பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, February 23, 2012

திருவையாற்றில் நாட்டியாஞ்சலி விழா

கடந்த இரண்டு மாதங்களாக திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலிக்கான ஏற்பாடுகளை செய்து வந்தோம். சுமார் ஐம்பது குழுக்கள் இந்த ஆண்டு நாட்டியாஞ்சலியில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த விழாவுக்காக முதல் நாளான 19-2-2012 க்கு 11 குழுக்களும், இரண்டாம் நாள் 14 குழுக்களும், நிறைவு நாளுக்கு 13 குழுக்களும் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவுக்கு மதிப்பியல் தலைவராக திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை விசாரணை, மெளன மடம் முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் இருக்கிறார். கெளரவ ஆலோசகராக பரிசுத்தம் பொறியியல் கல்லூரி நிறுவனர், பரிசுத்தம் ஓட்டல் அதிபர், வழக்கறிஞர் திரு எஸ்.பி.அந்தோணிசாமி இருக்கிறார். தஞ்சை வெ.கோபாலன் விழா குழுவின் தலைவராகவும், வழக்கறிஞர் நா.பிரேமசாயி, இரா.மோகன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், திரு தங்க. கலியமூர்த்தி செயலாளராகவும், திரு தி.ச.சந்திரசேகரன் பொருளாளராகவும், சின்னமனூர் சகோதரிகள் அ.சித்ரா, அ.சுஜாதா ஆகியோர் நாட்டியம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குச் செயலாளர்களாகவும் இருந்து விழாவை நடத்துகின்றனர்.

முன்னாள் அமைச்சர் திரு சி.நா.மி.உபையதுல்லா, இந்து பத்திரிகை சிறப்பு நிருபர் திரு கோ.ஸ்ரீநிவாசன், திரைப்பட நட்சத்திரம் ஸ்வர்ணமால்யா உள்ளிட்டோர் அறங்காவலர்கள். திரு டி.கே.ரவி, திரு புனல் வை.சிவசங்கரன், எம்.ஆர்.பி. காஸ் சர்வீஸ் அதிபர் காருகுடி இராமகிருஷ்ணன், பிளாக் டியுலிப் அதிபர், எல்.ஐ.சி. திரு கே.முத்துராமகிருஷ்ணன், திரு டி.கே.குருநாதன், பாரதி இயக்கத் தலைவர் நீ.சீனிவாசன், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் ப.உமாமகேஸ்வரி, இசைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்க உறுப்பினர்கள், தஞ்சை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் விழா குழுவில் அங்கம் வகிக்கின்றனர். 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, பரிசுத்தம் ஓட்டல், பிளாக் டியுலிப், டெக்கான் மூர்த்தி அவர்கள், எடப்பாடி சுப்பிரமணியம் அவர்கள் போன்றவர்கள் விழாவுக்கு போஷகர்களாக இருக்கின்றனர். விழாவில் பங்குபெற வேண்டிய கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பிதழ் வெளியிடும் வேலை முடிந்து விழா நாளும் நெருங்கி வந்தது.

19-2-2012 ஞாயிறு அன்று பிரதோஷம். அன்று மாலை ஐயாறப்பர் ஆலயத்தில் நந்திக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழா தொடங்கியது. முனைவர் குமாரசுவாமி தம்பிரான் அவர்கள் ஆடல்வல்லான் விக்கிரகத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

19-2-2012 கோலாகல துவக்கம்

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் நடைபெறும் மூன்று நாட்கள் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை சரியாக 6.05 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை தம்பிரான் முனைவர் குமாரசுவாமி தம்பிரான் துவக்கி வைத்தார். தஞ்சை தொழிலதிபர் எஸ்.பி.அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் திருமதி ப.உமாமகேஸ்வரி, முன்னாள் முதல்வர் முனைவர் இராம. கெளசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திருவையாறு இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் தொடர்ந்து ஆடல்வல்லான் நாட்டியக் குழுவினர் க.வஜ்ரவேலுவின் தலைமையிலும், திருச்சி சகோதரிகள் ஜெயசுஜிதாவின் மோகினி ஆட்டமும், பண்ருட்டி கலைச்சோலை டி.சுரேஷ் குழுவினரின் பரதம், சின்னமனூர் அ.சுஜாதா ரமேஷ், விஜய் கார்த்திகேயன் குழுவினரின் நாதலய நடனம், மும்பை தானே நிருத்யாஞ்சலி கலைக் குழுமத்தின் இயக்குனர் லதா ராஜேஷ் குழுவினரின் பரதம், சென்னை முகப்பேர் இரா.காசிராமன் குழுவினர், நாகை சிவாலயா நாட்டியப் பள்ளி ராஜமீனாட்சி குழுவினர், தஞ்சை ஓம்சக்தி நடனப் பள்ளி பரமேஸ்வரி குழுவினர், நாமக்கல் நிருத்திய நடேச கலாலயா ஜெயப்பிரகாஷ் நாராயணன் குழுவினர் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

மோஹினி ஆட்டம் மக்கள் அதிகமாகப் பார்த்திருக்க மாட்டார்கள். கேரள பாணி உடையணிந்து திருச்சி ஜெயசுஜிதா சகோதரிகள் மிகச் சிறப்பாக ஆடி கூடியிருந்த வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். வழக்கம் போல் சின்னமனூர் சுஜாதாவும் அவரது சகோதரர் விஜய் கார்த்திகேயனும் மிகச் சிறப்பாகப் உருவாக்கிய இளம் கலைஞர்கள் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் ஆடி மக்கள் மனங்களைக் கவர்ந்தனர். மும்பை தாணேயிலிருந்து வந்திருந்த திருமதி லதா ராஜேஷ் குழுவினர் இந்தப் பகுதிக்கு முதன் முறையாக வருகை புரிந்தார்கள். அவர்களது சிறப்பான நடனத்தை மக்கள் மிகவும் ரசித்துப் பார்த்துப் பாராட்டினர்.

திருத்தருமையாதீனத்துக்குட்பட்ட ஆலயங்களில் இன்று மகாசிவராத்திரி என்பதால் பொதுமக்கள் கூட்டம் திரளாக இருந்து நிகழ்ச்சிகளை ரசித்தனர். ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனைக் கமிட்டியின் இணைச் செயலாளர் வழக்கறிஞர் கணேசன், எம்.ஆர்.பஞ்சநதம், காருகுடி இராமகிருஷ்ணன் ஆகியோர் கலைஞர்களுக்குப் பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

வேம்பட்டி ரவிஷங்கர் குழுவினரின் குச்சிப்புடி நடனம்

'நாட்டியாஞ்சலி' விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் மகா சிவராத்திரி தினமான 20-2-2012 திங்களன்று மிகச் சிறப்பாக நடைபெற்றன. இரண்டாம் நாள் விழாவிற்கு திருவையாறு இசைக் கல்லூரி முதல்வர் ப.உமாமகேஸ்வரி தலைமை ஏற்றார். இசைக் கல்லூரி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் தொடங்கி தொடர்ந்து சென்னை வைஷ்ணவி கார்த்திகேயனின் நடனம், சென்னை சிறுமி பாலபிரியா, கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக்குழுமம் எஸ்.விஜயமாலதி குழுவினர், நெல்லை இன்னிசை நாட்டியமணி இந்திரா கிருஷ்ணமூர்த்தி, பெங்களூர் விஸ்வபாரதி நாட்டியசாலா அனுபமா ஜெயசிம்மா குழுவினர், சென்னை வேம்பட்டி ரவிஷங்கரின் மாணவியர் குச்சிப்புடி நடனம், சிதம்பரம் திரு அகிலனின் தகதிமிதா குழுவினர், குடந்தை ஸ்ரீ சிவசக்தி கவிதா விஜயகுமார், அவருடைய மாணவி அபிராமி ஜெயராமன், ஆர்.திவ்யா ஆகியோர் நடனமாடினர். சென்னை தமிழிசைச் சங்க இசை நாட்டியக் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி சுந்தரின் மாணவியர் ஆகியோர் பங்கு பெற்றனர்.

இவ்வாண்டின் சிறப்பம்சமாக பெங்களூரிலிருந்து புகழ்பெற்ற நடனக் குழுவினர் அனுபமா ஜெயசிம்மா தலைமையில் வந்து சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இன்றைய நிகழ்வுகளின் சிறப்பம்சமாக சென்னை வேம்பட்டி ரவிஷங்கர் குழுவினர் நடத்திய குச்சிப்புடி நடனம் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தக் குழுவில் அனுபவமிக்க குச்சிப்புடி கலைஞர்கள் பங்குகொண்டு மக்களை மகிழ்வித்தனர்.

நாட்டியாஞ்சலி நிறைவு 

மூன்றாம் நாள் விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ. உபையதுல்லா அவர்கள் தலைமை வகித்தார். முதல் நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டு வீணையிசை நடந்தது. இதில் இருபத்தைந்து பேர் ஒருங்கிணைந்து வீணை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து குடந்தை ஆடல்வல்லான் நாட்டியாலயாவின் ஜென்சி லாரன்ஸ் மாணவியர் நடனமும் நடந்தது.

கரூர் ஆடல்வல்லான் நாட்டியாலயா மாணவியர் குரு ம.சுகந்தபிரியாவின் தலைமையில் நாட்டிய நாடகம் நடத்தினர். பராசக்தியின் பெருமைகளை விளக்கும் அந்த நாட்டிய நாடகம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. திருவையாறு நாட்டியாஞ்சலியின் சார்பில் சுகந்தப்பிரியாவின் நாட்டியப் பணியைப் பாராட்டி பாராட்டு இதழை முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ.உபையதுல்லா வழங்கினார்.

சிதம்பரம் சிவசக்தி இசை நாடனப் பள்ளியின் குரு வி.என்.கனகாம்புஜம் அவர்களின் மாணவிகளின் பரதம் தொடர்ந்து நடைபெற்றது. மாயூரம் பழைய கூடலூர் டாக்டர் ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் மெட்.பள்ளி மாணவியரின் பரதம் குரு வி.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சென்னை அக்ஷயா ஆர்ட்ஸ் மாணவியர் பினேஷ் மகாதேவன் தலைமையில் நிகழ்ச்சியை நடத்தினர். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் காயத்ரி வைத்யநாதனின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ கிருஷ்ண நாட்டியாலயாவின் மாணவியர் குரு கலா ஸ்ரீநிவாசன் தலைமையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் கிராமியக் கலைகளான கரகம், காவடி, மயிலாட்டம், பாம்பு நடனம் ஆகியவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

தொடர்ந்து குடந்தை நாட்டியக் கலாலயம் நடனப் பள்ளியின் கீதா அஷோக் மாணவியரின் பரதநாட்டியமும், தஞ்சை சக்தி நாட்டிய கலாலயம் மாணவியர் குரு அருணா சுப்பிரமணியம் தலைமையில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆஸ்திரேலியா சிட்னியிலிருந்து வந்திருந்த தமயந்தி பால்ராஜு குழுவினரின் பரத நாட்டியம் பரவசமூட்டுவதாக இருந்தது. நிறைவு நிகழ்ச்சியாக மும்பை காட்கோபரிலிருந்து வந்திருந்த பத்மினி ராதாகிருஷ்ணன் குழுவினரின் நாட்டியம் நடைபெற்றது. வேத மந்திரம், அர்த்தநாரீஸ்வரர், தில்லானா ஆகியவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

விழாவின் நிறைவில் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன், விழாவில் பங்குகொண்ட நடனக் கலைஞர்களுக்கும், விழா சிறப்புற நடக்க ஒத்துழைத்த நிறுவனங்கள், இசைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்துக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்தார். 
செயலர் தங்க கலியமூர்த்தி, தி.ச.சந்திரசேகரன், ப.இராஜராஜன், நா.பிரேமசாயி, இரா.மோகன், நீ.சீனிவாசன், முனைவர் இராம கெளசல்யா, பேராசிரியர் ப.உமாமகேஸ்வரி, டி.கே.ரவி, புனல் வை.சிவசங்கரன் ஆகியோர் விழாவின் வெற்றிக்கு இடைவிடாமல் உழைத்து வந்ததற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. "வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர்" எனும் பாரதி பாடலை மும்பை திருமதி பத்மினி இராதாகிருஷ்ணன் பாடி விழாவை நிறைவு செய்தார்.

2 comments:

 1. அற்புத நிகழ்ச்சிதனை நடத்தியே அதை
  சொற்பதம் நிறைந்து காட்சியாக விளக்கி
  விற்பன்னர் கூடி வேதநாதர் நடராசப்
  பொற்பாதம் பணிந்தே ஆடல் கலைஞரைப்
  போற்றி அரவணைத்து ஆண்டு தோறும்
  கற்பக தருவென வளரும் திருவையாற்று
  நற்நாட்டி யாஞ்சலி வாழியவே!

  நல்ல நிகழ்வு, பெரியவர்களாக சேர்ந்து கலையையும் கலைஞர்களையும் பாராட்டி இந்த தெய்வீக கலை இன்னும் வளர உலகெங்கும் இருக்கும் கலைஞர்களை எல்லாம் வரவழைத்து பாராட்டி, மகிழ்ந்து அவர்களையும் மகிழச் செய்து....,
  மிகவும் அற்புதமாக செய்யும் சீரிய கலைப் பணி அதன் அற்புத நிகழ்வைப் பற்றிய அற்புதப் பதிவு...
  பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 2. நல்ல பதிவு.
  நன்றி.

  ReplyDelete

You can give your comments here