பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 26, 2011

மராத்தியர் வரலாறு - Part 21


Serfoji II
தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 21

சென்ற பகுதியில் துளஜா ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட சிறுவன் சரபோஜி இங்கிலீஷ் கம்பெனியாரின் துணையோடு அமர்சிங்கைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தஞ்சாவூர் ராஜயத்தின் ராஜாவாகப் பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். இந்த அமர்சிங்கைப் பற்றி ஆங்கிலேயர்களுக்கு எதிரான உணர்வுகள் கொண்ட தேசபக்தன் எனவும் ஒரு வரலாறு உண்டு. அதற்குள் இப்போது போக வேண்டாம். தஞ்சாவூர் ராஜதானியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம். இனி....

சரபோஜி, இந்தப் பெயர் தஞ்சை மராட்டிய மன்னர்கள் வரலாற்றில் பெருமைக்குரிய பெயராக விளங்கியது என்பது அனைவருக்கும் தெரியும். அவரது காலம் தஞ்சையின் கலை, இலக்கிய வளர்ச்சிகளுக்கு வித்திட்டது என்பதையும் அனைவரும் அறிவர். அவர் காலத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்ந்து வந்தனர். அதிலும் அவர்கள் அனைவரும் சரபோஜியின் ஆளுகைக்குட்பட்ட ஊர்களில்தான் இருந்தனர் என்பதும் பெருமைக்குரிய விஷயம். வைத்திய சாஸ்திரத்தில் வல்லவர்களும், தமிழ்ப் புலவர்களும் இவருடைய சபையில் ஆதரிக்கப் பட்டனர். இவர் செய்த ஒரு புதுமை என்னவெனில், வைத்திய சாஸ்திர நுணுக்கங்களை வைத்தியர்கள் எழுத, அதனைக் கவிதை வடிவில் புலவர்கள் வடித்து வைக்க, இன்றும்கூட "சரபேந்திர ராஜ வைத்திய முறைகள்" எனும் கவிதை நூல்கள் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. இவை சரஸ்வதி மகால் நூலகத்தின் வெளியீடுகள்.

சரபோஜி II என்ற அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்படும் மன்னர் சின்னஞ்சிறு இளைஞனாக பதவிக்கு வந்து நீண்ட காலம் பதவி வகித்து முதிர்ந்த வயதில் காலமானார். இவர் பதவிக்கு வந்தவுடன் தான் பதவுக்கு வருவதற்கு முன்பாக நடைபெற்ற அநியாயங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்தார். மக்கள் பல தொல்லைகளை அனுபவித்த காரணத்தால் அவர்களுக்கு நன்மை பயக்கும் பல காரியங்களை நடைமுறைப் படுத்தினார். ராஜாங்கத்தின் கணக்கு வழக்குகளில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்த பெரும் பெருச்சாளிகளைத் துரத்திவிட்டு, அவற்றைச் சீர் செய்தார்.

தனக்குச் சமமான அந்தஸ்து உள்ள காட்டிகே குலத்திலிருந்து யமுனாபாயி, அகல்யாபாயி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து தஞ்சாவூர் ராஜ்யத்துக்கு வரவேண்டியிருந்த பாக்கி பணத்தைத் திரும்பப் பெற்றார். தஞ்சாவூரில் அப்போது Resident எனும் பதவியில் இருந்தவரான Macleod என்பவர் சரபோஜியிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இவர் மீதான புகார்களை சரபோஜி மன்னர் 1800ஆம் வருஷம் மே மாதம் 27ஆம் தேதி ஒரு கடிதம் மூலம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தார். அதன் பேரில் தஞ்சை அரசாங்க அதிகாரிகள் சிலரை கம்பெனியார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

அதன்படி தத்தாஜியப்பா என்பவருடைய தலைமையில் மேலும் இரண்டு அதிகாரிகளைச் சென்னைக்கு விசாரணையில் பங்கு கொள்ள அனுப்பி வைத்தார் சரபோஜி. கம்பெனி அதிகாரிகள் இவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் ரெசிடெண்ட் மெக்லோட் மீது தவறு இருப்பது தெரிய வந்தது. ஆகையால் அவர் பதவி நீக்கம் செய்யப் பட்டார். பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ரெசிடெண்ட் மெக்லோட் பதவி போனதும் மிகவும் மனம் நொந்து போனார். சரபோஜிக்குத் தான் இழைத்த தீங்குகள் அவரது மனச்சாட்சியை வருத்தியிருக்க வேண்டும். அவரும் அவருடைய மனைவியும் ராஜாவிடம் சென்று தங்கள் பதவி போனபிறகு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியைச் சொல்லி வருத்தப் பட்டனர். ராஜாவும் மிகவும் பெருந்தன்மையுடன், அவர் தனக்குச் செய்த தீங்குகளை நினையாமல் அவருக்கு பதினாயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார்.

ராஜா சரபோஜியின் இரண்டாவது மனைவி அகல்யாபாயிக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சுலட்சணாபாயி என்று பெயரிட்டு அருமையாக வளர்த்தனர். சரபோஜிக்கு முன்பாக ராஜ்யத்தை ஆண்ட அமர்சிங் சரியான முறையில் ஆட்சி செய்யாததால் மக்கள் வருத்தமடைந்ததை யொட்டி பிரிட்டிஷ் கம்பெனியார் தாங்களே ராஜ்யத்தை ஆள முன்வந்த போது சரபோஜியும் அதற்கு சம்மதித்து ஆட்சிப் பொறுப்பைக் கம்பெனி கவனித்துக் கொள்ள அனுமதித்தார்.

மெக்கன்சி சுவடிகளின் படியும், மராத்திய வரலாற்றுச் செய்திகளின்படியும், பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்களின் கூற்றுப்படியும் அமர்சிங்கின் மீது பல குறைகள் கண்டுபிடிக்கப் பட்டாலும், நிலைமை அப்படி இல்லை என்பதும் வேறு பல வழிகளில் தெரிய வருகிறது. அமர்சிங்கைப் பற்றிய ஓர் ஆங்கில வரலாற்றாசிரியரின் கூற்றைப் பாருங்கள்.

"A liberal prince (Amar Singh) no doubt, he worked for the welfare of his people. Anxious to promote cultivation, he granted an increase of the ryot's share of the produce, suspended the colletion of duties on grain exported for the relief of the famine sticken Ramnad in 1794, set up a Court and introduced individual settlement in the place of the village settlement."

அமர்சிங் காலத்தில் அவர் அமைச்சர் சிவராயரை தற்போது குடிவாரம் எவ்வளவு என்று கேட்க அவர் 'அனேக நாட்களாக குடிமக்கள் 100க்கு 30 வாரம் பெறுகின்றனர்' என்றார், உடனே அமர்சிங் இனி 100க்கு 40 வீதம் கொடுங்கள் என்று உத்தரவிட்டாராம். இதிலிருந்து ராஜா மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. எனினும் சரபோஜியையும், ஆங்கில கம்பெனியாரையும் ஆதரிப்போர் அமர்சிங் பற்றி ஒரு அவதூறான செய்தியைப் பரப்பி அவரை நீக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

அமர்சிங்குக்கு அரசுரிமை இருக்கிறதா இல்லையா என்பது வேறு. ஆனால் அவர் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்தினாரா இல்லையா, மக்கள் நலனில் அவருக்கு அக்கறை இருந்ததா இல்லையா என்பது வேறு. எனவே அவரை பூதம் போல உருவகப் படுத்தும் முயற்சி நடைபெற்று அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் கணிக்க முடிகிறது. இல்லையா?

தஞ்சாவூருக்கு ராஜா சரபோஜி மன்னனாக வந்த பிறகு ஆங்கிலேய கம்பெனியார் தங்கள் படைகளை கோட்டையிலிருந்து விலக்கிக் கொண்டு காலி செய்து கொடுத்தனர். அது வரையிலும் தஞ்சை ராஜாவை நம்பாதவர்கள் சரபோஜி வந்ததும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்க வேண்டும். தஞ்சை ராஜாங்கப் பணிகளை கம்பெனியார் எடுத்துக் கொள்ள வேண்டுமெங்கிற முடிவை எடுத்த போது கல்கத்தாவிலிருந்து கம்பெனியின் இந்திய தலைமை அகம் சென்னை கம்பெனியாருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதன்படி சரபோஜியின் சம்மதத்தைப் பெறும்படி கூறியிருந்தனர். ராஜாவும் தனது மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தார்.

தஞ்சை மன்னர் சரபோஜியும் ஆங்கில கம்பெனியாரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி ஆங்கிலப் படை தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறிவிடும் என்றும், அதன் பின் ராஜா கோட்டையைத் தன் விருப்பப்படி வலுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த ஒப்பந்தம் சொல்லியது. அந்த ஒப்பந்தப்படி கம்பெனியார் ராஜாவின் செலவுகளுக்காக ஒரு லட்சம் நட்சத்திர பகோடா பணமும், வரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கையும் எல்லா செலவுகளும் போக மீதியை அமர்சிங்கை ஆதரிப்பதற்காகக் கொடுப்பதென்றும் தீர்மானித்தது. ஆண்டுக்கு 25000 பகோடா அமர்சிங்குக்குக் கொடுக்க முடிவானது. இந்த ஒப்பந்தம் 1801இல் செய்து கொள்ளப் பட்டது.

இனி கொஞ்சம் ராஜாங்க சமாச்சாரத்துக்கு மாறான சில சொந்த விவகாரங்களைப் பார்க்கலாம். ராஜா சரபோஜி இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட செய்தியைப் பார்த்தோமல்லவா. அந்தத் திருமணத்துக்கு முன்பாக அவருக்கு ஒரு நல்ல அழகியும், குணவதியுமான பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்தப் பெண்ணும் ராஜாவுக்கு மனதுக்கு உகந்த வகையில் நடந்து கொண்டு அன்னியோன்னியமாக இருந்து வந்தாள். அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போயின. இரண்டாவது பிரசவத்தின் போது அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.

அவள் ஒரு நாள் ராஜாவிடம் தன் நினைவாக அன்னசத்திரம் ஒன்றை கட்ட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தாள். அப்படியொரு விருப்பத்தைத் தெரிவித்திருந்த காரணத்தால், அவள் காலமானதும் ராஜா அவள் விருப்பப்படி ஒரு அன்ன சத்திரம் கட்ட முடிவு செய்தார். அந்தப் பெண்ணின் பெயர் "முக்தாம்பாள்". அவளுடைய பெயரில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஒரத்தநாட்டில் ஒரு அக்ரகாரம், கோயில், குளம், தோட்டம் இவற்றையும் அமைத்து அங்கு வேத பண்டிதர்களையும் குடியமர்த்தி அங்கு "முக்தாம்பாள் சத்திரம்" நிறுவப் பட்டது.

இந்த சத்திரம் தொடர்ந்து நன்றாக நடைபெறும் வகையில் அதற்கென்று நிலபுலங்கள் நிவந்தங்களாகத் தரப்பட்டன. இந்த ஆவணம் 1802 ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி துன்மதி வருஷம் துவக்கி வைக்கப்பட்டது. அந்த சத்திரத்தின் வாசலில் இருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகின்ற செய்தி இதோ:--

"ஸ்ரீமத் போஸ்லே வம்சோத்தம இந்த்ரபதி சிரேஷ்டப்ரஸாத ஜனித ப்ரதாப ஸ்வீக்க்ருததில்லீ வானுபாக ஸ்வாதந்தர்ய வ்பட்சக்ருத தில்லி ராஜ்ய ஸார்வபெளம க்ஷோணீச குலலாம சோளாவனீ நாயக தஞ்சபுராதீச ஸ்ரீமந்த மகாராஜா சத்ரபதி சரபோஜி ராஜே ஸாஹேபயானி ஸ்த்ரீ ஸெளபக்யவதி முக்தாபாயி அம்மாசே நாவே ஸ்ரீஸேது மார்க்கீந்த தஞ்சபுரவ பட்டுக்கோட்டை யாதினீஸ்தலாச மத்யபூமீந்த அன்ன ஸத்ரவ, அக்ரஹாரவ, சிவாலயவ, விஷ்ணுஸ்தல இத்யாதி அமோக தர்ம ப்ரதிஷ்டிலா தாரீக -- சாலிவாஹன சகம் 1722 துன்மதி நாம ஸம்வத்ஸரம் புஷ்ய சுத்த த்ரயோதஸி ஸ்திர வாஸாதிகளீ தை மாசம் பான்சு / ஆங்கிலம் 16-1-1802 ஆகும்."

இன்றும் அந்த சத்திரம் உத்தமி முக்தாம்பாள் நினைவாக ராமேஸ்வரம் செல்லும் யாத்திரீகர்கள் தங்கும் விடுதியாக நிர்வகிக்கப் பட்டு வருகிறது.

இதன் பிறகு ராஜா தீர்த்த யாத்திரைக்காக சோழ மண்டலம் முழுவதும் ஒரு முறையும், ஸ்ரீரங்க யாத்திரை ஒரு முறையும், காவிரி கடலில் கலக்கும் பூம்புகாருக்கு ஒரு முறையும், பழனி மலைக்கு ஒரு முறையும், கங்கை நதியில் புனித நீராடுவதற்கு ஒரு முறையும் பயணம் செய்தார். அப்படி அவர் யாத்திரை செல்லும் வழியெல்லாம் ராஜாவுக்குத் தகுந்தபடி மரியாதைகள் செய்ய ஏற்பாடுகள் செய்து வைக்க தஞ்சை ரெசிடெண்டும் கூடவே வந்தார். கம்பெனி ஒப்பந்தப்படி ராஜாவுக்கு ஏற்ற மரியாதைகளை செல்லுமிடங்களில் எல்லாம் கம்பெனி ஏற்பாடு செய்து தரும்.

மேலும் அந்த ஒப்பந்தப்படி கம்பெனியாருக்கு யுத்தம் காரணமாகத் தேவைப்படும் போதெல்லாம் கோட்டையை உபயோகிக்க அனுமதியும் கொடுக்கப் பட்டிருந்தது. ரெசிடெண்ட்டாக இருந்த Blackburn என்பவர் ராஜா கம்பெனிக்கு உறுதுணையாகவும், நாணயமாகவும் நடந்து கொண்டிருப்பதாகக் கம்பெனி உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார்.

இந்த ரெசிடெண்ட் Blackburn பணிக்காலம் முடிந்து தன் ஊருக்குத் திரும்பிச் சென்ற பிறகும் சரபோஜியிடம் அன்பு கொண்டு அவருக்குச் சில புத்தகங்க்கள், பூகோளப் படங்க்கள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்தார்.

பழனிக்கு யாத்திரை போகும் முன்னதாக ராணி அகல்யாபாயிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ராஜகுமாரபாயி என்று பெயர் வைத்தார்கள். இவர் காலத்தில் ஓர் அபூர்வமான பறவை எங்க்கிருந்தோ அரண்மனைக்கு வந்து சேர்ந்தது.

மகாராஜாவின் மனைவி அகல்யாபாயிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பாயம்மாபாயி என்று பெயரிட்டார்கள். ராஜா எல்லா மதத்தினரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். இவர் எப்போதும் சிவபூஜை செய்வார். புராண இதிகாச சரித்திர பிரவசனம் கேட்டுக் கொண்டிருப்பார். இந்த மராட்டிய மன்னர்களின் வரலாற்றை சிட்னீஸ் பாபுராயர் என்பவரைக் கொண்டு மன்னர் எழுதச் செய்தார். 1803 மார்ச் மாதம் 25ஆம் தேதி இந்தப் பணி தொடங்கப் பட்டது.

1832 மார்ச் 8ஆம் தேதி சரபோஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. மாடியிலிருந்து கிருஷ்ண விலாசம் என்கிற அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கிருந்த எல்லா மஹால்களும் சீல்வைத்து மூடப்பட்டன. அரண்மனைக்கு பலத்த காவல் போடப்பட்டது. இரவு 6 நாழிகையில் பிராயச்சித்தம் எனும் இறப்பதற்கு முன்பு செய்யப்படும் சடங்கு நடந்தது. இரவு 11 நாழிகைக்கு ராஜா உயிர் நீத்தார். காலையில் ஊர் முழுவதும் தண்டோரா போட்டு அறிவிக்கப் பட்டது. காலையில் படைகளின் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் கோட்டைக்கு வெளியே கொண்டு வரப்பட்டது. வடக்கு வாசலில் அலிதர்வாசாவில் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க்க அக்னி மூட்டப் பட்டது. அவருடைய அப்போதைய வயது 54 என்பதைக் குறிக்கும் வகையில் 54 குண்டுகள் முழங்கின. அவரது மகன் சிவாஜி II அவருடைய சிதைக்கு தீ மூட்ட மன்னரின் உடல் தீக்கு இறையானது. அவரைத் தொடர்ந்து சிவாஜி II பட்டத்துக்கு வந்தார்.

(நிறைவை நோக்கி வந்து விட்டோம்)

1 comment:

Unknown said...

மன்னர் சிரபோஜியின் மறைவு வருத்தம் அளித்தாலும்.... வெள்ளையர்களின் நடவடிக்கை நல்லவர்களாக செயல் பட்டிருந்ததையும் காண முடிகிறது...
அமர்சிங்கும் விரட்டி அடிக்கப் படாமல்.. தகுந்த மரியாதையுடனும்.. அவனின் பாதுகாப்புக்கு உத்திரவாதத்துடனும் அனுப்பப் பட்டதும்.. அவன் அதற்கு தந்த ஒத்துழைப்பும், அவனின் நல்லதொரு ஆட்சியையும் சாட்சியாகும் என்பதிலும் ஐயமில்லை...
அடுத்தப் பதிவை நோக்கி..