பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, February 23, 2012

"இனியவை நாற்பது" (18)


18. பதினெட்டாம் இனிமை.

அந்த ஊர் சிறிய ஊரானாலும், கற்றறிந்த பெரியோர்கள் வாழ்கின்ற ஊர். ஊர் மன்றில் கூட்டங்கள் நடக்கும் போது அங்கு அறிவார்ந்த விஷயங்கள் பேசப்படும். கடுஞ்சொற்கள் நீக்கி பண்போடு பேசும் மக்கள் அந்த மன்றில் கூடி விவாதிப்பார்கள். அங்கு சென்று அத்தகைய கூட்டங்களைப் பார்த்து பேசுபவற்றை கேட்பதே ஓர் இனிய அனுபவமாக இருக்கும். அத்தகைய மூத்த அறிவார்ந்த குடிமக்கள் வாழும் ஊரில் வாழ்வதே இனிமை என்கிறது நூல்.

தவசிகள் என்போர் அனைத்தையும் துறந்து வனாந்தரங்களில் தவம் செய்பவர்கள். அப்படியில்லாமல் ஊருக்குள்ளேயே இருந்து கொண்டு தன்னை ஆசாபாசங்களிலிருந்தும் விலக்கி நன்மைகளை நினைத்து செய்யும் பெரியோர்களும் உண்டு. இத்தகையவர்கள் நேர்மை பிசகாதவர்கள். நல்லதை எண்ணி, மற்றவர்களுக்கு நன்மைகளை மட்டுமே நினைப்பவர்கள். பிறருக்குத் தீங்கு செய்யாதவர்கள். நல்ல ஆலோசனைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். அத்தகையோரின் கூட்டுறவே இனிமை தரும்.

காலை பொழுது விடிந்ததும் குடும்பத்துப் பெரியோர்கள் தாய் தந்தையர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அவர்களை வணங்கி ஆசி பெறுதல் இனிமை தரும்.

இனி பாடல்:

"மன்றின் முதுமக்கள் வாழும் பதி இனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் 
கண்டெழுதல் காலை இனிது"

ஊர் அவையில் நல்ல தேர்ந்த அறிவுடைய மக்கள் வாழும் ஊர் இனிமையுடையது. சாஸ்திர நூல்கள் சொல்லும் முறையில் வாழும் தவ முனிவர்களின் மாண்பு இனிதாகும். குடும்பத்தின் மூத்தவர்கள், தாய் தந்தையர்களை காலையில் வணங்கி எழல் இனிமையுடைத்து.

No comments:

Post a Comment

You can give your comments here