"லக்ஷ்மி ராமாயணம்"
(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். -- வெ.கோபாலன்.)
(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். -- வெ.கோபாலன்.)
கையடைப் படலம்
(விஸ்வாமித்ரர் இராமனை காட்டுக்கு அழைத்தல்)
வெண்குடைகீழ் ஆண்டுவந்த அரசன் அவைதன்னில்
விஸ் வாமித்ர முனியொருநாள் வருகை புரிந்தனர்.
பணிந்து, வணங்கி, இனிதுஇருத்தி - தசரதனும்
பாதபூசை செய்துவினை போக்கிக்கொண்டனன். 50
மாமுனி தன்மனைதேடி விஜயம் செய்ததில்
மாதவமே செய்துவிட்டே னென்று மகிழ்ந்தனன்.
யாது பணி? யாம் செய்ய வென்று வினவியே
காத்திருந்தான் கருத்துடனே கடமை யாற்றவே! 51
உரத்த ழைத்தார் முனி, ‘வீரன் தசரதனே!’
இந்திரனின் ராச்சியமா மமரா வதியை
சம்பர னெனும் அசுரன் வந்து கைப்பற்ற,
கைகேயி தேரோட்ட, போராடி மீட்டவனே! 52
சித்த வனத்தினிலே யான் செய்திடும்
தவவேள் விக்குத் தடையான அசுரர்களை
செருமுகத்துக் காக்க வேண்டி – நின்
கரிய நிறமுடை குமரன் வேண்டுமென்றார். 53
அருந் தவத்தோன் கூற் றெல்லாம்
கனல் காதில் விழுந்தாற் போன்றும்;
கண் இலான் பெற்றி ழந்தார் போன்றும்
கடுந் துயருற்றான் தசரதமா மன்னவன்! 54
‘மகன் பிரிய உயிரிழப்பான்’ என்றவொரு
முன்சாபம் மனதுள்ளே ரணமா யிருக்க – அதைக்
கூரான கத்தி கொண்டு கிழித்த வுடன்
‘கோரற்க இராமனையே!’ கரங்குவித்தான் தசரதன். 55
படைத் தேர்ச்சி யில்லா சிறுவனவன்!
சடையுடை பரமனும், ப்ரம்மனும், புரந்தரனுமே
இடையூறு செய்யுங்கால் உடனிருந்து நானே
தடைக ளகற்றிடுவேன்! புறப்படுக! என்றுரைத்தான் 56
சினந்து எழுந்தனராம் மாமுனிவர் – அதைக்கண்டு
பயந்து நடுங்கினராம் இமையோரும், அவையோரும்!
‘மறுத்திடேல்! நின்மகன் பொருத்த முடையான்
பொறுத்திடுவான்.’ உபதே சித்தனராம் வசிஷ்ட்டமுனி. 57
குருவின் திருவா சகத்தால் தசரதன்
திருவின் வடிவி னனாம் இராமனை
வருவிக்க ஏவலரை வேண்டிய வன் – பின்
தருவித்துத் தன்னருகில் இருத்தி னான். 58
தம்பி இலக்கு வனுடன் வந்தவனை
முந்தை நான்மறை முனியிடம் தந்து
தந்தையும், தாயுமாய் நீ யிவர்க்கு
இயைந்ததை செய்க! என்றுரைத்தான்.. 59
ஒன்றே போல் அண்ணனும், தம்பியும்
வெற்றி வாளொன்றை இடையிலே கட்டி
குன்று போலுயர்ந்த இடத் தோளினில்
கொற்றம் வில்லுடன், விறைப்பாய் இருந்தனராம். 60
சினம் அகன்றிட, குணம் தோன்றிட
அருள் வழங்கினராம் முனி – பின்
அண்ணன் தம்பி இருவரையும் - தன்
உடன் கூட்டிச் சென் றனராம். 61
மாதவத் தோனைப் பின் தொடர்ந்திடவே
மாநகர் அயோத்தி பின் னடைந்ததுவாம்,
தந்தை மொழிகடை பிடித்த படி
சரயு நதிக்கரை யடைந் தனராம். 62
கரும்பும், கமுகும், அரும்பும், தேனும்
அடர்ந்து, குளிர்ந்த சோலை தன்னில்,
இரவுப் பொழுதைக் கழித்த பின்னர்
சரயுவைக் கடந்தனர் உதிப் பதற்குள்! 63
புகை தழுவு சோலை காட்டி,
‘ஈது யாவது’ கேட்டான் இராமன்.
‘காமனாச்ரம்’ இது வென்றும் – அதைச்
சார்ந்ததேசம் ‘அங்கநாடெ’ன்றும் கூறி, 64
யோக நிலையிருந்த பர மேஸ்வரனை
மோக வலைதள்ள காம னவன்
மலரம்பு தொடுத்திட, நுதல்விழியால் ஈசன்
கனல்பறக்கக் காமனை எரித்தயிடம் இதுவென்றார்.
65
அடுத்து,,
வெம்மைக்குக் காரணமாம் அக்னியே
வெந்து வருந் திடத் தக்கதும்,
மழைமேக நீரெல்லாம் கொதிப்பேறி
மின்னலும், இடியுமே தகிப் பதும், 66
கள்ளியும், மூங்கிலும், வெந்தாற் போல்,
வெடித் தும், சித றியும்,
மண் தரையும் பேய் பிளந்தாற்போல்,
உலர்ந் தும், பிளந் தும், 67
காக்கையும், யானையும், கருகினாற் போல்,
இறந் தும், கிடந் தும்,
காய்ந்திருந்த பாலைவழி சிறுவர் களை
கைபிடித்துச் சென்றா ராம் தவமுனி. 68
ஆற்ற லுடையவ ராயினும் பிள்ளைகள்
பூவின் மிக மெல்லியரே! – அவர்கட்கு
நான்முகன் ஆக்கிய மந் திரங்களாம்
பலை, அதிபலையை போதித்தனராம் அப்பாலையில்! 69
புய வலிமை உயர்ந் தோங்கும்!
குண நலமும் நிகரற் றிருக்கும்!
உறக்கம் கொள்ளாது! நோய் தாக்காது!
அரக்கர்கள் எதிர்த்திட தவிப்பர்’ என்றார். 70
மந்திரம் இரண்டையும், மனனம் செய்திட – கனல்
துஞ்சிய பாலையும், தண்புனல் ஒத்ததாம்!
‘அறிஞ! சடை யுடை சிவனின்
விழிபட இவ்விடம் வெந்ததோ? அன்றி 71
வேறொரு காரண மிதற் குண்டோ?
பழிபடர் மன்னனின் நாட்டைப் போல
அழிந் ததன் காரணம் கூறிடுக!
வில்லோன் முனிவனை வின வினனாம். 72
‘கொன்று உழல் வாழ்க் கையள்
கொடிய கூற்றின் தோற்றத் தள்
ஆயிர மதயானைகளின் வலுவி னள்
அவளின் கதை கேளீர்!’ உரைக்கலானார். 73
இயக்கர்தம் குலத்தவனாம் சுகேது – அவன்
மயக்க மில்லா மிகத் தூய்மை யனாம்
மகவில்லா குறைபோக்க நான் முகனை
மிகப் பலநாள் கடுந்தவமே புரிந்தானாம். 74
மெச்சிய பிரம்மனும் வர மளித்தான்
‘லட்சுமியை ஒத்த அழ கினளாய்
ஆயிரம் யானைகள் வலி யவளாய்
பிறப்பாள் ‘தாடகை’ யெனும் புதல்வி’ 75
பிறப்பினில் புதல்வர்கள் இலை யென்றாலும்
புயலாய் வளர்ந்தாள் தாடகையும் – பூப்
பெய்தபின் அவளுக்கு மண முடிக்க
ஆய்ந்தான் தகப்பன் தக்க வனை! 76
நான்முகன் அருள்வழி பிறந்ததம் மகளுக்கு
நாயகன் சுந்தனை தேர்வு செய்தான்.
புவனமே வருந்திட பிள்ளைகள் பிறந்தன
புஜபலமா ரீசன் சு வாகுவென 77
மாயமும், வஞ்சமும் மிகுந்த இப்பிள்ளைகள்
சூதுடன், வலிமையும் பொருந்தியே வளர்ந்திட,
சுந்தன் களிப்பின் உச்சத்தில் ஏறி,
வந்தான் அகத்திய ஆஸ்ரமம் தேடி, 78
அகத்தியன் என்பார் ஓர் முனிவர் – அவர்க்கு
பரமன் அருளினார் தமிழ் மொழியை!
அருந்தவம் புரிந்தஅம் முனிவருமே
அரும் பெரும் சக்திகள்பல பெற்றார்! 79
விருத்தி ராசுரன் மற்றும் அசுரர்களை
விரட்டி னான் இந்திரன் ஒருசமயம் – தன்
சுற்றத் தோடு அவ் வசுரன்
ஆழ்கடல் புகுந்து ஒளிந்து கொண்டான். 80
அகத்திய முனி தம் தவப்பயனால் – அக்
கடல்நீர் முழுதையும் கையில் கொண்டு
ஆச மனம்போல் உட் பருகி
அசுரரை இந்திரன் வசம் தந்தார். 81
அத்தகு முனியின் ஆஸ்ரமத்தின்
அத்தனை மரத்தையும் வேரறுத்தான் – சுந்தன்
அழகிய உழைகலை மான்கொன்றான் – முனி
தழல் எழ விழித்திட சாம்பரானான்! 82
கணவனைக் கொன்றதைக் கேள்வி யுற்று
கனல்போல் கனன்ற தாடகையும் – தம்
மகன்க ளுட னவ்விடம் சேர்ந்து
முனிவனை முடிப்பதாய் சூ ளுரைத்தாள். 83
அச்சமயம் –
இடியும், காற்றும் பொங்கிற் றாம்!
அமரர்கள் ஒளியும் மங்கிற் றாம்!
கதிரும், நிலவும் அஞ்சிற் றாம்!
மிதக்கும் மேகமும் நடுங்கிற் றாம்! 84
விழிவழி கனலுமிழ் அகத் தியனும்
‘அழிவன செய்தலால் அரக்கராயிழிக’ என்ன
உருக்கிய செம்பென அக் கணமே!
மூர்க்கர் களாயினர் மூ வருமே! 85
தவபலம் பொறுந்திய அகத்தியன் சாபத்தை
எதிர்த்திட இயலா இரு மகனும்
அரக்கனாம் ‘சுமாலி’ யுடன் சேர்ந்து,
‘உனக்குயாம் புதல்வரெ’ன் றுறவு கூர்ந்தார்.
86
‘சுமாலி’ யென்பான் இரா வணனின்
தாயாம் கேசகி யின்தந்தை – இப்
பாட்டன்தம் தமையர் மாலியுடன் – பல
தீங்குகள் புரிந்தே வாழ்ந்து வந்தான். 87
தேவர்கள் வேண்டிட, திருமாலின் - கடும்
போர் தனில் மாண்டனன் மாலியும்!
எஞ்சிய அசுரர்கள் பதுங்கினராம் – மனம்
அஞ்சியே அதளபா தா ளத்தில் 88
இலங் கையை குபேரன் ஆளுகையில்,
இராவணன் வளர்ந்து வரம் பெற்று – அவன்
இலங்கா திபதி யானதினால் – அங்கே
சுமாலியும் சுற்றமும் குடி பெயர்ந்தார். 89
தாடகை புதல்வர்கள் இரு வரையும்
தசமுகன் மாமன்க ளென அணைக்க,
சலுகையும், பலமும் கிடைத்த தினால் - அங்கே
அழித்தும், துவைத்தும் திரிந் தனராம். 90
சாபத்தால் பாதித்த தாடகையும்,
சந்ததி பிரிந்திடத் தவித்தனளாம்!
அழலெனப் புழுங்கும் மனத்துடனே – இவ்
வனந்தன்னில் வந்து புகுந்தனளாம்! – அவள் 91
மண் உதைத்துப் பெயர்த்திடு வாள்!
விண் உருத்து இடித்திடு வாள்!
கண்ணின்று நஞ்சு உமிழ்ந்திடு வாள்!
‘திண்’னென்று இடிபோல் உறுமிடு வாள்! 92
செம் பட்டை முடியுடையாள்! – பிறைபோல்
கோரைப் பற்களு முடை யாள்!
மலையொத்த தனங்க ளுடையாள் – இம்
மருதத்தைப் பாலை யாக்கிய தாடகையாள்! 93
இலங்கை யரசன் ஏவலினால் – பெரும்
இடையூறி வள் இழைக்கின்றாள் – எம்
வேள்வி, யாகம் கெடுக்கின்றாள் – பல
உயிர்கள் தின்று திரி கின்றாள். 94
இவளை வதைக்க விலை யென்றால்
இரை யெனவே இவ் உயிரனைத்தும்
இட்டு வயிற்றை நிரப் பிடுவாள்;
இல்லாமல் செய்திடுவாள்’ உரைத்திட்டார். 95
‘எங்கிருக்கிறாள் இத்தொழில் இயற்றுபவள்?’
