பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, February 16, 2012

"இனியவை நாற்பது" (12)

12. இனியது பன்னிரெண்டு.

வீட்டிலுள்ள குழந்தைகள் பிணியின்றி நன்கு விளையாடிக் கொண்டிருத்தல் போல இன்பம் பயக்கக்கூடியது எதுவும் கிடையாது. அதை விடுத்து நாள் தோறும் ஏதாவதொரு பிணியால் அந்தக் குழந்தை வருந்தி அழுது கொண்டிருந்தால் வாழ்க்கை இனிக்காது.

கற்றோர் நிறைந்த அவையில் ஒருவர் தவறுதலாகவோ, அல்லது புரிதலில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவோ தவறான ஒரு செய்தியைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் பெரியவர், அத்தனை பேர் கூடியிருக்கிற அவையில் அவர் சொல்லுகின்ற கருத்துக்கு மறுப்பு சொல்ல அனைவரும் தயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர் சொல்வது தவறு என்று தெரிந்திருந்தும் எவரும் வாய் திறக்கவில்லை. ஆனால் அவர் சொல்வது தவறு என்பதை உண்மையான ஈடுபாடும், அக்கறையும் கொண்ட ஒருவன் சொல்லுவானானால் அதுவே அவன் கற்ற கல்வி இனிதானதாகக் கருதப்படும். அவைக்கு பயந்து தவறை ஒப்புக்கொள்ளாத தன்மையே ஒருவன் அறிவாற்றலுக்குச் சிறப்பு.

வாழ்க்கையில் எத்தனையோ சருக்கல்கள், தவறுகள் செய்ய வாய்ப்பிருந்தும் அப்படி எதையும் செய்யாமல், மிகவும் எச்சரிக்கையாக வாழ்க்கையைப் பயணிக்கும் பெரும் அறிவுசால் பெருமகனிடம் செல்வம் சேருமானால், அது அவனைவிட்டு அகலாமல் நிற்கும், அப்படி அந்த செல்வம் தக்கோரிடம் சேர்வது இனிமை தரும் என்கிறது இந்தப் பாடல்.

"குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே
மயரிகள் அல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவும் தீர்வின்றேல் இனிது."

மழலைச் செல்வங்கள் பிணியற்றோராய் வாழ்தல் இனிது; அவையில் இருப்போர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சாமல் உண்மையைப் பேசும் கல்வி இனிது; தவறுகள் இழைக்காத மாண்புடையோரிடம் சேரும் செல்வம் நிலைக்குமானால் அதுவும் இனிது என்கிறது இந்தப் பாடல்.

குழவி = குழந்தை. பிணி = நோய். மயரிகள் = உன்மத்தன் person whose mind is confused அல்லது காமுகன், அறிவீனன் or ignorant person.

No comments: