பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, February 8, 2012

"இனியவை நாற்பது" (7)


7. ஏழாவது இனிமை.

வளமான கிராமம். வயல் வெளிகளும், தோப்பும் துரவுமாக கொப்பளித்து ஓடும் நதிக்கரையில் அமைந்திருந்த அந்த அழகிய சிறு ஊரில் அந்தணர்கள் வாழும் தெரு ஒன்று. அதன் மேற்குக் கடைசியில் வைணவ ஆலயமும் கிழக்குக் கடைசியில் ஒரு சிவன் கோயிலும், ஆற்றின் படித்துறை அருகில் ஒரு விநாயகர் கோயிலும் உண்டு. இந்த இடங்களில் ஏதாவதொரு இடத்தில் தினந்தோறும் விடியற்காலையில் சில அந்தணச் சிறுவர்கள் இடையில் ஒரு நான்கு முழத் துண்டும், அதன் மேல் இறுகக் கட்டப்பட்ட மேல்துண்டும், உடலை மறைக்கும்படியான மற்றொரு துண்டுமாக சுமார் பத்து பேர் வந்து உட்கார்ந்து வேத பாராயணம் செய்வார்கள். அவர்களுக்கு ஒரு கணபாடிகள் எனப்படும் வேதம் நன்கு பயின்ற ஆசிரியர் வேதத்தை நல்ல ஸ்வர ஞானத்தோடு சொல்லிக் கொடுப்பார். 

வேதம் என்பது என்ன? இது எப்போது யாரால் இயற்றப்பட்டது என்பதற்கு வேதத்திலேயே பதில் இருக்கிறது. வேதங்கள் எந்தக் காலத்திலும் எவராலும் தனிப்பட்ட முறையில் இயற்றப்பட்டது அல்ல. மனித இனம் பக்குவப்பட்டு, ஊர், நாடு, நகரம் என்று அமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்பே பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த சில ரிஷிகளுக்கு ஒரு அபாரத் திறமை இருந்ததாம். அது என்ன?

இப்போது வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் ஒலி, ஒளி அலைகளை வாங்கி வானொலிப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி இவற்றில் ஒலியையும், ஒளியையும் கேட்கவும், பார்க்கவும் செய்கிறதல்லவா அப்படி அன்று வான வெளியில் பரவியிருந்த ஒலி அலைகளிலிருந்து அந்த வாக்கியங்களை வாங்கி மனத்தில் இருத்திக் கொண்டு அதில் நன்கு தேர்ச்சி பெற்றபின் வாயால் பிறருக்கு ஓதி, அவர்கள் காதால் அவற்றை வாங்கி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்த்த தெய்வீக வாசகங்கள் வேதம். இதை நான் ஏதோ கற்பனையில் சொல்வதாக நினைக்க வேண்டாம். வேதத்தின் மூலம் அதுதான்.

சரி கிடக்கட்டும்! இப்போது இது பிரச்சினை அல்ல. வேதத்தை முறையாக ஓதி அதில் பாண்டித்தியம் பெற்ற அந்தணர்கள் வேதத்தை மறக்காமல் இருப்பதே இனிமை என்கிறார் ஆசிரியர். 

பிறரிடம் அன்பும் மரியாதையும், மற்றவர்களுடைய சுக துக்கங்களில் அக்கறையும் கொண்டவனாக இருப்பவன் ஒரு படையைத் தலைமை தாங்கி நடத்துவானானால் அவனுடைய செயல்பாடுகள் நிச்சயம் இனிமையாக இருக்கும்.

தந்தை தன் மக்களுக்கு வழிகாட்டியாக இருத்தல் அவசியம். தந்தையே மகனை அழைத்து, அடே, மகனே ஓடிப்போய் கடையிலிருந்து நான்கு சிகரெட் வாங்கி வா என்று விரட்டி அவன் வாங்கிக் கொண்டு வந்த சிகரெட்டை அவன் எதிரிலேயே பற்ற வைத்துப் புகைப்பானாகில், அடுத்த நாள், அந்த மகனே ஒன்றை எடுத்து இதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தானே புகைக்கத் தொடங்குவான். அது போலவேதான் வீட்டில் மது புட்டிகளைக் கொண்டு வந்து வைத்து, மகனைவிட்டு தண்ணீர் கொண்டு வரச் சொல்லியோ, அல்லது வேறு தின்பதற்குக் கொண்டு வரச் சொல்வதோ, அந்த மகனையும் அந்த பழிக்கு ஆளாக்குகிறான் என்றுதான் பொருள். அத்தகைய தந்தை சொல்வதை, நல்ல மகனாக இருப்பவன் செய்ய மறுப்பதோ, தந்தைக்கு எதிராக நடந்து கொள்வதோ தவறே இல்லை, அது மிகவும் இனிமை என்கிறார் பாடல் ஆசிரியர். அந்தப் பாடல் இதோ.

"அந்தண ரோத்துடைமை ஆற்ற மிக இனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே
தந்தையே ஆஇனும் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா நாகல் இனிது."

இதன் பொருள் அந்தணராக இருப்பவன் வேதத்தை மறக்காமல் இருப்பது இனிது; மக்களிடம் அன்பு கொண்டவன் படைத் தலைமை கொள்வது இனிது; தந்தை தீயவழியில் செல்பவனாக இருந்தால் மகன் அவன் சொற்படி கேட்டு நடக்காமல் இருத்தல் இனிது.

4 comments:

csekar2930 said...

மிகவும் நன்றாக உள்ளது.
ரிக் வேதத்தில் கூறியுள்ளதை அப்படியே கூறி உள்ளீர்கள் .
முதல் குரு தஷிணாமூர்த்தி. வேதம், மௌனமாகவே ரிஷிகளுக்கு உபதேசம் செய்தது.
நன்றி

thanusu said...

இனியவை நாற்பதையும் இனி எந்நாளும் மறவா வண்ணம் மனதில் பாதிக்கும் அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

Unknown said...

நல்லக் கருத்துக்களை தெரிவித்து வருகிறீர்கள். அதற்கு முதற்கண் நன்றி.

வேத வியாசரும் "டயம் டிராவல்" செய்ததாக ஆரியப் படுகிறேன்... அவரின் ஆத்மா பின்னோக்கிய காலத்தில் பயணித்து அங்கே கிடக்கும் அனைத்து தகவல் களஞ்சியங்களையும் அறிந்து வந்து உரைத்ததாக அறிகிறேன். யுகம் கடந்தப் பயணம் என்றால் அந்த ஞானிகளின் ஆத்மாவின் பலம் தான் என்ன!!!! எல்லாம் சக்தியின் ஏற்பாடே!!!

விஞ்ஞானி ஐன்ஸ்டன் இதைப் பற்றிய ஆய்வு (அதாவது டயம் டிராவல் செய்ய முடியும்) செய்து விளக்கியதாகவும் அறிகிறேன்...

நல்லத் தகவல்கள்...
நன்றிகள் ஐயா!

Unknown said...

நல்லக் கருத்துக்களை தெரிவித்து வருகிறீர்கள். அதற்கு முதற்கண் நன்றி.

வேத வியாசரும் "டயம் டிராவல்" செய்ததாக ஆரியப் படுகிறேன்... அவரின் ஆத்மா பின்னோக்கிய காலத்தில் பயணித்து அங்கே கிடக்கும் அனைத்து தகவல் களஞ்சியங்களையும் அறிந்து வந்து உரைத்ததாக அறிகிறேன். யுகம் கடந்தப் பயணம் என்றால் அந்த ஞானிகளின் ஆத்மாவின் பலம் தான் என்ன!!!! எல்லாம் சக்தியின் ஏற்பாடே!!!

விஞ்ஞானி ஐன்ஸ்டன் இதைப் பற்றிய ஆய்வு (அதாவது டயம் டிராவல் செய்ய முடியும்) செய்து விளக்கியதாகவும் அறிகிறேன்...

நல்லத் தகவல்கள்...
நன்றிகள் ஐயா!