பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, February 22, 2012

"இனியவை நாற்பது" (17)

17. பதினேழாம் இனிமை. 

பலரோடும் பழகும் தன்மை கொண்ட ஒருவன், பல நண்பர்களை அடைகிறான். அப்படி இவனுடன் சேர்ந்த நண்பர்களுக்கு பல நேரங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் நன்மைகளை மனமுவந்து இவன் செய்யத் தொடங்கினான். ஆகையால் இவனுடன் நட்பு கொள்ள பலரும் ஆவலுடன் இருந்தனர். இப்படி நண்பர்களுக்கு நல்ல காரியங்களுக்கு உதவுதல் எத்தனை இனிமை?

ஒருவனுக்கு எல்லோருமே நண்பர்களாக இருந்து விடுவதில்லை. ஒரு சிலர் இவனுக்கு எதிரிகளாகவும் அமைந்து விடலாம். அப்படிப்பட்ட எதிரிகள் தவறிழைப்பவர்களாகவும் கெட்ட குணங்களுடையவர்களாகவும் இருத்தலால், அப்படிப்பட்டவர்களிடம் சேராமல் ஒதுங்கியிருப்பவர்களும் உண்டு. அத்தகையவர்களை, நம் எதிரியோடு உறவு இல்லாமல் இருக்கும் காரணத்தினாலேயே, நாம் உறவு வைத்துக் கொள்ளுதல் இனிது.

மனிதனுக்கு முக்கியத் தேவை உணவு. உணவுக்கு வேண்டிய தானியங்கள் மிக்க அளவில் விளந்திருக்கின்றன. வீடு நிறைய தானியக் குவியல்கள். பஞ்ச காலம் வந்தாலும் தாக்குப் பிடிக்கக்கூடிய அளவு விளைந்து வந்து வீட்டில் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தன்னையும் காத்துத் தன் செல்வத்தையும் காத்துக் கொள்ள வேண்டுமாயின் நல்ல மெய்க்காப்பு வீரர்கள் தேவை. இப்படி உணவு தானியங்களும், பாதுகாவலுக்கு மெய்க்காவலர்களும் அமைதல் இனிது.

"நட்டார்க்கு நல்ல செயல் இனிது எத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையும் சேரல் இனிது."

இதன் பொருள்: தன்னோடு நட்பு கொண்டவர்களுக்கு நன்மை செய்தல் இனிது; நம் பகைவருக்கு எதிரானவர்களை நம்மோடு உறவு வேண்டி சேர்த்துக் கொள்ளுதல் இனிது; நல்ல தானியக் குவியல்களும், நல்ல பாதுகாவலர்களும் இருந்தால் மிகவும் இனிது.

No comments: