பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, February 17, 2012

"இனியவை நாற்பது" (13)

13. பதிமூன்றாம் இனிமை.

ஒரு நல்ல மனிதர். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவர். தன் ஒரே மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக அவருடைய சக்திக்கு மேற்பட்டு வெளியில் கடன் வாங்கி நகரத்தில் படிக்க வைக்கிறார். அந்த நல்ல மனிதருக்கு ஏற்ற மனைவி. கணவர் சொல்வதைத் தட்டாதவர். மகன் படிப்புக்காக அவர் தவிக்கையில் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத் தயங்காமல் எடுத்துக் கொடுத்தவர். அப்படிப்பட்ட நல்ல குடும்பத்துக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. மகனின் கல்வியோ முடியவில்லை. இன்னமும் பணம் தேவைப்பட்டது. என்ன செய்வது? ஊரிலுள்ளோர் எவரும் இவரது ஏழ்மை நிலைமையைக் கருத்தில் கொண்டு இவரால் வாங்கிய பணத்தைக் கொடுக்க முடியுமோ என்று அஞ்சி உதவி செய்ய மறுத்து விட்டனர். வேறு வழியில்லாமல் முன்னமேயே வட்டிக்கு வாங்கியிருந்தவரிடம் கேட்டு மேலும் பணம் வாங்கினார். அந்த நபர் பணத்தைத் திரும்பக் கேட்டு தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இவரும் என்ன செய்வார் பாவம். நிலமோ, வீடோ கிடையாது. உதவி செய்யவும் யாரும் இல்லை. மானத்தோடு வாழ்ந்த அவருக்கு இப்படிப்பட்ட கதி ஏற்பட்டுவிட்டது. 

ஒரு நாள் கடன்கொடுத்தவன் வீட்டு வாயிலில் வந்து அவரை மிகவும் கேவலமாகப் பேசித் திட்டித் தீர்த்துவிட்டான். அவர் மனைவி வந்து ஏதோ சமாதானம் சொல்வதையும் கேட்காமல் அந்த அம்மையாரையும் திட்டித் தீர்த்துவிட்டான். உனக்கு மானம் மரியாதை இருந்தால் உடனடியாகப் பணத்தைக் கீழே வை என்றான். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதைவிட சாகலாம் என்று வேறு சொல்லிவிட்டான். அன்று முழுவதும் அதே வருத்தத்தில் இருந்த அந்த நபர் அன்றிரவு தன் மனைவிக்கும் தெரியாமல் எழுந்து சென்று தற்கொலை புரிந்து கொண்டார். அவருக்காக அவர் மனைவியைத் தவிர உளம் நொந்து வேதனைப் பட்டவர்கள் அவ்வூரில் யாரும் இல்லை. தன்னுடைய பெருமை கெட்டு, மானம் போனபின் வாழாமை இனிது என்று அவர் அந்தக் காரியத்தைச் செய்து விட்டார்.

அதன் பின் அவருடைய மகன் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு வேலையைத் தேடிக்கொண்டு, ஊருக்கு வந்து தன் தாயாரையும் அழைத்துக் கொண்டு எங்கோ சென்று விட்டான். அவர் எங்கிருக்கிறான், என்ன வேலை பார்க்கிறான் என்பதெல்லாம் ஊரில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், கடன்காரனுக்கு மட்டும் அவனிடம் வாங்கியிருந்த அசல், வட்டி அனைத்தையும் அந்த மகன் அனுப்பி விட்டான். இப்படிப்பட்ட நல்லவர்களுக்குத் தான் செய்த அநியாயத்தை எண்ணி அந்த கந்துவட்டிக்காரன் மனம் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடன்பட்டு தந்தையை இழந்து அவர் பட்ட கடனையும் வட்டியோடு திரும்பக் கொடுத்த அந்த மகன் தான் இருக்கும் இடம் தெரியாமல் அடக்கத்தோடு தன் தந்தை கட்டிக் காத்த மரியாதையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வாழ்ந்தான் என்றால் அந்த அடக்கமான வாழ்வு இனிமை அல்லவா?

நாளடைவில் அந்த மகன் நன்கு சம்பாதித்து கணவனை இழந்த தன் தாய் துன்பப்படாமல் நன்கு காப்பாற்றி, ஊரார் மெச்சும்படியாக கண்காணாத ஊரில் சொந்த ஊரின் தொடர்பில்லாமல் தனித்து வாழ்ந்தான். அவனிடம் இப்போது செல்வம் இருந்தது, கண்ணியம் இருந்தது, ஊராரின் மதிப்பு இருந்தது அப்படிப்பட்ட சூழலில் வாழ்வது இனிமை என மனம் மகிழ்ந்தான் அவன். அந்தப் பாடல்.

"மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே
தானம் அழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனம் ஒன்றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது."

மானம் = பெருமை. தானம் = தான் இருக்கு நிலைமை.

இதன் பொருள்: பெருமை அழிந்த பிறகு ஒருவன் உயிர்வாழாமை இனிதாகும்; தான் வாழ்கின்ற வாழ்க்கையின் சிறப்பு குறையாதபடி வாழ்தல் இனிதாகும்; நல்ல செல்வத்தோடும் கெளரவத்தோடும் வாழ்தல் என்றும் இனிமை.

No comments: