பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, February 6, 2012

"இனியவை நாற்பது" (4)

4. நான்காம் இனிமை. 

அவன் ஒரு குறுநில மன்னன். ஆளும் நாடு மிகச் சிறியதானாலும், விசாலமான அறிவும், ஞானமும் படைத்தவன் அந்த சிற்றரசன். அவன் நாடு செல்வத்தில் சிறந்து விளங்கியது. காடு நிரைந்து, கழனி விளைந்து அரசரின் கஜானா நிரம்பிக் கிடந்தது. இந்த வளமையைக் கண்டு பொறாமையால் சுற்றுப்புற நாட்டு மன்னர்களுக்கு இந்த நாட்டின் மீது ஒரு கண் விழுந்தது. மன்னன் தளர்ந்த நேரம் பார்த்து நாட்டை அபகரிக்க வஞ்சகர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அறிவுசால் அமைச்சர்கள் அந்த குறுநில மன்னரிடம் சொன்னார்கள், "மன்னா, நீ நாட்டை நேர்மையாக ஆள்வது மட்டும் போதுமானதல்ல, நாட்டில் வளம் பெருகிக் கிடக்கிறது. இந்த நாட்டைப் பாதுகாக்க நீ படைபலத்தை அதிகரித்துக் கொள்" என்றனர். ஆம், மன்னனும் அவர்கள் சொன்ன உண்மையைப் புரிந்து கொண்டு ரத, கஜ, பதாதி படைகளைப் பெருக்கிக் கொண்டான். காலாட்படை, குதிரைப்படை இவைகளைப் பெருக்கிக் கொள்வதில் அதிகம் சிரமம் இருக்கவில்லை. ஆனால் யானைப் படையை அதிகரிக்க அதிகம் பாடுபட வேண்டியிருந்தது. அப்படியொரு யானைப் படையை அவன் தயாரித்துக் கொண்டதும் எதிரிகள் அஞ்சி நடுங்கலாயினர். தாங்கள் படையெடுத்து அவன் நாட்டைப் பிடித்துக் கொள்ள திட்டமிட்டது போக, அவன் எங்கே நம் நாட்டைப் பிடித்துக் கொள்வானோ, அத்தகைய யானைப் படையை வைத்திருக்கிறானே என்று அஞ்சத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட யானைப் படையை ஒருவன் ஏற்படுத்திக் கொள்ளுதல் இனிதாகும் என்கிறது "இனியவை நாற்பது" நூல். 

எதிரிகளிடமிருந்து எப்போது ஆபத்து வரும் என்று இருந்த மன்னனுக்கு இப்போது நிம்மதி. எதிரிகள் பயந்து போயிருக்கிறார்கள் என்றதும் போர் பயம் நீங்கி வாழ்க்கையை நன்கு அனுபவிக்கத் தொடங்கினான். அதற்காக பல்லுயிர்களைக் கொன்று அவற்றை உணவாக்கி உண்ணத் தொடங்கினான். உணவுப் பிரியனாக மாறியதால் பிற உயிர்களின் ஊனைத் தின்று தன் உடலை வளர்த்துக் கொள்ளலானான். இதனால் அவனுக்கு சோம்பலும், உடல் உபாதைகளும் தோன்றின. இந்த சூழலைப் புரிந்து கொண்ட எதிரிகள் இவன் மீது பாயத் திட்டமிட்டனர். இதை அறிந்த அமைச்சர்கள் மன்னனின் இந்த உயிர்க்கொலையையும், ஊன் விரும்புதலையும் நிறுத்தச் சொல்லிவிட்டனர். நல்ல காலம் அவனும் பிழைத்தான். பிற உயிர்களின் தசையினைத் தின்று தன் உடலை வளர்த்துக் கொள்ளாமை மிக இனிமை என்பதையும் அவன் உணர்ந்தான். 

அவன் ஊரில் ஒரு முறை தண்ணீர் பஞ்சம். சுற்றுவட்டாரத்தில் பல கல் தூரத்துக்கு ஆறுகள் எதுவும் இல்லை. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. விவசாயம் பாதித்தது. நாட்டின் வளம் குறைந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக தலைநகரைவிட்டு போகத் தொடங்கிவிட்டார்கள். பார்த்தான் அரசன், இப்படி நீர்நிலைகள் இல்லாத இடத்தில் தலைநகரைக் கட்டியதால் வந்த நிலை என்பதை உணர்ந்து அவன் ஒரு ஆற்றின் கரையில் தன் தலைநகரை மாற்றிக் கொண்டான். நாடு மீண்டும் வளம்பெறத் தொடங்கியது. வற்றாத ஆற்றின் கரையில் அமைந்த ஊரில் இருத்தல் மிக இனிது என்பதை அவன் உணர்ந்தான்.

மன்னன் மக்கள் மனம் அறிந்து நல்ல நடத்தையோடு ஆட்சி புரிந்தான். மானத்தை உயிரினும் மேலாக மதித்து நடந்து வந்தான் அப்படிப்பட்ட மானம் உடையவனான மன்னைன் கொள்கை இனிது என்கிறது இனியவை நாற்பது. இனி நான்காம் பாடலைப் பார்ப்போம்.

"யானை உடைய படை காண்டல் முன் இனிதே
ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே
கான் ஆற்றடை கரை ஊர் இனிதாம் இனிதே
மானம் உடையார் மதிப்பு."

1 comment:

Unknown said...

நான்காம் இனிதுக்கு நமது நாயகி தான் ஏது முன்னரே கூறி நின்றாள் எனில்...

பீடு பெற நில்! அப்படி இருந்தமையால்
'போர்த் தொழில் செய்யேல்!' என்பது கைவந்தது!
மீதூண் விரும்பேல்!
இயல்பு அலாதன செய்யேல்! / உத்தமனாய் இரு!

தங்களின் கதைப் புனைவும், அது தரும் பொருளும் இனிது!

பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!