பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, February 6, 2012

"இனியவை நாற்பது (3)"

3. மூன்றாம் இனிமை.

அது ஒரு கிராமம். அங்குள்ள மக்களின் ஜீவாதார தொழில் விவசாயம். விவசாயத்தைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வந்த குடும்பத்தில் வந்தவர் அவர். அவருடைய மனைவி, மக்கள் அனைவருமே நல்ல கல்வி கற்று, விவசாயத்திலும் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தனர். ஊரார் பார்த்து பொறாமைப் படுமளவுக்கு ஒற்றுமையும், பிறர்க்கு உதவும் பண்பும் கொண்ட குடும்பம் அது. அடுத்த வீட்டு முதியவருக்கு உடல்நலம் கெட்டுவிட்டது. சில கல் தொலைவிலுள்ள ஒரு சிற்றூருக்குச் சென்று மருத்துவரை அழைத்து வர அவர்கள் வீட்டில் இல்லை. நம் விவசாய நண்பரின் மகன் சைக்கிள் வைத்திருந்தான். செய்தியைக் கேள்விப்பட்டதுமே அவனே முன்வந்து தானே ஓடிப்போய் மருத்துவரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன் என்று சென்று காரியத்தை நிறைவேற்றுகிறான். சொல்லாமலே செய்யும் அவனிடம் சொன்னால், எள் என்றதும் எண்ணெயாக நிற்பான் அத்தகைய நல்ல குணம் அமைந்த செல்வன் அவன். அப்படிப்பட்ட மகன் கிடைக்க அந்த விவசாயப் பெருமகன் என்ன தவம் செய்தாரோ? அப்படிப்பட்ட மகனைப் பெற்றது அவருக்கு இனிமை. அல்லவா? 

விவசாயம் செய்கிறோம் என்பதால் அந்தக் குடும்பத்தினர் கல்வி கற்பதில் தயக்கம் காட்டியதில்லை. பெரு நகரங்களில் கிடைக்கும் வசதிகள் இந்த கிராமத்தில் இல்லாதபோதும், கிடைக்கும் ஊடகங்கள் மூலம் குடும்பத்தார் கல்வி கற்று சான்றோராகத் திகழ்ந்தனர். அதுவும் அந்த குடும்பத்துக்கு இனிமைதான் அல்லவா?

இந்த விவசாயி பெருந்தனக்காரர் இல்லையாயினும், ஓரளவு தன்னிறைவு பெற்ற விவசாயி. தனக்குச் சொந்தமான விளைநிலத்தில் பயிர் விளைத்துப் பயன் பெற்று வருகிறார். தனக்கென்று உழவுக்கு நல்ல ஏரும், எருதுகளும், வீட்டில் பசுக்களும் வைத்திருக்கிறார். உழவுத் தொழிலுக்கு வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமாக இருக்கிறது. பிறகு வேறு என்ன வேண்டும்? அதுதான் இனிமை.

அதுமட்டுமல்ல, இவருடைய வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தோமானால், இவருக்கு அண்டை அயலாருடன் மட்டுமல்ல, இவர் போகுமிடங்களில் எல்லாம், பழகும் அனைவரும் இவரிடம் அன்பு பாராட்டும் அளவுக்கு நன்னடத்தையும், நாகரிகமும், பண்பாடும் படைத்தவர். ஆகையால் அவர்கள் இவரிடம் நட்பு பாராட்டுவதில் என்ன அதிசயம் இருக்கிறது. ஆகவே இவரது வாழ்க்கையே இனிமை அல்லவா? இப்படிச் சொல்கிறது மூன்றாவது பாடல். அது இதோ.

"ஏவது மாறா இளங்கிளைமை முன் இனிதே
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே
ஏருடையான் வேளாண்மை தான் இனிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

1 comment:

 1. மூன்றாம் இனிதுக்கு ஒளவையும் இப்படி முன்னோடியாகிறாள்.

  ஏவா மக்கள் மூவா மருந்து!
  பிச்சைபுகினும் கற்றல் நன்றே!
  பூமி திருத்தி உண் / நெற்பயிர் விளைவு செய்!
  ஊருடன் கூடி வாழ்!

  கதையும், கருத்தும் நன்று...
  பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

  ReplyDelete

You can give your comments here