பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, July 19, 2017

ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி VI

"ல‌க்ஷ்மி ராமாயணம்" 

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)

கௌசிகன் வரலாறு

ஒருமுறை..
வேட்டை யாடவன் காட்டிடைச் செல்கையில்
வசிட்டமுனிவ னாச்ரம மடைந்தான்.- முனியும்
வேந்தனின் அருட்கடன் முறையின் சுற்றி,
விருந்து செய்விக்க ‘சுரபி’யைப் பணிந்தனன்.     193

திருப்பாற் கடலை கடைந்திட்ட பொழுது,
பொருந்திய தெய்வத் தன்மை யுடன்
தோன்றிய ‘சுரபி’ ஓர் பசுவாம் – அதற்கு
மறுபெயர் உண்டாம் காமதேனு வென           194


சுரபி அளித்திட்ட அறுசுவை உண்டு
உறுதுயர் தணிந்தபின் கௌசிகமன்னன்,
அறிந்தனன் சுரபி யின் திறமையினை – அதை
அரசற் குரியதாய் ஆக்குக’ வென்றான்.            195

‘மரவுரி தரித்திட்ட தவசி யாதலின்,
தருகின்ற தகுதி யற்றவன் அதனால்,
வருவ தாகில் கொள்ளுக!’ என்றதும்,
‘பெரும! கொடுத்தியோயென்னை? கேட்டதாம் சுரபி.196

‘கொடுத்திலேன்! கழலுடை அரசன் தானே,
பிடித் தகல வுள்ளான்’ என்ன,
‘முடித்திடுவேன் அவன்படை முழுதும்
முனியிடம் பணித்ததாம் அச் சுரபி!               197
                           
               காமதேனுவின் செய்கை

சிலிர்த்து நின்ற பசுவின டத்து
சோகையர், பப்பரர், சீனர் தோன்றினர்.
கைப்படையால் கௌசிகப்படை குவித்திட,
கோப மடைந்தனர் கௌசிகமைந்தர் நூற்றுவரும்! 198                   

‘சுரபியின் வலிமை யல்ல இது!
சுருதி நூலுணர் வசிட்ட முனி,,
வஞ்சனையால் எமை அழித்திட்டார்.
அஞ்சோம்! அவர் தலை அறுப்பதற்கு!’            199

நெருங்கிய புதல்வர்கள் நூற்று வரும்,
எரிந்தனர் வசிட்டனின் எரி விழியால்
எய்தனன் மன்னனும் அம்பினைத் தொடர்ந்து,
எதிர்த்திட தண்டினை ஏவினன் வசிட்டனும்!      200
    
                  கௌசிக மன்னன் செயல்

அறிந்த னைத்து அத்திரமும் விடவிட,
பிரமதண்ட மதனை விழுங்கி யதாம்!
மேருமலை ஈசனை மன்னன் வழிபட,
பெருவலி யுடைஅத்திர த்தை அருளினனாம்!     201

மன்னன் முனிமேல் அப்படை விட்டனன்!
விண்ணு லகோரும் அஞ்சி நடுங்கினர் – ஆனால்
அணுகிய படையையும் முனிவன் விழுங்கிட,
முரணது முடிவுற ஒளிர்ந்தனன் முனிவனும்!     202

                கௌசிகன் தவம்புரியச் செல்லல்

மறையுணர் அந்தணர் பெற்றி ருந்த
மனத்திட்பம், வலிமையும் கண்ணுற் றான்!
அரசர்கள் தோள்வலி, படைவலி பெரிதல்லவென
அருந்தவம் புரிந்திட கிழதிசைப் புறப்பட்டான்.     203

              இந்திரன் செயல்

அரசர்கோன் ஆற்றிய பெருந் தவத்தால்
அமரர்கோன் சற்றே துணுக் குற்றான்.
அரம்பைமார் பலருள் திலோத் தமையை
அவர்தம் தவத்தை கலைத்திட பணித்தான்.       204

மன்மத னம்புகள் பாய்ந்த தினால்,
தன்னுணர் விழந்து இன்பந் துய்த்தான் - பின்
நன்னெறி முறைகளை உணர்ந்தோ னாகி,
நஞ்சென உமிழ்ந்து நகைத் திட்டான்.             205

விண் ணரசன் இந்திரனின் வேலையென
வெகுண் டெழுந்துதி லோத்த மையை
மண்மீது பெண்ணா குகவென சபித்தபின் - தவஞ்செய
யமனின் திசையாம் தென்திசை யடைந்தான்.     206

                       திரிசங்குவின் செய்தி

சூரிய வம்சத்தில், அயோத்தி அரசனாய்
முற்பெரும் நாளில் பிறந்தவன் ‘சத்தியவிரதன்’ – அவன்
குற்றங்கள் மூன்று செய்ததி னால்
காரணப் பெயராய் ‘திரிசங்கு’ ஆனான்            207

தென்திசை யிருந்து கௌசிக மன்னன்
கடுந்தவம் செய் திட்ட அந்நாளில்
தன்னுடம்புடனே சுவர்க்கம் எய்த – இவன்
வேண்டினன் தன்குரு வசிட்ட னையே!           208

‘அதுயான் அறிந்திலேன்!’ பிரும்மபுத்திரன் கூற
‘நீள் நிலத்தில் எவரையும் நாடி
வேள்வி செய்குவேன்’ என்றவனை
‘நீசனாகுக’ சபித்த னராம் வசிட்டமுனி.           209

அருந்ததி கணவனின் சாபந் தன்னால்
வனப் பழிந்தனன் அரசர் கோமான்.
ஒளி யிழந்தசண் டாளவுரு கண்டோரும்
இகழ்ந்திட திகைத்து, வனமதை யடைந்தான்.     210

நீச வடிவுடன் வனத்தி லலைந்தவன்
கௌசிகன் தவஞ்செயும் சோலை யடைந்தான்.
‘ஈனன் நீயாவன்? இவ்விடம் வந்ததெதெற்கு?’ என்ன
நிகழ்ந்த தனைத்தியும் கூறினா னரசன்.           211

‘இத்தனைதானா?’ இடியென நகைத்த கௌசிகனும்,
‘உனக்கென வேள்விகள் இரண் டியற்றி,
உடம்பொடு சுவர்க்கம் ஏற்றிடுவேன்’ என்றபடி,
வேள்விக் கழைத்தான் மாதவர் பலரையும்.        212

‘சண் டாளனுக்கென யாகப்பலன் ஈவதை
கண்டிலேம் எவ்விடமும்! இணங்கிடேம் எவ்விதமும்’
என்று சொன்ன வசிட்டரின் குமரர்களை
‘புன்தொழில் வேடானாய் கடவுக’ வென்றார்.       213

வேடனாகி காட்டிலவர் அலைந் திருக்கையில்
ஊன்றிசெய்த யாகமது முற்று பெற்றதாம்.
அவிசுபெற வருகவென தேவர் பலரையும்
அழைத்தனனாம் கௌசிகன்தன் மந்திரபலத் தால்  214

விபரீதம் உணர்ந்திட்ட தேவர் பெருமக்கள்
நெடுநேரம் வாராமல் இருந்து விட்டனர்.
‘வேறொருவர் துணையொன்றும் தேவையேயில்லை! – இத்
தெய்வீக விமானத்தில் மேலெழுக!’ ஆணையிட்டான்.  215

சுவர்க்க மதை திரிசங்கு அடைந்திட்டான்.
கலவ ரத்துடன், சினந்தெ ழுந்தாரமரர்கள்.
‘நீசன் நீஈங்கு வந்த தநீதி
இருநிலத்தில் இழிக’ என்று தள்ள,                 216

தலைகீழாய், தாங்கலின்றி தடுமாறி வீழ்ந்தவன்,
‘தாபத சரணம்’ என்றபடி ஓலமிட்டான்.
‘’நில் நில் நில்’ என்றுரத் துரைத்து,
நகைத்திட்டான் கௌசிகன் நாநிலம் நடுங்க!        217

பரிகாசம் புரிந்திட்ட விண்ணோரின்
பெரும் பதவி அனைத்தி னையும்
வேறாக நான் படைத் திடுவேன்!
மற்றொரு சுவர்க்கமாய் மாற் றிடுவேன்!           218

அகங்காரமாய்ச் சொன்ன கௌசிகன் எதிரில்,
தேவேந்திரன், பிரம்மதேவன், உருத்திரன் கூடி,
‘பொறுத்தருள்வீர் முனிவ! நின் புகல்புகுந்தோன்
தாராகணத்திலே அமரனா யிருப்பான், (நக்ஷத்திரக் கூட்டம்) 219

கடவுளரும், தேவர்களும், கௌசி கனை
கடவினர்கள் ‘அரச மாதவன்’ ஆவதென.       (ராஜரிஷி)
‘அநுஷம்கேட்டை, மூலம்பூராடம், உத் திராடம்
ஐந்துதினங்கள் வடக்கிருந்து தென்புலம் வந்து     220

உந்தன் பெருமை உலகுக்கு விளக்கிடுமென்று’.
வரம்தந்து தத்தமிடம் திரும்பிச் சென்றதும்,  ,
வருண னுக்குகந்த மேற்திசை யடைந்தபின்
உறுதவம் தொடங்கினன் அந் நிரைதவன்.         221

(லக்ஷ்மி ராமாயணம் தொடர்ந்து வரும்)


No comments: