24. இனியவை இருபத்திநான்கு.
அரசியல் பிரமுகர் ஒருவர். சற்று வசதியானவர். மக்கள் நலனில் உண்மையான அக்கறையும் நாட்டமும் கொண்டவர். நேர்மையானவர். ஆம்! அரசியலில் ஈடுபட்டிருந்தும் நேர்மை தவறாமல் நடந்து கொள்பவர். ஆனால் அவரைச் சுற்றியிருக்கும் அரசியல் வாதிகளின் நடத்தையினால் மக்கள் சற்று கோபமடைந்திருந்தாலும், இவர் மீது மட்டும் நல்ல எண்ணம் கொண்டிருந்தார்கள். இவருக்கு ஏன் இந்த அரசியல், பேசாமல் இவர் பொதுக் காரியங்களைச் செய்துகொண்டு நேர்மையாளர் என்கிற பெயரைக் காப்பாற்றிக் கொள்வதை விட்டு இவருக்கு எதற்காக அரசியலும், தேர்தலும் என்று சிலர் வெளிப்படையாகவே விமர்சிப்பார்கள்.
அவர் சார்ந்திருந்த கட்சி இவரைத் தேர்தலில் நிற்க வைத்துவிட்டது. என்ன செய்வார் பாவம்! வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து கரங்களைக் கூப்பி வாக்குக் கேட்கத் தொடங்கினார். இவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மன மகிழ்ச்சியோடு இவரை வரவேற்றாலும், ஐயா தங்களுக்கு எதற்கு இந்த வீண் வேலை. தங்கள் கெளரவம் கெட்டுவிடாதா என்றெல்லாம் கூட கேட்டார்கள். இவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாதவர்கள் அரசியல்வாதிகள் என்றால் ஒரு அபிப்பிரயம் கொண்டிருந்தவர்கள், இவரை கேள்வி மேல் கேட்டு இவரது பொறுமையை அதிகம் சோதித்தனர். இவருடன் இருந்தவர்கள் அந்த மக்களிடம் கோபப்பட்டு பதில் சொன்னாலும், இவர் அவர்களை அடக்கிவிட்டு, அடக்கத்துடன் உங்கள் கோபம் நியாயமானதுதான். இயன்றவரை நீங்கள் சொல்லும் குறைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. அப்படி முடியாவிட்டால் இதை விட்டுவிடுகிறேன் என்று பொறுமையாக பதில் சொல்லுவார். மற்றவர்கள் இவர் ஏன் இப்படி அடங்கிப் போகிறார் என்று கவலைப் பட்டார்கள். ஆனால் தேர்தலின் முடிவில் இவர்தான் அதிகம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அவரது பொறுமையும், கோபப்படாமல் சொன்ன பதில்களும்தான் காரணம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். ஆகவே தான் வெற்றியடைய வேண்டுமானால், அது எந்தத் துறையானாலும் கோபப்படாமல் தவம் செய்வது போல வாழ்க்கையை கசடு நீக்கிக் நடந்து கொள்வானானால் அது இனிமை தரும்.
அந்த பகுதி மக்களுக்குப் பல தேவைகள் இருந்தன. குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. சில கல் தூரத்தில் இருந்த ஒரு பெரிய ஆற்றிலிருந்து குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு வந்து மேல் நிலைத் தொட்டிகள் அமைத்து ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்தால் இந்தப் பிரச்சினை தீரும். ஆனால் அந்தக் குழாய்களைக் கொண்டு வரும் வழியில் இருக்கும் நிலச் சொந்தக்காரர்கள் தங்கள் நிலங்களை விட்டுக் கொடுக்க மறுத்தனர். இவர் பொறுமையாக அனைவரையும் சந்தித்து, ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காகச் சிலர் தங்கள் சொந்த நலனை விட்டுக் கொடுத்தல் தியாகம் அல்லவா. அந்தத் தியாகத்தை நீங்கள் ஏன் செய்யக் கூடாது என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, மெல்ல அவர்களைச் சம்மதிக்க வைத்து குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். இதுபோல பல விஷயங்களில் அவருடைய விடாமுயற்சியும், உறுதியும் மக்கள் நலனுக்கு உகந்ததாக அமைந்தது. இவருடைய இப்படிப்பட்ட ஆற்றல் இனிமையானது அல்லவா?
இவருடைய திறமையையும், ஆற்றலையும் கண்ட அவரது கட்சிக்காரர்கள் இவர் அமைச்சராக ஆனால் மேலும் பல நன்மைகளைச் செய்யலாமே, மாநிலம் முழுவதுக்கும் இவரது திறமை பயன்படுமே என்றெல்லாம் சொல்லி இவர் மனத்தில் சலனத்தை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இவருக்கு அத்தகைய ஆசையோ, ஆர்வமோ சிறிதும் இல்லை. இருக்கும் பதவியைக் கொண்டு எத்தனை பேருக்கு நல்லது செய்யமுடியுமோ அதைச் செய்தால் போதும். எட்டாத கனிக்கு ஆசைப்பட்டு தவறான பாதைக்குப் போக நான் விரும்பவும் இல்லை. அந்த எண்ணம் எனக்கு இல்லவும் இல்லை என்று சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து தன் தொகுதி மக்களுக்கு நல்லவைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். இவரது மனம் இல்லாத ஒன்றுக்கு ஆசைப்படாமல், இருப்பதைக் கொண்டு நல்லவை செய்ய நினைத்தது இனிமையானது அல்லவா?
"வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது."
வெற்றி பெறுவதுதான் நோக்கம் என்றால், எதற்கும் சலனப்படாமல், கோபப்படாமல் தவம் போல் வாழ்பவனது செயல் இனிமையானது; தான் ஈடுபட்ட செயலை முடிப்பதையே நோக்கமாக இருந்து காரியத்தை முடிப்பவனின் ஆற்றல் இனிமை தரும். தன்னிடம் இல்லாத ஒன்றுக்காக விரும்பியும் அது கிடைக்காமல் போவதால் மனம் துன்பப்படாமல் இருப்பதைக் கொண்டு மகிழ்பவனின் செயல் இனிமை தரும்.