23. இனியவை இருபத்திமூன்று.
ஒருவர் தான் பிறந்த அந்த சின்னஞ்சிறு கிராமத்துக்குத் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சொந்த ஊரைப் பார்த்து வரலாமே என்று போய்ப் பார்த்தார். அவருக்கு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த பசுமையான, அழகான, சுத்தமான எங்கும் மக்கள் அன்போடு பழகும் மக்களையும் மனதில் வைத்திருந்து இப்போது இத்தனை ஆண்டுகள் கழிந்து அங்கு போனபோது ஏமாற்றம்தான் மிகுந்திருந்தது. அந்த சிறு கிராமத்துக்கு அங்கிருந்த சிவன் கோயிலும், ஊருக்குக் கிழக்கே இருந்த மாரியம்மன் கோயிலும்தான் பெருமை சேர்த்தவை. ஆனால் இன்று சிவன் கோயில் பாழடைந்து கிடந்தது. ஏதோ செய்ய வேண்டுமே என்று கோயிலுக்கு விளக்கேற்றி பூஜைகள் செய்ய ஒருவர் இருந்தார். மாரியம்மன் கோயில் ஓரளவு பரவாயில்லை. மக்கள் நடமாட்டம் அங்கு இருந்தது.
சிவன் கோயில் சந்நிதியில் சுமார் பத்து பதினைந்து வீடுகள் அந்தக் காலத்தில் இருந்தன. அது தவிர கோயில் திருக்குளமொன்று சந்நிதித் தெருவில் வடபுறம் அமைந்திருந்தது. அழகான மண்டபத்துடன் கூடிய படித்துறை, நான்கு புறமும் குளத்துக்குப் படிக்கட்டுகள். அந்த பத்து வீடுகளிலும் கோயில் பூஜை செய்வோர், நாதஸ்வர வித்வான்கள், கோயில் நிர்வாகி ஆகியோர் இருந்தனர். சில வீடுகள் இடிந்து பாழடைந்து கிடந்தன. இவருக்கு மனம் வேதனையால் தவித்தது. கோயில் சந்நிதித் தெருவில் இரு வரிசையில் அந்தக் காலத்தில் வளர்ந்திருந்த இலவம் மரங்களும், திருவிழா காலத்தில் ஈச்சை, இளநீர், மாவிலை, தோரணங்கள் அழகு செய்யவும், பந்தல் போடவும் அந்த மரங்கள் பயன்பட்டன. இன்று ஒன்றும் இல்லை. ஒரே மணல் வெளி. காரணம் அங்கிருந்து ஐந்து கல் தூரத்தில் கடற்கரை.
இவர் ஓர் முடிவுக்கு வந்தார். அந்த சந்நிதித் தெருவில் இடிந்து விழுந்திருந்த ஒரு வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்தார். தன்னுடைய முயற்சியால் இடிந்து கிடந்த திருக்குளத்தை சீரமைக்கவும், கோயிலில் எல்லா கால பூஜைகளும் நடக்கவும் முயற்சி எடுக்க முடிவு செய்தார். சந்நிதித் தெரு வீட்டையும், அதன் பின்புறம் இருந்த ஏராளமான தரிசு நிலத்தையும் விலைகொடுத்து வாங்கினார். அந்த சந்நிதி புதுத் தோற்றம் பூண்டது. சுற்றியிருந்த நிலத்தில் ஒரு ஆழ்துளை கிணறு தோண்டினார். நீர்பாய்ச்சி அங்கு ஒரு அழகான தோட்டத்தை வளர்த்தார். இவரது முயற்சி அவ்வூராருக்கும் தெம்பைக் கொடுத்து, கோயில் மீண்டும் புத்துணர்வு பெற ஆரம்பித்தது. சுற்றுலா வருபவர்களும், ஆலயங்களுக்கு வரும் பக்தர்களும் அதிகரித்தனர். அவர்கள் கண்களைக் கவர்ந்தது அவர் வளர்த்த அந்தப் பூஞ்சோலையும், புது வீடும் தான். இன்று அந்த கிராமத்துச் சிவன் கோயிலுக்கு தினமும் நூற்றுக் கணக்கானோர் வருகின்றனர். அவரது பூஞ்சோலையில் அமர்ந்து வெயில் வேளையில் ஓய்வு கொள்கின்றனர். உணவு சாப்பிடுகின்றனர். எதிரிலுள்ள கோயில் திருக்குளத்துக்கு புது நீர் வரும் பாதை சரி செய்யப்பட்டு நீர் நிரப்பப்பட்டது. குளம் இன்று மீண்டும் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அத்தகைய ஊரில் இப்படிப்பட்ட சோலை அமைப்பதும், குளத்தைச் சீரமைப்பதும் இனிமையானது அல்லவா?
