார். சுவாமிகள் பணம் இல்லாமையால் தஞ்சைக்கு விஜயம் செய்யாமல் காவிரிக் கரையோடு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். மன்னர் சில வீரர்களை அனுப்பி சுவாமிகளின் பரிவாரத்தை வழிமறித்துச் சிறைப்பிடித்து மரியாதையுடன் தஞ்சைக்கு வரவழைத்தார். ஊருக்குள் நுழையும்போது சுவாமிகளுக்குப் பூரணகும்ப நாதஸ்வர மரியாதைகளுடன் அவரை வரவேற்று உபசரித்து, அவர் ஊர் செல்லும்போது நிறைய பணமும் கொடுத்தனுப்பினாராம். மடத்துக்கு இருந்த கடங்கள் அனைத்தும் இந்தப் பணத்திலிருந்து கொடுக்கப்பட்டு மீதம் இருந்தது. அதை நிலம் வாங்கி முதலீடு செய்ய நினைத்த போது, திருப்பனந்தாள் அருகில் ஒரு கிராமத்தில் நிலங்கள் விற்பனைக்கு வந்ததால் கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார் (நமது ஜி.கே.மூப்பானாரின் பாட்டனார்) தலையிட்டு அந்த நிலங்களை வாங்கி மடத்துக்குக் கொடுத்து நிரந்தர வருமானத்துக்கு வழிவகை செய்தாராம்.
***மற்றொரு நிகழ்ச்சி, திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்து வந்தவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். சதாசர்வ காலமும் ஸ்ரீ ராமபிரானையே நினைத்துப் பாடி வந்தவர். அவருடைய புகழ் நாடெங்கும் பரவிவந்த போது அவரைத் தன் அரசவைக்கு அழைத்துப் பாடப் பணித்ததாகவும், ஸ்ரீ சுவாமிகள் மறுத்து "நிதிசால சுகமா?" எனும் கீர்த்தனத்தைப் பாடினார் என்றும் கூறப்படுகிறது. திருவையாற்றிலும் காவிரியாற்றுக் கரையில் தஞ்சை மராத்திய மன்னர்களுக்கு ஓர் அரண்மனை இருந்தது. காவிரிக் கரையில் அமைந்த புஷ்ய மண்டபத் துறையும் புனிதமாக அவர்களால் போற்றப்பட்டது. அங்கு இசைக் கல்லூரி ஒன்றையும் நிறுவி அது இப்போது சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
***
*** சரபோஜி IV பதவிக்கு வருவதற்கு முன்பு துளஜாவின் தம்பி முறையான அமர்சிங் (அமரசிம்மன்) பதவி வகித்தார். இவரைப் பற்றி இரு வேறு விதமான செய்திகள் காணப்படுகின்றன. அமரசிம்மனின் ஆட்சி காலத்தில் சில சிறப்புகளையும் சில செய்திகள் கூறுகின்றன. அவருடைய காலத்தில் மழையில்லாமல் நாடு வரண்டு கிடந்ததாம். குறைகளை முறையிட மக்கள் வந்தபோது மன்னர் அவர்களுக்கு தைரியம் சொல்லி அனுப்பினார். அரசர் எந்த ஊருக்குப் போகிறாரோ அங்கெல்லாம் மழை பெய்ததாம். அதனால் இவருக்கு மழைராஜா என்ற பெயர் வந்தது.
(*இது அமரசிம்மனை தெய்வீக அருள் பெற்றவராகக் காட்டுவதற்காக அவரது ஆதரவாளர்கள் எழுதி வைத்தக் குறிப்புகள் என்றும், இவை போன்ற செய்திகள் 'திருவிடைமருதூர் பதிவுகள்' எனும் சுவடிகளில் இருப்பதால், இவை அமரசிம்மனின் ஆதரவாளர்களால் எழுதப் பட்டது என்றும் ஒரு கருத்து உண்டு.)
*அவருடைய சமஸ்தானத்தில் புலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததாம். அரசர் புலி வேட்டைக்குச் சென்று 22 வேங்கைப் புலிகளைச் சுட்டு வீழ்த்தினாராம்.
*கம்பெனிக்குத் தரவேன்டிய சுபா அதிகமாகவே தஞ்சையின் நான்கு சுபாக்களில் இரண்டை கம்பெனி தன்வசப்படுத்திக் கொண்டதாம்.அப்படியும் ராஜா தர வேண்டிய தொகை பாக்கி இருந்ததாம்.
*1795இல் அமரசிம்மன் ராமேஸ்வரம் யாத்திரை சென்றார். வழியெல்லாம் தண்ணீர் பஞ்சம் இருந்தது. ஆனாலும் இவர் போகுமிடங்களில் மழை பெய்ய பஞ்சம் தீர்ந்ததாம். குடிமக்கள் ஏராளமானோர் இவரோடு அந்த யாத்திரையில் பங்கு கொண்டனராம். ராமேஸ்வரத்தில் இவர் துலாபாரம் செய்து கொண்டதும், அங்கு நாகப் பிரதிஷ்டை செய்ததும் வரலாற்றின் ஏடுகளில் இருக்கின்றன.
இந்த அமர்சிங்கின் பதவி நீக்கத்துக்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவை:
1. துளஜாவின் மனைவியர் சரபோஜிக்கு பட்டம் கிடைக்க வேண்டி சென்னைக்குச் சென்று ஆங்கில அதிகாரிகளிடம் வேண்டினர்.
2. அப்போது ரெசிடெண்டாக இருந்த டூரியன் என்பவர் சரபோஜிக்கு ஆதரவாக இருந்தார்.
*அமரசிம்மனுடைய மூன்றாவது மனைவியாகிய பவானிபாயி சாஹிபுக்கு கி.பி.1798இல் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பிரதாபசிம்மன்.
*அமரசிம்மன் அரச பதவியை இழந்த பிறகு கோட்டையின் மூலையில் 22 மாதங்கள் தங்கியிருந்தார், பிறகு திருவிடைமருதூருக்கு 1800இல் புறப்பட்டுச் சென்றார். வழியில் ஆலங்குடியில் 25 நாட்கள், கும்பகோணத்தில் 57 நாட்கள் தங்கியிருந்தார்.
*அமர்சிங் 1802இல் இறந்தார். அவர் இறந்த பொழுது சந்தன மழை பெய்ததாம். அவரோடு அவரது நான்காம் மனைவி பார்வதிபாயி உடங்கட்டை ஏறி மாண்டு போனாள். அவள் தவிர அவருடைய போகஸ்திரி ருக்குமணி தீக்குளித்து இறந்தாள்.
*அமரசிம்மனுக்குக் கொடுக்கப்பட்ட ஓய்வூதியம் 25000 வராகன். அவருடைய மகனுக்கும் அது பின்னர் கொடுக்கப்பட்டது.
*அமரசிம்மனின் மகன் பிரதாபசிம்மன் தன் மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்வதாக இருந்தான். ஆனால் அதற்கு முன்பு அவன் இறந்து போகவே அந்தப் பெண் திருமணம் ஆகாவிட்டாலும் கடைசி வரை கைம்பெண்ணாகவே இருந்தாள்.
*மராட்டிய வம்சாவளியில் சுஜான்பாயி ஆட்சி புரிந்த தகவலை சில ஆசிரியர்கள் குறிப்பிடவில்லை.
தஞ்சை போன்ஸ்லே வம்ச மரம்.
ஏகோஜி IV
(1.தீபாபாயி 2. சயிராபாயி 3. அண்ணுபாயி 4. அபிமான மனைவியர் 9 பேர்.)
|
ஷாஜி
|
சரபோஜி III
|
துக்கோஜி
|
பாவா சாஹிப் பிரதாப சிம்மன்
|
துளஜா ராஜா அமர்சிம்மன்
|
ஸ்வீகாரம் சரபோஜி IV
|
சிவாஜி II
தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு நிறைவு பெற்றது.
குறிப்பு: இந்த வரலாறு முழுவதும் மெக்கன்சி சுவடிகளை அடிப்படையாகக் கொன்டது. பல வரலாறுகள் இருந்த போதும் சுருக்கமாக தஞ்சை வரலாற்றைக் குறித்த நூல் எதுவும் இல்லை. இதனைப் படிக்கும் அன்பர்கள் தங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுத வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
குறிப்பு:-- மெக்கன்சி சுவடிகளின் அடிப்படையில் இந்த வரலாறு எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது அல்லவா? யார் இந்த மெக்கன்சி என்பதை இப்போது பார்க்கலாம்.
கர்னல் காலின் மெக்கன்சி (1754 - 1821)
"மெக்கன்சி சுவடிகள்" எனக் குறிப்பிடப்படும் சுவடிகள் சென்னை அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் (Government Oriental Manuscripts Library) பேணிக் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இந்த வரலாற்றுச் சுவடிகளை எழுதி வைத்து தமிழ் நாட்டில் மராத்தியர்களின் சரியான வரலாற்றைத் தொகுத்துத் தந்திருப்பவர் இவர்.
Alphabetical Index of Tamil Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras, Vol. III parts I and II (Mackenzie's collection) Madras 1951.
இந்த கர்னல் மெக்கன்சியின் வரலாற்றை இப்போது பார்ப்போம். இவர் ஸ்காட்லாந்து நாட்டில் Island of Lewis எனும் தீவில் Storno நகரத்தில் 1754இல் பிறந்தவர். தன்னுடைய முப்பதாவது வயதில் 1783இல் இந்தியாவுக்கு வந்தார். 1821இல் இவர் காலமாகும் வரையிலும் இந்தியா, இலங்கை, ஜாவா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து தனது திறமை காரணமாகப் பல பதவி உயர்வுகள் பெற்று சிறப்பாக வாழ்ந்தார். ஸ்காட்லாந்தைவிட்டுப் புறப்பட்ட பின் இவர் இறக்கும் வரை தாய் நாட்டுக்குத் திரும்பவில்லை.
இவருக்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. ஒரு சகோதரர் அலெக்சாண்டர் என்பவர் கனடா நாட்டிலும், கென்னத் என்பவர் வேறொரு நாட்டிலும், சகோதரி மேரி என்பவர் தன் சொந்த ஊரிலும் இருந்தார்கள்.
அப்போது கிழக்கிந்திய கம்பெனி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகம் செய்ய கப்பல்களில் புறப்பட்டு வந்தனர். அப்படி சிறப்புப் பெற்ற கிழக்கிந்திய கம்பெனியில் இவர் 2-9-1783ல் வேலைக்குச் சேர்ந்தார். இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் இருந்த காலத்தில் இவர் ஒரு பொ றியாளராக பணியாற்ற இந்தியா வந்து சேர்ந்தார்.
பொறியாளராக இருந்த போதும், அப்போது கிழக்கிந்திய கம்பெனியார் போர்களில் ஈடுபட்டு வந்ததால், இவரும் போரில் ஈடுபடுத்தப்பட்டார். அங்கு இவருடைய திறமையால் இவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.
முதலில் நில அளவைத் துறையில் பணியாற்றியபோது 1810இல் இவர் தலைமை நில அளவையாளராக பதவி உயர்வு பெற்றார். அந்த நாளிலேயே இவர் ரூ.1500 ஐ மாத ஊதியமாகப் பெற்றார். 1816இல் இவர் ராயல் ஏஷியாட்டிக் சொசைடியில் உறுப்பினரானார். 1811இல் இவர் ஜாவாவுக்குச் சென்று பணியாற்றினார்.
1796இல் இலங்கைக்குச் சென்றபோது அங்கு ஈழம் பற்றிய செய்திகளைத் தொகுத்தார். Cavelly Venkata Boriah என்பவர் இவருக்கு இந்தப் பணிகளில் உதவி வந்தார். இந்தியா திரும்பிய பின் இவர் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து வந்தார். அவை அனைத்தும் நாட்டின் வரலாற்றையொட்டியப் பதிவுகள் ஆகும்.
பல மொழி பேசுபவர்கள் இவருக்கு உதவி புரிந்தார்கள். அப்படி ஊழியம் புரிந்தவர்களுக்கு இவர்கள் நல்ல ஊதியமும் வழங்கினார். இவருக்கு உதவியர்கள் முறையே: Cavelly Venkata Boriah, Cavelly Venkata Letchumaiya, Abdul Azeez, Bhaskaraiah, Babu Rao, Ramasamy, Srinivasaiah, Sivaramaiah ஆகியோராவர். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவர்கள் வல்லவர்கள். இவர்களுக்கெல்லாம் மாதம் 40 முதல் 50 வராகன் வரை ஊதியம் வழங்கப்பட்டது.
இவருடைய இந்த வரலாற்றுத் தொகுப்புப் பணியைப் பாராட்டி கம்பெனியார் இவருக்கு மாத ஊதியம் 200 வராகனுடன் மேலும் 100 வராகன் சேர்த்துக் கொடுத்தனர். ஒரு முறை கம்பெனியின் இயக்குனர்கள் இவரது பணியைப் பாராட்டி 9000 வராகன் நன்கொடை அளித்தனர்.
இந்தத் தொகுப்புப் பணிக்காக இவர் செலவிட்ட தொகை 15000 பவுண்டுகள் எனத் தெரிகிறது. வெங்கட லெட்சுமையா என்பவர் உதவியாளர்களுள் முதன்மையானவர். இவருடைய தொகுப்புக்களை அந்த நாள் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கம்பெனி சார்பில், மெக்கன்சியின் மனைவியிடமிருந்து 10000 பவுண்டு விலைக்கு வாங்கினார்.
இவருடைய அறுபதாவது வயதில் 1812இல் பெட்ரோனெல்லா ஜாகோமினா பார்டெல்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1820இல் உடல் நலம் குன்றி கல்கத்தாவிலுள்ள செளரங்கீ எனுமிடத்தில் தனது 68ஆம் வயதில் உயிரிழந்தார்.
நன்றி: "தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு" ஆசிரியர் கே.எம்.வெங்கடராமையா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.
"சரபோஜி மஹாராஜா" சரஸ்வதி மஹால், தஞ்சாவூர் வெளியீடு.
"போன்ஸ்லே வம்சத்து வரலாறு" சரஸ்வதி மஹால் வெளியீடு, தஞ்சாவூர்.
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய "தஞ்சாவூர் நாயக்கர்கள் வரலாறு" சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.