பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 18, 2017

ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி V

     "லக்ஷ்மி ராமாயணம்"        

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)  

 மிதிலைக் காட்சி

நிரைமணிக் கொடிகளும், செழுமணிக் கொடிகளும்,
நெருக்கமாய் இருந்ததாம் மிதிலையின் மதிலில் – அவை
‘திருமகள் சீதா இவ்விட இருப்பதாய்’
கரம சைத் தழைத்ததாம் ஸ்ரீஇராமனை.           160

அமுதுதோய்ந்த கோலெடுத்த மன்மதனும் – அவள்
அழகெழுத தொடங்குகையில் திணற வைக்கும்
பேரழகுப் பெட்டக மாம் பிராட் டிக்குப்
பொருத்தமான ராம்மிதிலை நுழைந்த னராம்!      161

பொன்கலன்கள் தெருவெங்கும் சிதறிக் கிடந்ததால்
செல்வத்தின் மிகுதி யெங்கும் மிளிரக் கண்டனர்,
வீணையிசை, நாடகங்கள் நிகழக் கேட்டனர்.
நடனசாலை நிறைந்த தெருமார்க்கம் சென்றனர்.   162

மலைமீது மலைமோதி போர் செய்வதைப்போல்
வெள்ளைநிற தந்தம்கொண்ட யானை பார்த்தனர்.
கடிவாளம் பூண்டிருந்த சண்டைக் குதிரைகள்
விரைவாகப் பாய்வதையும் பார்த்துச் சென்றனர்.   163

களங்கமில்லா சந்திரனின் உதயம் போலவே,
சாளரங்கள் தோறும்பல பெண்கள் பார்த்தனர்.
கமலமலர், ஆம்பல்மலர் பூத்ததடாகம் – எங்கும்
மகளிரெல்லாம் மனம்குளிர குளிக்கக் கண்டனர்.   164

வீரம், ஆண்மை நிறைந்தயிளம் வீரர்கூட்டமாய்
உருட்டியாடும் வட்டுக்காய் பார்த்துச் சென்றனர்.
அரணெனவே மாளிகையின் பொன்மதில் சுற்றி,
பெருகியோடும் கங்கையொத்த அகழி கண்டனர்.   165

அக்கணம், அவ்விடம் அசைவிலா நின்றனர்!!!!
பொன்னொத்த ஒளியும், பூவொத்த மணமும்,
தேனொத்த சுவையும், கவியொத்த இனிமையும்
ஒன்றிணைந்த ஓருருவம் மாடத்தில் ஒளிர்ந்ததும்! 166

‘உவமையின்’ பொருளுக்கு உதா ரணமாம் – அத்
திருமகளே உருபெற் றங்கு நின்றிருக்க,
உவமைக்கும், ஒப்புக்கும் எவ்வகை நாடி
எவ்வித முரைத்து, எப்படி விளக்கிட?            167

பார்வையிலே, மானையும், மீனையும் வென்று,
பர்வதம் கொண்டு கடையாமல் பெற்ற,
உம்பர் மாடத்தின் அமுதாய் நின்றாள்;
அந்தணர், தேவரின் அறமாய் பிறந்தவள்.         168

மேனகை முதலான விண்ணுலக மங்கையெல்லாம்
அனையாளின் பேரழகால் உளம்வெதும்ப, மனம்வருந்த
வெண்மதிக்கு நிகரான தத்தம் பொன்முகமும்,
பகல்நிலவு போல்மங்கி ஒளியிழந்து இருந்தனராம்.169

தோழிமார்கள் சூழவந்த செங்கைத்தளிர் மானவள்
மின்னலரசி போலமின்னும் அந்த நிமிடத்தில்,
கண்ணோடு, கண்ணும், உணர்வோடு உணர்வுமொன்ற
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். 170

பருகிய பார்வையால் பாசத்தில் பிணைந்து,
ஒருவரை ஒருவர் உள்ளம் ஈர்த்திட,
வில்லுடை இராமனும், வாள்கண் நங்கையும்,
நல்லிதயம் தன்னில் மாறிப் புகுந்தனராம்.        171

உடலிரண் டும், உயிரொன்றும் ஆனவர்கள், – பாற்
கடலிலே பள்ளியிருக்கையில் கலவி நீங்கிப்
பிரிந் திருந்த ஐயனும், நங்கையும் தானின்று
சேர்ந்திட நேர்ந்ததை சொல்லவும் சாலுமோ?     172

கண் ணிமை மூடிட மறைந்திடு வானென
சித்திரப் பாவையாய் ஓவியம் போலானாள் – அவள்
சிந்தையும், அழகும்தன் பின்வரச் சொல்லி
மைந்தனும் முனியோடு மறைந்து போயினான்.   173

பார்வையை விட்டவன் மறைந்த பின்னாலே
சோர்வொன்று தாக்கிட துவண்டு வீழ்ந்தனள்.
‘நிறை’ யென்னும் அங்குசமே தோற்றதாம்
மதம்கொண்ட அவள்குணம் மாற்றுகையில்       174

தண்ணீர் போலவே பெருகிய காமந்தான்
கண் எனும் வாய்க்கால் வழியோடி,
மெய் என்ற உடலிலே பாய்ந்ததனால்
மனமென்னும் பாலும் திரிந்ததுவாம்.              175

