2. பிறர்க்கு ஈதல் இனிது:
அவர் ஒரு செல்வந்தர். ஏழ்மை நிலையில் இருந்து நல்ல உத்தியோகம் கிடைத்த பிறகு நன்றாக சம்பாதித்து "ஈ உறிஞ்சும் கஞ்சனாக"*வாழ்க்கையை நடத்தி நிறைய பணம் சேர்த்துவிட்டார். இங்கு சிக்கனமாக இருப்பதற்கும் கஞ்சனாக இருப்பதற்குமுள்ள வேற்றுமையை நாம் ஏற்கனவே விளக்கியிருந்தாலும் மறுபடியும் விளக்க விரும்புகிறேன். தன் தேவைகளுக்கு மட்டும் செலவிடுபவன் சிக்கனம். தன் சுய தேவைக்குக் கூட செலவு செய்யாமல் இருப்பவன் கஞ்சன். இவர் இரண்டாவது ரகம். இவரது அதிர்ஷ்டம், ஒரு நிலப் பிரபுவுக்கு இவர் ஏஜெண்டாக இருந்து அவர் நிலத்தைப் பிரித்து லே அவுட் போட்டு விற்க உதவி புரிந்தார். மிக குறைவான விலையில் வந்த அந்த லே அவுட்டில் சில பிளாட்டுகளைக் குறைந்த செலவில் வாங்கி வைத்திருந்தார். சில காலம் கழிந்தபின் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து அதன் மதிப்பு நூறு மடங்குக்கு மேலும் அதிகரித்து விட்டது. இருந்தாலும் அவர் உடையிலோ, வாழ்க்கை முறையிலோ 'பளிச்' மட்டும் கிடையாது. அவருக்கு அடித்த அதிர்ஷ்டம் அவர் பெண்ணை இவருக்கு எந்த செலவுமே இல்லாமல் ஒரு வரன் வந்து திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். அப்படியிருந்தும் இவர் பார்ப்பவர்களிடமெல்லாம், பெண் கல்யாணத்தில் பணமெல்லாம் செலவாகிவிட்டது என்று அலுத்துக் கொள்வார். குளிர் காலத்தில் வெந்நீர் போட்டுக்கூட குளிக்க மாட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாட்களில் மூன்று வேளைகளில் புழுங்கலரிசிக் கஞ்சி.
(ஈ உறிஞ்சும் கஞ்சன் என்றால் என்ன விளக்கம்? வாரியார் சுவாமிகள் சொல்லும் விளக்கம் இது. நாம் அருந்தும் காபி அல்லது டீயில் ஈ விழுந்துவிட்டது என்றால் நாம் அதனைக் கொட்டி விடுவோம். சிலர் குவளையைச் சாய்த்து அந்த ஈ இருக்கும் வரை கொட்டிவிட்டு மிகுதியை அருந்துவார்கள். சிலர் ஈயை எடுத்துப் போட்டுவிட்டு டீயைக் குடித்துவிடுவார்கள். ஆனால், இந்த ஈ உறிஞ்சும் கஞ்சன் ஈயைக் கையால் எடுத்து அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் டீ அல்லது காபியை நன்கு உறிஞ்சிவிட்டு ஈயைத் தூரப் போட்டுவிட்டுக் காப்பி/டீயைக் குடிப்பார்களாம்.)
குடும்பம் நடத்தினால் செலவு அதிகம் என்று மனைவியை அடிக்கடி அவள் ஊருக்கு அனுப்பி விடுவார். தானே சோறு பொங்கி சிறிதளவு சாப்பிடுவார். கணவன் மனைவி உறவு எப்படி இனிதாக இருக்கும் இவருக்கு. அகப்பற்று புறப்பற்று எதையும் நீக்கிவிடாமல், அதிலும் ஆசை, காசிலும் ஆசை, இப்படிப் போய்விட்டது இவரது வாழ்க்கை.
ஒரு நாள் அலுவலகம் சென்றவர் மார் வலி என்றார் படுத்துவிட்டார். மருத்துவமனையில் இவர் உடலில் இருந்த உயிர் பிரிந்து போய்விட்டதென சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர். திருமூலர் "திருமந்திரம்" சொல்லும் பாடலைத்தான் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
"அடப்பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே."
"ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு
சூரை அங்காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே"
"பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாதே"
சரி! யாக்கை நிலையாமை குறித்துப் புரிந்து கொண்டோம். அதற்கு நாம் இப்போது என்ன செய்ய வேண்டுமாம்? என்ன சொல்லுகிறார் திருமூலர். இதோ
"அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போது ஒரு
தவ்விக் கொடு உண்மின் தலைப்பட்ட போதே."
"வஞ்சகம் பேசாமல், பொய் சொல்லாமல், பிறர்க்குத் துன்பம் தராமல், தீய சொற்களைப் பேசாமல், அறநெறி மீறாமல், பேராசையால் பிறர் பொருள் விரும்பாமல் நல்ல பண்பாளராக ஆகுங்கள். நீங்கள் உண்ணும் போது யாரேனும் வந்து விட்டால் ஓர் அகப்பை உணவை அவர்க்குப் படைத்துவிட்டுப் பின்பு உண்ணுங்கள்."
திருமூலருக்கு என்ன? அவர் சொல்லிவிட்டார். அகப்பட்டது நானல்லவா? எப்படி முடியும். இப்படிக் கொடுத்துக் கொண்டிருந்தால் மலையும் கரைந்து போகும். செல்வமும் இல்லாமல் போகும். ஆகவே சிக்கனம், கஞ்சத்தனம், அதுதான் இன்பம் தரும் என்று வாழ்ந்தார் நம் கதாநாயகர்.
இவர் போன்றவர்களுக்கென்றுதான் "இனியவை நாற்பது" இரண்டாவது பாடல் சில நீதிகளைச் சொல்லுகிறது. கேட்போமா?
"உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனை வாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு."
என்ன சொல்கிறது இந்தப் பாடல்? செல்வம் படைத்தவன் அதனைப் பிறருக்கும் கொடுத்து அந்த அறச் செயல்களின் காரணமாக இன்பமாக வாழ்தல் இனிது. கணவனும் மனைவியும் மனம் ஒப்பி வாழ்ந்தால் மனையறம் இனிது. உடல் நிலையாமையை உணர்ந்து பற்றுகளை நீக்கி வாழ்வாங்கு வாழ்தல் இனிது.
பார்ப்போம், இந்த அறவுரை எத்தனை பேர் செவிகளில் படுகிறது, மனங்களில் பதிகிறது என்று. நன்றி.
1 comment:
///கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாதே"///
'ஒருமைக்கண் தாம் கற்றக் கல்வி -ஒருவருக்கு
எழுமைக்கும் ஏமாப் புடைத்து.'
- என்பதுவும் இது தானோ...
கற்பது நன்று.. அதையும் கசடற கற்பது நன்று கற்க வேண்டியவைகளை கற்றப் பின்பு அதன் படி நிற்பது நன்று.... இவைகள் சரியாக செய்தால் விரதமும் ஞானமும் கைகூடும்... அப்படிக் கூடினால் அது எழுபிறப்பிற்கும் கூடவே வரும் என்றார் போல...
'ஈ உறுஞ்சும் கஞ்சனை' தகுந்த இடத்திலே தந்துள்ளீர்கள்..:):)
தாங்கள் கூறுவது போன்றவர்கள் பணமே உலகம் என்பாரே அதிகம். கூட வரப் போவது யாது? என்பதை அறிந்தவர்கள் சிலரே இவர்கள் இருவரும் மகாபாரத விகிதத்திலே தான் இந்தப் பூமியில் அதிகம் போலும்; என்றே சில நேரம் நினைப்பதுண்டு... அதாவது நூற்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில்.
இரண்டாவது இனிது நன்று... அதை தாங்கள் திருமூலரின் மூலம் காண்பித்த விதம் மிகவும் இனிது...
பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!
Post a Comment