பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, February 7, 2012

+2 மாணவர்களுக்கு.......


அன்பிற்கினிய +2 மாணவர்களுக்கு.......

இந்த ஆண்டு +2 பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும், தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்து எந்தத் துறையை எடுத்துப் படிக்க வேண்டுமென்பது குறித்தும் மாணவர்களும், பெற்றோர்களும் யோசிக்கத் தொடங்கும் நேரம் இது. உங்களுக்கு இந்தத் துறையில் வழிகாட்டப் போவது யார்? எந்தத் துறையில் படிக்க விருப்பம்? எதில் படித்தால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளையும் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதை விவரமாக உங்களுக்குத் தெரிவிக்கிறார் சு.அகிலன். அவருடைய "+2; பிறகு.." எனும் தலைப்பிலான நூல் உங்களுக்கு உதவ காத்திருக்கிறது. இந்த நூலின் நோக்கம் "பாதைகள் தெளிவானால், பயணங்கள் பாரமில்லை!" என்பதுதான்.

"+2 படிக்கும் மாணவர்களின் மனநிலையை மனதில் வைத்தே இந்தப் புத்தகம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது என்பது அதன் நடையில் இருந்து புரிகிறது. எளிய தமிழ், என்ன படிப்பு படித்தால் என்ன வேலைவாய்ப்புக் கிடைக்கும். உயர்கல்வி படிப்பதற்கு உதவித் தொகைகள் ஏதேனும் உண்டா போன்ற தகவல்கள் மாணவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார் தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் திரு ப.சங்கரநாராயணன் தன்னுடைய முன்னுரையில்.
இந்த நூலின் சிறப்பம்சமாக திரு சங்கரநாராயணன் குறிப்பிடுவது, ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணாக்கர்களை மட்டும் மனதில் கொள்ளாமல் அறுநூறு மதிப்பெண் பெறும் மாணாக்கர்பாலும் அக்கறை காட்டியுள்ளது என்பதுதான். ஆகவே ஒவ்வொரு +2 மாணவனும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அடங்கியது இந்த நூல்.

அடடா! படிப்பில்தான் எத்தனைப் பிரிவுகள்? பாருங்கள் ... அசந்து போவீர்கள்.

சட்டம் படிக்க வேண்டுமா? அனிமேட்டராக என்ன படிக்க வேண்டும்? ஓவியம், மீடியா போன்ற பொழுதுபோக்குத் துறைக்கு? காப்பி ரைட்டராக வேண்டுமா? வணிகவியலில் தேறவேண்டுமா? அல்லது கட்டடக் கலை வல்லுனராக வேண்டுமா? கலைப் படிப்புகள் கிரிமினாலஜி, காவல்துறை நிர்வாகம் ஓவியம், கைவினைப் படிப்பு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்பு மருத்துவம் ஃபேஷன் டிசைனர் கப்பலில் வேலையா வேளாண்துறை சார்ந்த படிப்பு பொறியியல் துறைகள் அறிவியல் தொழில் முனைவோர் விளையாட்டுகள் சம்பந்தமான படிப்புகள் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புகள் பைலட் ஆகவேண்டுமா மல்டி மீடியா, அனிமேஷன் & கேமிங் மேலாண்மைப் படிப்பு இசைப் படிப்பு இதழியல் படிப்பு கணக்காயர் ஆகவேண்டுமா நிர்வாகவியல் படிப்பு கால்நடை மருத்துவம் இன்னும் என்னென்ன துறைகள் உண்டோ அத்தனை துறைகளைப் பற்றியும் ஓர் அறிமுகம் கிடைக்கும் இந்த நூலில்.

கல்லூரி படிப்புக்குத் தயாராகும் நிலையில் மாணவர்கள் எவற்றையெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும்? ஒரு பட்டியலைத் தருகிறார் ஆசிரியர். 

மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சில ஊர்களில் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார். அங்கு சென்று மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அதற்கு முன்பு +2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம், எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை முடிவு செய்துகொள்ள பயன்படக் கூடிய நூல் இது "+2; பிறகு...."

வெளியிட்டிருப்பவர்கள்: ஆசிரியர்: சு.அகிலன்

பொன் புத்தகாலயா, 7, தங்கையா தெரு, காந்திநகர், நாகல்கேணி, சென்னை 600 044. தொலைபேசி: 91 44 22380694; 91 9444414694.

No comments:

Post a Comment

You can give your comments here