நலம் குன்றி, உடல்மெலிந்த நங்கையினை
மலர்படுக் கையில் கிடத்தினாலும் - அவள்
கண்ணின்வழி பெருகியதாம் நீர்த் திவலைகள்!
நெற்றிவழி திரண்டதுவாம் வியர்வைத் துளிகள்!    176

வேடன்கை அம்பு பட்ட மயில்போலவே,
காமனம்பு தைத்திடவே மனம்வெதும்பினாள்;
பூங்கொம்பு போலத் தழைந்து துவண்டுபோயினாள்,
பூம்படுக்கைமீது வீழ்ந்து, சாய்ந்து சூம்பினாள்.      177

தாதியர்கள், செவிலியர்கள் குழம்பி வருந்தினர்,
மாதுயரம் உற்றுகலங்கி, மனம் அஞ்சினர்.
‘நேர்ந்த தென்ன? நிகழ்ந்த தென்ன? புலம்பித்தீர்த்தனர்.
ஆரத்தி சுழற்றிகொட்டி திருட்டி கழித்தனர்.           178

நினைவகன்று, உணர்விழந்த நிலையினிலும் – திரு
உருவத்தை வருணித்துப் பிதற்றினளாம்!
தலைமுடியைக் காடென்றாள், புயமிரண்டும் தூணென்றாள்,
கண்கள் கமலமென்றாள், வில்தரித்த மேகமென்றாள். 179

தோள்மீது தாங்கிய வில் கண்டேன் – அது
கரும்பல்ல! அதனால் அவன் காமனல்லன்!
கருவிழியிரண்டும் இமைத்திடக் கண்டேன் – அதனால்
தேவருள் ஒருவனாய் இருந் திலன்.                 180

முப்புரி நூல் தரித்திருந்தான் – அவன்
அரச குலத்தினில் பிறந் தவனே!
கண்வழி மனதைக் கவர்ந்தான் – அதனால்
கள் வரிலே விசித்திர கள்வனே!                  181

விரகத்தால் பிதற்றிய பிராட் டியின்
காமத்தீ சுடுமேயென கதிரவன் மறைய
கருநிறக் காலன் கடுந் தெழுந்ததுவாம்
இரவுப் பொழுதும் கரும்பூதமாய் தெரிந்ததுவாம்!   182

பெருமானின் நிறம்போன்ற இருள்சூழ் இரவில்,
பொற்கலத்தினின் றெழுந்ததாம் வெண்திங்கள்
பேரரசர் வீழ்ச்சிபோல கமலம் குவிந்ததாம்.
சிற்றரசர் வெற்றிபோல ஆம்பல் மலர்ந்ததாம்.      183

‘கருநெருப்பில் தோன்றிய வெண்நெருப்புபோல்
பாற்கடலில் தோன்றி யுதித்த சந்திரனே!
கொல்லும்அளவு கொடியவ னல்லன் நீ!
அல்லல் எனக்கு அளித்திடல் தக்கதோ?’           184

செந்நிற பூம்மஞ்சம் தீயென தாக்க
அன்னம் அதன் மேல் கிடந்ததைப்போலும்,
தனங்களில் படிந்த சந்திர கிரஹணம்
தாக்கியது போலும் தவித்தனள்; துடித்தனள்,       185

வாசனை மிகுந்த சந்தனக் குழம்பை
பூசினர் தோழியர் உட லெங்கும்! – அது
உலர்ந்து உதிர்ந்ததாம் அனல் மூச்சால்!
கனத்துப் போனதாம் முலை காற்றால்!            186

அன்னம் இங்கனம் இருக் கையிலே
முன்னம் விழிவழி உளம் கவர்ந்தவனை
மன்னன் சனகனும் வர வேற்றான்.
பொன்னகர் மாடத்தில் உய்த் திட்டான்.            187

கௌதமன் மகனாய் அகலிகை பெற்ற
சதானந்த முனிவரை அங்கு கண்டார்.
சனகனின் புரோகி தனாம் அவரை
வணங்கித் தொழுதனர் தசரத குமாரர்கள்.          188

ஆசிகள் அளித்தபின் கோ முனியும்,
கௌசிக முனிவனின் முகம் நோக்கி,
‘இப்போது நீரி வண் எழுந்தருள
இப்பூதலம் செய்திட்ட தவம்யாதோ?’ என்ன..       189       

‘கேட்டி மாதவ! இப் பெருந்தகைதான்
கடுங்குரல் தாடகை வதம் செய்து,
அடுத்த எம்வேள்வியும், நின்னன்னை சாபமும்,
முடித்து என்னிடர் முடித்தவ ரென்றார்.            190

‘வெற்றி வீரர்க்கு நின்னரு ளன்றி,
வேறேதும் செயற்கரிய செயலு முளதோ?
குருவின் அருமை, பெருமை அனைத்தையும்,
முறைப்படி சீடருமறிதலே முறைமை!’ என்றவர்    191

‘நறுமலர் அணிந்த நாய கனே!
அறிவீர் கௌசிகன் வர லாற்றை! - இவன்
அருள்முறை நீதி நெறியின் படி
புரந்தனன் இப்புவி பல் லாண்டு!                    192

(தொடர்ந்து வரும்)

No comments: