பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, July 19, 2017

லக்ஷ்மி ராமாயணம் பகுதி VIII

"லக்ஷ்மி ராமாயணம்" 

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.
நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger. )
          
கார்முகப் படலம்

முற்றும் செவிமடுத்த சனகன், ‘மாயவில்லிற்கு,
தோற்றவனானே னென்றுநான் துவண் டிருக்கையில் – இவன்
நாணேற்றிடு வானேயெனில், இடர் கடப்பேன். - நாண்
ஏற்றவனை ஏற்றிடுவாள் எம்நங்கை’ என்றனன்.    268

‘குன்று போன்ற கட்டமைந்த வில்லினை,
ஈண்டு கொணர்மின்’ பணித்தனன் பணியாளரை – அவரும்
கார்முகச் சாலையின் காவல ரிடம்போய்
‘முக்கணன் வில்லினை இக்கணம் அருள்வீ’ரென்றார். 269

உறுவலி களி றொத்த மேனியர்;
செறிமயிர்க் கல் லென்ற தோளினர்;
அறுபதி னாயிரம் ஆட்களு மிடையிடையே
தறிமடுத்து தோள்சுமந்து வந்தனர் – இவ்வில்லை  270

நெடுங்காலம் தன்முதுகில் சுமந்திருந்த நிலமகள் - தம்
உடல்நோவை ஆற்றுதற்கு முனைந் தாளாம்.
கண்ணுற்ற மேருமலை நாணுற்ற தாம்!
எண்ணற்ற மிதிலைமக்கள் காண வந்தாராம்!      271

சிவனோ, அரியோ அன்றி யாருளர்
அவனியிலே இவ்வில்லைத் தீண்டு தற்கு?
அவனே வந்தி தில் நாணேற்றின்,
நங்கையின் வாழ்வும் சிறக்கு மென்றார்’ சிலர்.    272

‘வில்’ லென்று சொல்லுதல் வஞ்சகமே!
பொன்குன்றாம் மேருமலையே தானி தென்பார்.
படைக்கையில் நான்முகனே, தொட்டதவன் தவப்பயனே
இப்பிறப்பில் நாணேற்றத் தக்கவ னெவனோ?’ வென்பார். 273

நாகங்களுக் கரசனாம் ஆதி சேடனோ?
பாற்கடல் கடைந்த மந்திர மலையோ?
விண் ணின்று மண்ணில் வீழ்ந்த
இந்திரவில்லோ இது? என்றெல்லாம் பேசினராம். 274

மணவாளன் தேர்வுக்குப் பணயமாய் வில்வைத்த
மதிகெட்ட மன்னர் வேறொரு வருமுண்டோ?
முன் செய்த நல்வினை யாலிதை
முடித்தலும் கூடுமோ? கன்னியும் காண்பளோ?   275

இவ் வில்லினின்று புறப்படும் அம்புக்கு,
இலக் கெதுவும் உளதோ? என்றும்,
திருமாலே வந்திதை வளைப்பானோ! என்றும்,
விதிசெய்த சதி யிதுவோ?’ பலவாறாய் பேசினராம். 276

மன்னனின் ஆணையால் கொணர்ந்த வில்லை,
மண்ணின் மேலிடம் நெளிந்துதாழ வைத்தனராம்.
வந்திருந்த வேந்தர்கள் வியந்தனராம்! – இதனை
வளைத்திடல் எவரென விதிர்த் தனராம்.         277

யானைகன்று போன்ற வனாம் ராமனையும்,
வேதனை யளிக் கின்ற வில்லினையும்,
மாதினை எண்ணி வருந்தும் மன்னனையும்,
மாறிமாறிப் பார்த்த சதாநந்தமுனி கூறலுற்றார்.   278
                     
உமையினை ஒருமுறை தக்கன் இகழ்ந்தான் .- பின்
தொடர்ந்தான் மிகப்பெரும் யாக மொன்றை.
சினந்தனன் சிவனும்! ஏவினன் வீரபத்ரனை - அவனும்
தேவரை வதைத்து, வேள்வியை யழித்தனன். 279

மேருவை வில்லென வளைத்த சிவனும்,
பெருகிய சினத்துடன்; யாக சாலையடைய,
வேண்டினள் தேவியும் அமைதி கொண்டிட,
ஏற்றனன் சிவனும், தேவரை உயிர்பித்தான்.      280

தண்டின் சிறப்புடை அவ் வில்லை,
சனகனின் முன்னோர் வசம் சேர்த்தான்.
வில்லின் வலிமை யுரைத்த மகாமுனி,
செல்வியாம் சீதையின் கதை தொடர்ந்தார்.       281

வேள்விச் சாலையை செப்ப னிட – பொன்
கலப்பையால் நிலத்தை உழு கையிலே
கொழுமுனை தொட்டதும் புவியழ குடனும்,
பாற்கடல் அமுதென தோன்றினள் திருமகள்.      282

நற் குணங்கள் பலப்பலவும் போட்டியிட்டே,
பொற்செல்வி தாள்பணிந் தடைந் தனவாம்.
‘அழகு’என்பதும் பெருந்தவஞ் செய்து இத்
தவக்கொடி தன்னை வந் தடைந்ததுவாம்.         283

அழகும், குணமும் ஒருங்கே இணைந்திருத்தல்
ஏளிதில் ஏலாது; பிராட்டிக்கோ பிணைந்திருந்தது!
தெய்வநதி கங்கையும் பூமிக்கு வந்ததினால்,
பொலிவிழந்த மற்றநதி போலானர் நங்கைகள்.     284

வித்தகமும், விதிவசமும் வேறுவேறா யிருக்க
நிலவேந்தர் மட்டுமின்றி, அமரர்குல கணங்களுமே,
திருமகளை உடைமையாக்க விரும்பினார் போன்ற
விசித்திரமான செய்தியிவ் வுலகிலே வேறுண்டோ? 285

யானையுடனும், சேனையுடனும் இதுவரை யில்,
மணம்பேச வந்தமன்னர் எண்ணற் றவராம்.
சிவதனுசு வளைப்பானே எம் நங்கைக்கு,
தகுதி பெற்றோ னெனயாம் வலித்திருந்தோம்.      286

முயற்சிசெய்த மன்னர்பலர், எடுப்பதற்கே
முடியாமல் போனதனால் சினம் கொண்டார்.
அறைகூவி சேனையுடன் போர் தொடுக்க,
குறிக்கோளில் வழுவாது எதிர்த்தனன் சனகனும்.    287

 குறைந்தன மன்னனின் மாபெரும் படைகள்,
இருப்பினும் கருத்தினில் உறுதியைக் கூட்டினன்.
நடப்பதை விருப்புடன் நோக்கிய தேவர்கள்
படையீந்தார் மன்னனவனின் எண்ணமது ஈடேற!    288

வில்லினின்று நாணேற்ற எவருமே யில்லை!
மங்கலநாண் கழுத்தினிலே ஏறுவ தெப்போ?
இன்றுஇவன் நாணேற்றி விடுவானெ னில்
நன்று! நங்கையவள் நல்லிளமை நலியாதென்றான்.  289

முனிவனுரை முழுவதையும், முடிதரித்த கௌசிகன்
முடியும்வரை செவிமடுத்து, மனதுள்ளே குறிப்பெடுத்தான் – பின்
வடிவான ராமன்தன் கருணைமுகம் நோக்கிட்டான்.
உட்கருத்தை உணர்ந்தவன், பொருள்படவே வில்பார்த்தான்! 290

வேள்வித்தீயுள் ஆகுதிநெய் பொழிந்த விடத்திலே
பொங்கியெழும் கொழுகனலாய் தசரத புத்திரன்,
அங்கிருந்த வில்லெடுத்து வளைத்திடும் நோக்கில்,
ஆசனத்தின் மீதிருந்து அனலா யெழுந்தான்.      291

‘அழிந்தது வில்லென’ ஆர்பரித்தனர் விண்ணவர்.
மொழிந்தனர் ஆசிகளை, முப்பகைவென்ற முனிவர்கள்.
‘செவ்விய நிறமுடையிவனின் கரம்பிடிக்கா விடில் - நாமும்
நங்கையுடன் தீக்குளிப்பதே நன்றெ’ன்றார் மங்கைகள் - இப்  292

‘பிள்ளை சீதையை மண முடிப்பேனெனில்,
கொள்ளென இவனிடம் கொடுப்பதை விடுத்து,
வில்லினை வளைத்திட வேண்டு மென்று – இவ்
வள்ளல்முன் போட்டது பேதைமை யன்றோ?’  293

தோகையர் இவ்விதம் சொல்லி யிருப்ப,
தேவர்கள் மகிழ, முனிவர்கள் வாழ்த்த,
எருதும், சிங்கமும், யானையும் நாண,
வீறுநடையுடன் வில்நோக்கி நடந்தான் ராமன். 294

மலைபோ லிருந்த அவ் வில்லை - பூ
மாலையெனவே கையி லெடுத்தான்.
இமைத்திட மறந்திட்ட சபையோர் களும்,
நிகழ்ந்திடும் அதிசயம் நோக்க லுற்றார்.        295

ஒரு நொடிப்பொழுதினில் வில்லேந்தி
திருவடி யடியினில் நுனி யூன்றி
மறுமுனை நாணைப் பூட்டு தற்காக
எடுத்தது கண்டார்; இற்றது கேட்டார்.           296
                             
முறிந்த வில்லின் முழக்கத்தா லமரர்கள்
யாரிடம் அடைக்கலம் புகுவோமென விழிக்க,
இடிதாக்கித்தென்று ஆதிசேடனே ஓடிஒளிய,
பாரிலுள்ளோர் நிலைபற்றி பகர்வ தெங்கனம்?   297

கண்ணுற்ற விண்ணோர் பூமழை சொரிய,.
பொன்மழை பொழிந்ததுவாம் வான்மேகம்!
முனிகணங்கள் ஆசிகூற; பன்மணிகள் கடல்தூவ,
நல்வினைப் பயந்ததென, பயந்தெளிந்தான் சனகமன்னன்.298

பல்வகை வாத்தியங்கள் முழங்கி யதாம்
முந்நீர் நிலைகளும் பொங்கி யெழுந்ததாம்.
கார்மேகம் கண்ட தோகை மயில்களென
ஊர்மக்கள் கொண்டாடி கூத்தா டினராம்.         299

மங்கையர்கள் அமுதகீதம் பாடத் துவங்கினர்.
பாணர்களும் மகரயாழை மீட்டத் தொடங்கினர்.
தேவர்களும் செவியாரக் கேட்டு ரசித்தனர்.
ஒளிபொருந்தும் சிலைபோலே லயித்து நின்றனர்.300

தேவலோக அரம்பையர்கள் மிதிலை வந்தனர்.
சிவதனுசு முறிந்தநிலையைக் கண்டு மலைத்தனர்.
தசரத மைந்தன், தாமரைக் கண்ணன்,
மானுடன் அல்லன், நாரணன் இவனென்றும்,     301

புயலும், மேகமும், மேனியாய் கொண்ட,
புருஷோத் தமனை நங்கை பார்ப்பதற்கு
நயனங்கள் ஆயிரம் வேண்டு மென்றும்
சானகி பார்த்தலும் சமம்தானே யென்றும்,        302

இளையவன் இவன்தம்பி சளைத்தவ னில்லை.
உலகம் செய்தது அரும்பெரும் பாக்கியம்!
அவனியில் இவர்களைப் பெறுவதற்கு – என
களிப்புடன் பற்பல கூறிக் கொண்டார்.            303     

(இன்னும் உண்டு)            



5 comments:

J. Panchapagesan said...

Simply brilliant. Shows the mastery over language. My best wishes to reach greater heights.

Thanjavooraan said...

Please point out the specific portion, which has attracted you.

லக்ஷ்மி ரவி said...

Thank you mama.

லக்ஷ்மி ரவி said...

Thank you mama.

j. panchapagesan said...

முதற்கண் இது ஒரு அருமையான படைப்பு என்பதில் சந்தேகமில்லை. பல அறுசுவைகளை என் முன் படைத்து பிடித்ததைக் கூறுவது என்பது கடினம். முதலில் அதற்கான தகுதியை நான் பெறவில்லை என்பதே நிதர்சனம். மற்றும் எல்லாவற்றையும் சுவைத்தறிய நேரம் தேவை. தமிழின் வளர்ச்சிக்கு தங்கள் சேவை பாராட்டுக்குரியது. இது ஒரு தொடர்கதையாக வளர அந்த எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவோமாக. இதில் என் தங்கச்சியின் மகளின் பங்கும் இருக்கிறது என்று அறிய பெருமகிழ்ச்சியடைகிறேன். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். வாய்ப்பளித்தமைக்கு நன்றி!