பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, February 13, 2012

"இனியவை நாற்பது" (10)

10. பத்தாம் இனிமை

அவர் ஒரு கடைநிலை ஊழியர். தனியார் நிறுவனமொன்றில் நிரந்தரம் செய்யப்படாத ஊழியராகப் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அவருக்குக் கிடைக்கும் சம்பளத்தில் அவரால் குடும்பம் நடத்துவது மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. என்ன செய்வார் பாவம். அந்த அலுவலகத்தில் பலரிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருந்துவிட்டார். அதனால் புதிதாக எவரிடமும் இவரால் கடன் கேட்க முடியவில்லை. கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். வேறு வழியின்றி கந்துவட்டிக் காரர் ஒருவரிடம் கைநீட்டி கடன் வாங்கிவிட்டார். அலுவலகத்தில் இருப்பவர்கள் போல அந்த கந்துவட்டிக்காரர் சும்மா இருப்பாரா. சம்பளம் வாங்கும் நாளில் வந்து வட்டியைக் கட்டாயமாக வசூலித்துவிடுவார். அதன் பிறகு வீட்டுக்குக் கொண்டு செல்ல என்ன இருக்கும்? அரைப் பட்டினி, கால் பட்டினியாகக் குடும்பம் நடத்தலானார். அண்டை அயலார் இவரைப் பார்த்து இரக்கப் படுவதற்கு பதில் கேலி பேசினர். கடன் வாங்கி இப்படி வட்டி கொடுத்து விட்டுப் பட்டினி கிடக்க வேண்டுமா? என்ன பிழைப்பு இது. கடன் வாங்காமல் வாழும் வாழ்க்கையே இனிது என்றனர். ஆம், கடன் வாங்கி தூக்கம் கெட்டு, கெட்ட பெயர் எடுப்பதிலும் கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையே இனிது என்கிறது இனியவை நாற்பது நூல்.

இவன் தன் தகுதிக்கு மேல் இவனுடைய மனைவி வாழ நினைத்தாள். பலன் அவள் பார்வை வசதி படைத்த சிலரின் பக்கம் சாய்ந்தது. மனைவி வேலிதாண்டிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டாலும், அதற்குத் தன் வறுமையும் கடனும்தான் காரணம் என்பதால் இனி அவளோடு வாழ்வது இயலாது என்பதைப் புரிந்து கொண்டு அவளைவிட்டு விலகிவிட்டான். இனியாவது தான் நல்ல வழிகளைப் பின்பற்றி கடன் இல்லாமல், வாழ்க்கையில் அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருக்க முடிவு செய்து கொண்டான். இந்த முடிவுக்கு வர அவன் தன் மனைவியை நீங்கியதும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கற்பிழந்த பெண்ணுடன் வாழ்வதினும் அவளை விட்டு விலகுவதே இனிமை என்பதைப் புரிந்து கொண்டான்.

தான் கடன்காரன் ஆவதற்கும், வாழ்க்கையில் தோல்வி கண்டதற்கும் தான் மட்டுமா காரணம் என்று சற்றி நிதானமாகச் சிந்தித்தான். தன்னைச் சுற்றி நல்ல குணங்கள் இல்லாதவர்களும், தீயவர்களும் சூழ்ந்திருப்பதைத் தெரிந்து கொண்டான். தன் மனைவியே தன்னை ஏமாற்றிவிட்ட பிறகு இதுபோன்ற தீயவர்களைப் பற்றி கேட்பானேன். அத்தகைய தீய சூழலைவிட்டுப் பிரிந்து சென்றான். தனித்து வாழ்ந்தான். நேர்மையாகவும் கடன் இல்லாமலும் வாழ்ந்து தன் வாழ்க்கை இப்போது இனிமை என்பதைத் தெரிந்து கொண்டான். இனி பாடல்.

"கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
திறை மாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பு இலாதவரை அஞ்சி யகறல்
எனை மாண்புந்தான் இனிது நன்கு."

இந்தப் பாடலின் கருத்து: வாழ்க்கையில் கடன் வாங்கி வாழாதிருத்தல் இனிமை; கற்பில்லாத மனைவியை நீங்கிவிடுவது இனிமை; வக்கிர மனம் கொண்டவர்களை அஞ்சி நீக்கிவிடுதல் எல்லா மாண்புகளிலும் இனிமை பயக்கும்.

No comments: