பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, February 11, 2012

"இனியவை நாற்பது" (8)

8. எட்டாவது இனிமை.

ஒரு மன்னன் போருக்குப் புறப்பட்டுப் போகிறான். ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளைத் திரட்டிக் கொண்டு அந்த பிரம்மாண்ட அணிவகுப்பின் முன்னால் அந்த மன்னன் ஒரு வெண்புரவியின் மீது அமர்ந்து செல்கிறான். அது ஒரு அரேபிய நாட்டுக் குதிரை. நல்ல உயரமும், அதன் தோற்றம், நடை இவைகளைப் பார்த்தவர்கள் கண் இமைக்க மறுப்பார்கள். அப்படிப்பட்ட தரமான குதிரை. இதுபோன்ற நேரங்களில் வீரம் செறிந்த மன்னர்களுக்கு அமைய வேண்டிய குதிரை இதுபோலத்தான் இருக்க வேண்டும். அப்படி அமைந்து விட்டால் அது இனிமையானதாகும்.

போர் தொடங்குகிறது. யானைகளும் யானைகளும் மோதுகின்றன. சிதறி ஓடும் காலாட்படை வீரர்களைச் சில யானைகள் துரத்துகின்றன. குதிரைகள் பாய்ந்து எதிரிகளின் மீது விழுந்து தாக்க முயலுகையில் யானைகள் அந்த குதிரைகளின் மீது கோபத்துடன் வந்து மலைகள் மோதுவதைப் போல மோதுகின்றன. பெரும் பாறையில் மோதிய அலை சிதறி துகள் துகளாக வீழ்வது போல அந்தக் குதிரைப்படை சிதறிப்போவதைப் பார்ப்பது இனிமை.

அறிஞர்கள் கூடிய சபையில் ஒரு பெரியவர் நல்லதொரு சொற்பொழிவை நிகழ்த்தி முடித்துவிட்டு இதுவரை நான் சொன்ன செய்திகளில் கூடியிருப்பவர்களுக்கு ஏதேனும் ஐயப்பாடு இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நான் சொன்ன செய்திகள் உங்கள் மனங்களைச் சென்றடைந்ததாகக் கருத முடியும் என்றார். அப்போது ஒருவன் எழுந்து அந்தக் கூட்டத்தில் இருக்கும் அறிவுசால் பெரியோர்கள் வெட்கும்படியாக இதுவரை நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதை விளக்க முடியுமா என்று கேட்டால் எப்படி இருக்கும். அவர் சொன்ன செய்திகளை உள்வாங்கிக் கொண்டு அதில் ஏற்படும் ஐயப்பாடுகள் நியாயமாகவும், சொன்ன செய்திகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அல்லவா இருக்க வேண்டும். ஆக அறிஞர்கள் கூடியுள்ள சபையில் எழுந்து கேள்வி கேட்பதற்கு நல்ல மாணவனாகவும் இருதல் அவசியம். அதுவே இனிது.

"ஊருங் கலிமா உரனுடைமை முன் இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதம் காண்டல் முன் இனிதே
ஆர்வமுடையார் ஆற்றவும் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது."

இந்தப் பாடலின் பொருள்: மன்னன் ஏறிச் செல்லுகின்ற குதிரை வலிமையுடையதாக இருத்தல் இனிது; மன்னர்களுக்குப் போர்க்களத்தில் மலைபோன்ற யானைகள் சினந்து செய்யும் போரைக் காண்பது இனிது; நல்ல கேள்விகளை மயக்கம் இல்லாதவராய்க் கேட்பது இனிது.

ஊரும் கலிமா: ஏறிச் செல்லும் குதிரை. கதம்: சினம்.

2 comments:

 1. நல்ல கேள்விகளை மயக்கம் இல்லாதவராய்க் கேட்பது இனிது./

  இனிய பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. //ஆர்வமுடையார் ஆற்றவும் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது//
  மிகவும் பிடித்தது .பாராட்டுகள்
  நன்றி

  ReplyDelete

You can give your comments here