நாகை மாவட்டத்திலுள்ள ஒரு தொலைதூர ஊர் வேதாரண்யம். இங்குள்ள
சிவாலயத்தின் மூலவர் பெயர் வேதாரண்யேஸ்வரர். மிகப் பழமை வாய்ந்த வரலாற்றை உடையவர் இந்த
ஈஸ்வரன். 9ஆம் நூற்றாண்டு முதல் பல மன்னர்கள் இங்கு வழிபட்டு வந்திருக்கிறார்கள். இடைச்
சோழர்கள், கடைச்சேழர்கள், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், ஏன் ஆங்கிலேயர் உட்பட பலரும்
இங்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி வடக்கே குஜராத்தில் தண்டி யாத்திரை மேற்கொண்டதைப்
போல தெற்கே சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) தலைமையில் 1930இல் உப்பு சத்தியாக்கிரகம்
நடந்த ஊர் இந்த வேதாரண்யம். இது ஒரு நகராட்சி 2011 கணக்கெடுப்பின்படி இவ்வூரின் ஜனத்தொகை
34266. 1991 வரை இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தினுள் இருந்தது. அதன் பிறகு நாகை மாவட்டம்
உருவானபோது இது நாகப்பட்டினம் மாவட்டம். காவிரி டெல்டா பகுதியின் வளமான பகுதி இது.
இங்கு உப்பு உற்பத்தி நடக்கிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு பல இடங்களுக்கும் ஏற்றுமதி
செய்யப்படுகிறது.
வேதாரண்யம் என்பது வேதம் + ஆரண்யம் எனும் சம்ஸ்கிருதச் சொல்.
இதனைத் தமிழில் திருமறைக்காடு என்பர். இங்கு அப்பர் அடிகளும், திருஞானசம்பந்தரும் பாடியிருக்கின்றனர்.
இவ்வூருக்கு அருகில் ஒரு மேடான மணல் குன்றின் மீது ஒரு மண்டபமும் அதில் இரு பாதங்களும்
காணப்படுகிறது. இதை ராமர் பாதம் என்கின்றனர். புராணங்களின் படி வேதங்கள் இவ்வூர் சிவாலயத்தில்
சிவனை வழிபட்டு முடிந்ததும் கதவை இழுத்து மூடி தாழிட்டுவிட்டன. அப்பரி பெருமானும் திருஞானசம்பந்தரும்
இங்கு சிவனை தரிசிக்க வந்தபோது கதவு அடைபட்டுக் கிடந்தது. உடனே ஞானசம்பந்தர் அப்பர்
சுவாமிகளைப் பார்த்து இறைவனைத் துதித்துப் பாடி கதவை திறக்கும்படி கேட்டுக்கொள்ள அவரும்
தேவாரப் பாடல்களைப் பாடியதும் கதவு திறந்து கொண்டது. தரிசனம் முடிந்து திரும்புகையில்
திருஞானசம்பந்தர் பாட ஒரே பாடலில் கதவு மூடிக்கொண்டது. அப்பருக்கு வருத்தம். கதவு திறந்திட
தான் பல பாடல்களைப் பாடியதையும், கதவை மூடிட ஞானசம்பந்தர் ஒரேயொரு பாடல் பாடியதும்
கதவுகள் மூடிக்கொண்டதையும் சொல்லி தன்னை இறைவன் ஏன் அத்தனை பாடல்களைப் பாட வைத்தார்
என்கிறார். அதற்கு ஞானசம்பதர் சொல்கிறார், இறைவன் தங்கள் பாடலை இன்னும் இன்னும் கேட்க
வேண்டுமென்று உங்களைப் பல பாடல்கள் பாட வைத்தார், என் பாடல் ஒன்றே போதும் என்று கதவை
மூடிவிட்டார் என்று சாமர்த்தியமாக பதில் சொல்லிவிட்டார்.
வேதாரண்யம் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து இவ்வூரின்
வரலாற்றை அறிய முடியும். இது ஆதித்த சோழன் (871-907) ராஜராஜன் (985-1014) முதலாம் குலோத்துங்கன்
(1070-1120) ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இந்த விவரங்களைச் சொல்கின்றன. இவர்கள் காலத்தில்
இவ்வாலயத்துக்கு ஏராளமான இறையிலிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 13ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் இங்குதான் இயற்றப்பட்டதாகத்
தகவல்.
குலோத்துங்க சோழன் காலத்தில் சோழநாடு சைவம் தழைத்தோங்கிய பகுதியாக
இருந்தது. ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழன் காலத்துக்குப் பிறகு இரண்டாம் ராஜேந்திரன்
வாழ்ந்த 13ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியது. சோழர்களை வீழ்த்திவிட்டு
பாண்டியன் மாறவர்மன் சுந்தர பாண்டியனும், பிறகு ஹொய்சாள மன்னர்களும் இந்தப் பகுதிகளைப்
பிடித்துக் கொண்டு ஆளத் தொடங்கினர். பிறகு தஞ்சைக்கு வந்த நாயக்க மன்னர்கள் காலத்திலும்
இவ்வாலயத்துக்கு அரசர்கள் எல்லா கொடைகளும் அளித்து வந்தனர்.
1702ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த 65 ஆண்டுகள் வாழ்ந்த பிரான்சு
நாட்டுக்காரன் லாலி என்பவன் 1759ஆம் ஆண்டில் நாகைப்பட்டினத்தை ஆக்கிரமித்துக் கொண்டான்.
அப்போது பிரெஞ்சுப் படைகள் தஞ்சையை ஆண்ட மன்னர்கள் மீது போரிட்டு அவர்களை வெல்ல முயன்று
தோற்றுப் போனார்கள். அப்போது நடந்த போரில் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆற்காட்டின் சந்தா
சாஹேபும், மைசூரின் ஹைதர் அலி, திப்பு ஆகியோர் ஆதரவாக இருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு
தஞ்சை மராட்டிய மன்னர்கள் தீவிர உதவிகளைச் செய்தனர். அப்படி இவ்விரு பிரிவினருக்கும்
இடையே நடந்த யுத்தத்தில் பிரெஞ்சுக்காரர்கள் தோற்று ஓடிப்போயினர். சந்தாசாஹேப் கொல்லப்பட்டான்.
முகமது அலி தஞ்சை மன்னர்கள் ஆதரவில் மீண்டும் ஆற்காடு நவாபாக ஆனார். அந்த காலகட்டத்தில்
வேதாரண்யம் தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.
வேதாரண்யம் கடற்கரைப் பகுதிகளில் உற்பத்தியான உப்பு நாகப்பட்டினத்துக்குக்
கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதற்காக வேதாரண்யம் தொடங்கி
நாகை வரை 51 கி.மீ. தூரம் கால்வாய் மூலம் படகுகளில் உப்பு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த கால்வாய் 1869இல் உப்பு எடுத்துச் செல்லும் பயன்பாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி குஜராத்தில் தண்டி
எனும் ஊருக்குச் சென்று உப்பு எடுத்துப் போராடினார். அதனையொட்டு தெற்கில் ராஜாஜி தலைமையில்
திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை 100 தொண்டர்களோடு நடைப்பயணம் வந்து உப்பு எடுத்து
போராட்டம் செய்தார். இதற்கு வேதாரண்யத்தைச் சேர்ந்தவரும், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவரும்,
உப்பளங்கள் உள்ளவருமான சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஏற்பாடுகள் செய்திருந்தார். இவர்கள்
உப்பு எடுத்து 1930 ஏப்ரல் 30ஆம் தேதி கைதானார் ராஜாஜி. இந்தியா சுதந்திரம் அடைந்த
பிறகு வேதாரண்யம் தஞ்சாவூர் ஜில்லாவிலும், 1991க்குப் பிறகு மாவட்டம் பிரிக்கப்பட்டு
நாகப்பட்டினம் மாவட்டமாக ஆனபோது நாகை மாவட்டத்திலும் இருக்கிறது.
கோடிக்கரை:
கோடிக்கரை கடற்கரையோரம்
அமைந்த சிறு கிராமம். அங்கு வனவிலங்குகளின் சரணாலயம் இருக்கிறது. ஆங்கிலத்தில் பாயிண்ட்
கல்மேர் அல்லது கேப் கல்மேர் என்றும் வழங்கப்படும். காவேரி டெல்டாவின் கடைமடைப் பகுதி
இது இங்கு கடல் வடக்கு தெற்காகவும், இங்கு கிழக்கிலிருது மேற்காகவும் திரும்பி ஒரு
செங்கோண வடிவில் அமைந்திருக்கும். இங்கு கடலில் சோழர்காலத்துச் செங்கல் கலங்கரை விளக்கம்
இருந்தது. சென்ற சுனாமியின்போது அதுவும் அழிக்கப்பட்டு விட்டது. அதன் இடிபாடுகளின்
சுவடுகளை இப்போதும் கடல்நீரில் காணலாம்.
வேதாரண்யம் காடுகள் எனப்படும் கோடியக்கரை காடுகள் வளமானவை, பசுமை
கொழிக்கும் இடம். இங்குள்ள வனவிலங்குச் சரணாலயம் 1967 ஜூன் 13இல் உருவாக்கப்பட்டது.
இங்கு அடர்ந்த புதர்கள், காடுகள், சதுப்பு நிலங்கள் என்று பலவகையான அமைப்பில் பூமி
இருக்கிறது. 1988இல் இது விரிவுபடுத்தப்பட்டு தலைஞாயிறு ரிசர்வ் காடுகள் என அறிவிக்கப்பட்டு
இங்கு ஏராளமான கடம்ப மான்கள் வளர்க்கப்படுகின்றன. சில பருவ காலங்களில் ஏராளமான பறவைகல்,
வெளிநாடுகளில் இருந்தும் இங்கு வந்து தங்குகின்றன. பல்வகையான பறவைகளையும் இந்த காட்டுப்
பகுதிகளில் ஏராளமாக வந்து தங்கியிருப்பதையும் காணமுடியும்.
கோடிக்கரை இராமாயணக் காப்பியத்திலும் குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள
ஒரு மணல் குன்றில் இராமர் பாதம் இருப்பதாக ஒரு மண்டபம் கட்டி பாதுகாக்கப் படுகிறது.
இந்த மணல் முகட்டின் மீது நின்றுகொண்டு இராமன் தெற்கே 48 கி.மீ தூரத்தில் இருக்கும்
இலங்கையைப் பார்த்து இராவணன் படைகளை கண்காணித்ததாகச் சொல்வர்.
சோழர்கள் கால கலங்கரை விளக்கம் இப்போது ஒருசில செங்கற்களாக மட்டும்
காட்சி தரும். ஆயிரம் காலமாக இருந்த கலங்கரை விளக்கம். சோழ மன்னர்கள் கடல் கடந்து இலங்கை
செல்ல வசதியாக இது கட்டப்பட்டிருக்க வேண்டும்.
இப்போது புதிதாக கலங்கரை விளக்கம் கட்டப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ்
கால கலங்கரை விளக்கம் 13 மீட்டர் உயரமுள்ளது, சுதந்திர இந்தியா கட்டியது 45 மீட்டர்
உயரம்.
No comments:
Post a Comment