பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, February 4, 2012

"இனியவை நாற்பது" (1)

இனிமை தரும் நாற்பது

அறிமுக உரை:
தமிழ் இலக்கியங்களை அனைவரும் முழுமையாகப் படித்தல் என்பது இயலாது. காரணம் நமது கல்வி முறை. தனித் தமிழில் பட்டப் படிப்புகள் படித்தவர்கள்கூட எல்லா இலக்கியங்களையும் பாடத் திட்டத்தில் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆர்வம் காரணமாக அவரவர்க்குப் பிடித்தமான இலக்கியங்களைப் படித்து அதில் முழுமையான புலமை பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட ஆர்வத்தை முடிந்த வரை பலருக்கும் ஊட்டவேண்டுமென்கிற எண்ணத்தில் சில இலக்கியங்களின் உட்பொருளை இங்கே கதை வடிவில் கூறினால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடு இந்த கட்டுரைத் தொடர். படித்தபின் உங்கள் கருத்துக்களை எழுத்தில் வடித்துக் கொடுங்கள். நன்றி.

1. எது இனிது?

அவனது குழந்தைப் பருவத்தில் அவன் தந்தை காலமாகிவிட்டார். அவர் போன பின்பு குடும்பம் வறுமையில் தடுமாறியது. என்ன செய்வது? உறவினர்கள் எவரும் கைகொடுக்க முன்வரவில்லை. இருந்ததை விற்று ஓரளவு காலம் கடந்ததாயினும், உயர்நிலைப் பள்ளி கல்வி பயில உதவுவார் எவருமில்லை. சென்னையில் இராமகிருஷ்ணா மடத்தில் அண்ணா சுப்பிரமணிய ஐயர் என்பவர் இருக்கிறாராம். அவரிடம் சென்றால் உதவி செய்யக் கூடும் என்று யாரோ தெரிந்தவர்கள் சொன்னார்கள். இவனும் சென்னை சென்றான். மயிலாப்பூர் பகுதியில் இருந்த மடத்துக்குச் சென்று அங்கிருந்த மாணவர் இல்லத்தில் அண்ணாவைச் சந்தித்து வேண்டிக் கொண்டான். அவர்தான் என்ன செய்வார் பாவம். அவர் கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடுதி நிரம்பி வழிந்தது. புதிதாகச் சேர்த்துக் கொள்ள முடியாத நிலை. வேறு சிலரைப் போல என்றால் நான் என்ன செய்ய முடியும், போய் வேறு எங்காவது பார் என்று சொல்லி விடுவார்கள். அண்ணா இரக்கமும், மனிதாபிமானமும் உடையவர். இந்த கைங்கர்யத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 

அவர் அவன் நிலைமைக்கு இரங்கி ஒரு வழி சொன்னார். மயிலாப்பூர் மாட வீதிகளில் நிறைய வக்கீல்கள் இருக்கிறார்கள். அவர்களில் அனைவருமே வசதியானவர்கள், அவர்களில் இரக்க குணம் படைத்த சிலர் இவனைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு உணவு கொடுப்பதை தர்மமாகக் கடைப்பிடித்து வந்தனர். ஒவ்வொரு கிழமை ஒருவர் வீடு என்கிற முறையில் ஏழை மாணவன் வாரம் முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று சாப்பிட முடியும். மீண்டும் அடுத்த வாரம் அதே சுற்று முறையில் சாப்பாடு, தங்கிக் கொள்ள ஒரு நல்ல மனம் படைத்தவர் வீட்டு மாடியில் அமைந்திருந்த கீற்றுக் கொட்டகையில் இடவசதி செய்தி கொடுத்தார்கள். துணிமணி உடைகள் வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகள் போட்டு பழசான உடைகளை வாங்கி அணிந்து கொள்ள முடிந்தது.

இப்படி அண்ணாவின் தயவால் இவன் கல்வி உயர்நிலைப் பள்ளியில் முடிந்து, தொடர்ந்து விவேகானந்தா கல்லூரியில் படிக்கவும் அவர் தயவையும், வேறு சிலர் உதவிகளையும் வாங்க கையேந்தும் நிலை இருந்தது. இது பிச்சைதான் என்ன செய்வது? இது தவறாகுமா? இல்லை "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது தமிழின் ஆணை. இப்படிச் செய்தல் இனியதாம். ஆம்! ஒரு தமிழிலக்கியமும் சொல்லுகிறது. "பிச்சை புக்காயினும் கற்றல் மிக இனிதே" என்று. 

இப்படி பிறர் உதவியோடு கற்ற பின் அந்தக் கல்வி தனக்கு மட்டும் என்ற சுயநலம் சரியாகுமா? ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் தானே இந்தக் கல்வியைப் பயின்றான். ஆனால் அப்படிப் பயின்ற கல்வி அவனுக்குச் சொன்ன போதனை என்ன தெரியுமா? போ! போய் கற்றோர் மிகுந்த சபையில் கல்வி அறிவு மிக்கோர் பலர் உண்டு. அவர்களுக்கு அவையில் பல உதவிகள் தேவைப்படலாம். அத்தகைய உதவிகளைச் செய்ய நீ பயின்ற கல்வியும் பயன்படலாம். போய் அங்குள்ள பெரியோர்களுக்கு உதவியாக இரு என்கிறத் அதே இலக்கியம். "நற்சபையில் கைக் கொடுத்தல் சாலவும் முன் இனிதே" என்கிறது அது.

இப்படி வாழ்வில் பிறர் உதவியோடு படித்து, கற்றோர் அவையில் நல்ல பெயர் எடுத்து வாழ்வில் உயர்ந்து சம்பாதித்து கெளரவமான பதவியும் கிடைத்த பின் முத்து என ஒளிறும் பல் படைத்த பெண்களின் கடைக்கண் பார்வை அவன் மீது படும். அது தவறல்ல. அத்தகைய நற்குணம் கொண்ட பெண்களின் காதலை ஏற்றுக் கொள்வதோடு, சான்றோர்களோடு பழகி, அவர்கள் காட்டும் நல்வழியில் பயணிப்பானானால் அவன் பிறவி எடுத்த பயன் அடைந்தவனாவான். இப்படிச் சொல்கிறது அந்த இலக்கியம். அது எந்த இலக்கியம்?

வாழ்க்கைக்கு இனியவைகளாக நாற்பதைச் சொல்லும் "இனியவை நாற்பது" என்ற இலக்கியம்தான் அது. தமிழில் பதினெண் கீழ் கணக்கு எனும் வகையைச் சேர்ந்தது இந்த நூல். இனியவைகளான நாற்பதைக் குறித்து இந்நூல் சொல்கிறது. அதில் முதல் இனியதை இன்று பார்த்தோம். இனி தொடர்ந்து அடுத்தடுத்த செய்திகளையும் பார்க்கலாம். 

இந்த நூலுக்கு "கடவுள் வாழ்த்து" வேண்டாமா? இருக்கிறது. மிக எளிமையாக முத்தொழிலுக்கும் உரிமையுள்ள அந்த மூவரையும் குறிக்கிறது இந்தப் பாடல். இறைவனை மூவராக வழிபடும் அந்தப் பாட்டில் முக்கண்ணன் சிவனை வழிபடுவது இனிமை; துளசி மாலையணிந்த மாயவனைத் தொழுதல் இனிமை; படைப்புத் தொழில் செய்யும் நான்முகனைப் பணிதலும் இனிமை என்கிறது அந்தப் பாடல்.

"கண் மூன்றுடையான் தாள் சேர்தல் கடிதினிதே
தொல் மாண் துழாய் மாலையானைத் தொழல் இனிதே
முந்துறப் பேணி முக நான்குடையானைச்
சென்றமர்ந்து ஏத்தல் இனிது."

(குறிப்பு: பதினெண் கீழ் கணக்கு நூல்களாவன:-- 1. நாலடியார் 2. நான்மணிக்கடிகை 3. இன்னா நாற்பது 4. இனியவை நாற்பது 5. கார் நாற்பது 6. களவழி நாற்பது 7. ஐந்திணை ஐம்பது 8. திணைமொழி ஐம்பது 9. ஐந்திணை எழுபது 10. திணை மாலை நூற்றைம்பது 11. திருக்குறள் 12. திரிகடுகம் 13. ஆசாரக்கோவை 14. பழமொழி 15. சிறுபஞ்ச மூலம் 16. இன்னிலை 17. முதுமொழிக் காஞ்சி 18. ஏலாதி ஆகியவைகளாகும்.) இதற்கு ஒரு பாடல் உண்டு.

"நாலடி, நான்மணி, நானாற்ப தைந்திணைமுப்
பால்* கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலை சொற் காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்கணக்கு"

(இதில் முதலடியில் வரும் முப்பால் என்பதுதான் திருக்குறளைக் குறிக்கிறது)

1 comment:

 1. இனிது இனிது இவைஎல்லாம் இனிது என்று
  இயம்பும் இனியவை நாற்பது பற்றிய
  இப்பதிவின் தொடக்கம் இனிது...

  ஐயா! தாங்கள் அறிந்திருந்தாலும் குறிப்பிடாமையால்...
  நான் அறிந்த ஆசிரியர் குறிப்பையும் குறிப்பிட விரும்புகிறேன்...
  ஆசிரியர் பூதஞ் சேந்தனார் இந்தப் பெயர்க்காரணமும் இனிது...
  சேந்தன் என்பவர் இவரின் தந்தையும்,
  பூதன் என்பவர் இவரின் ஆசிரியருமாவாராம்...
  ஆசிரியரின் மீதும், தந்தையாரின் மீதும் கொண்ட பக்தி தான் என்னே?
  ஐந்தாம் நூற்றாண்டினர்...

  மூவரையும் போற்றியதால் இவரின் சமய சம நோக்கும்
  போற்றுதலுக்கு உரியதாகிறது என்பர்.

  இலக்கிய பதிவு இனிது -நல்லதோர்
  இலக்கோடு தங்களின் துணிபுனிது.

  பதிவிற்கு நன்றிகள் ஐயா! தொடருங்கள் தொடர்ந்து வாசிக்கிறோம்!

  ReplyDelete

You can give your comments here