19. இனியது பத்தொன்பது.
ஒருவனுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரிடமும் இவன் நன்கு பழகுவான். சிலரிடம் சில குறைகள் உண்டு. இருந்தாலும் இவன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. மற்ற சிலர் நல்ல குணங்கள் அற்றவராக இருந்தாலும், இவன் அவர்களைப் பற்றி எந்த குறையும் சொல்வதில்லை. அவர்களைப் பற்றி எங்கும் புறம் கூறுவதில்லை. இந்த காரணத்தினாலேயே அவனுக்கு நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. நன்கு பழகும் நண்பர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது.
இவனுக்கும் பொய் சொல்லும் பழக்கம் கிடையாது. எப்போதும் உண்மையையே பேசுபவன். ஆகையால் சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் இறுதியில் இவன் சத்தியத்தையே பேசிவந்தமையால் இவனுக்கு மரியாதையும், நல்ல மதிப்பும் இருந்தது. இவன் அனைவரிடமும் மரியாதையுடந்தான் பேசுவான், நடந்து கொள்வான், அப்படி வாழ்தல் இனியது என்கிறது நூல்.
இவன் கடுமையாக உழைத்தான். பொருள் சேரத் தொடங்கியது. ஒரு நேரத்தில் இவன் எதிர்பார்த்திருந்ததை விட மிக அதிகமான பொருள் இவனிடம் சேர்ந்தது. அப்படிச் சேர்ந்த பொருளை இவன் வீணாக செலவு செய்யவில்லை. மாறாக தக்கோர்க்கு, தேவைப்படும் எளியவர்களுக்குப் பல உதவிகளைச் செய்ய இந்த செல்வத்தைப் பயன்படுத்தினான். அதனால் இவன் மனதுக்கும் இனிமை ஏற்பட்டது.
அந்தப் பாடல். "நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன் இனிதே
முட்டில் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது."
இதன் பொருள்: தன்னுடைய நண்பர்கள் குழாம் குறித்து புறம் கூறாதிருத்தல் இனிமை தரும்; நன்மைகள் செய்து அனைவரிடமும் பணிவோடு நடந்து கொள்வது இனிமை; அதிக அளவில் பொருள் சேர்ந்து விட்டால் அதைத் தேவை உணர்ந்து தக்கார்கு வழங்குதல் இனிமை தரும்.
No comments:
Post a Comment