முன்பெல்லாம், அதாவது லார்டு மெக்காலேயின் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் முன்னர், அதாவது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நம் தமிழகத்தில் தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிவுகள் இருந்தன. அவற்றில் ஏற்றத் தாழ்வு இல்லை. அந்தந்த தொழில் செய்வோர் தங்களுக்குள் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களது பழக்க வழக்கங்கள் அந்தந்தத் தொழில் செய்வோர் மத்தியில் ஒரே மாதிரியாக இருந்தன. மற்ற தொழில் புரிவோர் அவர்கள் மக்களின் பழக்க வழக்கங்களை மேற்கொண்டனர். இப்படி தொழில் ரீதியாகப் பிரிந்திருந்தவர்கள் ஊர் பொதுக் காரியம் என்றால் ஒன்று சேர்ந்தனர். இவர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. இதில் ஒரு பிரிவினர் மக்கள் நலனுக்காக யாகம் புரிவதும் வேதம் படிக்கவும், கல்வியை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்கள் தரும் பொருளில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளவுமாக இருந்தனர். ஆங்கிலேயரின் வருகையால் இந்தப் பிரிவுகள் கலகலத்தன. ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. அதனால் ஒற்றுமையோடு இருந்த சமுதாயம் பிரிந்து நின்றது. பிரித்தாளும் சூழ்ச்சியை எல்லா நிலைகளிலும் கடைப்பிடித்து வெள்ளையர்கள் நம் சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்தனர்.
அப்படிப் பிரிவினைகள் ஏற்படாத காலத்தில் உலக நன்மைக்காக யாகங்களைச் செய்து வந்த அந்தணர்களுக்கு மற்ற சமூகத்தார் வேண்டிய உதவிகளைச் செய்தனர். பசுக்களை தானம் செய்தனர். பொன்னையும் பொருளையும் கொடுத்து வாழ்வித்தனர். அந்த காலத்துச் சூழ்நிலையில் அப்படிப்பட்ட அறச் செயல் இனிமையாக இருந்தது. அப்படி வேதம் பயின்று பிறர் நலனுக்காக வேண்டும் இனத்தார் தங்களுக்கென்று எந்த சொத்தும் சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது. நாளைக்கு என்று கூட சேர்க்கக் கூடாது. பிறர் தரும் பொருளில்தான் வாழ வேண்டும் என்ற நியதி இருந்தது. நியமம் தவறாமல் வாழ்ந்த இவர்களை மதித்து பசு, பொன் போன்றவற்றை ஏனையோர் கொடுத்து வந்தனர். இது இனிமையானது என்கிறது இந்தப் பாடல்.
பாவ புண்ணியத்துச் சூதாடிகள் அஞ்சுவதில்லை. ஏமாந்தால் ஏழையைக் கூட மொட்டையடித்து விடுவார்கள். தெருவோரத்தில் நான்கு சீட்டுகளை மாற்றி மாற்றி விரித்து வைத்து அதன் மீது ஒரு தகர டப்பாவை கவிழ்த்து அதனடியில் இருக்கும் சீட்டின் அடையாளத்தில் பணம் கட்டினால் பன்மடங்கு தருவதாகச் சொல்லி எளியவர்களை மொட்டையடிக்கும் மோசடிப் பேர்வழிகள் ஏராளமாக இருக்கின்றனர். பொய் சொல்லி, ஏமாற்றி, சூதாடவைத்து இப்படி மக்களை மோசடி செய்யும் பேர்வழிகளை ஒதுக்கி, அவர்கள் நிழல்கூட நம் மீது படாமல் பார்த்துக் கொள்வது இனிமை தரும்.
"காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றும் தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது."
இதன் பொருள்: நல்ல பசும் சோலையை வளர்ப்பதும், அறம் செய்வதற்கென்று நீர்நிலைகள் குளங்களை வெட்டுதல் மிக இனிமை பொருந்தியது. பசுவையும் பொன்னையும் வேதம் பயின்ற எளிய அந்தணர்க்குக் கொடுப்பது இனிது; பாவங்களுக்கு அஞ்சாத சூதாடிகளை விட்டு நீங்குதல் மிக இனிது.
No comments:
Post a Comment