என்று
சங்கின் இடத்தில் வில்தாங்கிய வித்தோன்
சுருண்டு விழுந்த தன் திருமுடியை – மெல்ல
அசைத்து, அழகுற கேட் டதுமே… 96
இருப்பது இம்மலை’ காட்டிய கணத்திலே,
கருமலை எரிந்தே நடப்பது போல
உறுமியபடி அத் தாடகை யும்
வருவதை மூவரும் கண்டன ராம். 97
கடைப்புறம் துடித்திடும் புருவம் இரண்டுடன்
மடித்திடும் கோரப் பற்க ளிரண்டுடன்,
குகை போல் பிளந்திட்ட வாயுடனும் - கனல்
புகைந்திடும் விழியினால் விழித்தனளாம். 98
‘சுவையுடை ஊன் எனக்க ரிதன்றொ? - உன்
தீவினை யழைத்திட கருதியதோ? - பலர்
கடக்கவே நடுங்கிடும் இக் காட்டை
அடைந்ததன் பொருளென்ன?’ நகைத்திட்டாள். 99
மேகம் சிதறும் படி விழித்தாள்;
மலையும் உடையும் படி உதைத்தாள்;
குறியாய் மார்பில் பொருந்தும் படியே
எறிவேன் சூலத்தை! சூளுரைத் தாள். 100
‘பெண்’ னெனப் பெருந் தகை
அம் பினைத் தொடுக் கிலன்!
அவள் உயிர் முடித் திடல்தான் - இத்
தவ முனி கருத் தெனினும். 101
.
மாதென் றெண்ணுகிறாய்! மணிப் பூணினாய்!
தீதென் றுள்ளவை யாவையும் செய்பவள்.
உருவத்தில் பெண்ணான அரக் கியவள்!
தருமம் அறிந்திடுவாய் தரணியைக் காத்திடுவாய்!. 102
குருவா கிய நின் னுரையை
சிர மேற்று சிரத் தையுடன்,
நிறைவேற் றுவதே முறை மை!
அறமும் அது வென்றான் இராமன். 103
அறிந்தாள் இராமனின் மனக்கருத்தை – பின்
சொறிந்தாள் கனலைத்தன் கண் வழியே!
எறிந்தாள் சூலத்தை இராமன் மேலே
நிறைமதி மேல்வரும் கோளைப் போலே 104
பெண் ணுடன் போர் செய
அண்ணல் தயங் கிட்டார்! – தான்
முன்னம் எறிந்த சூலத்தால் இராமனை
‘மாச ற்ற மாவீரன்’ ஆக்கிட்டாள். 105
கோலவில் ஊன்றிராம் அம்பு தொடுத்ததை
கண் டிலர் ஒரு வருமே!
யம னிடமிருந்து ஏவிய சூலமோ
துண் டாயிடக் கண் டார். 106
கட லையும் தூர்த்தி டும்
கல்மழை யொன்றை கைகளால் வீசிவிட்டாள்!
வில்லின் வீரன் பாணங்கள் ஏவியே
விரைவினில் அம்மழை விலக்கிவிட்டான். – பின் 107
வேகத் துடன், வீ ரியம் நிறைந்த – முனி
வாக்கினை ஒத்த ‘சுரம்’ பாணம்!
புல்லார்க்கு கூறும் நல்லார் மொழிபோல்
அவள் மார்பினுள்பாய்ந்து பின்புறம் போனதாம். 108
ஊழிக் காலத்து மாருதம் தாக்கிட,
கடையுக காலத்து மின்னிடும் மேகம்
இடியுடன், மோதுண்டு வீழ்வதைப் போலே
தாடகை தரையினில் வீழ்ந்தா ளாம். 109
தசைகள் பொருந்திய கோரப் பற்களும்,
பிளந்திட்ட வாயுடன் கூடிய தாடகை
தசமுடி ராவண சம் ஹாரத்தின்
படியிடை வீழ்ந்தக் கொடியென சாய்ந்தாள். 110
குருதிப் பீறிட்டு சூழ்ந்த அக்காடு
இரத்தக் கடலென மாறிய தாம்!
பற்றுக் கோடற்று தரைமேல் வீழ்ந்த – செவ்
வானப் பரப்பென ஆனது வாம்! 111
அரக்கர்கள் உயிர் கொள்ள பயந்தபடி
தருணம் நோக்கிடும் யம தர்மனுக்கு
தொடக்கம் ஆனதாம் கன்னிப்போர் – இன்னும்
அரக்கர்கள் பலருயிர் சுவைப்ப தற்கு. 112
கன்னிப் போரினைக் கண்ணுற்ற தேவர்கள்
‘யாமும் இருக்கை பெற்றிட் டோம்,
உமக்கும் இனியில்லை இடையூ றெ’ன்று
உவகை மேம்பட உரைத் திட்டார் - பின் 113
பூமழை பொழிந்து இராமனை வாழ்த்தி,
‘கோ மகனுக்குக் கொடுப் பீராக
தெய்வப் படைக்கலம்’ என்றந்த தேவர்கள்
மாமுனிக் குரைத்து, தம்மிடம் சென்றார். 114.
(தொடர்ந்து வரும்)
(தொடர்ந்து வரும்)
No comments:
Post a Comment