பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, February 13, 2012

"இனியவை நாற்பது" (9)

9. ஒன்பதாவது இனிமை. 

ஊரில் ஒரு பெரிய மனிதர். நல்ல செல்வமும் செல்வாக்கும் படைத்திருந்ததோடு இரக்க குணமும், பிறருக்குப் பயனுள்ளவராக இருக்க வேண்டுமென்றும் பாடுபட்டுக் கொண்டிருந்தவர். அவரைத் தேடி தினமும் பலர் வருவார்கள். அப்படி வருகின்றவர்கள் எல்லோருமே அவரிடமிருந்து ஏதாவது உதவிகள், நன்கொடை, சிபாரிசு என்றுதான் வருவார்கள். அவரும் ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு உதவிக் கொண்டிருந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் ஓர் புதிய மனிதர் அவரைத் தேடி வந்தார். வந்தவர் தோற்றதில் நல்ல செல்வந்தராகவும், வசதி படைத்தவராகவும் காணப்பட்டார்.

ஓகோ! இவர் நிச்சயம் நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பார்த்து வந்திருக்க மாட்டார். கெளரவமான தோற்றமுடையவர். செல்வந்தர் போலவும் தோன்றுகிறது. முகத்திலும் நல்ல அறிவாளி என்பதும் புலனாகிறது. சரி வந்தவரை வரவேற்று உட்காரவைத்துவிட்டு வந்தவரைப் பற்றிய விவரங்களை வினவினார். வந்தவர் சொன்னார், தான் சென்னையில் ஒரு பத்திரிகையாளர் என்றும், இந்த ஊரில் இவர் செய்துவரும் உபகாரங்கள், நற்பணிகள் இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்த சுயநல உலகில் இப்படியும் ஒருவரா என்று பார்த்துப் போகவும், முடிந்தால் அவரைப் பற்றித் தன் பத்திரிகையில் எழுதுவதற்காகவும் வந்திருப்பதாகச் சொன்னார்.

நம் ஊர் பெரியவருக்கு மகிழ்ச்சி. பல காலத்துக்குப் பிறகு உதவி கேட்பதற்கில்லாமல் நம்மைப் பாராட்டிப் போக ஒருவர் வந்திருக்கிறார் என்பதில் அவருக்குத் திருப்தி. வந்தவரை நன்கு உபசரித்துத் தனக்கு எந்த விளம்பரமும் தயவு செய்து கொடுத்து விடாதீர்கள், என் மனதுக்கு நல்லது என்று தோன்றியதைத் தான் செய்து வருவது அப்படியே நடந்து கொண்டிருக்கட்டும். விளம்பரம் என் பணிக்குக் குந்தகம் விளைக்கும் என்று அவரை வழிஅனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. அது தன்னிடம் வந்து சேர்ந்த ஒருவர் நல்ல செல்வம் படைத்தவராகவும், நல்லவைகளைப் பாராட்டும் குணம் கொண்டவராகவும் இருந்தமையால் இது தனக்கு இனிமை என்று நினைத்தார்.

அமைதி வேண்டி பெரியவர் ஒருநாள் ஒரு மலை வாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த தன் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு மாலையானதும் மலைப் பிரதேசத்தில் வெட்டவெளியில் புல் தரை பரவிக் கடந்த ஒரு பெரிய திடலுக்குச் சென்றார். தூரத்தில் மலைகள் யானைகள் படுத்திருப்பதைப் போல கருமையாகக் காட்சியளிக்க சுற்றிலும் பசும்புல் தரையும், மற்றொரு புறம் வனாந்தரம் போல அடர்ந்த மரக் காடுகளும் மிகவும் ரம்மியமாகக் காட்சியளித்தது சூழ்நிலை. அப்போது பகல் போது முடிந்து இரவு தொடங்கும் நேரம். அன்று பெளர்ணமி. முழு நிலவு கீழ் வானில் வட்டவடிவில் ஆரஞ்சு பழ நிறத்தில் தோன்றியதும் இவருக்கு மகிழ்ச்சி. அடடா! இதுவன்றோ இனிமை என நினைத்தார். ஆம், அந்த காட்சி இனிமைதான்.

வீடு திரும்பிய பின் முதலில் சென்னையிலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர் எழுதிய கடிதம் வந்திருந்ததைப் பார்த்தார். அதில் அவர் இவருடைய பெருந்தன்மை, வள்ளன்மை, குற்றமற்ற செயல்களைச் செய்து மக்களின் அன்பைப் பெற்றது இவற்றையெல்லாம் பாராட்டியிருந்தார். ஆம் அந்த நினைவே இனிமையானது அல்லவா? இனி பாடலைப் பார்ப்போம்.

"தங்கண் அமர்புடையார் தாம் வாழ்தல் முன் இனிதே
அங்கண் விசும்பின் அகல் நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயர்க்கும்
அன்புடைய ராதல் இனிது."

இந்தப் பாடலின் பொருள்: நம்மிடம் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாக விளங்கும் நண்பர்களுக்கு உதவுதல் இனியது; தன்னுடைய பகைவர்களோடு சேராமல் ஒதுங்கி இருப்பவர்களை நமக்கு நண்பர்களாக ஆக்கிக் கொள்வது இனியது; பல தானியங்களைப் பயிர் செய்து பஞ்சமின்றி வாழ்வதும், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நல்ல ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வாழ்வது இனிமை பயப்பதாகும்.

நட்டார்: நட்பு பூண்டவர். ஒட்டார்: ஒதுங்கி வாழும் பகைவர்.

No comments:

Post a Comment

You can give your comments here