பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, February 7, 2012

"இனியவை நாற்பது" (5)


5. இனியது ஐந்து.

அந்த சிற்றரசனுடைய ராஜ்யம் சிறியதாயினும் வளம் நிரம்பிய நாடு. விவசாயமும், கால்நடைகளும் மண்டிக் கிடக்கும் பிரதேசம். ஆடு, மாடுகள் வளர்ப்பின் மூலம் மக்கள் நன்மைகளை அனுபவித்து வந்தனர். கோழி வளர்ப்பும் அதிகமாக இருந்ததால் செல்வச் செழிப்பில் மக்கள் மகிழ்ந்திருந்தனர். திடீரென்று மக்கள் மத்தியில் தங்கள் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சம் தோன்றியது. காரணம் அது மிக சிறிய ராஜ்யம் என்பதால் மக்கள் அதிகமாக புலால் உண்பதனால் ஆடு, கோழி இவைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதைக் கண்டனர். என்ன செய்வது? மன்னனிடம் சென்று முறையிட்டனர். மன்னன் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டான். கால்நடைகளின் எண்ணிக்கைக் குறைவதற்கு அவர்களது புலால் உணவுப் பழக்கமே காரணம் என்பதைப் புரிந்து கொண்டு, உயிர் வதையைத் தடை செய்வது ஒன்றே அதற்கு வழி என்று உத்தரவு பிறப்பித்தான். ஏராளமாக சத்துள்ள மரக்கறி உணவு வகைகள் இருக்கும்போது உயிருள்ள பிராணிகளை எதற்காகக் கொல்ல வேண்டும் என்று அரசன் சொன்னது மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர்தான் மக்கள் உணர்ந்து கொண்டார்கள் உயிர்களைக் கொல்லாமல் இருப்பது இனிமையானது என்று.

ஒவ்வோராண்டும் அந்த மன்னனின் பிறந்த நாளன்று அவன் சமஸ்தானத்தில் இருந்த சாதனையாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் இவர்களுக்கு விருதுகளைக் கொடுத்து கெளரவப் படுத்துவது வழக்கம். அது போன்றே ஒரு ஆண்டு அவன் விருது பெறுவோர்களின் பெயர்களை அறித்தான். அந்த பட்டியலைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்து ஒரு சிலரின் பெயர்கள் சிறப்புக்குரியவர்கள் பட்டியலில் இருக்கும் தகுதி இல்லாதது அறிந்து வருந்தினர். யார் போய் மன்னனிடம் சொல்வது? அப்படிப்பட்ட தகுதியில்லாதவர்கள் அரசாங்க பதவிகளில் இருந்து கொண்டே மன்னனுக்கு எதிராக மோசடிகளில் ஈடுபட்டு அரசாங்க கஜானா பணத்தைத் தனக்கும் தான் சார்ந்த உறவினர்களுக்கும் கையாடல் செய்து எடுத்துக் கொண்டதை மக்கள் அறிவார்கள். ஆனால் மன்னனிடம் போய் யாரும் சொல்லவில்லை. அத்தகைய ஊழலில் ஈடுபட்டவனுக்கே அரசன் விருது வழங்கி கெளரவிக்கலாமா. மக்கள் கூடிப் பேசினர். ஊர்ப் பெரியவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அரசனிடம் சென்று உண்மையை விளக்கிச் சொல்லி, அத்தகைய ஊழல்பேர்வழிகளுக்கு மரியாதை செய்வது மரபல்ல என்பதை எடுத்துச் சொல்லச் செய்தனர். மன்னனுக்கு உண்மை விளங்கியது. அத்தகைய கருப்பாடுகளை பட்டியலில் இருந்து நீக்கியதோடு அல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துத் தண்டித்தான். அரசன் என்போன் நடுவு நிலைமை தவறி நடக்கும் தன்னிடம் பணியாற்றும் நபர்களைச் சிறப்புச் செய்யாதிருத்தல் இனிது என்பதை புரிந்து கொண்டான். 

மக்களுக்கு மகிழ்ச்சி. செங்கோல் தவறாமல் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு நடக்கும் மன்னன் மீது அபார மதிப்பும், மரியாதையும் கொண்டனர். ஒரு மன்னன் என்பவன் செங்கோல் ஆட்சி புரிவது என்பது இனிமை அல்லவா? இதனை மக்கள் மட்டுமல்ல, அந்த அரசனும் புரிந்து கொண்டான்.

ஒவ்வொரு பருவம் தோறும் மன்னன் மக்கள் மன்றத்தைக் கூட்டுவான். இடைப்பட்ட காலத்தில் தன் ராஜ்ஜியத்தில் நடந்த செய்திகளை அரசாங்க அதிகாரிகள் எடுத்துரைப்பார்கள். அப்போது யார் தவறு செய்தவர்கள், யார் திறமையாகப் பணியாற்றினார்கள் என்பதெல்லாம் மன்னருக்குத் தெரிந்திருந்தாலும், யாரைப் பற்றியும் மன்னன் எந்த குறையும் இந்நாள் வரை சொன்னதில்லை. குறைகளை நீக்கி நல்ல முறையில் திருத்திக் கொள்ள மட்டும் ஆலோசனைகள் சொல்வதுண்டு. யாரையும் புறம்பேசியதுமில்லை. இத்தகைய தகுதி இருப்பது அந்த மன்னனுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே இனிமை அல்லவா? இதைத்தான் ஐந்தாவது பாடலில் சொல்கிறார். அது இதோ.

"கொல்லாமை முன் இனிது, கோல்கோடி மாராயம் 
செய்யாமை முன் இனிது, செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிது என்ப, யார் மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு."

மாராயம்: தவறு செய்தோருக்கு சிறப்பு செய்தல்.

No comments:

Post a Comment

You can give your comments here