பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 30, 2012

கவி குஞ்சர பாரதி

கவி குஞ்சர பாரதி (1810 - 1896)

கர்நாடக சங்கீத உலகில் இந்தப் பெயர் அறிமுகமான பெயர். இவர் பாடல்கள் இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருபவை. பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர் இந்த கவி குஞ்சர பாரதியார்.

இவருடைய முன்னோர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து குடிபெயர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெருங்கரை எனும் ஊருக்குக் குடியேறினார்கள். 17ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரத்தை ஆண்ட ரகுநாத சேதுபதி மஹாராஜா இவருடைய முன்னோர்களுக்கு இந்த கிராமத்தை கொடையாக அளித்திருக்கிறார்கள். கவி குஞ்சர பாரதியின் தந்தை வழித் தாத்தாவின் பெயர் கோட்டீஸ்வர பாரதி. தந்தையார் பெயர் சுப்பிரமணிய பாரதி. தாத்தாவின் பெயரே இவருக்கும் கொடுக்கப்பட்டதால் இவரை பெயர் மாற்றி அழைத்தனர். இந்தக் குடும்பத்தில் அனைவருமே இசையில் வல்லவர்கள். கவி குஞ்சர பாரதியின் தாய்வழி பாட்டனார் பெயர் நந்தனூர் நாகபாரதி. இவருடைய தந்தை பாட்டனார் அனைவருமே தமிழ், சமஸ்கிருத மொழிகளில் வல்லுனர்கள். 

இவருடையெ பெற்றோர்கள் குழந்தைக்காக தவமிருந்து பெருங்கரைக்கு அருகிலுள்ள கொடுமாலூர் எனுமிடத்தில் உள்ள முருகனை வழிபட்டு இந்தக் குழந்தை பிறந்ததனால், இவன் முருகனின் கொடை என்று கருதினார்கள். இவரது இளம் வயதிலேயே தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் முறையாகப் படித்தார். இவருக்கு மொழியில் புலமையும், கவி இயற்றும் திறமையும் இயற்கையிலேயே அமைந்திருந்தது. இசையிலும் இவர் நன்கு தேர்ச்சி பெற்றார். இவர் இப்படி பல்துறை வித்தகராகப் பரிமணிக்கத் தொடங்கியதுமே அப்போது பிரபலமாக இருந்த மதுரகவி பாரதியார் என்பவருடன் அறிமுகமானார். இவ்விருவரின் நட்புறவின் பயனாக கவிகுஞ்சர பாரதி தனது 12ஆவது வயதிலேயே கவிதைகளை இயற்றத் தலைப்பட்டார். தமிழில் கீர்த்தனங்களும், பிரபந்தங்களும் பாடத் தொடங்கினார். இவர் பாடல்களின் கருவாக விளங்கியவர் முருகப் பெருமான். மீனாட்சியம்மையும் இவர் பாடல்களில் இடம்பெற்றிருந்தார். 

இவருக்கு 18 வயதாக இருந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் இருந்த போது, இவரது கனவில் அந்த ஊரின் கிராம தேவதை தோன்றி தன்னைப் பற்றி பாடுமாறு கேட்டுக் கொண்டது. மறுநாள் அவரது உடல் நிலை தேறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தேவதை கேட்டுக் கொண்டபடி அவர் அந்த கிராம அம்பாள் மீது பிரபந்தங்களைப் பாடத் தொடங்கினார். 1840இல் இவர் இயற்றிய "அழகர் குறவஞ்சி" மிகப் பிரபலமடைந்தது. இந்த குறவஞ்சி இலக்கியம் முதன்முதல் சிவகங்கை ஜமீன்தார் அவையில் அரங்கேற்றப்பட்டது, பின்னர் இது நாடு முழுவதும் பரவி இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. 

அப்போதைய சிவகங்கை மன்னர் கெளரிவல்லபர் தன்னுடைய அவையில் புலவர்கள், பண்டிதர்கள் நிரம்பிய சபையில் வந்து தனது பாடல்களைப் பாடும்படி கேட்டுக் கொள்ள இவரும் சென்று பாடினார். அங்கு இவரது திறமையைப் பாராட்டி இவருக்கு "கவி குஞ்சரம்" எனும் விருதினை வழங்கி இவரை சிவகங்கை ஆஸ்தான வித்வானாக நியமித்தார்கள். அது முதல் கவி குஞ்சர பாரதியார் சிவகங்கை சமஸ்தானத்துப் புலவராக கெளரிவல்லபருக்குப் பிறகு வந்த சத்ரபதி போதகுரு என்பவரின் காலத்திலும் தொடர்ந்து இருந்தார். "வேங்கைக் கும்மி" என்ற பெயரில் ஒரு கும்மிப் பாட்டையும் இவர் இயற்றினார். சிவகங்கை மன்னர் ஒரு முறை 16 அடி நீளமுள்ள ஒரு வேங்கையை வேட்டையாடிய திறமையைப் பாராட்டி இந்த இலக்கியம் பிறந்ததாம். இந்த கும்மிப் பாட்டைப் பாராட்டி மன்னர் இவருக்கு கொட்டாங்கச்சியேந்தல் எனும் கிராமத்தைத் தானமாகக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் இவரை ஒரு பல்லக்கில் உட்காரவைத்து பரிசுப் பொருட்களுடன் அந்த கிராமம் வரை அரச குடும்பத்தார் பின்சென்று மரியாதை செய்தனர்.

இவரது புகழைக் கேள்விப்பட்டு இராமநாதபுரம் சேதுமதி மகாராஜா இவரைத் தங்கள் ஊருக்கு அழைத்து அந்த சமஸ்தானத்து ஆஸ்தான வித்வானாகவும் அங்கீகரித்தார். இராமநாதபுரம் சேதுபதியின் வேண்டுகோளை ஏற்று இவர் "ஸ்கந்தபுராண கீர்த்தனை"களை சுப்பிரமணியசுவாமி மீதி இயற்றிப் பாடினார். அப்போது இவருக்கு 55 வயது ஆகியிருந்தது. அதன் பிறகு இவர் அமைதியாகத் தன் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். 

ஒருவர் பிரபலமடைந்துவிட்டாலே அவரைப் பற்றிய பல செய்திகள் வெளிவருவது உண்டு. அதைப் போல இவர் ஒரு முறை வெண்பா ஒன்றைப் பாடி மழையை வரவழைத்தார் என்பதும் ஒரு செய்தி. இவர் தனது 86ஆம் வயதில் சுற்றத்தார் சூழ்ந்திருக்க இப்பூவுடலை நீங்கினார்.

இவரது படைப்புகளாக விளங்குபவைகள், அழகர் குறவஞ்சி. இது திருமலிரும்சோலைமலை அழகர்மேல் பாடப்பட்டது. அடைக்கலமாலை, கயற்கண்ணி மாலை இவை மதுரை மீனாட்சியம்மையின் மீது பாடப்பட்டவை. திருவேங்கட மாலை திருப்பதி ஏழுமலையான் மீதான பாடல். "பேரின்ப கீர்த்தனைகள்" என்பது இவரது படைப்புகளில் சிறப்பானதொன்று. இவரது திறமைக்குப் பல பாடல்களை எடுத்துக்காட்டாகக் காட்டமுடியும். 

இவருடைய பாடல்களில் "கவி குஞ்சரம்" எனும் சொல்லை முத்திரையாகப் பயன்படுத்தியிருக்கிறார். 


1 comment:

 1. ////ஒருவர் பிரபலமடைந்துவிட்டாலே அவரைப் பற்றிய பல
  செய்திகள் வெளிவருவது உண்டு. அதைப் போல
  இவர் ஒரு முறை வெண்பா ஒன்றைப் பாடி
  மழையை வரவழைத்தார் என்பதும் ஒரு செய்தி.////

  அப்படியும் இருக்கலாம் இத்தனை பாடல்கள் செய்தவர்
  என்பதால் அப்படி ஒரு நிகழ்வும் நடத்திட சித்து பெற்று இருக்கலாம் ஐயா!

  கவிக் குஞ்சரப் பாரதியின் கவின்மிகு வாழ்வதை
  கூறும் பதிவை பகிர்ந்ததற்கு நன்றிகள் ஐயா!

  ReplyDelete

You can give your comments here